Published:Updated:

'ஸ்ரீதேவி சொன்ன பிறகு காலில் விழுவதை நிறுத்திக் கொண்டேன்!' - அனில் கபூர் நெகிழ்ச்சி

'ஸ்ரீதேவி சொன்ன பிறகு காலில் விழுவதை நிறுத்திக் கொண்டேன்!' - அனில் கபூர் நெகிழ்ச்சி
'ஸ்ரீதேவி சொன்ன பிறகு காலில் விழுவதை நிறுத்திக் கொண்டேன்!' - அனில் கபூர் நெகிழ்ச்சி

"நாற்பது ஆண்டுகளாக இந்திய சினிமாவைத் தன்வசம் வைத்திருந்த ஸ்ரீதேவியின் புகழ் மற்றும் அவரது நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்" என்று அனில் கபூர் தனது சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'டான்ஸ் ப்ளஸ்' எனும் நிகழ்ச்சியில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் ஜீதேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். 'ஹிம்மத்வாலா', 'தோஃபா', 'சுஹாகன்', 'கர் சன்சார்' ஆகிய படங்கள் 1980-களின் துவக்கத்தில் ஜிதேந்திரா மற்றும் ஸ்ரீதேவி சேர்ந்து நடித்து வெளியானவை. மேலும், 'மிஸ்டர் இந்தியா', 'லம்ஹே', 'சால்பாஸ்', 'ஜூடாய்' ஆகிய படங்கள் அனில் கபூர் மற்றும் ஸ்ரீதேவி நடித்து வெளியானவை. இவர்களின் கூட்டணி, 1990-களில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டுவந்தது. அதன்பிறகு ஜூன் 2, 1996ல் அணில் கபூரின் அண்ணனான போனிகபூரை ஸ்ரீதேவி மணம் முடித்தார். 

சமீபத்தில் நடந்த அந்நிகழ்ச்சியில், ஸ்ரீதேவி குறித்து அனில் கபூர் மிகவும் உருக்கமாக சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டார். "ஒவ்வொரு முறை நான் ஸ்ரீதேவி அண்ணியை சந்திக்கும்போதும், அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்வேன். ஒருநாள் அவர், 'அனைவரின் முன்பு நீங்கள் இப்படி என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது எனக்கு சங்கடமாக உள்ளது' என்று கூறிய பின்னரே, நான் அந்தப் பழக்கத்தை கைவிட்டேன். என்னுடைய சினிமா வாழ்க்கையில், ஸ்ரீதேவி ஜி ஆற்றிய பங்கு மிகவும் அதிகமானது. அவர் இறந்த துக்கத்தை நாம் நினைவில் வைத்திருப்பதைவிட, அவரின் அழகிய நினைவுகளை என்றும் நினைவில் வைப்போம்" என்று கூறியபோது, அரங்கத்தில் அமைதி நிலவியது. அங்கிருந்த அனைவரும் கண்ணீரில் நனைந்த நினைவுகளுடன் இருக்க, நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.