Published:Updated:

" 'காற்று மண்டலத்தை கைவசம் வைச்சிருக்கேனா'னு சிரிச்சார், ராஜா சார்!" - விவேகா

" 'காற்று மண்டலத்தை கைவசம் வைச்சிருக்கேனா'னு சிரிச்சார், ராஜா சார்!" - விவேகா

"கடலைச் செடியைப் பிடுங்கினால் எப்படி மண்ணின் வாசம் இருக்கோ, அது மாதிரி ராஜா சாரின் இசையின் ஒவ்வொரு பாகத்திலும் இந்த மண்ணின் வாசம் இருக்கு."

" 'காற்று மண்டலத்தை கைவசம் வைச்சிருக்கேனா'னு சிரிச்சார், ராஜா சார்!" - விவேகா

"கடலைச் செடியைப் பிடுங்கினால் எப்படி மண்ணின் வாசம் இருக்கோ, அது மாதிரி ராஜா சாரின் இசையின் ஒவ்வொரு பாகத்திலும் இந்த மண்ணின் வாசம் இருக்கு."

Published:Updated:
" 'காற்று மண்டலத்தை கைவசம் வைச்சிருக்கேனா'னு சிரிச்சார், ராஜா சார்!" - விவேகா

``பிறந்ததில் இருந்தே இளையராஜா சார் எனக்கு அறிமுகமாகிட்டார். அவர் இசை ஆளுமை செலுத்துகிற சூழல்லதான், நாம உலகத்துக்கே வர்றோம். என்னை முதலில் இளையராஜா சார் வசீகரித்தது இசையால் அல்ல; அவரது குரலால்! அவர் குரல்னா அப்படி ஒரு மயக்கம். குறிப்பா, `ஆறும் அது ஆழமில்லை' பாடலுக்கு நான் பெரும் ரசிகன். நிறைவேறாத காதலின் ஏக்கம் அவர் குரல்ல தெரியும்" - உற்சாகத்துடன் தொடங்குகிறார், கவிஞர் விவேகா. 

``உங்க பதின்பருவங்கள்ல இளையராஜாவின் எந்தப் பாடலை அதிகமா முணுமுணுத்த ஞாபகம்?"

``அவருடைய எல்லாப் பாடல்களும் எனக்கு நெருக்கம்தான். குறிப்பா, `ராசாவே உன்னை நம்பி', `வெட்டிவேரு வாசம்' இப்படித் திரும்பிய பக்கமெல்லாம் அவர் இசைதான். குத்துப்பாடல்னு எடுத்துக்கிட்டாகூட, `புத்தனும் போன பாதைதான்' பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒருமுறை அதிகாலை நேரத்துல ராஜா சாருடைய பாடல்களைக் கேட்டுக்கிட்டே மதுரையில இருந்து தேக்கடியை நோக்கி கார்ல போயிட்டு இருக்கோம். அவர் பிறந்த மண்ல அவர் இசையைக் கேட்கிறது வேற மாதிரியான உணர்வைக் கொடுத்துச்சு. அது, தனி சுகம். அவர் ஒரு பேரதிசயம்."

``உங்க கல்லூரிக் காலத்துல நீங்க ரசிச்சுக் கேட்ட இளையராஜாவின் காதல் பாடல் எது?"

`` `என் உயிர் நீதானே, உன்னுயிர் நான்தானே!' பாடல்தான். நான் ரொம்பநாளா இந்தப் பாடலைத்தான் ரிங்டோனா வெச்சிருந்தேன். நாளுக்கு ஒரு ரிங்டோன் மாத்துற அளவுக்கு நிறைய அருமையான காதல் பாடல்களைக் கொடுத்திருக்கார். அவர் இயற்கையாகவே இலக்கிய நயம் கொண்டவர் அப்படீங்கிறதுனால, இசையுடன் சேர்ந்து அவரின் பாடல் வரிகளும் ரொம்ப ஈர்க்கும். கடலைச் செடியைப் பிடுங்கினால் எப்படி மண்ணின் வாசம் இருக்கோ, அது மாதிரி ராஜா சாரின் இசையின் ஒவ்வொரு பாகத்திலும் இந்த மண்ணின் வாசம் இருக்கு."

``அவர் எழுதிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்தது?"

``அவர் இயல்பிலேயே கவிஞர். அதனால, பெரும்பாலான பல்லவிகளில் அவர்தான் இருக்கார்னு நாம கேள்விப்பட்டிருக்கோம். ஞானியுடைய மனநிலையில அவர் நிறைய பாடல்களை எழுதியிருக்கார். `நான் கடவுள்' படத்துல `பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடலைக் கேட்கும்போதே, அது நம்மை வேற ஒரு உலகத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போகும்."

``அவருடைய தாக்கம் எந்தளவுக்கு உங்க வாழ்க்கையில நிறைஞ்சிருக்கு?"

``நெடுந்தூரப் பயணங்கள் எல்லாத்துலேம் நம்மகூட எவ்ளோ பேர் இருந்தாலும், ரொம்ப நெருக்கமா வர்றது ராஜா சார்தான். நான் இதை அவர்கிட்டயே சொல்லியிருக்கேன். அவருக்குப் பாடல் எழுதப் போறதுக்கு முந்தைய நாள் இரவு விடிய விடிய அவர் பாடல்களைக் கேட்டுக்கிட்டுதான், திருச்சியில இருந்து சென்னைக்கு வந்தேன். மறுநாள் அவரைப் பார்க்கப்போனப்போ, `நேற்று இரவு முழுக்க நீங்க என்கூடதான் இருந்தீங்க சார்'னு சொன்னேன். அவர் புரிஞ்சுகிட்டு சிரிச்சார். அவர் இல்லாத இரவுகளை கழிக்கும் வாய்ப்பு ஒரு இசைக் கலைஞனுக்கு இருக்காது. அந்தளவுக்கு அவருடைய இசை ஆதிக்கம் நிரம்பியிருக்கு. இசை என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் ஞாபகம் வர்றது, ராஜா சார் முகம்தான். என் அக்காவுக்குப் பையன் பிறந்தப்போ, நான் ஸ்கூல்ல படிச்சுக்கிட்டு இருந்தேன். என்ன பெயர் வைக்கலாம்னு வீட்டுல யோசிச்சப்போ, நான் இளையராஜா பெயரைச் சொன்னேன். எனக்கு அவர் தாக்கம் எந்தளவுக்கு இருந்ததுனு நீங்களே புரிஞ்சுக்கோங்க." 

``அவரை நேரில் சந்திச்ச அனுபவம்?"

``பாடல் எழுத வாய்ப்பு கேட்டு அவர் ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். தூரத்துல இருந்துதான் பார்த்தேன், சந்திச்சுப் பேச முடியல. அப்புறம் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நான் பாடல் எழுதிய பிறகு, கொலு விழாவுக்கு என்னை அவர் வீட்டுக்கு அழைச்சிருந்தார். அப்போதான். ராஜா சாரை முதல் முறையா சந்திச்சுப் பேசினேன். என்னுடைய `உயரங்களின் வேர்' கவிதைத் தொகுப்பை எடுத்துக்கிட்டு `காற்று மண்டலத்தையே கைவசம் வைத்திருக்கும் இசை ஆளுமைக்கு'னு எழுதி, என் கையெழுத்தைப் போட்டு அவருக்குக் கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு, `காற்று மண்டலத்தை நான்தான் கைவசம் வெச்சிருக்கேனா; வேற யாரும் வெச்சிருக்கலையா?'னு சிரிச்சார். அந்தச் சிரிப்புல ஒரு மேஜிக் இருக்கு. யுவன், கார்த்திக் ராஜா ரெண்டுபேருக்கும் பாடல் எழுதியாச்சு. அவருக்குப் பாடல் எழுதலைனு ஒரு ஏக்கம் இருந்துக்கிட்டே இருந்தது. அவருக்குப் பாடல் எழுதணும்னுதான் சென்னைக்கே வந்தேன். யுவன், கார்த்திக்கு பிறகு, இப்போ அவர் இசைக்கும் பாடல் எழுதுற பாக்கியம் கிடைச்சது." 

``முதல்முறையா அவர் இசைக்குப் பாடல் எழுதும்போது எப்படி இருந்தது?"

``ஒரு தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து எனக்கு போன் பண்ணாங்க. இவர்தான் இயக்குநர், பாடல் எழுதணும்னு சொன்னாங்க. `சரி, நாளைக்கு இந்த நேரத்துக்கு வாங்க; நாம சந்திக்கலாம்'னு சொன்னேன். `ராஜா சார் டியூன் கொடுத்துட்டார் சார். அதையும் நாளைக்குக் கேட்டுறீங்களா?'னு சொன்னாங்க. எனக்கு செம ஷாக். இவ்ளோ வருடமா இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்தோம்னு நினைச்சுக்கிட்டு, `எங்கே வரணும்னு சொல்லுங்க, அரை மணி நேரத்துல நானே அங்கே வந்திடுறேன்'னு சொல்லிப் போய் பார்த்தேன். டியூனுக்குப் பாட்டு எழுதிட்டு, அவர் என்ன சொல்லப்போறாரோனு தயக்கத்தோடும் பதற்றத்தோடும் நின்னேன். `அடுத்த பாட்டும் இவருக்குக் கொடுத்திடுங்க'னு ராஜா சார் சொன்னதும், எனக்கு அவ்ளோ சந்தோஷம். அதை எழுதிக்கிட்டுப் போகும்போது, `மூணாவது பாடலையும் இவருக்குக் கொடுங்க'னு சொல்லிட்டார். `கண்ணா மூணு லட்டு தின்ன ஆசையா?'னு எனக்குள்ளே மைண்ட் வாய்ஸ் ஓடுச்சு. அந்தப் பாடல் எழுதிக்கிட்டுப் போகும்போதுதான், பாடல் வரிகளின் தொடர்ச்சி எப்படி இருக்கணும்னு நிறைய கத்துக்கொடுத்தார். அவர் இசையில `ஓய்' படத்துக்கு நான் எழுதிய மூன்று பாடல்களும் எனக்கு நெருக்கம்." 

``இளையராஜாவிடம் நீங்க கேட்க நினைக்கிற ஒரு கேள்வி?"

``உங்க சுயசரிதையை எப்போ சார் எழுதப்போறீங்க?"