Published:Updated:

3D கும்கி... சூப்பர் மெச்சூரிட்டி விஜய் சேதுபதி! - நிவாஸ் கே பிரசன்னா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
3D கும்கி... சூப்பர் மெச்சூரிட்டி விஜய் சேதுபதி! - நிவாஸ் கே பிரசன்னா
3D கும்கி... சூப்பர் மெச்சூரிட்டி விஜய் சேதுபதி! - நிவாஸ் கே பிரசன்னா

``விஜய் சேதுபதி என்னோட குடும்பத்துல ஒருத்தர் மாதிரி. சினிமா சம்பந்தமா நிறைய விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுக்கிற குரு. இந்தப் பட வாய்ப்பு கிடைச்சதுக்கு முதல் காரணம் சேது அண்ணாதான்."

`விண்மீன் விதையில்' பாடலை பட்டிதொட்டியெங்கும் முணுமுணுக்கச் செய்தவர், நிவாஸ் கே பிரசன்னா. அதன் பின் `சேதுபதி', `ஜீரோ', `கூட்டத்தில் ஒருத்தன்' ஆகிய படங்கள் மூலம் மக்களின் கவனத்தைப் பெற்று வந்தார். இந்த ஆண்டு மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைக்கக் காத்திருக்கிறார். தற்போதுகூட விஜய் சேதுபதி இசைக்கலைஞனாக நடிக்கும் படத்தில் இவர் செம பிஸி. இந்தப் பரபர வேலைக்கு மத்தியில் நிவாஸைச் சந்தித்துப் பேசினேன்!  

``உங்களுக்கு இசை மேல எப்போ இருந்து ஆர்வம் வந்தது? சினிமாவுக்குள்ள எப்படி வந்தீங்க?"

``பிறந்தது மதுரை, வளர்ந்தது திருநெல்வேலி. என்னுடைய சின்ன வயசுல நிறைய கச்சேரிகள்லேயும், மேடை நிகழ்ச்சிகள்லேயும் பாடியிருக்கேன். இதை வெச்சே என் அம்மா, நான் ஒரு நாள் இசையமைப்பாளராதான் வருவேன்னு கணிச்சிட்டாங்க. நான் ஒண்ணாவது படிக்கும்போது எங்க அப்பா என்னைப் பியானோ கிளாஸ்ல சேர்த்துவிட்டார். அங்க இருந்துதான் என்னுடைய இசைப்பயணம் ஆரம்பமானது. சென்னையில விஸ்காம் சேர்ந்தேன். காலேஜ் கல்ச்சுரல்ஸ், மேடை நிகழ்ச்சிகள்னு கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கிட்டேன். கிட்டத்தட்ட 3,000 மேடை நிகழ்ச்சிகள்ல இசையமைத்துப் பாடியிருக்கேன். அந்தச் சமயத்துல திங்க் மியூஸிக் மேனேஜர், சந்தோஷ்கூட பழக்கம் ஏற்பட்டது. `படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு வந்தா பண்ணுவீங்களா'னு கேட்டார். அப்போ எனக்குச் சின்ன தயக்கம் இருந்தது. ஆறு மாசம் கழிச்சு அவரை மறுபடியும் சந்திச்சேன். `பீட்சா 2: வில்லா' படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு வந்தது. ஆனா, எதிர்பாராத விதமா அந்த வாய்ப்புகள்லாம் கை நழுவிப் போயிடுச்சு. அப்புறம் சி.வி.குமார் சார் மூலமா வந்த வாய்ப்புதான், `தெகிடி'.

``திடீர்னு இந்த வருடம் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள்ல கமிட் ஆகியிருக்கீங்க. நடுவுல ரொம்ப நாள் ஆளைக் காணாமே?"

```இசையமைப்பாளர்கள் ஒரே ஃபார்மேட்லதான் கம்போஸ் பண்ணுவாங்க'னு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நினைச்சுக்குறாங்க. இந்த வட்டத்துக்குள்ள நான் சிக்க வேண்டாம்னு வெரையிட்டியான படங்களைத் தேர்வு செய்றேன். சில கதைகள் கேட்குறதுக்கு நல்லா இருக்கும். ஆனா, படமா ஹிட் ஆகாது. ஒரு பாட்டை கம்போஸ் பண்ண நான் நிறைய நேரம் எடுத்துக்குவேன். அதுனாலே ரொம்ப செலக்டிவா வொர்க் பண்ணுவேன். மேலும், கமர்ஷியல் படங்களுக்கு இசையமைச்சு அடுத்தகட்டத்துக்குப் போகணும்ங்கிறதுதான் என்னுடைய ஆசை. நடுவுல கொஞ்ச நாள் எனக்கு உடல்நிலை சரியில்லாமப் போயிடுச்சு. அதுனால எனக்கு ஒரு ப்ரேக் தேவைப்பட்டது."  

``விஜய் சேதுபதியோட ரெண்டாவது படத்துல வொர்க் பண்றீங்க. உங்க நட்பைப் பத்திச் சொல்லுங்க?"

``விஜய் சேதுபதி என்னோட குடும்பத்துல ஒருத்தர் மாதிரி. சினிமா சம்பந்தமா நிறைய விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுக்கிற குரு. இந்தப் பட வாய்ப்பு கிடைச்சதுக்கு முதல் காரணம் சேது அண்ணாதான். `சேதுபதி' படத்துக்கு அப்புறம் நாங்க வேற ஒரு படத்துல கமிட் ஆகியிருந்தோம். ஒரு சில காரணங்களால அந்தப் படம் கைவிட்டுப் போயிடுச்சு."

``இந்தப் படத்துல விஜய் சேதுபதி இசைக் கலைஞனா நடிக்கிறார்னு சொல்றாங்க. இசைக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்கும்?" 

``இளையராஜா சார்க்கு `சிந்துபைரவி' மாதிரி, எனக்கு இந்தப் படம் முக்கியமானதா அமையும்னு நம்புறேன். ஒரு பிறவிக் கலைஞன் இசை நுட்பத்துல எந்தளவுக்குத் துல்லியமா இருப்பானோ, அந்தளவுக்கு இந்தப் படத்தோட பாடல்களும் மெச்சூரிட்டியோட இருக்கும். மொத்தம் ஆறு பாடல்கள், எட்டு பி.ஜி.எம். இந்தப் படம் ஒரு சர்வதேசப் பிரச்னையை மையமா வெச்சு எடுக்குறதால, ரீச்சும் பெருசா இருக்கும். அதுக்குத் தகுந்த மாதிரிதான் இசையமைச்சிட்டிருக்கேன்."

``இமான் இசையில் வெளிவந்த `கும்கி' பட ஆல்பம் செம ஹிட். அதோட ரெண்டாவது பார்ட்டுக்கு நீங்க இசையமைக்குறது உங்களுக்குச் சவாலா இருக்கா?"

``பிரபு சாலமன் சார் இத்தனை வருடங்கள் கழிச்சு இசையமைப்பாளரை மாத்தியிருக்கார். இதுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து நான் செயல்படணும்னு நினைக்கிறன். ஒரு டியூனைக் கேட்கும்போது பிரபு சாருக்குப் பிடிச்சிருந்தா படத்துடைய சூழலையே மாத்திப் பாட்டை வெச்சிருவார். படத்துடைய ஹிட்டுக்குக் காரணம் பாட்டுதான்னு நினைக்கிற ஆள் அவர். அதனால சில இடங்களுக்கு அவரோட சேர்ந்து நானும் டிராவல் பண்ணினேன். இந்தப் படத்தை 3D டெக்னாலஜில எடுக்கத் திட்டமிட்டிருக்காங்க. இதோட கதையும் ரொம்ப வித்தியாசமானது. `ஜங்கிள் புக்', `கும்ஃபூ பாண்டா' ஸ்டைல்ல குழந்தைகளுக்கும் பிடிக்கிற மாதிரி இருக்கும்."

`` `தேவராட்டம்' படப் பாடல்கள் எப்படி வந்திருக்கு?"

``மெலடி பாடல்களுக்கு இசையமைக்கிறது எனக்கு ரொம்ப ஈஸி. இப்போ நான் இசையமைக்கிற படங்கள்ல முக்கால்வாசி ஃபாஸ்ட் பீட் பாடல்கள்தான் இருக்கு. முத்தையா சார் ஒரு கமர்ஷியல் இயக்குநர். கிராமத்துல நடக்குற கதைங்கிறதால, நம்ம ஊர் திருவிழா எந்த மாதிரி இருக்குமோ, அந்த மாதிரியான இசைதான் படம் முழுக்க இருக்கும். படம் பார்க்கும்போது இறங்கிக் குத்தாட்டமே போடலாம்!"

``உங்க மெட்டுக்குக் கபிலன்தான் எப்பவும் வரிகள் எழுதுறார். அதுக்கு எதுவும் ஸ்பெஷல் காரணம் இருக்கா?"

```இந்த இசையமைப்பாளர்களோடதான் வேலை பார்க்கணும்'ங்கிறதுல தீர்மானமா இருக்கவர், கபிலன் சார். எங்களுடைய வேவ் லெங்த்தும் செமையா செட் ஆகுறனால தொடர்ந்து வொர்க் பண்றோம். என்னுடைய பாடல்கள் ஹிட் ஆகுறதுக்கு முக்கியக் காரணம் கபிலன் சார். தவிர, அடுத்த தலைமுறை பாடலாசிரியர்கள்கூடவும் இப்போ வேலை பார்த்துட்டிருக்கேன்."

``அடுத்த கட்டம்?!"

``சித்தார்த் நடிக்கிற `மஹாலக்ஷ்மி', அரவிந்த் சாமி நடிக்கிற `கள்ளபார்ட்'னு ரெண்டு முக்கியமான படங்களுக்கு இசையமைச்சிட்டிருக்கேன். இசையில அடுத்த லெவலுக்குப் போகணும்னு சமீபத்துல அமெரிக்காவுல இருக்கிற இசையமைப்பாளர்களைச் சந்திச்சேன். அவங்க எல்லாரும் கிராமி அவார்ட்ஸ் வின்னர்ஸ். இவங்கதான் என்னுடைய அடுத்த ஆல்பத்துக்கு வொர்க் பண்ணப் போறாங்க!'' என உற்சாகம் கலந்த சிரிப்போடு பேட்டியை முடித்துக்கொண்டார், நிவாஸ் கே பிரசன்னா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு