பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!

உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!

உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!

“இந்தப் படத்தை இதுவரை 15 முறைக்கு மேல் பார்த்திருப்பேன்.  என் படங்களிலேயே ரிலீஸுக்கு முன் அதிகமுறை பார்த்தது இந்தப் படத்தைத்தான்.   அப்பாவுக்கு வழக்கமான கமர்ஷியல் படங்கள் அவ்வளவா பிடிக்காது. ‘என்னடா எப்பப்பாரு, பாட்டு, ஃபைட்னு இயல்பாவே இல்லையேடா’ன்னு சொல்லுவாங்க. அவங்க  இந்தப்படத்தைப் பார்த்துட்டு, ‘ரொம்ப நல்லா இருக்கு. கதையிலிருந்து விலகாம, அதே நேரம் தொய்வில்லாமலும் கொண்டுபோயிருக்கார்’னு சொன்னாங்க. அம்மாவுக்கும் படம் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. கிருத்திகாவும் பார்த்துட்டாங்க. ‘தமன்னா, வடிவுக்கரசியம்மா, நீ மூணு பேரும் சமமா ஸ்கோர் பண்றீங்க. அதுவும் கடைசி அஞ்சு நிமிஷம் நீ அவங்களை ஓவர்டேக் பண்ணிட்ட’ன்னு சொன்னாங்க. ஆமாம்.. இது எனக்கு ரொம்பவே ஆத்மார்த்தமான படம்.” 

உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!

- ‘கண்ணே கலைமானே’ படம் பற்றிப் பேசப்பேச உதயநிதியின் முகத்தில் பிரகாசம். சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப்படம் இம்மாதம் 22-ம் தேதி திரைக்கு வருகிறது. இதைத்தவிர மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’, கே.எஸ்.அதியமான் இயக்கும் படம், மு.மாறனின் ‘கண்ணை நம்பாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் உதயநிதி, தி.மு.க சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபைக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு அரசியலிலும் பிஸி.

உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!“ ‘நீர்ப்பறவை’, எங்க தயாரிப்பில் சீனு ராமசாமி சார் இயக்கிய படம். அந்தப் படத்துக்குத்தான் முதல்முறையா, ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெருமையுடன் வழங்கும்’னு வெளியிட்டோம். அப்ப இருந்தே சீனு சார் நல்ல பழக்கம். என்னை வெச்சு ஒரு படம் பண்ணணும்னு அவர் நினைச்சாலும், நான் அடுத்தடுத்து நகரத்தை மையப்படுத்தின கதைகள்ல நடிச்சதால அவருக்கு ஒரு தயக்கம் இருந்துச்சு. பிறகு, ‘மனிதன்’, ‘நிமிர்’ படங்களைப் பார்த்துட்டு, ‘நல்லா இருக்கு சார். நேட்டிவிட்டியா ஒரு படம் பண்ணுவோம்’னு சொன்னார். அப்படி அவர் முதல்ல சொன்னது ஒரு க்ரைம் த்ரில்லர் கதை. அதில் போலீஸ் அதிகாரி, ஒரு மாணவன்னு இரண்டு ஹீரோக்கள். ‘இரண்டுல நீங்க எந்தக் கேரக்டர் பண்றீங்க’னு கேட்டார். ‘இயல்பான கிராமத்து குடும்பக் கதைகள்தான் உங்க பலம். அப்படி ஒரு கதை இருந்தா சொல்லுங்க சார்’னேன். அப்ப அவர் சொன்ன கதைதான் இது.  அவருடன் நிச்சயம் அடுத்தடுத்து படங்கள் பண்ணுவேன்.”

“கண்ணே கலைமானே’யில் உதயநிதி யார்?”

“கமலக்கண்ணன், சின்ன வயசுலயே அம்மாவை இழந்த பையன். பாட்டியால் வளர்க்கப்படுறவன். பி.எஸ்ஸி விவசாயம் படிச்சிட்டு நிறைய வேலை வாய்ப்புகள் இருந்தும் ‘என் கிராமத்துல  இயற்கை விவசாயம் பண்ணுவேன்’னு  வாழும்  இளைஞன். செயற்கை உரம், பூச்சிக்கொல்லி தெளிக்கிற விவசாயிகளை சந்திச்சுப் பேசி அவர்களையும் இயற்கை விவசாயத்தின் பக்கம் திருப்பும் கேரக்டர்.  பாட்டி சொல்லைத் தட்டாத அந்தப் பையன், திடீர்னு ஒருநாள், ‘ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்’னு வந்து நிக்கிறான். அந்தப் பாட்டி தன் பேரனின் காதலை ஏத்துக்கிட்டாங்களா இல்லையா என்பதுதான் ‘கண்ணே கலைமானே’ கதை.

உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!

ஷூட்டிங் போகுறதுக்கு முன் காஸ்ட்யூம் ரிகர்சல் பார்க்கணும்னு சீனு சார் சொன்னார். சட்டை, டி-ஷர்ட், டிராக் சூட், ஷூனு  அவர் அனுப்பியிருந்த காஸ்ட்யூம் எல்லாமே பிராண்டட். ‘கிராமத்துக் கதைன்னு சொல்றீங்க. ஆனா வேறமாதிரியான காஸ்ட்யூம்ஸ் வந்திருக்கே சார்’னு போன் பண்ணினேன். ‘ஒண்ணும் பிரச்னையில்லை. அங்கபோய் செலக்ட் பண்ணிக்கலாம்’னு சொன்னார். ஆனா ஸ்பாட்ல பொத்தல் விழுந்த முண்டா பனியன், ஒரு லுங்கி, அழுக்கேறிய துண்டுன்னு வேறமாதிரியான காஸ்ட்யூம் வந்தது. ‘காஸ்ட்யூம் ரிகர்சலுக்கு ஏன் சார் இதை அனுப்பலை’னு கேட்டேன். ‘உங்க படங்கள்ல ஃபாரின் சாங், டூயட்னு கலர் கலர் காஸ்ட்யூமா இருக்கும். இதையெல்லாம் நான் முன்னாடியே அனுப்பியிருந்தா, ஷூட்டிங் வருவீங்களோ மாட்டீங்களோன்னு எனக்குள்ள ஒரு தயக்கம் இருந்துச்சு சார்’னார். ‘எனக்கும் இப்படியான கிராமத்து கேரக்டர்கள் பண்ணதான் ஆசை. தயாரிப்பாளர்னு எனக்கு எதுவும் சிறப்புச் சலுகைகள் தராதீங்க. உங்களுக்குத் திருப்தி வர்றவரை நீங்க நினைக்கிறதைக் கேட்டு வாங்குங்க’ன்னு சொல்லிட்டேன்.”

“தமன்னாவுடன் முதல்முறையா சேர்ந்து நடிக்கிறீங்களே?”

“ ‘தர்மதுரை’யில வர்ற தமன்னா கேரக்டரின் தொடர்ச்சி மாதிரி நினைச்சுக்கங்க’ன்னு சொல்லிதான் சீனு சார் இந்தக் கதையையே சொன்னார். கதையைக் கேட்டதும், ‘தமன்னாவைத் தவிர வேற யார் பண்ணினாலும் இது நல்லாருக்காது சார்’னேன். தமன்னா எனக்கு போன் பண்ணி, ‘உண்மையாவே இந்தப் படத்தை நீங்க தயாரிச்சு, நடிக்கிறீங்களா’ன்னு கேட்டாங்க. ‘ஏன், கதை பிடிக்கலையா’ன்னு கேட்டேன். ‘இல்ல... கதை அவ்வளவு நல்லா இருக்கு. தைரியமான பெண்ணை மையப்படுத்தின படமாவும் இருக்கு. போல்டான பொலிடிகல் வசனங்கள் இருக்கு. என் கேரக்டர் உங்களுக்கு சமமா இருக்கு. உங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்லைல’ன்னு கேட்டாங்க. ‘படம் நல்லா வந்தா போதும்ங்க’னேன். இதில் தமன்னா, கிராமப் பஞ்சாயத்து வங்கி அதிகாரியா வர்றாங்க. வடிவுக்கரசி, ‘பூ’ ராம் மாதிரி சீனியர் நடிகர்களும் நடிக்கிறாங்க.  ‘வடிவுக்கரசியம்மான்னா வில்லி மாதிரி நெகட்டிவ் ஃபீல் வந்துடப்போகுது. அதேபோல அப்பாவா பூ ராம் சார் ரொம்ப வயசானவர் மாதிரி தெரிவாரே’ன்னு ஆரம்பத்தில் இவங்களை ஃபிக்ஸ் பண்ண நான் கொஞ்சம் பயந்தேன். ‘கவலைப்படாதீங்க. சரியா வரும்’னு சீனு சார்தான் சொன்னார். இப்ப படம் பார்த்த பிறகு அவங்களைத் தவிர வேறு யார் நடிச்சிருந்தாலும் இந்தளவுக்கு நம்பகத்தன்மை வந்திருக்காதுன்னு தோணுது.”  

உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!

“உங்க படத்துக்கு யுவன் இசை! பாடல்கள் எப்படி வந்திருக்கு?”

“முதல்முறையா யுவன்-வைரமுத்து சார் காம்பினேஷன்ல ஒர்க் பண்ணியிருக்கேன். பாடல்கள் எல்லாமே கதையை ஒட்டியே இருக்கும். தவிர யாரும் பாடுறமாதிரி இல்லாம மான்டேஜாதான் வரும். `ஜலந்தர் வாசு’ன்னு புதுக் கேமராமேன். நல்லா பண்ணியிருக்கார். எடிட்டர், காசி விஸ்வநாதன் சார். இது, சென்சிபிலான டீம் ஒர்க்.”  

உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!

“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க பிரச்னைகள் பற்றி உங்கள் கருத்தென்ன?”

“அதில் நான் உறுப்பினர். சங்கத் தேர்தல்ல வாக்களிப்பேன். விஷால் என் நண்பர். ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்துக்கு வரிவிலக்கு கிடைக்க அவர் உதவி பண்ணினார். அதைத்தவிர அந்தச் சங்கத்தால் எனக்கு எந்த நல்ல தீர்வும் கிடைத்ததில்லை. சினிமா வேலை நிறுத்தத்தால் என்ன நல்லது நடந்ததுன்னு கேக்குறாங்க. ஆயிரத்து சொச்சம் பேர் இருக்கிற சின்னச் சங்கத்திலேயே அதன் உறுப்பினர்களைத் திருப்திப்படுத்த முடியலைன்னு சொல்றது வருத்தமாதான் இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா, பூட்டு போட்டதா சொல்லப்படுற தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்கக் கட்டடம் எங்க இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது.”  

உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!

“தி.மு.க நடத்தும் நிகழ்ச்சிகள்ல அடிக்கடி உங்களைப் பார்க்க முடிகிறது. தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து நீங்களும் முழுநேர அரசியல்வாதி ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே?”

“நீங்க என்ன கேக்குறீங்கன்னு எனக்குப் புரியுது. இன்னாரின் பேரன், இவரின் மகன் என்பதால எனக்குக் கட்சியில் பதவியோ, பொறுப்போ தரப்படலை. நானும் கேட்கலை. தி.மு.க-வின் எல்லாத் தொண்டர்களையும்போல நானும் ஓர் உடன்பிறப்புதான்! நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருக்கேன். சினிமாவில் இருக்கிறதால அந்த இடத்தில் எனக்கு ஒரு முக்கியத்துவம் தந்துடுறாங்க. அதையும் தவிர்க்கப்பார்க்கிறேன். தஞ்சாவூர்ல மாவட்டச் செயலாளர் கூட்டம். அதில் என் போட்டோவுடன் ஒரு ஃப்ளெக்ஸ் கட்டியிருந்தாங்க. அதை அவங்க செஞ்சிருக்கக் கூடாது. நண்பர்கள் சுட்டிக்காட்டியதும் ‘அது தவறு’ன்னு சொல்லி சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளருக்கு போன் பண்ணி என் வருத்தத்தைத் தெரிவிச்சேன். அப்பா இந்த நிலைமைக்கு வர இத்தனை வருட உழைப்பு தேவைப்பட்டிருக்கு. அதை அவ்வளவு சாதாரணமா நினைச்சுக்க மாட்டேன். நடிகன் என்பதால் நம்மை எளிதா ஏத்துப்பாங்கன்னு நினைக்கமாட்டேன். கீழ்மட்டம் வரை இறங்கி வேலை செய்யணும். அதை மட்டும் மனசுல வெச்சிருக்கேன்.”  

உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!

“தி.மு.க நடத்துற ஊராட்சி சபைக் கூட்டங்கள்ல கலந்துக்கிறதைப் பார்க்கும்போது வர்ற சட்டமன்றத் தேர்தல்ல போட்டியிடுவீங்கன்னு சொல்றாங்களே?”

“எனக்குத் தெரிஞ்சு நான்கு தேர்தல்களா, ஆயிரம் விளக்குத் தொகுதியில நிக்கப்போறேன்னு சொல்லிட்டே இருக்காங்க. இப்ப புதுசா திருவாரூர்னு சொல்றாங்க. அவ்வளவுதான். மற்றபடி மாநாடு, பொதுக்கூட்டம்னு பல கட்சி நிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கேன். அதுவும் மூணு வரிசை பின்னாடி தள்ளிதான் உட்கார்ந்திருப்பேன். அப்ப சின்னப்பையன். இப்ப சில சினிமாக்கள்ல நடிச்சு கொஞ்சம் பிரபலமானதால கட்சி சார்பா கூட்டங்கள்ல கலந்துக்கச் சொல்லிக் கேட்குறாங்க. அது கட்சிக்கு நல்லதுன்னா செய்றதுல தப்பில்லையே?”

ம.கா.செந்தில்குமார்