Published:Updated:

``பாக்கியராஜோட உதவியாளர்ங்கிறதால ராஜா எனக்கு `நோ' சொன்னார்!" - பார்த்திபன்

இளையராஜாவுடன் வேலை பார்த்த அனுபவத்தில் ஆரம்பித்து அவரின் பெர்சனல் பக்கங்களைப் பற்றியும் மனம் திறக்கிறார், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.

``பாக்கியராஜோட உதவியாளர்ங்கிறதால ராஜா எனக்கு `நோ' சொன்னார்!" - பார்த்திபன்
``பாக்கியராஜோட உதவியாளர்ங்கிறதால ராஜா எனக்கு `நோ' சொன்னார்!" - பார்த்திபன்

``காலையில 6 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோவுல ராஜா சார் இசையமைச்சிட்டிருப்பார். ஒருநாள்கூட அவர் லேட்டா வந்தது இல்லை. அவர் இசையமைக்கும்போது அவருடைய குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் இப்படி யாரைப் பத்தியுமே யோசிக்கிறதில்லை. புற உலகத்து மேல அவருக்குப் பெரிய ஈடுபாடு கிடையாது. ஒரு மனுஷன் எப்படி இசையையும் சினிமாவையும் இவ்வளவு நேசிக்க முடியும்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு" என்று இளையராஜாவை நெகிழ்ந்து பேசத் தொடங்குகிறார், பார்த்திபன். 

``உங்களுக்கும் ராஜாவுக்குமான உறவு எப்படிப்பட்டது?" 

``சில பேருக்கு ராஜா சார் கூரையா இருந்திருப்பார். சில பேருக்கு மொட்டை  மாடியா இருந்திருப்பார். இன்னும் சில பேருக்கு நிலவா இருந்திருப்பார். ஆனா, எனக்கு ராஜா சார் இது எல்லாத்தையும் தாண்டி அண்ணாந்து பார்த்து ஆச்சர்யப்படுற வைக்கிற ஆகாயமாதான் இருக்கார். அவரை முதல் தடவை எப்படி வியந்து பார்த்தேனோ, அதே வியப்பு இன்னமும் இருக்கு. அதாவது, சில பேர் அவங்க வளர வளர மத்தவங்க தாழ்ந்து போயிட்டதா நினைப்பாங்க. ஆனா, எனக்கு இது ரெண்டு பேரைப் பார்த்தா மட்டும் தோணவே தோணாது. ஒண்ணு இவர், இன்னொருத்தர் பாக்கியராஜ் சார்."

``உங்களோட முதல் படத்துக்கு அவர் இசையமைத்த தருணம் ஞாபகம் இருக்கா?" 

``என்னுடைய முதல் படத்துக்கு ராஜா சாரை இசையமைக்கச் சொல்லி கேட்குறப்போ, அவர் மாட்டேன்னு சொல்லிட்டார். பாக்கியராஜ் சார் தனியா இசையமைக்கத் தொடங்கிய காலகட்டமும் அதுதான். நான் அவர்கிட்ட உதவியாளரா இருந்துதான் இயக்குநரானேன்.  ஒருநாள் பாண்டியராஜ் சார், பாக்கியராஜ் சார்கிட்ட இருந்து ஆர்மோனியப் பெட்டியை வாங்கிகிட்டுப் போறதை ராஜா சார் பார்த்திருக்கார். பாண்டியராஜ் சாரும் பாக்கியராஜ் சாரோட உதவியாளர்தான். அதனால பாக்கியராஜ் சாரோட உதவியாளர்கள் எல்லாரும் அவங்களே மியூஸிக் போட்டுப்பாங்கனு ராஜா சார் நெனச்சுட்டார் போல! என் படத்துக்குகூட அதனாலதான் இசையமைக்கமாட்டேன்னு சொல்லிட்டார். நான் அப்போ, `சார் எனக்கு மியூசிக்லாம் தெரியாது. நம்ம படத்துக்கு நீங்க பார்த்து பண்றதுதான் எல்லாமே'னு சொல்லி எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி பண்ணினேன். ராஜா சார் விடாப்பிடியா `முடியவே முடியாது'னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் என்னுடைய முதல் படமான `புதிய பாதை' படத்துக்கு சந்திரபோஸ் சார்தான் இசையமைத்தார். ஆனா, படத்தைப் பார்த்துட்டு ராஜா சார் என்னை பயங்கரமாப் பாராட்டினார். அப்போ, `என்னோட அடுத்த படத்துக்கு நீங்க இசையமைக்கிறீங்களா'னு கேட்டேன். ஒப்புக்கிட்டு `பொண்டாட்டி தேவை' படத்துக்கு இசையமைச்சுக் கொடுத்தார். அன்னிக்கு இருந்து ராஜா சாருக்கு நான் செல்லப்பிள்ளை மாதிரிதான் இருக்கேன்." 

``'இவன்' படத்துல இசை தான் பிரதானமான ஒன்னு . அந்த கம்போசிங் தருணங்களைப் பகிர்ந்துக்கோங்க..."

`` `இவன்' படத்துக்கு இசையமைக்கும்போது ராஜா சாருக்காகவே சில காட்சிகளை உருவாக்கினேன். அவர்கிட்ட இருந்து எனக்கு என்ன டியூன் வேணுமோ, அதை கேட்டு வாங்குவேன். அதாவது, அவர் மனம் கோணாதபடி அவர்கிட்ட சில விஷயங்களைச் சொல்லி எனக்கு பண்ணித் தரச் சொல்வேன். அதையும் ரொம்ப சாதூரியமாதான் கேட்பேன். இதுக்கு பெயர் நட்பு கிடையாது, பக்தி. நட்புக்கு நடுவுலதான் விரிசல் வரும். ஆனா, பக்திக்கு முடிவே கிடையாது. அப்படி தெரிஞ்சோ தெரியாமலோ ஒருத்தவங்க மேல நாம பக்தியா இருப்போம். அதை கடைசி வரை மாத்திக்க வேண்டாம்னு நினைப்போம். எனக்கு அந்த மாதிரியான ஒரு ஆள்தான் ராஜா சார்."  

 ``நீங்க `குண்டக்க மண்டக்க' பேசி அவரை ரைமிங்கா டியூன் போட வெச்சிருக்கீங்களா?"

`` `இவன்' பட பாடல் கம்போஸிங்காக ராஜா சார்கிட்ட அந்தப் பாடல் எந்தச் சூழல்ல வருதுனு பெரிய விளக்கம் கொடுத்துட்டிருந்தேன். அவர்கிட்ட, ``சார் அந்தப் பொண்ணு ஒரு கர்னாடக பாடகி. அவ காதலிக்கிற பையன் அவளைப் பார்த்துகிட்டே இருக்கான். 'அப்படி பார்குறதெல்லாம் வேணாம்'னு அந்தப் பொண்ணு ஒரு பாட்டு பாடுற மாதிரி இருக்கணும்'னு சொன்னேன். அதுக்கு ராஜா சார் நிறைய பாடல் வரிகளை வைத்து கம்போஸ் பண்ணிட்டிருந்தார். அப்போ நான், `சார் 'அப்படி பார்குறதெல்லாம் வேணாம்'னே பாட்டை ஆரம்பிச்சா நல்லாயிருக்கும்னு சொன்னேன். அவர் அதுக்கு ஒரு டியூன் போட்டார். ஆனா, அந்த டியூன் உள்ள வரிகளை அடக்க முடியலை. வேற வேற மாதிரி வரிகள் போட்டு டியூன் போட்டார். நான் மறுபடியும் மறுபடியும் `இந்த வரிதான் சார் எனக்கு வேணும்'னு அழுத்திச் சொன்னேன். அதுக்கு அவர், 'யோவ் இந்த வரிதானே  வேணும். சரணத்துல எங்கயாவது போட்டுக்கலாம்'னு சொன்னார். 'இல்லை, 'அப்படி பாக்குறதெல்லாம் வேணாம்'னுதான் பாடல் ஆரம்பிக்கணும்னு சொன்னேன். அவர் சொல்றதை கேட்காம நான் வேற ஒண்ணு சொல்றேன்னு அவருக்கு கோபம் வந்துருச்சு. அந்த வரிக்கு ஒரு டியூன் போட்டு, `அடுத்தது என்ன'னு என்னைப் பார்த்தார். `கண்மேல தாக்குறது வேணாம்'னு சொன்னேன். `அப்போ நீ ஒரு முடிவோடதான் வந்திருக்க'னு என்னை முரட்டுத்தனமா பார்த்தார். அவர் சொன்னதை கேட்காம வேற ஒண்ணைச் செய்யச் சொல்றேன்ங்கிற கோபத்தோடதான் இந்தப் பாட்டுக்கு இசையமைச்சார்.

`பொண்டாட்டி தேவை' படத்துக்காக `நீ பாதி நான் பாதி'னு ஒரு பாடல் இசையமைச்சிட்டிருந்தப்போ வாலி சாரும் ஸ்டுடியோல இருந்தார். அவர்தான் இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர். ராஜா சார் டியூன் போட்டுட்டு இருந்தப்போ, `நீ பாதி நான் பாதி'னு பாட்டு ஆரம்பிச்சா நல்லாயிருக்கும்னு சொன்னேன். அதுக்கு ராஜா சார், `என்ன நீ ஏதாவது சொல்லிட்டே இருக்க. அதெப்படி நீ பாதினு ஒரு பாட்டு ஆரம்பிக்கும்'னு கேட்டார். அதுக்கு வாலி சார், ஓய்... டைரக்டர்தான் ஆசைப்படுறார்ல ஓய். பாட்டை அப்படியே ஆரம்பிச்சுடலாம்'னு சொன்னார். அப்படி இசைமைச்சதுதான் `நீ பாதி நான் பாதி பாடல்'. ஆனா, இந்தப் படத்தை எடுத்து முடிகிறப்போ படத்தோட கதாநாயகி அஸ்வினி ரொம்ப வெயிட் போட்டாங்க. ஷூட் பண்ணாததுனால அந்தப் பாடலை படத்துல பயன்படுத்தலை. அடுத்த படமான `கேளடி கண்மணி' படத்தையும் அதே ப்ரொடக்‌ஷன் கம்பெனிதான் தயாரிச்சாங்க. அதனால `நீ பாதி நான் பாதி' பாடலை அந்தப் படத்துக்காக நாங்க கொடுத்துட்டோம்."

``நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை பார்த்ததிலேயே மனசுக்கு நெருக்கமான திரைப்படம் எது?"

`` `கருப்பணசாமி'ங்கிற படத்துக்கு இளையராஜா சார் இசையமைச்சார். ஆனா, அந்தப் படம் வெளிவராமப் போயிருச்சு. அந்தப் படத்துல மொத்தம் பத்துப் பாடல்கள். 1994 சமயத்துல கர்நாடகாவுலதான் இந்தப் படத்துடைய ஷூட்டிங் நடந்தது. அந்தச் சமயத்துல அங்க நிலநடுக்கம் ஏற்பட்டதால படத்துடைய வேலைகள் பாதியிலேயே நின்னுபோயிடுச்சு. மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், அந்தப் பத்து அருமையான பாடல்களும்தான் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது." 

``அவர்கிட்ட நீங்க பார்த்து வியந்த விஷயங்கள் என்னென்ன?"

``அவர் வேலை பார்க்காம ஒரு நாள்கூட இருந்தது இல்லை. அவர்கூட குடும்பம் நடத்துறது ரொம்ப கஷ்டம். `செவிக்கு  உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். ஆனால் அப்படியொரு பொழுது எங்க இருக்கு'னு ராஜா சார் ஒருமுறை எழுதியிருக்கார். அந்த மாதிரிதான் அவருக்கு சர்வமும் இசை நேரமாதான் இருக்கும். அவருக்கு கோபம் அதிகம் வரும். நிறைய பேர் அவருடைய கோபத்தைச் சுட்டிக்காட்டுவாங்க. ஆனா, மத்தவங்களுடைய வரையறைக்கு உட்பட்டுதான் அவர் நடந்துக்கணும்னு அவசியம் இல்லையே. அவங்களை அப்படியே ஏத்துக்கணும்னு நினைக்கிறேன். ஏத்துக்க முடியாதவங்க தள்ளி நின்னுக்கணும். அவர் மனசை கஷ்டப்படுத்துற மாதிரி யாராவது நடந்துகிட்டா, அவர் அதையே நெனச்சு குழப்பிக்கிட்டு இருப்பார். அவரை விமர்சனமே பண்ணக் கூடாதுங்கிறதுதான் என்னோட கருத்து." எனச் சொல்லி முடித்தார், பார்த்திபன்.