Published:Updated:

``கமல், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் கூட வேணும்னேதான் வேலை பார்க்கலை!’’ - இயக்குநர் அமீர்

"அப்போ யுவனும் ஸ்பாட்ல இல்லை. இருந்திருந்தா அவர்கிட்ட சொல்லச் சொல்லியிருப்பேன். அப்போ அங்க இருந்த சவுண்ட் இன்ஜினீயர், `பயப்படாதீங்க சார், சொல்லுங்க. எதுவும் சொல்ல மாட்டார்’னு சொன்னார். நானும் தயங்கிகிட்டே சொல்லப் போனேன்."

``கமல், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் கூட வேணும்னேதான் வேலை பார்க்கலை!’’ - இயக்குநர் அமீர்
``கமல், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் கூட வேணும்னேதான் வேலை பார்க்கலை!’’ - இயக்குநர் அமீர்

``இளையராஜா சார்கூட ஏற்பட்ட முதல் சந்திப்பு இன்னும் என் நினைவுல இருக்கு. மிகப் பெரிய பிரமிப்பு அது. இப்போ நினைச்சாக்கூட உடம்பெல்லாம் சிலிர்க்குது...’’ என்ற அந்தச் சிலிர்ப்போடு பேசத் தொடங்குகிறார் நடிகரும் இயக்குநருமான அமீர்.  

`` `சேது’ படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டிருந்த சமயத்துலதான் இளையராஜா சாரை நேர்ல பார்த்தேன். `காண கருங்குயிலே’ பாட்டுடைய கம்போஸிங் போயிட்டிருந்தது. கொஞ்சம் தூரத்துல நின்னு அவரையே பார்த்துட்டிருந்தேன். பாட்டை முடிச்சுக் கொடுத்துட்டுக் கிளம்பிட்டார். அந்தத் தருணத்தை என்னால மறக்கவே முடியாது.’’ 

``என்னுடைய எல்லா படங்களுக்குமே யுவன்தான் இசையமைச்சிருக்கார். கொஞ்ச நாள்லே நானும் யுவனும் க்ளோஸாகிட்டோம்.  கம்போஸிங் டைம்ல யுவனுடைய ஸ்டூடியோவுக்கு அடிக்கடி போவேன். அப்போ அவருடைய வீடுதான் ஸ்டூடியோ. அப்படிப் போகும்போதெல்லாம் இளையராஜா சாரை பார்க்கிற வாய்ப்பு கிடைக்கும். அவரைப் பார்த்து வணக்கம் சொல்வேன், பதிலுக்கு அவர் வணக்கம் சொல்வார். அப்போதைய உரையாடல் அவ்வளவுதான்.’’ 

``என்னுடைய முதல் படமான `மௌனம் பேசியதே’ல அவரைப் பாட வைக்கணும்னு நினைச்சேன். முடியாமப் போயிருச்சு. அப்புறம், `ராம்’ படத்துல வர்ற `ஆராரிராரோ’ பாடலை அவர் பாடினா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அந்த முயற்சியும் நடக்காமப் போயிருச்சு. ஒரு வழியா என்னுடைய ஆசை `பருத்தி வீரன்’ படத்துலதான் நிறைவேருச்சு. அதுவும் பிடிவாதமா பண்ணினேன். வணக்கத்தைத் தவிர பேசுற சந்தர்ப்பமும் அப்போதான் அமைஞ்சது.’’ 

`` `அறியாத வயசு’ பாட்டுடைய ரெக்கார்டிங் போயிட்டிருந்தது. ராஜா சார் பாடிட்டிருந்தப்போ பக்கத்துல நின்னு அவரையே வேடிக்கை பார்த்துட்டிருந்தேன். அவர் பாடிட்டு இருக்கும்போது எனக்கு ஒரு சின்ன கரெக்‌ஷன் தோணுச்சு. சொல்றதா வேண்டாமானு தயக்கம் வேற இருந்தது. அப்போ யுவனும் ஸ்பாட்ல இல்லை. இருந்திருந்தா அவர்கிட்ட சொல்லச் சொல்லியிருப்பேன். அப்போ அங்க இருந்த சவுண்ட் இன்ஜினீயர், `பயப்படாதீங்க சார், சொல்லுங்க. எதுவும் சொல்ல மாட்டார்’னு சொன்னார். நானும் தயங்கிகிட்டே சொல்லப் போனேன். சொன்னதுக்கப்புறம், `அப்படியா... அப்படி இருக்கட்டுமா... சரியா வருமாயா’னு கேட்டார். அப்புறம் நான் சொன்ன மாதிரியே பாடினார். பாடி முடிச்சதும், `யோவ் நல்லா இருக்குயா’னு சொன்னார். அதுக்கப்புறம் பொது இடங்கள்ல பார்த்தா பேசுவேன்.’’

``சமீபத்துல `பியார் பிரேமா காதல்’ படத்துடைய இசை வெளியீட்டு விழாவுக்குப் போயிருந்தேன். ராஜா சாரும் வந்திருந்தார். `உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா சார்’னு கேட்டேன். சரினு சொன்னார். கரெக்ட்டா போட்டோ எடுக்கும்போது வேற பக்கம் திரும்பிட்டார். திரும்பக் கேட்குறதுக்கும் பயம். அப்புறம் அவரே, `யோவ் நான் திரும்பிட்டேன் வாயா மறுபடியும் எடுக்கலாம்’னு கூப்பிட்டு இன்னொரு போட்டோ எடுத்துக்கிட்டார்.’’

``சினிமாவுல நான் பிரமித்துப் பார்க்குற மூணு பேர் கமல் சார், பி.சி.ஸ்ரீராம் சார், இளையராஜா சார். இவங்க மூணு பேர் கூட்டணியில இயக்குநரா வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. நான்தான் ஒதுங்கிட்டேன். காரணம், அவங்க மூணு பேருமே அவங்க சம்பந்தப்பட்ட ஏரியாவுல ஜாம்பவான்கள். இவங்ககூட வொர்க் பண்றதுல எனக்குச் சின்ன பயம். அதுவும் இல்லாம அவங்கெல்லாம் ரொம்ப வருஷமா சினிமாவுல இருக்கவங்க. அவங்க மேல எனக்கிருக்கும் அன்பு, பிரியம் இதுனால பாதிக்கப்படுமோனு நினைச்சுதான் விலகினேன். ஆனா, தனிப்பட்ட முறையில இவங்க மூணு பேர் கூடவும் இணக்கமாகத்தான் இருக்கேன்’’ என்றவரிடம் ``இளையராஜா இசையமைத்த பாடல்களில் எந்தப் பாடலை வாழ்நாள் முழுவதும் ரிங்க்டோனா வைப்பீங்க?’’ என்று கேட்டதற்கு, 

``எனக்கு எப்பவும் சினிமா பாடல்களை ரிங்டோனா வைக்கிற பழக்கம் இல்லை. ஆனா, இளையராஜா சாருடைய பாட்டை வெச்சே ஆகணும்னுங்கிற கட்டாயம் வந்துச்சுன்னா, `உன்ன (பொன்ன) போல ஆத்தா, என்னைப் பெத்துப் போட்டா' பாட்டைதான் வைப்பேன். காரணம், சின்ன வயசுல இருந்தே அந்தப் பாட்டை நான் அதிகமா கேட்டிருக்கேன். அவருடைய குரல்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டும் இதுதான்’’ என்று நெகிழ்ந்ததோடு பேட்டியை முடித்தார்.