Published:Updated:

''அந்தப் பொண்ணுக்கு 18 வயசுனு சொல்லித்தான் வேலைக்கு சேர்த்துவிட்டாங்க..!’’ - பானுப்ரியா

"`நாங்க போலீஸ்ல புகார் கொடுக்கிறோம். அப்புறம் உங்கப் பெண்ணைக் கூட்டிட்டுப் போ'னு என் அண்ணா அந்தப் பொண்ணோட அம்மா பிரபாவதிக்கிட்ட சொன்னாங்க. ஆந்திரா போனதும், சமால்கோட்டா காவல் நிலையத்தில் `தன் பெண்ணை கொடுமைப் படுத்தறதா' புகார் கொடுத்துட்டாங்க."

''அந்தப் பொண்ணுக்கு 18 வயசுனு சொல்லித்தான் வேலைக்கு சேர்த்துவிட்டாங்க..!’’ - பானுப்ரியா
''அந்தப் பொண்ணுக்கு 18 வயசுனு சொல்லித்தான் வேலைக்கு சேர்த்துவிட்டாங்க..!’’ - பானுப்ரியா

"கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்காக என் மகளை நடிகை பானுப்ரியா சென்னை அழைத்துச் சென்றார். அவர் அழைத்துச் செல்வதற்கு முன்பு 10,000 ரூபாய் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை ஒரு மாதம்கூட சம்பளம் வழங்கவில்லை. என் மகளைப் பார்ப்பதற்காகக் கடந்த 19-ம் தேதி நான் சென்னை சென்றிருந்தேன். ஆனால், அவர் என் மகளைப் பார்க்கவிடவில்லை. என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். மேலும், என் மகள் அவர் வீட்டில் திருடியதாகக் காவல் நிலையத்தில் பொய் புகார் அளிப்பேன் எனவும், 10 லட்சம் ரூபாய் கேட்டும் என்னை மிரட்டினார். அவரிடமிருந்து என் மகளை மீட்டுத் தாருங்கள்" ஆந்திரக் காவல் நிலையத்தில் நடிகை பானுப்ரியா மீது புகார் கொடுத்திருந்தார் பிரபாவதி. தற்போது பிரபாவதியைச் சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இது குறித்து பானுப்ரியாவிடம் கேட்போது, ``எங்கள் அம்மாவுக்குத் தெரிந்த ஒருத்தர்தான் இந்தப் பெண்ணைக் கூட்டிட்டு வந்தாங்க. ஒரு வருஷம் ஆகுது அந்தப் பொண்ணு எங்கள் வீட்டுக்கு வந்து. வீட்ல வேலை செய்துட்டு நல்லாதான் இருந்தா. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எங்கள் வீட்ல பணம், நகை காணாமல் போயிட்டு இருந்தது. ஆரம்பத்துல இதைப் பற்றி விசாரிச்சப்போ அந்தப் பொண்ணு ஒத்துக்கல. அப்புறம் போகப் போக விசாரித்ததும் ஒத்துக்கிட்டா. அவங்க அம்மா எங்கள் வீட்டுக்கு வந்து அடிக்கடி அந்தப் பெண்ணைப் பார்த்துட்டுப் போவாங்க. அப்படி வந்து போகும்போதெல்லாம் அம்மாக்கிட்ட கொடுத்து அனுப்பிட்டேன்னு சொன்னா. அதுக்கப்புறம் அவங்க அம்மாவுக்கு போன் பண்ணோம். ஐ பேட், வாட்ச், கேமரா என எங்கள் வீடல் எடுத்ததை திருப்பிக் கொண்டு வந்தாங்க. `இதெல்லாம்தான் என் பொண்ணு கொண்டு வந்தா, பணமும், நகையும் கொடுக்கல'னு பொய் சொன்னாங்க.

அப்போ, `நாங்க போலீஸ்ல புகார் கொடுக்கிறோம். அப்புறம் உங்கப் பெண்ணைக் கூட்டிட்டுப் போ'னு என் அண்ணா அந்தப் பொண்ணோட அம்மா பிரபாவதிக்கிட்ட சொன்னாங்க. ஆந்திரா போனதும், சமால்கோட்டா காவல் நிலையத்தில் `தன் பெண்ணை கொடுமைப் படுத்தறதா' புகார் கொடுத்துட்டாங்க. அதில், தன் மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்துள்ளார். இப்படிப் பேசினதுக்குப் பிறகு எப்படி சும்மா விடுறது, அதற்குப் பிறகுதான் நாங்க தி.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்'' என்றவர், 

``இந்த விஷயம் மீடியா பார்வைக்குப் போனதும் விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அதற்குப் பிறகு அந்தப் பெண்ணைப் பேச வச்சோம். `என்னை எந்தவிதத்திலும் கொடுமைப்படுத்தல, என்னை நல்லாதான் பார்த்துக்கிட்டாங்க'னு சொன்னா. நான்தான் எடுத்துட்டுப் போய் அம்மாக்கிட்ட கொடுத்தேன்னு சொன்னாங்க. அதற்குப் பிறகு, குழந்தைகள் நலப் பிரிவினர் அந்தப் பெண்ணை அழைச்சுட்டுப் போயிட்டாங்க'' என்றவரிடம் அந்தப் பெண்ணை 18 வயது ஆகாமலே வேலைக்குச் சேர்த்துக்கிட்டீங்களாமே?' எனக் கேட்டதும், 

``அவங்க பெண்ணை என்கிட்ட கொண்டுவந்து விடும்போது, 18 வயதுனு சொல்லித்தான் சேர்த்தாங்க. இப்ப 14 வயசுதான் என் பொண்ணுக்கு ஆகுதுனு சொல்றாங்க. அந்தப் பொண்ணு, `என் அம்மா பொய் சொல்றாங்க, எனக்கு 16 வயசாகுது'னு சொல்றா. வயசு குழப்பமா இருந்ததால ஆதார் கார்டு கொண்டு வரச் சொல்லிக் கேட்டோம். ஆதார் கார்டு கொண்டு வரலனு சொன்னாங்க. நாங்க இங்க புகார் கொடுத்ததும், பிரபாவதி சென்னைக்கு வந்திருக்காங்க. விசாரிச்சிட்டு, பிரபாவதியை போலீஸ் கைது பண்ணியிருக்காங்க. தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வச்சிருக்காங்க. அவங்களோட பெரிய பொண்ணு ஹைதராபாத்ல இருக்காங்களாம். அந்தப் பொண்ணுக்கிட்ட பணத்தையும், நகையையும் கொடுத்ததாகவும், தன் பொண்ணு திருடினது உண்மைதானும் ஒத்துக்கிட்டாங்க.

வேலைக்கு வேணும்னு நம்பித்தான் ஒருத்தரை வேலைக்கு வச்சிக்கிறோம். இப்படி இருந்தா யாரை நம்பி வீட்ல வேலைக்கு வைக்கிறது? இதை நான் பொழுதுபோக்கா எடுத்துக்கல. நடந்தது இதுதான். நாங்க நல்லாதான் பார்த்துக்கிட்டோம். அவங்க அம்மா தன்னோட தேவைக்கு அந்தப் பெண்ணைப் பயன்படுத்திக்கிட்டாங்க. இப்போது அந்த அம்மாவையே கைது பண்ணியிருக்காங்க'' என்று முடித்தார் பானுப்ரியா.