Published:Updated:

'முதல் ரெக்கார்ட்டிங், கரன்ட் கட்!' - இளையராஜாவின் ‘அன்னக்கிளி’ அனுபவம் #Ilaiyaraaja75

'முதல் ரெக்கார்ட்டிங், கரன்ட் கட்!' - இளையராஜாவின் ‘அன்னக்கிளி’ அனுபவம் #Ilaiyaraaja75

`அன்னக்கிளி'க்காக பெய்யத் தொடங்கிய அந்த இசை மழை, ஆயிரம் படங்களைக் கடந்து இன்றும் அடைமழையாகத் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது. 

'முதல் ரெக்கார்ட்டிங், கரன்ட் கட்!' - இளையராஜாவின் ‘அன்னக்கிளி’ அனுபவம் #Ilaiyaraaja75

`அன்னக்கிளி'க்காக பெய்யத் தொடங்கிய அந்த இசை மழை, ஆயிரம் படங்களைக் கடந்து இன்றும் அடைமழையாகத் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது. 

Published:Updated:
'முதல் ரெக்கார்ட்டிங், கரன்ட் கட்!' - இளையராஜாவின் ‘அன்னக்கிளி’ அனுபவம் #Ilaiyaraaja75

ஞ்சு அருணாசலம்... தமிழ் சினிமாவில் ஸ்கிரீன்ப்ளே டாக்டர். கவிஞர் கண்ணதாசனிடம் 12 ஆண்டுகளில் சுமார் 600 படங்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியவர்; பத்திரிகையாளர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு. திரையிசைப் பாடல்கள்... என இவர் விளையாடிய களங்கள் அதிகம். தன் `அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இளையராஜாவை இவர்தான் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். ஆனந்த விகடனில் இவர் எழுதிய `திரைத்தொண்டர்’ தொடரில் இளையராஜாவைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அந்தத் தொடரிலிருந்து...

ப்போதெல்லாம் படம் ஒரு வாரம் ஓடினாலே மாபெரும் வெற்றி என்கிறார்கள். அப்போது 50-வது நாளை கடந்தால்தான் அந்தப் படம் ஓரளவுக்கேனும் வெற்றிபெற்றது என அர்த்தம். வெற்றி விழாக்களை அப்போது வெவ்வேறு ஊர்களில் நடத்துவார்கள். டீமாக அந்த விழாக்களுக்குச் செல்வோம். அப்போது, `எவ்வளவுக்கு வாங்குனீங்க... எவ்வளவு லாபம்?’ என்று தியேட்டர்காரர்களிடம் விசாரிப்பேன். `நல்ல ஷேர் சார். ஒன்றரை லட்சம் வந்துச்சு... ரெண்டைத் தாண்டிடும்’ என்பார்கள். `அடேங்கப்பா... என்னா லாபம்’ என நினைத்துக் கொள்வேன். 

ஆனால், அதே பகுதியில் வெவ்வேறு தியேட்டர்களின் போஸ்டர்களில் `ஆராதனா’ வெற்றிகரமான 20-வது வாரம்’ என்று ஒட்டியிருக்கும். ‘என்னது ஒரு இந்திப் படம் 20-வது வாரமா, அதுவும் கோயம்புத்தூரைத் தாண்டி உள்ள ஒரு சின்ன டவுன்ல இந்த ஓட்டம் ஓடுதே’ என்று அதிர்ச்சியாக இருக்கும். அந்த தியேட்டரில் விசாரித்தால், `நல்ல லாபம் சார். இதுவரை நாலு லட்ச ரூபாய்’ என மேலும் அதிர்ச்சி தருவார்கள். வேறொரு ஊரில், `இந்த தியேட்டர்ல `பாபி’ 150 நாள்களைக் கடந்து ஓடிட்டு இருக்கு’ என்பார்கள். இப்படித் தமிழ்நாடு முழுவதும் இந்தி சினிமாவின் ஆதிக்கம்.

தமிழ்நாடு முழுவதும் எப்படி அந்தப் படங்கள் ஓடின... கதை ஓரளவுக்குப் புரியும்; வசனம் புரியாதே. அந்த நடிகர், நடிகைகளும் அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாதவர்கள். அப்புறம் எப்படி அவை பட்டிதொட்டி எங்கும் இப்படி ஓடுகின்றன? ஆச்சர்யமாக இருக்கும். தவிர கிராமம், நகரம் வித்தியாசமின்றி எங்கும் இந்திப் பாடல்கள்தான் நீக்கமற நிறைந்து இருந்தன. தமிழ்ப் பாடல்களையே அங்கே கேட்க முடியாது. அதற்கு, ஆர்.டி.பர்மன், எஸ்.டி.பர்மன், லக்ஷ்மிகாந்த் பியாரிலால்... என இந்தி சினிமாவில் இருந்த இசை அமைப்பாளர்களின் புதுமாதிரியான இசைதான் காரணம் எனத் தெரிந்தது. 

அதற்கு முன்னரும் இந்தியில் மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனாலும், அப்போது அவர்களை மீறி இங்கு தமிழ்ப் படங்கள் ஓட, விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் என்ற இரு பெரும் இசை அரசர்களின் செல்வாக்குதான் காரணம். இவர்களின் திறமை, இவர்களின் மீதான மரியாதை 70-களுக்குப் பிறகு குறைந்துவிட்டதா என்றால், இல்லை. ஆனால், அவர்கள் 60-களிலேயே தங்களின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள். அதனால், எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்பதுபோன்ற ஓர் உணர்வு.

ஆனால், இந்திப் பாடல்களில் இளமையான புதுப்புது சவுண்டுகளுடன் கூடிய இசை. அது இளைஞர்களை அலை அலையாக ஈர்த்தது. அதுதான் அவர்களை இந்திப் படங்களையும் பார்க்கத் தூண்டியது. `நம் ரசிகர்கள் ஏதோ ஒண்ணை புதுசா எதிர்பாக்குறாங்க’ என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. `ஏன் ஒரு நல்ல இசையமைப்பாளரைக் கொண்டுவரக் கூடாது?’ என என் மனதுக்குத் தோன்றியது. அப்படி ஓர் இசையமைப்பாளர் வந்தால்தான், இங்கு ஓடும் இந்திப் படங்களைத் தாண்டி நாம் வெற்றி பெற முடியும், அதன் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும் என உறுதியாக நம்பினேன். நல்ல இசையமைப்பாளரைத் தேடத் தொடங்கினேன். 

`இது நான் புதுசா போட்ட கேசட்’ என்று இசை வாய்ப்புக்காக யார் வந்தாலும் அவர்களின் இசைக்குக் காது கொடுத்துக் காத்திருந்தேன். `நல்ல நேரம் வரும்போது எல்லாமும் நல்லதாகவே நடக்கும்’ என்பார்களே... அப்படி என் காத்திருப்புக்குப் பலன் கிடைத்தது. அந்த இளைஞன் வந்தான். ஆனால், அவன் இசையை வேறு எவரும் நம்பவில்லை, என்னைத் தவிர. ஆனால், அவன் இசை வெளிவந்த பிறகோ, அவனைத் தவிர வேறு எவரையும் நம்ப ரசிகர்கள் தயாராக இல்லை.

ந்தச் சமயத்தில் `கல்யாணமாம் கல்யாணம்’ படம் தொடங்கியதிலிருந்து கதாசிரியர் செல்வராஜ் என்கூடவே இருந்தார். அவரிடம், `எம்.எஸ்.வி-க்குப் பிறகு இங்கே இசையில் பெரிய வெற்றிடமாகிப்போச்சே...’ என்று அவ்வபோது என் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்வேன். அன்றும் அப்படிப் பேசிக்கொண்டிருந்தேன். `எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்காண்ணே. ராஜானு பேரு. சின்ன வயசுல இருந்தே ஹார்மோனியம் வாசிச்சுப் பழக்கப்பட்டவன். தன் அண்ணனோடு சேர்ந்து நிறைய ஊர்கள்ல கச்சேரிகள் பண்ணியிருக்கான். என் ஃப்ரெண்ட் பாரதிராஜா போட்ட நாடகங்களுக்கு மியூஸிக் போட்டிருக்கான். இப்ப ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அசிஸ்டன்ட்டா இருக்கான். அவனுக்குப் படம் பண்ணணும்னு ஆசை இருக்கு. உங்களுக்கு ஓ.கே-ன்னா நான் கூட்டிட்டு வர்றேன்’ என்றார். 

`ஊர் ஊரா சுத்தியிருக்கான்; நாடகங்களுக்கு மியூஸிக் போட்டிருக்கான்; கஷ்டப்பட்டிருக்கான்... நிச்சயமா ரசிகர்களின் பல்ஸ் தெரிஞ்சவனாத்தான் இருப்பான். கேட்டுப் பார்ப்போமே. யார் கண்டா... அமைஞ்சாலும் அமையும்’ - எனக்கு ஒரு பிடிமானம் கிடைத்தது. `சரி நாளைக்கே கூட்டிட்டு வா’ என்றேன்.

மறுநாள் காலை. கோடம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டல் அறை. `திறமையான இளம் இசையமைப்பாளரைப் பார்க்கப்போறோம். இன்டஸ்ட்ரியே மாற்றம் காணப்போகுது' - ஒவ்வோர் இசையமைப்பாளரைச் சந்திக்கும்போது இப்படியான குதூகல மனநிலையில்தான் இருப்பேன். அன்றும் அப்படித்தான். 

செல்வராஜ் வந்தார். `அண்ணே... இவர்தான் ராஜா’ - அறிமுகப்படுத்திவைத்தார். இன் ஷர்ட் பண்ணிய ஒடிசலான தேகத்துடன் ஒரு பையன் வந்துநின்றான். தழையத் தழையக் கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, கவர்மென்ட் ஆபீஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என என்னால் நம்ப முடியவில்லை. ஹார்மோனியம், கிடார் என ஏதாவது கையில் எடுத்து வந்திருந்தாலாவது நம்பியிருப்பேன். அதுவும் எடுத்து வரவில்லை. ‘ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பார்களே, ராஜா விஷயத்தில் அது பொய்த்துப்போனது.

`வாப்பா... உட்கார்’ என்றேன். உட்கார்ந்தார். இன்றுபோல் அன்றும் ராஜா அதிகம் பேச மாட்டார். லேசாகச் சிரித்தபடி அமைதியாக அமர்ந்து இருந்தார். `செல்வராஜ் சொன்னாரு. ரொம்ப சந்தோஷம். தமிழ்ல நல்ல இசையமைப்பாளர் வரணும்னு ஆசை’ - நான்தான் ஆரம்பித்தேன்.

`சினிமாவுக்கு இசையமைக்கணும்கிறது ரொம்ப நாள் ஆசை. முயற்சிபண்ணிட்டிருக்கேன்’ என்றார். 

`உனக்கு என்ன அனுபவம்?’ என்றேன். 

`அண்ணன்கூட இருந்திருக்கேன். ஓரளவுக்குத் தெரியும். நிறைய பாட்டு எல்லாம் போட்டு வெச்சிருக்கேன்.’ 

எல்லா கேள்விகளுக்கும் இரண்டு, மூன்று வார்த்தைகளில் வந்துவிழுந்தன பதில்கள்.

`சரி... அந்த ட்யூனை எல்லாம் கேட்டாத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். நாளைக்கோ நாளான்னைக்கோ ஃபிக்ஸ் பண்ணிப்போம். வரும்போது ஹார்மோனியம், தபலானு அந்த மாதிரி செட்டப்போட ரெண்டு மூணு பேரா வந்துடுங்க’ என்றேன்.

‘எதுக்கு மத்தவங்க?’ என்றார். 

‘எந்த இன்ஸ்ட்ருமென்ட்ஸும் இல்ல. பாடுறதுக்கு யாரையும் அழைச்சிட்டும் வரலை. எப்படிப் பாடிக்காட்டுவ?’ என்றேன்.

‘நானே பாடுவேன். பாடவா?’ என்றார். 

எனக்கு ஷாக்... ‘ம்ம்... பாடு’ என்றேன்.

பக்கத்தில் சிறிய அறையில் இருந்த மேஜைக்கு இடம்பெயர்ந்தவர், அதில் தாளம் போட்டபடி பாட ஆரம்பித்தார். 

‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’, ‘மச்சானைப் பாத்தீங்களா..?’, ‘வாங்கோண்ணா... வாங்கோண்ணா...’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட பாடல்களின் இசைக்கோப்புக்கு முந்தைய வடிவமான தத்தகாரத்தில் பாட ஆரம்பித்தார்.

‘ஏதோ வித்தியாசமா இருக்கே...’ - அந்த ட்யூன்களைக் கேட்ட மாத்திரத்தில் என் மனதுக்குள் ஏற்பட்ட உணர்வு.  ஆனால், எதுவும் சொல்லவில்லை. ‘இத்தனை பாடல்களைக் கேட்டாரு... ஒண்ணுமே சொல்லலையே...’ என நினைத்தாரோ என்னமோ தெரியவில்லை, ‘அப்ப நான் போயிட்டு நாளைக்கு வரட்டுமாண்ணே?’ - கிளம்பத் தயாரானார்.

‘கொஞ்சம் இரு. இன்னொரு தரம் பாடு’ என்றேன். அப்போதுதான் அவருக்கு தைரியம் வந்தது. திரும்பவும் பாடினார். 

‘நல்லா இருக்கு. நான் சொல்லி அனுப்புறேன்’ என்றதும் கிளம்பிவிட்டார்.

ராஜாவை வழியனுப்பிவிட்டு வந்த செல்வராஜ், ‘எப்படிண்ணே இருக்கு?’ என்றார். ‘வித்தியாசமா இருக்கு. நான் நினைச்சதைவிட நல்லா வர்றதுக்கான சான்ஸ் இருக்கு. கொஞ்சம் ஆர்க்கெஸ்ட்ரா செட்டப் எல்லாம் வெச்சுக் கேட்டா, இன்னும் கொஞ்சம் நல்லா வரும்னு நினைக்கிறேன்’ என்றேன். 

‘அவன் நல்லா பண்ணுவாண்ணே’ என்றார் செல்வராஜ்.

து `எங்கம்மா சபதம்’ ரிலீஸ் ஆகி  ‘மயங்குகிறாள் மாது’ தொடங்கியிருந்த நேரம். ஆனால், அந்த கம்பெனிகளுக்கு நான் ராஜாவை ரெஃபர் பண்ணவில்லை. காரணம், அவை இசைக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத படங்கள். ‘இவனை கமிட் பண்ணணும்னா, அது முழுமையான மியூஸிக் பிக்சரா இருக்கணும். அப்பதான் ஓர் இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தும்போது, அந்தப் பலன் அவனுக்குக் கிடைக்கும். ‘இசையினால்தான் இந்தப் படம் பிச்சுக்கிட்டுப்போச்சு’ எனச் சொல்லக்கூடிய அளவுக்கு நான் நினைத்ததும் நடக்கும்’ என மனதுக்குள் உருவகம் பண்ணிக்கொண்டேன். 

அந்தச் சமயத்தில்தான் செல்வராஜ் ஒரு கிராமத்து கதையின் அவுட்லைன் சொன்னார். ராஜா போட்ட கிராமிய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பண்ண, அந்தக் கிராமத்துக் களம் கைகொடுக்கும் என்பதால், அந்தக் கதைக்களம் என்னை ஈர்த்தது. அதேபோல `அன்னம்’ என்ற அந்தப் பெண், வாத்தியார் கேரக்டர்... மனதுக்கு நெருக்கமாக இருந்தன. ‘இதைவைத்து நாம டெவலப் பண்ணிக்கலாம்’ என முடிவுசெய்து கதையைத் தயார்செய்தேன். அதுதான், ‘அன்னக்கிளி’.

அப்போது எங்கள் ஆபீஸ் தி.நகர் பாரதி நகரில் இருந்தது. அது இயக்குநர் பி.வாசுவின் அப்பா பீதாம்பரத்தின் வீடுகளில் ஒன்று. கீழ் போர்ஷனை வாடகைக்கு எடுத்து ஆபீஸாக மாற்றியிருந்தோம். இதற்கு இடையில் ராஜாவையும் அவரது குழுவையும் ஒருநாள் வரச்சொன்னேன். ராஜாவின் அண்ணன் பாஸ்கர் தபலா, கங்கை அமரன் மாண்டலின், ராஜா ஹார்மோனியம். அவர்கள் வாசிக்க, அதை நான் ரிக்கார்டு பண்ணிக்கொண்டேன்.

ஷூட்டிங் முடித்து இரவு வீட்டுக்கு வந்ததும் 9 மணிக்கு மேல் ரிக்கார்டு செய்த ராஜாவின் இந்தப் பாடல்களை ஓடவிட்டு, கண்களை மூடிக்கொண்டு தினமும் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அந்த ட்யூன்களைத் திரும்பத் திரும்ப கேட்கக் கேட்க எனக்கு அந்த இசையின் மீது ஈடுபாடு அதிகமாகியது. பிறகு, அந்த ட்யூன்களுக்கு நானே பாடல்களை எழுதிவிட்டேன். ஆரம்பத்தில் அவர் போட்ட ட்யூன் இல்லாமல் அந்தப் படத்துக்காக நான் சிச்சுவேஷன் சொல்லிப் போட்ட ஒரு ட்யூன் ‘சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை...’ பாடல் மட்டும்தான். மற்றபடி ‘மச்சானைப் பாத்தீங்களா...’, ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’, 

‘சுத்தச் சம்பா பச்சநெல்லு குத்தத்தான் வேணும்...’ உட்பட மற்ற அனைத்தும் அவர் ஏற்கெனவே போட்டிருந்த ட்யூன்களுக்கு நான் பாடல்கள் எழுதியவை.

அப்போது அதிகபட்சம் நாலரை நிமிடங்களுக்குள் இருந்தால், அது ஒரு பாடல் என்ற கணக்கு. அதற்கு மேல் போனால் இசைக் கலைஞர்கள், ரிக்கார்டிங் தியேட்டர் உட்பட அனைவருக்கும் டபுள் பேமென்ட் கொடுக்க வேண்டும். ராஜாவுக்கு அது முதல் படம், தவிர மியூஸிக்கல் சப்ஜெக்ட் என்பதால், ரிக்கார்டிங்குக்கு முன்னர் ரிகர்சல் செய்துகொள்ளலாம் என நினைத்தோம். ஏனெனில், அப்போது ராஜாவுக்கு எனத் தனியாக குழு இல்லை. பல இசையமைப்பாளர்களிடம் வாசிப்பவர்களை வரச்சொல்லி நோட்ஸ் கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும். சீனியர்களான அந்த இசைக்கலைஞர்கள் ராஜாவுடன் எந்த அளவுக்கு இணக்கமாகப் பணியாற்றுவார்கள் என்பது சந்தேகம். ஏனெனில், அப்போது அவர்கள் ராஜாவைப் பெரிதாக நினைத்திருக்கமாட்டார்கள். (அவர்களில் பலர் பின்னாள்களில் நிரந்தரமாக ராஜாவின் குழுவில் சேர்ந்தனர்.)

அப்போது பெரிய இசையமைப்பாளர்களிடமே பட்ஜெட் சொல்வோம். `சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்கள்னா, நீங்க என்ன வேணும்னாலும் பண்ணலாம். இது வேற ஆர்ட்டிஸ்ட்டை வெச்சு பட்ஜெட்ல பண்ற படம். ஆர்க்கெஸ்ட்ராவுக்கு 3,500 ரூபாய்க்கு மேல போகாமப் பாத்துக்கங்க’ என்போம். ஏனெனில், பாட்டு எழுதுகிறவர்களுக்கு 2,000, ரிக்கார்டிங் தியேட்டருக்கு 1,000, பாடுபவர்களுக்கு 2,000... என ஒரு பாட்டுக்கு 7,000 ரூபாய் செலவு என்றால், ஐந்து பாடல்களுக்கு 35 ஆயிரம் ரூபாய், ரீ-ரிக்கார்டிங்குக்கு 30 ஆயிரம் என பட்ஜெட் போட்டு மொத்தப் படத்தையே நாலரை, ஐந்து லட்சம் ரூபாய்க்குள் முடித்து விடுவோம். அதை ஆறரை, ஏழு லட்சம் ரூபாய்க்கு விற்றால், படம் வெற்றிபெற்றால் வட்டி போக அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். இதுதான் அப்போதைய லாப-நஷ்டக் கணக்கு.

ஆனால் நான் ராஜாவிடம், `இந்தப் படத்துக்கு பட்ஜெட்டே கிடையாது. எத்தனை இசைக் கருவிகள், கலைஞர்கள் வேணும்னாலும் வெச்சுக்க. அதேபோல நாலரை நிமிஷத்துக்கு மேல போனா, டபுள் சம்பளம் தரணுமேங்கிற மாதிரியான எந்தவிதமான எல்லைகளையும் மனசுல வெச்சுக்காம, பாட்டு நல்லா வரணும்கிற ஒரே நோக்கத்துல பண்ணு. உன் இஷ்டம்தான்’ என்று முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டேன். முதல் படத்திலேயே அவ்வளவு சுதந்திரம் கிடைத்தது ராஜாவுக்குப் பெரிய சந்தோஷம்.

ரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவதில் என் நண்பர்களுக்கு விருப்பம் இல்லை. `கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்னு பெரிய இசையமைப்பாளர்கூட பத்து, பன்னிரண்டு வருஷம் வொர்க் பண்ணியிருக்க. உனக்கும் எல்லாமே தெரியும். மியூஸிக் பிக்சர்னா அவங்கள்ல யாராவது ஒருத்தங்களைப் போட்டிருக்கலாம்ல. ஏன் ரிஸ்க் எடுக்குற?’ என அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தனர். ஆனால், நான் ராஜாவைக் கூப்பிட்டுப் பேசியது, அவரின் ட்யூன்களைக் கேட்டது... என எதுவுமே அவர்களுக்கு விவரமாகத் தெரியாது. ஆனால், எனக்குள்ளும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. காரணம், அப்போது கிட்டத்தட்ட நானும் புதுமுகம்தான். நிறைய படங்களுக்குக் கதை வசனம் எழுதியிருந்தாலும், ஏற்கெனவே இரண்டு படங்கள் சொந்தமாக எடுத்திருந்தாலும்கூட ஆரம்பநிலையில்தான் இருந்தேன். இவற்றை எல்லாம் மீறி, ராஜாவின் இசை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தேன்.

முதல் நாள் ரிக்கார்டிங். எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’ பாட்டை முதலில் ரிக்கார்டு செய்வதாகத் திட்டம். ஜானகிதான் பாடகி. ரிகர்சல் ஆரம்பமானது. வாசிப்பவர்கள், ஜானகி உட்பட அனைவருக்கும் நோட்ஸ் கொடுத்து சொல்லிக்கொடுத்தார் ராஜா. ரிகர்சலில் பெர்ஃபெக்ட்டாக வந்தது. ‘ஓ.கே. ஃபைனல் டேக் போலாம்’ என்றதும் ‘எஸ்.பி.டி ஃபிலிம்ஸ், அன்னக்கிளி, சாங் நம்பர் ஒன், டேக் நம்பர் ஒன் ஓ.கே’ என்றதும், ஜானகி ஹம் பண்ணத் தொடங்கிய அடுத்த நிமிடமே கரன்ட் ஆஃப்.

அனைவரும் அதிர்ச்சியில் பேய் அறைந்ததுபோல் உறைந்து நின்றனர். `ஒண்ணும் இல்லை... கரன்ட் இப்ப வந்துடும்’ என ஆசுவாசப்படுத்தினேன். ஆனால், கரன்ட் உடனடியாக வருவதாகத் தெரியவில்லை. இசைக் கலைஞர்கள் உட்பட பலர் வெளியில் வந்து கசமுசா எனப் பேசிக் கொண்டனர். ‘என்னப்பா எவ்வளவோ சொன்னோம்... முதல் படம் பண்றான். ஆரம்பிக்கும்போதே டொப்புனு கரன்ட் போயிடுச்சே. சகுனமே சரியில்லையே...’ இப்படி ஏதேதோ பேசிக்கொண்டனர். அந்தச் சூழலைக் கவனித்தபடி அதிர்ச்சியில் அமைதியாக அமர்ந்திருந்தார் ராஜா! ‘ஏன் இப்ப என்னாச்சு, கரன்ட் வந்த பிறகு எடுத்துக்கலாம். உடனடியா எடுத்து சுடச்சுட சாப்பிடவா போறோம். ரிலாக்ஸா இரு'’ என்றேன்.

கரன்ட் வந்தது. டேக் போனோம். ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’ பாடலை ஜானகி பெர்ஃபெக்ட்டாகப் பாட, எல்லாரும் கைதட்டினார்கள். அப்போது மோனோ ரிக்கார்டிங் என்பதால், பாடல் பதிவானதும் திரும்ப ஒருமுறை போட்டுக் கேட்போம். அனைத்தும் சரியாக இருந்தால், அதையே ஃபைனலாக வைத்துக்கொள்வோம். அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டும் என்றால், இன்னொரு டேக் போவோம். 

அப்போது அங்கே ரிக்கார்டிஸ்ட்டாக இருந்தவர் மாணிக்கம். அவரின் உதவியாளர் சம்பத். ரிக்கார்டு செய்ததைக் கேட்போம் என நினைத்து, ‘`ப்ளே பண்ணுங்க சம்பத்'’ என்றார் ராஜா. அவரும் ப்ளே பண்ணினார். ஆனால், ‘ம்ம்ம்...’ எனச் சத்தம் வருகிறதே தவிர, பாடல் வரவில்லை. உதவியாளர் சம்பத், சுவிட்ச் ஆன் செய்ய மறந்துவிட்டார். எதுவுமே ரிக்கார்டு ஆகவில்லை. அவருக்கு பயத்தில் கை, கால் வியர்த்துவிட்டன.

‘`ஸாரி சார், இன்னொரு டேக் போகலாம்'’ என்றார். ‘என்னடா இது, இரண்டாவது முறையும் இப்படி நடக்குதே’ என நினைத்திருப்பார்போல. ராஜாவுக்கு மேலும் வருத்தம். சகுனம் பார்ப்பது, எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனையோ என் படங்கள் பாதியில் நின்றுபோயிருக்கின்றன. அதனால் நான் எப்போதும் திறமையை மட்டுமே நம்புவேன். இந்த விஷயங்களை எல்லாம் ராஜாவிடம் சொல்லி, அவரைத் தேற்றினேன். இப்படி ‘அன்னக்கிளி’ பாடல்கள் பதிவு செய்யப்பட்ட சமயத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள்.

‘அன்னக்கிளி’யை விறுவிறுவென படத்தை ஒரு மாதத்தில் எடுத்து முடித்தோம். `சிம்பிள் லவ் ஸ்டோரி. நல்லாத்தான் எடுத்திருக்கார். ஆனால், எல்லாத்தையும் காட்டுக்குள்ளேயே எடுத்திருக்கார். பாடல்களும் கிராமத்துப் பாடல்களா இருக்கு. அவார்டுக்காக எடுக்கப்பட்ட படம்போல இருக்கு. ஓடாது....’ என ஒருத்தருமே வாங்கவில்லை. என் படங்களை ஏற்கெனவே வாங்கி சக்சஸ் பண்ணின விநியோகஸ்தர்கள்கூட வாங்கவில்லை. நான் ஏதோ புகழுக்காக இந்தப் படத்தை எடுத்திருப்பதாக நினைத்து ஒதுங்கிக்கொண்டனர். கடைசியில் படத்தை வாங்கியவர்கள் அனைவரும், புது விநியோகஸ்தர்கள். செலவானதைவிட கொஞ்சம் அதிகம் வைத்து கையைக் கடிக்காத விலைக்கு விற்றேன்.

படம் ரிலீஸ் ஆனது. சென்னையில் நல்ல தியேட்டர்கள் கிடைக்கவே இல்லை. ‘பாட்டு நல்லா போகுது’ என்கிறது ஒரு குரூப். ‘படம் ரொம்ப மெதுவா இருக்கு’ என்றார்கள் சிலர். ‘படம் நல்லாவே இல்லை’ என்றார்கள் வேறு சிலர். இப்படி கலவையான மவுத் டாக். படம் முதல் வாரம் வரை தடுமாறியது. 

ஆனால், நான்கைந்து நாள்களுக்குள் `படம் நல்லா இருக்கு' என்ற செய்தி பரவ ஆரம்பித்தது. அதற்குள் சில தியேட்டர்களில், ‘இந்தப் படம் போகாது’ என முடிவுசெய்து படம் பிக்கப் ஆகும் சமயத்தில் அவசரப்பட்டு வேறு படங்களுக்கு அக்ரிமென்ட் போட்டுவிட்டனர். ஆனால், அவர்களின் கணிப்புக்கு மாறாக ‘அன்னக்கிளி’ பிக்கப் ஆக ஆரம்பித்ததும் போட்ட அக்ரிமென்ட்டுக்காக நன்றாக ஓடிக்கொண்டிருந்த படத்தைத் தூக்கிவிட்டு, வேறு படங்களை ஓட்டினர். ஆனால், அதே பகுதிகளில் உள்ள வேறு சில தியேட்டர்களில் `அன்னக்கிளி'யை ரிலீஸ் செய்தார்கள். தினமும் ஓவர் ஃப்ளோ. படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. அது, தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான வெற்றி.

`அன்னக்கிளி' அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தபோது, ‘வில்லேஜ் சப்ஜெக்ட். அதனால ராஜா பிரமாதப்படுத்திட்டார். ஆனால், அவருக்கு கிளாசிக், மாடர்ன் மியூஸிக் வராது’ என்று சிலர் பேசியதாகத் தகவல் வந்தது. `‘அதையும் பண்ணிப்பார்த்துடுவோம் ராஜா’' என்றேன். ‘`பண்ணிடுவோம்ணே'’ என்றார். 

‘கவிக்குயில்’ படம் தொடங்கினோம். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்...’, ‘குயிலே கவிக்குயிலே...’ என ஃபுல் கிளாசிக் பாடல்கள். ‘கவிக்குயில்’ எழுதி முடித்த உடன் ‘ப்ரியா’ தொடங்கினோம். அது மாடர்ன் சப்ஜெக்ட். எல்லா ட்யூன்களும் ரிச், மாடர்ன். ‘அக்கறை சீமை...’, ‘டார்லிங் டார்லிங்...’, ‘என் உயிர் நீதானே..’, ‘ஏ... பாடல் ஒன்று...’, ‘ஸ்ரீராமனின் ஸ்ரீதேவி...’ ‘அன்னக்கிளி’யில் கிராமம் என்றால் ‘கவிக்குயி'லில் கிளாசிக். ‘ப்ரியா’வில் மாடர்ன். இப்படி அவர் தொட்டவை எல்லாம் ஹிட்.

‘அன்னக்கிளி’ தந்த வெற்றியின் நம்பிக்கையில் பல இயக்குநர்கள் சினிமாவுக்கு வந்தனர். திருலோகசந்தர் ‘பத்ரகாளி’ எடுத்தார். ராஜ்கண்ணு தயாரிக்க, பாரதிராஜா  ‘16 வயதினிலே’ எடுத்தார். அவரிடமிருந்து பாக்யராஜ், மணிவண்ணன் என அவரின் உதவி இயக்குநர்கள் ஆலமர விழுதுகளாகக் கிளை பரப்பினர். ஏவி.எம் நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியது. ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘காயத்ரி’... என மூன்று நான்கு வருடங்களுக்குள் 25 படங்கள் வந்தன. அவற்றில் 20 படங்கள் சில்வர் ஜூப்ளி ஹிட். நான்கைந்து படங்கள் மட்டுமே சுமாராக ஓடின. அவையும் 50 நாள்கள். அதற்கு முன்னர் 50 நாள்கள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடிக்கொண்டிருந்த எங்களுக்கு, ‘அன்னக்கிளி’க்குப் பிறகு 50 நாள்கள் ஓடும் படங்கள் சுமார் படங்களாகின. காரணம், இளையராஜா. இப்படி ராஜாவால் பெரிய ஆட்கள் ஆனவர்கள் நிறைய. பெரிய ஆட்கள் எல்லாம் ராஜாவிடம் வந்ததும் நிறைய. இதுவா... அதுவா எனப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இளையராஜா மட்டும் மையப்புள்ளி ஆனார்.

இவ்வளவு படங்கள் ஒருவருக்கு வரும்போது மற்றவர்களாக இருந்தால், மலைத்துப் போயிருப்பார்கள். ஆனால் ராஜா, சளைக்காமல் இசையமைத்தார். ஒரு பக்கம் ரீ-ரிக்கார்டிங். இவர் நோட்ஸ் கொடுத்து இசைக்கலைஞர்கள் வாசித்துப்பார்த்து ரெடியாவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். ‘வாசிச்சு ரிகர்சல் பண்ணிக்கங்க’ என அரேஞ்சரிடம் சொல்லிவிட்டு, அடுத்த தியேட்டருக்குப் பாடல் பதிவுக்குப் போவார். அங்கு நோட்ஸ் கொடுத்து ஒரு புது ட்யூன் ரிக்கார்டிங்குக்கு ரிகர்சல் பண்ணச் சொல்லிவிட்டு வருவார். இவை இரண்டுக்கும் நடுவில் என் அடுத்த படத்துக்கான பாடல் கம்போஸிங்குக்காக நான் அவரின் அறையில் காத்திருப்பேன். அங்கு வருபவர், ‘இதுதான் நோட்ஸ். எஸ்.பி.பி வந்ததும் சொல்லிக்கொடுத்துட்டு இருங்க. வந்துடுறேன்’ என்று தன் உதவியாளரிடம் சொல்லிவிட்டு, முதலில் ரிகர்சல் பண்ணச் சொன்ன ரீ-ரிக்கார்டிங்குக்குப் போவார். இப்படி காலை 7 மணிக்குத் தொடங்கிய அவரின் வேலைகள், நள்ளிரவு வரை நீளும். இவ்வளவு வேலைகளிலும் கொஞ்சம்கூட சளைக்காமல் யாரிடமும் முகத்தைக் காட்டாமல் தொடர்ந்து சிரித்த முகத்துடன் இசையைத் தந்துகொண்டே இருந்தார்.

ட்யூன் சொல்லி முடிப்பதற்குள், பாட்டு எழுதிக் கொடுத்துவிடுவார் கவிஞர். அவரின் கற்பனை வளமும் சொல் வளமுமே அந்த வேகத்துக்குக் காரணம். உண்மையிலேயே அது கடவுள் கடாட்சம். கவிஞருக்கு அடுத்து அதே கடாட்சம் பெற்றவராக நான் பார்த்து வியந்த மனிதன் இளையராஜா. 

'அன்னக்கிளி’யால் நான் நினைத்த இரண்டு விஷயங்கள் நடந்தன. `தமிழ்த் திரையுலகம் இந்தி சினிமாவுக்கு சமமாக வரவேண்டும்' என நினைத்தேன். `அன்னக்கிளி'க்குப் பிறகு இந்திப் படங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் குறைந்தது. இந்தி சினிமா மோகத்தில் இருந்த தமிழ் ரசிகர்கள், மீண்டும் தமிழ் சினிமாவை ரசிக்க ஆரம்பித்தனர். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்து ஒப்புக்கொண்ட அனைத்துப் படப் பாடல்களையும் ஹிட்டாக்கிய பாலிவுட் இசை இரட்டையர்கள் ஷங்கர்-ஜெய்கிஷன் போல ஓர் இசையமைப்பாளர் வரவேண்டும் என்ற என் ஆசையும் நிறைவேறியது. ஆனால், அந்த ஆசை மட்டும்தான் என்னுடையது; மேலே ஏறிவந்த திறமை ராஜாவுடையது.

‘அன்னக்கிளி’க்காக அன்று கொண்டாடிய வெள்ளிவிழா நாள்கள், இப்போது நினைவுக்கு வருகிறது. அப்போது `அன்னக்கிளி' வெள்ளி விழாவை பல ஊர்களில் கொண்டாடினர். தியேட்டர், மண்டபங்கள் தாங்காது என, பல ஊர்களில் பெரிய பெரிய மைதானங்களில் விழாக்களை நடத்தினர். `‘மதுரையில தமுக்கம் மைதானத்துல வெச்சுப்போம்’' என்றார் மதுரை, ராமநாதபுரம் ஏரியா விநியோக உரிமையை வாங்கிய ஷா நவாஸ்.

``அதெல்லாம் கட்சிகளோட மாநாடுகள் பிரமாண்டமா நடக்குற இடம். அங்கே கூட்டம் வருமாய்யா?'’ என்று தயங்கினேன். `‘கண்டிப்பா வரும்ணே’' என்று விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தார். காரணம், ஒரு லட்சத்துக்குப் படத்தை வாங்கிய அவருக்கு, 15 லட்சத்துக்கும் அதிகமான லாபம்.

அவர் சொன்னது போலவே கூட்டம் கும்மியது. வெளியூர்களில் இருந்தெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு விழாவுக்கு வந்தனர். விழா தொடங்கியது. ராஜா பாட ஆரம்பித்தார், மழையும் பெய்ய ஆரம்பித்தது. ஆனால், கூட்டம் கலையவில்லை. ஒவ்வொரு பாட்டையும் ‘மறுபடியும் பாடுங்க ராசா... பாடுங்க ராசா’ எனக் கூட்டம் ஆர்ப்பரித்தது. மழையில் நனைந்த படி இளையராஜா பாடிக்கொண்டே இருந்தார்.

`அன்னக்கிளி'க்காக பெய்யத் தொடங்கிய அந்த இசை மழை, ஆயிரம் படங்களைக் கடந்து இன்றும் அடைமழையாகத் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது.