பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“கலை நேர்மைதான் உலக சினிமா!”

“கலை நேர்மைதான் உலக சினிமா!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கலை நேர்மைதான் உலக சினிமா!”

“கலை நேர்மைதான் உலக சினிமா!”

100 சர்வதேசத் திரையிடல்கள், 30-க்கும் மேற்பட்ட முக்கிய விருதுகள், விருதுக்கான 80 முன்மொழிவுகள், சிறந்த தமிழ்ப்படத்திற்கான ‘தேசிய விருது’ எனத் தனது முதல் திரைப்படம் பெற்றிருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியாக இருக்கிறார் இயக்குநர் செழியன்...  

“கலை நேர்மைதான் உலக சினிமா!”

“ஆனந்த விகடனில் ‘உலக சினிமா’ தொடர் எழுதிய செழியன், உலக அரங்கில் நூற்றுக்கணக்கான அங்கீகாரங்களோடு தேசிய விருதும் பெற்ற ஒரு திரைப்படத்தின் இயக்குநர் செழியன். இந்த இரண்டு அடையாளங்களுக்கு இடையிலான பயணம் குறித்துச் சொல்லுங்கள்...”

“இப்போதும் உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், ‘உலகசினிமா’ தொடர் எழுதிய செழியனைத்தான் முதன்மையாக எல்லோரும் நினைவில் வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு புதிதாக சினிமாவுக்குள் நுழைந்திருக்கிற பல இயக்குநர்கள், அந்தத் தொடர் அவர்களுக்கு எவ்வளவு பயன்பட்டது என்று சொல்லக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அந்தவகையில் விகடனுக்கு நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். குறிப்பாக, அந்தத் தொடர் எழுதிய இரண்டு ஆண்டுகள் என்பது, ஒரு திரைப்படக் கல்லூரியில் நான் பயின்றதற்குச் சமமானது. என்னை அது அணு அணுவாய்ச் செதுக்கியது. ஓர் இயக்குநரைப் பற்றி எழுத வேண்டுமென்றால், குறைந்தது அவருடைய ஐந்து படங்களையாவது பார்ப்பேன். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று படங்கள். இரண்டு வருடத்திற்குக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். சினிமாவைப் பற்றிய பல நுட்பமான அம்சங்களும் சினிமா அணுகுமுறையில் தெளிவும் உண்டானது அதன் வழியாகத்தான்.

15 வயதிருக்கும். ‘பதேர் பாஞ்சாலி’, ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ என்ற இரண்டு படங்களை மதுரையில் நடந்த ஒரு திரையிடலில் பார்த்தேன். அப்போது, என் தாத்தா ‘செழியன்’ என்ற பெயரில் சைக்கிள் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். எடுத்துச் செல்லப்படும் சைக்கிள்கள் அடிக்கடி கானாமல்போய்விடும். அவர் தேடிச்சென்று எடுத்து வருவார். சில சமயங்களில் வெறுங்கையுடன் வருவார். சைக்கிள் காணாமல்போவது, தாத்தாவின் அலைச்சல், யாரோ ஒருவரின் வறுமை, அதனால் நிகழும் திருட்டு என எல்லாம் சேர்ந்து அந்தப் படம் என்னைப் பெரிதும் பாதித்தது. இப்படியான சினிமாக்கள் தமிழில் இல்லையே என்ற வருத்தமும் ஏக்கமும் அப்போதே எனக்குள் உருவானது. அந்த பாதிப்பு, தொடர்ச்சியான தேடல், வாசிப்பு, சென்னைக்கு வந்தது, ‘உலகசினிமா’’ தொடர் வாய்ப்பு, ஒளிப்பதிவாளனாகப் பயிற்சி என என் பயணம் அமைந்தது.”

``டூலெட் படத்துக்கான கரு எங்கிருந்து கிடைத்தது?’’

“கலை நேர்மைதான் உலக சினிமா!”“2007-ல் என்று நினைக்கிறேன். வீடு காலி பண்ண வேண்டிய சூழல். புது வீடு தேடி அலைந்துகொண்டி ருந்தேன். களைத்துப்போய் ஓய்வாக ஓரிடத்தில் உட்காந்திருந்தபோது, இதற்குள்ளேயே ஒரு கதை இருக்கிறதே என்று தொன்றியது. உடனே எழுதத் தொடங்கிவிட்டேன்.”

`` ‘உலகசினிமா’ என்பது தமிழில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாக இருக்கிறது. உண்மையில் உலகசினிமா என்றால் என்ன?’’


“வணிகம் மற்றும் பார்வையாளருக்கான சமரசம் ஏதுமற்று, எடுக்க நினைத்த கதையை சம்பவத்தை சினிமாக் கலைக்கு நேர்மையாக உருவாக்குவது ‘உலகசினிமா’ என்பது என் பார்வை. நமக்கு ஒரு நல்ல பிரெஞ்சு சினிமா உலகசினிமா என்றால், ஒரு பிரெஞ்சுப் பார்வையாளனுக்கு ஒரு நல்ல தமிழ் சினிமா ‘உலகசினிமா!’ ” 

``பல திரைப்பட விழாக்களில், ஒரு பரிட்சார்த்த சினிமாவும், அதே மொழியில் எடுக்கப்படுகிற ஒரு வணிக சினிமாவும்கூட திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறதே... இதை எப்படிப் புரிந்துகொள்வது?’’ 


“நானும்கூட அதைக் கவனிக்கிறேன். அந்தத் திரைப்பட விழாவை நாம் சந்தேகப்படத்தான் வேண்டும். இங்கே, நம்மிடம் பல சினிமா விருது விழாக்கள், இலக்கிய விருது விழாக்கள் நடக்கின்றன அல்லவா? எத்தனை விருது அமைப்புகள் இருக்கின்றன... அவற்றில் எவையெல்லாம் மதிக்கத்தக்கவை என்று நமக்குத் தெரியுமல்லவா? அதுபோலத்தான் நாம் அந்தத் திரைப்பட விழாக்களையும் அணுக வேண்டும்.”

`` ‘கலைத்தன்மையுள்ள ஒரு படத்தை உருவாக்குவது எவ்வளவு சிரமமோ, அதே அளவு ஒரு வணிக சினிமாவும் சிரமத்தையும் உழைப்பையும் படைப்பாற்றலையும் கோருகிறது’ என்ற பெரும்பான்மை வாதத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’’

“சந்தேகமே இல்லை, உண்மைதான். அந்த உழைப்பை ஒருபோதும் நான் மறுக்க மாட்டேன். கடலுக்குள் போய் எடுத்தேன், பாலைவனத்தில் போய் எடுத்தேன், ஒரு ஷாட்டுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று சொல்லலாம். ஆனால், அந்த உழைப்பை மட்டுமே வைத்து அதை நல்ல படைப்பு என்று அங்கீகாரம் கோர முடியாது. அந்த உழைப்பை உழைப்பாக நிச்சயம் ஏற்கலாம், கலையாக அல்ல.”

`` ‘டூலெட்’ இவ்வளவு அங்கீகாரம் பெறும் என்று முன்பாகவே எதிர்பார்த்தீர்களா?’’

 “உண்மையில் எதிர்பார்க்கவில்லை. ஒரு மாணவனைப் போல பாஸாக வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். இந்தப் படத்தை வெளியிடும்போது, போஸ்டரில் இரண்டு அவார்டு ‘லோகோ’-க்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது முழு போஸ்டர் அளவு நிறையும் என்று நினைக்கவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது!”

``இதுபோன்ற தற்சார்புத் திரைப்படங்களை (Independent Cinema) எடுப்பதில், புதிய இளைஞர்களிடமே இன்னும் தயக்கம் இருக்கிறது. இதுபோன்ற சினிமாக்களில் பொருளாதார ரீதியாக வெற்றிபெற முடியுமா?’’    

“கலை நேர்மைதான் உலக சினிமா!”

“நிச்சயமாக. தற்சார்புத் திரைப்படங்களுக்கு வருங்காலத்தில் பெரிய வரவேற்பு இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் குறிப்பிடும்படியான வெற்றியைப் பெறவில்லையே. சிறிய அளவிலான ஆர்கானிக் சினிமாக்கள்தான் வெற்றி பெற்றிருக்கின்றன.

கோவில்பட்டிக் கடலைமிட்டாய், திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா, சிறுதானியப் பண்டங்கள் என வட்டார இயற்கை உணவுகள் மீண்டும் முக்கியத்துவம் பெறுவதுபோல, வட்டார பிராந்திய அசல் சினிமாக்கள்தான் இனி பெரிய அளவில் கவனம்பெறும். எளிமையான பட்ஜெட்டில் நண்பர்களாக இணைந்து குடிசைத் தொழில்போல, ஒரு சமூகத்தின் தனித்த உண்மையான பிரச்னையை சினிமாவாகப் பதிவுசெய்யும்போது, அது சர்வதேச அளவில் நிச்சயம் கவனம்பெறும். ‘டூலெட்’ படம், தன்னளவில் தமிழ்த்தன்மையும், இந்தியத் தன்மையும் கொண்டிருப்பதால்தான் இவ்வளவு தூரம் கவனம் பெற்றிருக்கிறது. இப்படியான படங்களை முறையாகத் திரையிடல்களுக்கும் விருதுத் தேர்வுக்கும் அனுப்பினால், தேர்வாகும்பட்சத்தில் ஒரு திரையிடலுக்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை ஈட்ட முடியும்.”

``உங்கள் குரு பி.சி.ஸ்ரீராம் படம் பார்த்து என்ன சொன்னார்?’’ 

“‘இவ்வளவு சைலன்ட்டான மெடிட்டேட்டிவான சினிமாவைப் பார்த்து பல வருஷமாச்சு’ என்றார்.”

`` ‘டூலெட்’ பார்க்க வரும் பார்வையாளர்கள் என்ன மாதிரியான எதிர்பார்ப்போடு திரையரங்கிற்கு வரலாம்?’’


“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாருங்கள். நமது இயல்பான வாழ்க்கையைத்தான் சினிமாவாக எடுத்திருக்கிறேன். ஒரு பார்வையாளர் படத்திற்காகச் செலவளிக்கும் ஒன்றரை மணி நேரம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவேன். அதை அர்த்தமுள்ள பொழுதாக நீங்கள் ஏற்கும்படியான ஒரு சினிமாவை எடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.”

 ``அடுத்தகட்டத் திட்டம் என்ன?’’

“ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறேன். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு படம் இயக்க வேண்டும் என்ற திட்டமிருக்கிறது. நான் பேசுகிற சினிமா மொழி இந்த உலகத்திற்குப் புரிகிறதா என்பதை அறிந்துகொள்ள “ஹலோ... மைக் டெஸ்ட்டிங்” என்று சொல்லிப் பார்த்த முயற்சிதான் ‘டூலெட்’. இப்போது என் மொழி புரிகிறது, கொண்டாடப்படுகிறது என்பதை அறிந்துகொண்டேன். இனி நான் இன்னும் முக்கியமான விஷயங்களைப் பேச வேண்டும்.”

``முதற்கட்டமாக என்ன பேச வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?’’

“ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டம் பற்றி.”

வெய்யில் - படம்: கே.ராஜசேகரன்