Published:Updated:

``உண்மைதான் ராம்... எங்கள் வாழ்க்கை ஆசீர்வாதத்திற்குரியது!" - `பேரன்பு' விமர்சனம்

``உண்மைதான் ராம்... எங்கள் வாழ்க்கை ஆசீர்வாதத்திற்குரியது!" - `பேரன்பு' விமர்சனம்

மாற்றுத் திறனாளியான ஒரு பெண் குழந்தையின் பருவ வளர்ச்சி, தந்தையை அணு அணுவாய்ப் பிளந்து பார்ப்பதும், அந்தத் தந்தையோ, குழந்தையின் வளர்ச்சியை அன்பால் நிரப்பி அழகு பார்ப்பதுதான், `பேரன்பு' தரிசனம்.

``உண்மைதான் ராம்... எங்கள் வாழ்க்கை ஆசீர்வாதத்திற்குரியது!" - `பேரன்பு' விமர்சனம்

மாற்றுத் திறனாளியான ஒரு பெண் குழந்தையின் பருவ வளர்ச்சி, தந்தையை அணு அணுவாய்ப் பிளந்து பார்ப்பதும், அந்தத் தந்தையோ, குழந்தையின் வளர்ச்சியை அன்பால் நிரப்பி அழகு பார்ப்பதுதான், `பேரன்பு' தரிசனம்.

Published:Updated:
``உண்மைதான் ராம்... எங்கள் வாழ்க்கை ஆசீர்வாதத்திற்குரியது!" - `பேரன்பு' விமர்சனம்

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட `பாப்பா'வுக்கு அப்பா, அமுதவன். மகளின் உடல்நிலை உட்பட சில காரணமாக மனைவி பிரிய, சமூகம் புறக்கணிக்க, சூழலையும் மனிதர்களையும் வெறுத்து, தனி ஒரு வீட்டில் இயற்கையோடு இணைந்து வாழ்கிறார். அங்கே அரங்கேறும் அத்தியாயங்கள், மகளின் வளர்ச்சியையும், வாழ்வின் வண்ணங்களையும் அமுதவனுக்கு உணர்த்த... நகரத்துக்கு நகர்கிறார். மொத்தச் சமூகத்தையும் சூழலையும் எதிர்த்து, மகளுக்கு அப்பா ஆற்றுவது என்ன... `பேரன்பு' சொல்லும் அத்தியாயங்கள் இவைதான்.

இயற்கை அழகானது, இயற்கை கொடூரமானது, இயற்கை இரக்கமற்றது.. என அத்தியாயம் அத்தியாயமாக நேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை, இயற்கை பேரன்பானது என்பதோடு, முடிகிறது. தமிழில் யாரும் இதுவரை பேச நினைக்காத, துணியாத ஒரு கதை. கொஞ்சம் பிசகினால் அழ வைக்கிற, பரிதாபப்பட வைக்கிற, கலங்க வைக்கிற திரைக்கதை. ஆனால், இதுதான் நிதர்சனம் என்கிற ரீதியில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார், ராம். பேரன்புகள் ராம்.

12 வருடத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் மம்மூட்டி, எந்த இடத்திலும் மிகையாவும் நடிக்கவில்லை. தன் எதார்த்தமான நடிப்பிலிருந்து விலகவும் இல்லை. மகள் பூப்படைந்த விஷயம் தெரிந்ததும் உடைந்து வருந்துவது, மகளுக்குப் பிடித்த அப்பாவாக மாற ஆடுவது, பாடுவது, நாய் மாதிரி குரைப்பது, முதல் மனைவியை அவரது கணவர் வீட்டில் சந்திக்கும்போது பரிதவிப்பது, அஞ்சலி தன்னை ஏமாற்றியது தெரிந்தும், அதை வெளிக்காட்டாமல் மென்று முழுங்குவது, தன் குழந்தைக்கு இருக்கும் பாலியல் உணர்வைப் புரிந்து வாயைப் பொத்திக்கொண்டு அழுவது... என நடிப்பை இயற்கையின் அடைமழையாய்ப் பொழிகிறார், மம்மூட்டி. அவரது உடல்மொழியோடு, குரலும் இந்தப் படத்துக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதனா! ஒரு வார்த்தை வசனமில்லாத, படம் முழுவதும் வந்தாக வேண்டிய மிகக் கனமாக கதாபாத்திரத்தை அழுத்தமாகச் செய்திருக்கிறார். 14 வயது குழந்தையாக பாப்பா நமக்கு முதல் காட்சியில் எப்படி அறிமுகமாகிறாளோ, அதே போன்று இறுதி வரை தனது கை, கால் அசைவுகள், வாய் கோணல் என்று எல்லாவற்றையும் கச்சிதமாகச் செய்திருக்கிறார். நிச்சயம் `பேரன்பு' பல விருதுகளை அள்ளித் தரும் சாதனா.    

நெற்றியின் மத்தியில் நிறுத்தற்குறி அளவில் ஒரு கறுப்புப் பொட்டு, மேக்-அப் இல்லாத இயல்பான முகம், உதட்டில் சிறு புன்னகையோடு `அங்காடித் தெரு'வில் பார்த்த அஞ்சலி இஸ் பேக்! இதுதான் நாங்கள் பார்க்க விரும்பும் அஞ்சலி என்றவாறு இயல்பாக நடித்திருக்கிறார். ``சார் பாப்பா நீங்க நினைக்கிற மாதிரி இன்னும் குழந்தை இல்லை, பத்திரமா பாத்துக்கோங்க" எனும் அஞ்சலி ஏன் இப்படிச் செய்தார் என்பதற்கு விளக்கமில்லாமல் முடிந்திருக்கும் கதாபாத்திரம் இன்னும் பல ஆண்டுகள் இவரை நம் நினைவில் வைத்திருக்கச் செய்யும்.  

திருநங்கைகளின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகள், அவர்களின் உணர்ச்சிகள் என்று படத்தின் இரண்டாம் பாதி முழுக்க நம்முடன் பயணிக்கும் அறிமுக நடிகை அஞ்சலி அமீர் அழகாக இருக்கிறார்; அளவாக நடித்திருக்கிறார். வார்ம் வெல்கம்!  ஹோமில் இருக்கும் குழந்தையின் அப்பா `பூ' ராமு பேசும் விஷயம் பார்ப்பவர்களை ஒரு கணம் யோசிக்க வைக்கிறது.

கொடைக்கானலில் உறைந்த பனியை, படம் பார்த்த நமக்கும் படரவிட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். இயற்கை அழகியல் காட்சிகளை யார் வேண்டுமானாலும் மிகவும் அழகாய்ப் படம் பிடித்துவிடலாம். ஆனால், ஊர்க் காட்சிகளை, தெருவிளக்கு ஒளியில் நிகழும் வன்முறைகள், பூட்டப்பட்ட அறைக்குள் நிகழும் அக்காட்சி எனப் படத்தில் வசனங்களற்று காட்சிகளாகச் சொல்லுமிடம் ஏராளம். அதைக் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறது, தேனி ஈஸ்வரின் கேமரா. அத்தியாயங்களாகப் பிரியும் திரைக்கதையை ஆழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார், சூர்ய பிரதமன். 

படம் முழுக்க புதிர், குரூரம், விசித்திரம், பேரன்பு... என விதவிதமான முகம் காட்டும் இயற்கைக்கு ஏற்ப, வேறுபாடுகளுடன் இசைக்கிறது, யுவனின் பின்னணி இசை. வைரமுத்து வரிகளில் வளமும் கனமும்!  

`என் நிலை தெரிஞ்சும் எனக்கு இத பண்றீங்கன்னா, அப்ப உங்களுக்கு அதைவிட ஏதோ கஷ்டம்னு நான் புரிஞ்சுக்கறேன்.', `நம்பர் தெரிஞ்சா மட்டும் நட்சத்திரத்தை எண்ணிடமுடியுமா என்ன', `மத்த குழந்தை இயல்பாகச் செய்யும் விஷயம் என் பாப்பாவுக்கு எவரெஸ்ட்ல ஏறுற மாதிரி', `அவங்கள மாதிரி நீ ஏன் இல்லைன்னு கேக்குறது எவ்ளோ பெரிய வன்முறை’ எனப் பல வசனங்கள் மூலமாகவும், தனக்கான இடத்தை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் ராம்.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை வளர்ப்பதில் ஒரு அப்பாவுக்கு எந்தளவுக்குச் சங்கடங்கள் இருக்கின்றன; அதில் அந்தக் குழந்தைக்கு எந்தளவுக்குச் சிக்கல்கள் இருக்கின்றன என்பதை பேசத் துணிந்த ராமின் அரிதான கதையில், அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் உணர்ச்சிகளையும் வெளிப்படையாகப் பேசியிருப்பது சிறப்பு. அதேசமயம், குறைகளும் திருஷ்டிப் பொட்டாக நிற்கின்றன படத்தில்!

வித்தியாச கதை சொல்லும் படத்தில் சில வழக்கமான க்ளோஸ்-அப் ஷாட்கள் செயற்கையான கழிவிறக்கத்தை உருவாக்குகிறது. அத்தியாயங்களாகப் பிரிக்கும் திரைக்கதை அமைப்பு, படத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இடையூறாக மட்டுமல்ல, `இந்த அத்தியாயம் இப்படித்தான்' என்ற முன்முடிவை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அஞ்சலி கதாபாத்திரத்தின் தன்மை இதுதான் என யூகிக்க முடிந்தாலும், அதற்கு அவர் செல்லும் எல்லை, அதற்காக மம்மூட்டி தரும் விலை.... நாடகத்தனம். ஒரே செயலை இருவர் செய்கிறார்கள். ஒருவருக்கு ஆனந்தம், இன்னொருவருக்கு எல்லாம் முடிந்துவிட்ட சூழல். அக்காட்சி ஆயிரம் அர்த்தங்களைக் கடத்தும் முன்னர், அதை அப்படியே சினிமா என்பது போல் முடித்திருக்கும் விதம் சற்று உறுத்தல்.  

`இந்த வாழ்க்கையைக் குறை சொல்லி வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் `பேரன்பு' பார்த்தால், நம் வாழ்க்கை எவ்வளவு ஆசீர்வாதத்திற்குரியது என்பது புரியும்' என்கிறார், ராம். உண்மைதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism