Published:Updated:

``விஷாலின் கோபம், கவர்னரின் பாராட்டு, சங்கத்தின் சர்ப்ரைஸ் ரஹ்மானின் டியூன்..!’’ - இளையராஜா 75

தார்மிக் லீ
சந்தோஷ் மாதேவன்
``விஷாலின் கோபம், கவர்னரின் பாராட்டு, சங்கத்தின் சர்ப்ரைஸ் ரஹ்மானின் டியூன்..!’’ - இளையராஜா 75
``விஷாலின் கோபம், கவர்னரின் பாராட்டு, சங்கத்தின் சர்ப்ரைஸ் ரஹ்மானின் டியூன்..!’’ - இளையராஜா 75

``விஷாலின் கோபம், கவர்னரின் பாராட்டு, சங்கத்தின் சர்ப்ரைஸ் ரஹ்மானின் டியூன்..!’’ - இளையராஜா 75

சந்தங்களுக்குப் பெயர்போன ஒரு இசை மேதைக்கான விழா என்பதாலோ என்னவோ, தமிழ்த் தாய் வாழ்த்துகூட `தத்தகாரத்தோடு'தான் அந்த மேடையில் பாடப்பட்டது. இந்த வருடம் தன் 75-வது வயதையும், 43 ஆண்டுக்கால திரையிசைப் பயணத்தையும் கொண்டாடும் இளையராஜாவுக்கு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நிகழ்த்திய `இளையராஜா 75' இசை விழாவில் முதல் நாள் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளைத்தான் இங்கே குறிப்பிட இருக்கிறோம்.

இளையராஜாவின் குரல் என்றதும் உற்சாகத்துடன் கீ-போர்டு வாசிக்கும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், பல்லக்கில் வந்து இறங்கிய தங்க வயலின், இளம் தலைமுறைப் பாடகர்களால் பாடப்படும் 80-களின் கிளாசிக் ராஜா ஹிட்ஸ்... என வந்திருந்த 17,000 ரசிகர்களுக்கு இசையைத் திகட்டும் அளவுக்குத் தந்து, திக்குமுக்காட வைத்துவிட்டது  இளையராஜா 75-ன் முதல் நாள்.

ஏக்கம் நிறைந்த பல கண்கள் சாலையில் நடந்துகொண்டிருப்பதை அங்குக் காணக் கிடைத்தது. கையில் ஒரு டிக்கெட்டை வைத்துக்கொண்டு சிறு பிள்ளையாகத் துள்ளி குதித்துச் சென்ற பெரியோர்கள், ஒரு கையில் வாட்டர் கேனைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் அம்மாவின் விரலைப் பிடித்து நடத்துகொண்டிருந்த குழந்தைகள், வழியில் இருந்த ராஜாவின் பேனருக்கு அருகே நின்று இரு விரலைக் காட்டி செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் இளைஞர், இளைஞிகள் என அனைத்துத் தலைமுறை மனிதர்களும் அங்கே கூடியிருந்தார்கள். உள்ளே நுழைந்ததும் கண்ணுக்கெட்டும் வரை அரங்கம், மனிதர்களால் நிரம்பி வழிந்தது.  மேடையை நெருங்க நெருங்க கூச்சல்களும் சலசலப்பும் அதிகரித்தது. 

சிக்ஸ் பேக் வெளியே தெரியும் அளவுக்கு கறுப்பு டிஷர்ட்டை டைட்டாக அணிந்திருக்கும் பவுன்சர்கள் ஆங்காங்கே, ஒவ்வொரு சீட்டிலும் நம்பர்களை ஒட்டிக்கொண்டிருந்தார்கள் வாலன்டியர்கள் ஆங்காங்கே, டீ காபி, சமோசா என வாங்கிச் சாப்பிட்டு அந்த மாலையை ராஜாவோடு கொண்டாட வந்திருக்கும் ரசிகர்கள் ஆங்காங்கே... இவர்களோடு சேர்ந்து விஷாலும் பரபரப்பாக அங்கிருக்கும் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கு நடுவே ஒரு குரல்... `ராஜா வந்துகொண்டிருக்கிறார், வரப்போகிறார், இதோ வந்துவிட்டார்...' என ஆங்கர் ஒரு பக்கம் வெறியேற்றிக்கொண்டிருக்க... ஒய்.எம்.சி.ஏ மைதானம் அதிர மேடையில் தோன்றினார்  இளையராஜா. அதைத் தொடர்ந்து அப்படியே ஒவ்வொரு பிரபலங்களாக ராஜாவோடு சங்கமிக்க வந்துகொண்டிருந்தனர். தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் கடும்பாதுகாப்போடு அரங்கத்துக்குள் நுழைந்து விழாவை ஆரம்பித்து வைத்தார். பின், ``தமிழ் மண்ணின் இசையை உலகம் முழுக்கக் கேட்கவைத்தவர் இளையராஜா" எனப் பாராட்டியும் பேசினார். தொடர்ந்து, இளையராஜா 75 குறித்து தயாரிப்பாளர் சங்கம் பதிப்பித்துள்ள ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார்.

`இதற்கு மேல் என்ன வேண்டும்!’ என நெகிழும் அளவுக்கு, நிகழ்ச்சி தொடங்கி முதல் சில மணி நேரத்திலேயே ரஹ்மான் அரங்கத்துக்குள் நுழைந்தார். என்னதான் அந்த மேடை கலர்கலரான டிஜிட்டல் மானிட்டர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், ராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் நிற்கும்போது வேறு எதன் மீது கண்கள் அலைபாயும்! ராஜாவைப் பார்ப்பதா, ரஹ்மானைப் பார்ப்பதா என்ற கன்ஃபியூஷனிலே கண்கள் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தன. ``மூன்றாம் பிறை படத்துலதான் முதல் முறை எனக்கு ஒரு சீன் கொடுத்து வாசிக்கச் சொன்னீங்க’’ என ரஹ்மான் சொன்னதும், இளையராஜா தன் பங்குக்குப் புன்னகை மன்னனில் கம்ப்யூட்டரில் இசையைப் பதிவேற்றிய நிகழ்வை, ``அந்தப் படத்துல தீம் மியூசிக் கேட்குறீங்கள்ல. அது இவரு புரொகிராம் பண்ணதுதான்’’ எனப் பார்வையாளகளிடம் பகிர்ந்து, ஒரு நொடி 80-களுக்கே அனைவரையும் அழைத்துச் சென்றார்.

``ஒரு ஹெட்மாஸ்டர் ரூமுக்குப் போற மாதிரிதான் எனக்கு இப்போ இருக்கு...’’ என இளையராஜாவைப் பார்த்து ரஹ்மான் சொல்லிவிட்டு, எப்படித் தன் வாழ்க்கை முறையை அவர் அமைத்திருக்கிறார் எனப் புகழ்ந்தும் பேசினார். ``ஒரு காலம் வரை இசைக் கலைஞர்கள்னா நிறைய கெட்டப் பழக்கம் இருக்கும்னு பொதுவான கருத்து இருந்தது. ஆனா அப்படியெல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லனு சொல்லிக்காட்டி வாழ்ந்தவர் இளையராஜா. அதைப் பார்த்துதான் நானும் வளர்ந்தேன். ஆனா எங்க ரெண்டு பேருக்கும் ஒரு கெட்டப் பழக்கம் இருக்கு. அதுதான் இசை’’ என ரஹ்மான் நெகிழ்ந்து பேச, ``உனக்கு அது பழக்கம்தான். ஆனா, எனக்கு அதுதான் வாழ்க்கையே’’ எனச் சொல்லிச் சிரித்தார் ராஜா.  

இதற்கிடையில் அடுத்த கோரிக்கை. இம்முறை மற்றொரு தொகுப்பாளர் நடிகை கஸ்தூரியிடமிருந்து, ``இதற்கப்புறம் இப்படி ஒரு வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்குமானு தெரியலை. அதனால இப்பவே கேட்கிறேன். ரஹ்மான் வாசிக்க, ராஜா சார் குரலில் எங்களுக்கு ஒரு பாட்டு கேட்கணும்’’ என்ற விருப்பம் வந்த மறுகணம் மேடைக்கு மேல் வாணவேடிக்கை முழங்கியது. `மௌன ராகம்' படத்தின் `மன்றம் வந்த' பாடல் தென்றல் போல் இருவரிடமிருந்தும் இசையாய் வீசியது. ஏ.ஆர்.ஆர் வாசித்த முடித்தவுடன், ``உனக்குத்தான் இந்த டியூன நல்லா தெரியுமே. அப்புறம் அந்த இடத்துல வர்ற `A'வை ஏன் யா விட்ட' என ஜாலியாக கமென்ட் அடித்தார் ராஜா. 

ஒரு சில மணித்துளிகளில் ஒரு வரலாற்றுச் சம்பவம், அந்த மேடையில் நிகழ்ந்து முடிந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இதை நேரில் கண்டவர்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ரஹ்மான் கீ-போர்டு வாசித்து, ராஜாவால் பாடப்பட்டது சில விநாடிகள்தான் என்றாலும், பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும் ஒரு தருணமாகவே சொல்ல வேண்டும்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ``இளையராஜா சாருக்கு இப்படி ஒரு விழா நடத்துறத நாங்க பெருமையா மட்டும் நினைக்கலை. ஒரு கடமையாவும் நினைக்கிறோம். இவர் இல்லேன்னா தொலை தூரப் பயணம்னு ஒண்ணு இங்க இருந்திருக்கவே முடியாது. வண்டியில பெட்ரோல் போடுறாங்களோ இல்லையோ, ராஜா சாரோட பாட்டு கேசட்ட கண்டிப்பா வெச்சுக்கிட்டுதான் எல்லா ட்ரைவர்களும் ஒரு லாங் டிஸ்டன்ஸ் ட்ராவலுக்கு ரெடியாவாங்க. அது காஷ்மீர் வரைக்கும்கூட பயணப்படும்’’ எனக் கூறினார். மேலும், ``இப்படிப்பட்ட ஒருத்தருக்கு விழா நடத்த முயற்சி பண்ணும்போது, அதைத் தடுக்கணும்னே சிலபேர் வழக்கு போட்டாங்க. ஆனா அது எடுபடலை. அவங்களுக்கெல்லாம் அன்னைக்கே ராஜா சார் ஒரு பாட்டுப் பாடிட்டார். `என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா' " என விழா ஆரம்பித்த கர்வத்துடன் தன் உரையை முடித்தார் விஷால்.

இப்படிப்பட்ட ஒரு கலைஞனுக்கு விழா எடுத்தால் மட்டும் போதுமா? அது பத்தாதென்று நடிகர் சங்கம் ஒரு சர்ப்ரைஸ் நினைவுப் பரிசையும் அவருக்கு வழங்கியது. பல்லக்கில் எடுத்துவரப்பட்ட அது, தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு வயலின். அதை வாங்கும் முன் வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து ``எப்பவுமே உங்கள் அன்பைத் தவிர வேறு எதுவும் எனக்குப் பெரும் பரிசாக இருந்ததில்லை. இந்த வயலினும் உங்கள் அன்பின் வெளிப்பாடு என்பதால் இதை ஏற்கிறேன்" எனக் கூறிவிட்டு அதை வாங்கினார்.

தொடர்ந்து இயக்குநர்கள் பாக்யராஜ், மனோபாலா நடிகர்கள் சிவகுமார், நாசர், பொன்வண்ணன், கார்த்திக், ராதா, நதியா, கோவை சரளா, சத்யராஜ் ஒவ்வொருவராக அணிவகுத்து வந்து இளையராஜாவுக்கும் தங்களுக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதைப் பேசிச் சென்றனர். சிவகுமார், ராஜாவுக்கு அன்பளிப்பாக ஒரு மோதிரத்தை அணிந்துவிட்டு, ``சிந்து பைரவி படபிடிப்பப்போ இவர் போட்டுக்கொடுத்த ஒரு முழு நீள ஸ்வர வரிசைய மனப்பாடம் பண்ணி நடிச்சேன்" எனக் கூறிவிட்டு, அந்த ஸ்வரத்தையும் மேடையில் பாடிக்காட்டினார்.

நடிகர் கார்த்திக், நடிகை ராதா, இயக்குநர் மனோபாலா, மூவரும் இணைந்து, தாங்கள் பணியாற்றிய பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின்போது நேர்ந்த நிகழ்வுகளைப் பகிர்ந்தனர். ``எப்பவுமே ராஜா சார் உருவாக்கின நல்ல பாட்டெல்லாம் என் படத்துல வரவே வராது. அப்படித்தான் `புத்தம் புது காலை' பாட்டும் அந்தப் படத்துல வரவே இல்ல. ஆனா தமிழ்நாடு, ஆந்திரானு எல்லா இடத்துலையும் அது ஹிட்" எனக் கூறினார். மேலும் கார்த்திக், ``உங்க பாட்டு எப்பவுமே மோட்டிவேட்டிங்கா இருக்கு" என இளையராஜாவைப் பார்த்துக் கூறினார்.

இறுதியாகப் பேசிய நடிகர் சத்யராஜ், ``பொதுவா பல நடிகர்களோட நடிப்புக்கு ஒரு எக்ஸ்ட்ரா டோசேஜ் தர்றதே இளையராஜா சார் மியூசிக்தான். நூறாவது நாள்ல நானும் என்னென்னவோ வேஷம்லாம் போட்டுப் பார்த்தேன். ஆனா, கடைசியா ராஜா சார் மியூசிக்ல எனக்கு ஒரு தீம் போட்டிருப்பார். அதுதான் என் கேரக்டரையே ரொம்ப டெரரா காட்டியிருக்கும். அதுக்கு நேரெதிரா கடலோரக் கவிதைகள் படத்துல ஒரு டியூனப் போட்டு என்னை அப்படியே ஒரு பாவப்பட்ட ஆள் மாதிரி காட்டவும் இதே ராஜாவாலதான் முடிஞ்சது" என்று நெகிழ்ந்தார்.

விழாவின் முதல் நாளில் திரையுலக பிரபலங்கள் சயீஷா, நமிதா, ரம்யா நம்பீசன், நிக்கி கல்ரானி, ரூபினி, மன்சூர் அலிகான், மஞ்சிமா மோகன் மற்றும் ஆண்ட்ரியா என அனைவரும் இளையராஜா முன் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, ஹங்கேரி நாட்டு இசைக்குழுவுடன் இணைந்து, இளையராஜா தன் பாடல்களை உலகத்துக்கே பாடப்போகிறார் என்ற அதீத ஆவலுடன் வீடு திரும்பினர் ரசிகர்கள்.

அடுத்த கட்டுரைக்கு