Published:Updated:

ஓரினக் காதலைப் பதிவு செய்யும் ஒரு கமர்ஷியல் காமெடி படம்... #EkLadkiKoDekhaTohAisaLaga படம் எப்படி?

ஓரினக் காதலைப் பதிவு செய்யும் ஒரு கமர்ஷியல் காமெடி படம்... #EkLadkiKoDekhaTohAisaLaga படம் எப்படி?
ஓரினக் காதலைப் பதிவு செய்யும் ஒரு கமர்ஷியல் காமெடி படம்... #EkLadkiKoDekhaTohAisaLaga படம் எப்படி?

சோனம் கபூர், ரெஜினா கஸாண்ட்ரா, அனில் கபூர், ராஜ்குமார் ராவ், ஜூஹி சாவ்லா என அரை டஜன் நடிகர்களுடன் களமிறங்கியிருக்கும் ரொமான்டிக் காமெடி படம் #EkLadkiKoDekhaTohAisaLaga பேசுவது நாம் பெரும்பாலும் விவாதிக்கத் தயங்கும், காது கொடுத்து கேட்க மறுக்கும் ஓரினக் காதல்கள் மற்றும் சமபால் ஈர்ப்பாளர்களின் நியாயங்களை...

திருமண வயதை அடைந்துவிட்ட ஸ்வீட்டி சௌத்ரிக்கு (சோனம் கபூர் அஹூஜா), சரியான மணமகனைத் தேடி அலைகிறார் அப்பா பல்பிர் சௌத்ரி (அனில் கபூர்). இதனிடையே, ஒருமுறை மட்டுமே தற்செயலாகச் சந்தித்துக்கொண்ட ஸ்வீட்டி மற்றும் நாடக எழுத்தாளராக முயற்சிசெய்துகொண்டிருக்கும் சாஹில் மிர்சா (ராஜ்குமார் ராவ்) ஜோடி, காதலிப்பதாக வதந்திகள் பரவுகின்றன. ராஜ்குமார் ராவும் சோனம் மீது நிஜமாகவே காதலில் விழ, பல்வேறு டிராமாவுக்குப் பிறகு சோனம் வீட்டிலும் அவரை ஏற்றுக்கொள்கிறார்கள். பிரச்னையே இனிமேல்தான். சோனம் கபூர் நிஜமாகவே விரும்புவது வேறொருவரை... அவரும் ஆண் அல்ல... ஒரு பெண்! இந்தக் காதல் கைகூடியதா?

அரை டஜன் நடிகர்கள், பாலிவுட் படங்களின் ஆஸ்தான கலகல ஆர்தோடாக்ஸ் பஞ்சாபி குடும்பம், நீட்டி முழக்கி செயற்கையாகப் பேசும் ஓவராக்டிங் பாத்திரங்கள், இதற்கெல்லாம் முரண்பாடான சீரியஸான கிளைமாக்ஸ் எனப் படு டெம்ப்ளேட்டான படம்தான். ஆனால், எடுத்துக்கொண்ட மையக்கரு இதுவரை இத்தகைய கமர்ஷியல் படங்கள் பேசாத ஒரு விஷயம்.

சிறு வயது முதலே தன் ஆசைகள் முற்றிலும் வேறானவை என்று உணர்ந்த ஒரு குழந்தைக்கு, முதலில் தன் மனதில் உதிக்கும் எண்ணம், தான் வித்தியாசமானவள் என்பதே! சோனம் தன் ஆசைகளை என்றுமே புதைத்துக்கொண்டு மட்டுமே வாழ வேண்டும் என்று பாடம் எடுக்கும் பள்ளிப் பருவகால காட்சிகள் உணர்ச்சிக் குவியல். முதல் க்ரீட்டிங் கார்டு, டைரி குறிப்புகள் அதற்காக அவள் படும் அவமானம் என யாரும் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முற்படாத இளவயது சோனம் கபூராக க்ளாப்ஸ் அள்ளுகிறார் `தெய்வத் திருமகள்' சாரா.

சோனம் கபூருக்கு யாரும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் கதாபாத்திரம். ரகசியம் அறிந்த சகோதரனிடம் பாசம் குறைந்ததற்கான காரணத்தைக் கேட்கும் காட்சி, ராஜ்குமார் ராவிடம் தன் ரகசியத்தைப் பகிரும் காட்சி, காதலி ரெஜினாவை நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்திக்கும் அந்த கேரவான் காட்சி, இனி பேசத் தயங்கப்போவதில்லை எனத் தன் தந்தையிடம் வெடித்து அழும் காட்சி எனப் படத்தின் அனைத்து முக்கியமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால், படத்தின் உயிர்நாடியாக அவரின் காட்சிகளும் கதாபாத்திரமும் இல்லாத ஓர் உணர்வையே கொடுக்கிறது திரைக்கதை.

காரணம், பாதி வெயிட்டேஜை ராஜ்குமார் ராவும், அனில் கபூருமே எடுத்துக்கொள்ள, மீதியைக் குடும்பமே (வேலைக்காரர்கள் உட்பட) காமெடி செய்கிறேன் எனக் குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறது. போதாக்குறைக்கு, இந்த முதல்பாதி முழுக்கவே புகழ்பெற்ற அமெரிக்க நாவல் மற்றும் படமான `A Damsel in Distress' கதையைத் தழுவியே வடிவமைத்திருக்கிறார்கள் (கடைசியில் க்ரெடிட்டும் கொடுத்து இருக்கிறார்கள்). சோனம், ஒரு பெண்ணைக் காதலிக்கிறார் என்ற ட்விஸ்ட்டும் அதற்குப் பின் வரும் இரண்டாம் பாதி காட்சிகள் மட்டுமே திரைக்குப் புதிது. முற்போக்குத் தனம் என்றாலும் அனில் கபூர், ஜூஹி சாவ்லா காதல் காட்சிகளில் தனித்துத் தெரியும் ஓவர் ஆக்ட்டிங் அந்தக் காட்சிகளை ரசிக்கவிடாமல் செய்கிறது. சமீபமாக சிறப்புத் தோற்றங்களில் மட்டுமே நடித்துவந்த ஜூஹி சாவ்லாவின் கம்பேக் இன்னமும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

அப்பாவாக அனில் கபூர். பாடல் காட்சிகளில் அத்தனை எனர்ஜி ஏற்றி இளம் கதாநாயகர்களுக்கே சவால்விடுகிறார். முக்கால்வாசி படத்துக்கும் மேல் அமைதியாக இருந்துவிட்டு, இறுதியில் தன் மகளுக்காகப் பேசும் காட்சியில், தான் யார் என்பதைக் காட்டுகிறார். அவரைத் தவிர அந்தக் காட்சிகளுக்கும் அவ்வளவு முக்கியமான வசனங்களுக்கும் யாருமே நியாயம் சேர்த்திருக்க முடியாது. நிஜமாகவே நீங்கள் ஒரு காட்ஃபாதர்தான்! ரெஜினா கஸான்ட்ராவுக்குக் காட்சிகள் குறைவுதான். சோனம் கபூரின் மன ஓட்டங்களைத் தெளிவாகப் புரியவைக்கும் படம், அவரின் காதலியான ரெஜினாவின் கதாபாத்திரத்தை ஏனோ `அமெரிக்க மாப்பிள்ளை' (இங்கே லண்டன் மருமகள்) கணக்காக டீல் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட சோனம் கபூர் சந்தித்த அதே பிரச்னைகளை அவரும் சந்தித்துத்தானே மீண்டு வந்திருப்பார்? அதைப் பற்றிப் பேசாமல், படத்தின் ஆரம்பக் காட்சி மற்றும் கடைசி சில காட்சிகளுக்கு மட்டுமே அவரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அனில் கபூரின் கரியரில் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஹிட் பாடலான ஆர்.டி.பர்மனின் `ஏக் லடுக்கி கோ தேக்கா தோ ஐஸா லகா...' (அவளைப் பார்க்கையில் நான் எப்படி உணர்ந்தேன்...) பாடலின் முதல் வரியையே அவர் மகளின் படத்திற்குத் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். அது ரீ-மிக்ஸ் பாடலாகப் படத்தின் தொடக்கத்தில் ஓர் அர்த்தத்தையும், பின் வேறோர் அர்த்தத்தையும் தருவது அப்ளாஸ் ரகம். கிளைமாக்ஸில், ``நம்மால் எப்படி நம்மோட பாலினத்த சேர்ந்தவங்களைக் காதலிக்க முடியாதோ, அதே மாதிரி அவங்களாலயும் வேறொரு பாலினத்தைக் காதலிக்க முடியாது. இது நோயில்ல... இயற்கை!", ``இனிமேல என்ன மாதிரி இருக்கிற யாரும், டைரியோட மட்டும் பேசிட்டு இருக்கக் கூடாது!" போன்ற வசனங்கள் நச்! `இப்படி ஒரு காதலா!' எனப் பலரும் படத்தில் முகத்தைச் சுளித்துக்கொண்டு போகையில், வயதான ஒருவர் மட்டும் குலுங்கிக் குலுங்கி அழுவது, அவர் தொலைத்த வாழ்க்கையை வார்த்தைகளின்றி நமக்குப் புரியவைக்கிறது. இன்னமும் இப்படிப்பட்ட காட்சிகளைக் கோத்திருக்கலாமே இயக்குநர் ஷெல்லி சோப்ரா தர்?

ஆண் ஒருவனுக்கு சமையல் கலையில் விருப்பம் இருந்தாலும், அவனைச் சமையல் அறைக்கே அனுமதிக்காத ஒரு குடும்பம், தங்கள் வீட்டுப் பெண் வேறொரு மதத்தைச் சேர்ந்தவனைக் காதலிக்கிறாள் எனத் தெரிந்ததற்கே கோபப்படும் ஒரு குடும்பம், சமபால் ஈர்ப்பு காதலை எப்படி எதிர்கொள்கிறது என்பது சுவாரஸ்யமான ஒன்லைன்தான். ஆனால், படத்தின் பிற்பாதிக்கு கொடுத்த அழுத்தத்தை, அந்த சீரியஸான கோணத்தைப் படம் முழுவதும் நிரப்பியிருந்தால், நம் மனத்தில் அது இன்னமும் ஏராளமான கேள்விகளை எழுப்பியிருக்கும். இங்கே ஓரினச் சேர்க்கை, ஓரினக் காதல் என்பதைத் தவிர்த்துவிட்டு, ஆண்-பெண் காதலின் வழக்கமான எதிரிகளான சாதி, மதம் என வைத்திருந்தால், இது ஒரு மிகவும் வழக்கமான காமெடி கமர்ஷியல் படமாகவே மாறியிருக்கும். எடுத்துக்கொண்ட சீரியஸான விஷயத்திற்கு இன்னமும் நியாயம் சேர்த்திருக்கலாமே? இருந்தாலும், இதுவரை பேசாத ஒரு விஷயத்தைப் பேச முற்பட்டதற்காகவே இது ஒரு வரவேற்கத்தக்க வணிகப்படமாகிறது.

அடுத்த கட்டுரைக்கு