Published:Updated:

`சிறையில் இருந்து வந்த பிறகு பார்த்த படம் '96' தான்' - விஜய் சேதுபதி குறித்து நெகிழும் திருமுருகன் காந்தி!

`சிறையில் இருந்து வந்த பிறகு பார்த்த படம் '96' தான்' - விஜய் சேதுபதி குறித்து நெகிழும் திருமுருகன் காந்தி!
`சிறையில் இருந்து வந்த பிறகு பார்த்த படம் '96' தான்' - விஜய் சேதுபதி குறித்து நெகிழும் திருமுருகன் காந்தி!

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தின் 100வது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகச் சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார்.


அப்போது அவர், ``தோழர் பிரேம் குமார் என்னை ஏன் இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டார்னு எனக்குத் தெரியலை. சனிக்கிழமை ராஜபக்‌ஷேவுக்கு கறுப்புக் கொடி காட்டணும், ஞாயிற்றுக் கிழமை மோடிக்கு கறுப்பு கொடி காட்டணும்னு பிளான் பண்ணிட்டு இருந்த சமயத்துல, இந்த நிகழ்ச்சிக்கு அழைச்சது எனக்குக் கொஞ்சம் அவுட் ஆஃப் கன்டன்ட்தான். நான் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு பார்த்த படம் '96' தான். தோழர்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க போகலாம்னு சொன்னாங்க. காதலிக்கிறது ஒரு அற்புதமான விஷயம். ஆனா, காதலிக்கிற பெண்ணையே கொலை செய்றது, ஆசிட் வீசுறதுனு செய்திகள்ல பார்க்கிறோம்.

அந்த சமயத்துல வெளியான இந்தப் படம் எப்படி பெண்களை, காதலை, இயற்கையை கொண்டாடுறதுனு பேசிய படம். தான் காதலிச்ச பெண் கிடைக்கலைனா அந்த உணர்வு வன்மமா மாறாமல் இயற்கையை ரசிக்கிற பேரன்புமிக்க ஒரு மனிதரா மாறுவதை முதல் பாடலிலேயே காட்டியிருக்கிறார், பிரேம். நான் இப்போ பார்த்து ரசிக்கக்கூடிய நடிகர் விஜய் சேதுபதி தான். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பா அவர் இருக்கார். இப்போ இருக்கிற ஹீரோக்கள் எல்லோரும் நம்மால் கற்பனை செஞ்சு பார்க்க முடியாத வேற ஒரு நபரா இருக்காங்க. ஆனா, இவர்தான் நம்மளை மாதிரி திரையில இருக்கார். அதனால்தான் எல்லோருக்கும் அவரை பிடிச்சிருக்கு.

இயக்கவாதிகளுக்கும் இந்தப் படத்துல தொடர்பு இருக்கிறதுக்கு காரணம் காதல்தான். நாங்கள் மனிதனை நேசிக்கிறோம்; இயற்கையை நேசிக்கிறோம். அதனால் போராடுகிறோம். நம் எந்த சமூகத்தில் வாழ்கிறோமோ அந்த மக்களை நேசிக்கும்பொழுது எந்த தத்துவங்களும் உயிர் பெறும். காதல் இந்த சமூகத்துல எவ்வளவு சிக்கல்களைக் கொண்டு வந்திட்டு இருக்கிறதுனு நமக்குத் தெரியும். காதலை மறுக்கக்கூடிய சாதிய வெறியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் காதலைக் கொண்டாட வேண்டிய தேவை இந்தச் சமூகத்துக்கு இருக்குனு நினைக்கிறேன். இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குநருக்கும் படக்குழுவுக்கும் என் சார்பாகவும் மே 17 இயக்கம் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றவரைத் தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, ``உங்களுடைய சிந்தனைகளுக்கு நான் தீவிர ரசிகன். நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கான சர்ப்ரைஸ் இதுதான்'' என்றார்.