Published:Updated:

``இதெல்லாம் நியாயமா?’’ - `96 வெற்றி விழா சர்ச்சைகள்

நேற்று நடந்த `96 படத்தின் 100-வது நாள் வெற்றிவிழாவில், திரைப்பட விமர்சகர்களுள் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே மரியாதை தரப்பட்டதாகச் செய்தியாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

``இதெல்லாம் நியாயமா?’’ - `96 வெற்றி விழா சர்ச்சைகள்
``இதெல்லாம் நியாயமா?’’ - `96 வெற்றி விழா சர்ச்சைகள்

ரு படம் பரபரப்பாகப் பேசப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்று, திரையில் 100 நாள்களைத் தாண்டி ஓடுவதற்கு, அந்தப் படத்தின் கதை, நடிகர்கள், இயக்குநர் என்பதையும் கடந்து, பத்திரிகையாளர்களால் எப்படி மக்களிடம் எடுத்துச்செல்லப்படுகிறது என்பதும் இன்றைய அளவில் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது. சென்ற ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியான '96 திரைப்படத்துக்கும் இது பொருந்தும். படம் வெளியாகும் முன்பே பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது படத்தைப் பார்த்த பெரும்பான்மையான விமர்சகர்களால் படம் பெரிதாகக் கொண்டாடப்பட்டது. இது, மக்களிடம் ஒரு நல்ல வரவேற்பைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது.

இது இப்படி இருக்கையில், நேற்று நடந்த '96 படத்தின் 100-வது நாள் வெற்றிவிழாவில், திரைப்பட விமர்சகர்களுள் ஒரு குறிப்பிட்ட சாரார்களுக்கு மட்டுமே மரியாதை தரப்பட்டதாகப் பல செய்தியாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

விழாவில் வைக்கப்பட்டிருந்த திரையில், படத்துக்கு நல்ல விமர்சனம் சொன்ன அனைத்து யூடியூப் விமர்சகர்களின் காணொலித் துண்டுகளும் வரிசையாகத் திரையிடப்பட்டன. அதன் திரையிடலுக்குப் பின் விழா தொடங்கியது. அதைக் கண்டதும், கூட்டத்தில் இருந்த சில அச்சு ஊடகப் பத்திரிகையாளர்கள் சலசலத்தனர். ``படத்தை அனைவரும்தான் ஆதரித்துப் பாராட்டினோம். யூடியூபர்களை மட்டும் காணொலியில் காட்டுவதற்கு என்ன காரணம்?’’ எனக் கேள்விகளை எழுப்பினர். ஆனால், இதற்குப் படத் தரப்பினரால் எந்தவொரு பதிலோ விளக்கமோ அப்போது தரப்படவில்லை.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் மீரானிடம் நாம் கேட்டபோது, ``மீடியாவின் இந்த விஞ்ஞான வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான். ட்விட்டர், யூடியூப் எனத் திரைப்பட விமர்சன வடிவங்கள் பலவாக இருக்கின்றன. அதில் பலர், இதை வணிகமாகவும் நடத்திவருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, அச்சு ஊடகத்தை அவமதித்ததைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.’’

தொடர்ந்து பேசியவர், ``அச்சு ஊடகம் என்பது பாரம்பர்யம் மிக்கது. அதில் வேலைபார்க்கும் நிருபர்களை வைத்துக்கொண்டே பிறரை மட்டும் புகழ்வது, எங்களை முகத்துக்கு நேராக அவமானப்படுத்துவதற்குச் சமம்’’ என்றார்.

செய்தித்தாள் அல்லது வார இதழ்களில் அச்சான விமர்சனங்களைத் திரையில் காட்டினால் சரியாக இருக்காது என ஒரு படக்குழு உறுப்பினர் விழாவுக்கு இடையில் கூறியதாக ஒரு தகவல் பரவியது. அதுகுறித்துப் பேசிய மீரான், ``எப்படி வேண்டுமானாலும் அச்சில் வந்த விமர்சனங்களைத் திரையிட்டிருக்கலாம். உதாரணத்துக்கு விகடன் விமர்சனத்தில் படங்களுக்கு மதிப்பெண் வழங்கும் வழக்கம் இருக்கிறதென்றால், அந்த மதிப்பெண்ணைத் திரையில் காட்டி, விமர்சனத்திலிருந்து இரண்டு வரிகளையும் மேற்கோள் காட்டியிருக்கலாம். அதுவே, நியாயமான முறையாக இருந்திருக்கும்’’ என விளக்கினார்.

ஆனால் படக்குழுவினர் தரப்பு, திரையிடலில் ஒரு சிறிய தவறு நடந்துவிட்டதாகக் கூறுகிறது. இயக்குநர் பிரேம் குமாரிடம் இதுகுறித்து கேட்டபோது, ``அந்தக் காணொளி, கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் ஓடக்கூடியது. அதை நாங்கள் இரு பாகங்களாகப் பிரித்து வைத்திருந்தோம். முதல் பாகத்தில் ஒலி, ஒளி ரிவ்யூக்கள் வரும். இரண்டாம் பகுதியில் பத்திரிகைகளில் பிரசுரமான விமர்சனங்கள் வருமாறு எடிட் செய்து வைத்திருந்தோம். அங்கே திரையிட்டவருக்கு இது தெரியாது. அதனால் அவர் ஒலி, ஒளி பகுதி முடிந்ததும் திரையிடலை நிறுத்திவிட்டார்’’ என்று விளக்கமளித்தார்.

ஏன் அதற்கு அந்த இடத்தில் பதிலளிக்கவில்லை என்ற கேள்விக்கு, ``நாங்கள் விழாவில் அனைவரும் பேசி முடித்ததும் அதைத் திரையிடலாம் என நினைத்தோம். அதனால்தான் எதுவும் பேசவில்லை. ஆனால், படக்குழுவினர் பேசி முடித்ததும் அனைவரும் அரங்கைவிட்டு வெளியேறிவிட்டனர். தாமதித்தது என் தவறுதான்’’ என வருத்தம் தெரிவித்தார் பிரேம்.

பின்னர் இதுகுறித்து ஒரு விளக்கத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும், முழு காணொலியையும் இன்று யூடியூபில் பதிவேற்றப்போவதாகத் தெரிவித்திருந்தார்.