Published:Updated:

" 'ஆட்டோகிராஃப் 2', 'அப்பாவின் மீசை', தமிழ் ராக்கர்ஸ், 'சி2ஹெச்'..!" - இயக்குநர் சேரன்

" 'ஆட்டோகிராஃப் 2', 'அப்பாவின் மீசை', தமிழ் ராக்கர்ஸ், 'சி2ஹெச்'..!" - இயக்குநர் சேரன்
" 'ஆட்டோகிராஃப் 2', 'அப்பாவின் மீசை', தமிழ் ராக்கர்ஸ், 'சி2ஹெச்'..!" - இயக்குநர் சேரன்

`திருமணம்’ படம் குறித்தும் டி.டி.ஹெச் திட்டம், ரிலீஸாகாமல் இருக்கும் `அப்பாவின் மீசை’ படம் குறித்த அப்டேட், அரசியல் ஆர்வம்... எனப் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் சேரன்.

``பொருளாதார ரீதியான பிரச்னைகளைச் சந்திக்கிறப்போவெல்லாம், நிம்மதியா வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையை இறுக்கம் ஆக்கிக்கிட்டதா தோணும். கிடைச்ச இடத்தைத் தக்கவெச்சுக்க, பட்ட கடனை அடைக்க திரும்பத் திரும்பப் போராடிக்கிட்டு இருந்தேன். சமயத்துல என்ன வாழ்க்கை இதுனுகூட நினைச்சிருக்கேன். ஆனா, ஒரு இயக்குநரா நான் என்ன பண்ண நினைச்சேனோ, அதைச் சரியா பண்ண திருப்தி இருக்கு. என் பெரும்பாலான படங்களை மக்கள் கொண்டாடியிருக்காங்க. ஃபெயில் ஆகலை; ஆவரேஜ் ஸ்டூடண்ட்டா இல்லை. சினிமாவுல 90% மார்க் எடுத்த நல்ல மாணவனா இருக்கேன். அதுதான், தொடர்ந்து என்னைப் படம் பண்ண வைக்குது.’’ - சிறிய இடைவெளிக்குப் பிறகு `திருமணம்’ திரைப்படம் மூலமாக ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார் இயக்குநர் சேரன். அவரை சந்தித்துப் பேசினேன். 

``எல்லா இயக்குநர்களுக்குமே ஒரு தேக்கம் வருது. அதுக்கு அடிப்படைக் காரணம் என்ன?’’

``10 வருடம் ஒரு இயக்குநர் வெற்றிகரமா தாக்குபிடிக்கிறார்னா, அவர்கிட்ட இருந்த அனுபவமும் தேடலும் அவ்வளவு இருந்திருக்கும். அவங்க படைப்புகளை மக்கள் கொண்டாட ஆரம்பிச்ச பிறகு, அவங்ககிட்ட இருந்து எதிர்பார்ப்பு அதிகமாகும். ஜெயிக்கிற படத்தைக் கொடுக்கணும், தனக்கான அடையாளத்தைத் தக்க வெச்சுக்கணும், மக்களோட அதீத எதிர்பார்ப்பையும் பூர்த்தி பண்ணனும். இது, அந்த இயக்குநருக்கு அதிக பொறுப்பையும் தேடலுக்கான கட்டாயத்தையும் கொடுக்கும். இதுக்கிடையில மக்களோட ரசனை மாறியிருக்கும், புதுசா பல இயக்குநர்கள் வந்திருப்பாங்க, விஞ்ஞானம் வளர்ந்திருக்கும். இவற்றையெல்லாம் கடந்து மீண்டும் ஜெயிக்க எல்லாப் படைப்பாளிகளுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். அது தேவையும்கூட!’’

``உங்க இடைவெளிக்கும் அதுதான் காரணமா?’’ 

``இல்லை. நான் மாற்றங்களைக் கவனிச்சுக்கிட்டேதான் இருப்பேன். ஒவ்வொரு தலைமுறைக்கும் என் படைப்புகளை மாத்திக்கிட்டேதான் இருக்கேன். எனக்கு இருந்தது பொருளாதார ரீதியான பிரச்னை. தயாரிப்பாளர்கள், ஃபைனான்ஸியர்கள் கிடைக்கிறதுல பிரச்னை. ஹீரோக்களோட சப்போர்ட் இல்லை. அதனால, என் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் மாதிரியே பண்ண வேண்டிய போராட்டம் இருந்தது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு நிகரான தரத்தை என் படங்களுக்குக் கொடுக்க, நிறைய செலவு பண்னேன். ஆனா, வருமானம் அதுக்கு நிகரா இல்லை. திரும்பத் திரும்ப பொருளாதரப் பிரச்னையைச் சந்திக்கும்போது, அது என்னைப் பின்னோக்கி இழுத்துக்கிட்டே இருந்துச்சு. என்னைப் பொறுத்தவரை சினிமா எனக்கு ஒரு பயணம். படம் இயக்குறது, நடிக்கிறதோட, சினிமா சூழலை யோசிச்சேன்; புது முயற்சிகளை முன்னெடுத்தேன். `சி2ஹெச்’ அப்படித் தொடங்கப்பட்டதுதான். அப்போ, அதோட முக்கியத்துவம் யாருக்கும் புரியலை!’’ 

``அதை மறுபடியும் முன்னெடுக்கிற ஐடியா இருக்கா?’’

``அன்னைக்கே நடந்திருந்தா, எல்லா தமிழ்ப் படங்களும் அதுல இருந்திருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைச்சிருக்கும். எல்லோரும் சேர்ந்து நின்னாதானே மாற்றம் வரும். ஒரு முயற்சியைச் சொல்றதுக்கு நான் இருந்தேன். முன்னெடுக்கிறதுக்குத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தியேட்டர் அதிபர்கள்னு சினிமாவுல இருக்கிற எல்லோரும் தேவைப்பட்டாங்க. அப்போ, அந்த ஆதரவு கிடைக்கலை. இப்போ, மறுபடியும் அதைப் பண்ணனும்னா பெரும் பணம் தேவை. நெட்ஃபிளிக்ஸ், பிரைம்ல எல்லா தமிழ் படத்தையும் பார்க்க முடியாது. அப்படி எல்லா தமிழ்ப் படங்களும் கிடைக்கிற ஓர் இடமா `சி2ஹெச்’ மாறலாம். நான் தனி மனிதனா அதுக்கு ஒரு நெட்வொர்க்கை உருவாக்கிட்டேன். அதைப் பற்றி யாருமே கவலைப்படலை. நானும் கவலைப்படுறதை விட்டுட்டேன். ஏன்னா, மனரீதியாகவும் என்னை அது ரொம்பவே பாதிச்சது. திரும்ப யாராவது அணுகினா, அதற்கான வழி பிறக்கும்.’’ 

``கமல்ஹாசன் சொன்ன டி.டி.ஹெச், உங்களோட சி2ஹெச்... இப்படி சில முயற்சிகள் தமிழ் சினிமாவுல ஏன் சாத்தியம் இல்லாமப் போகுது?’’

``உள்ளூர் ஆட்டக்காரனை நம்ம மக்கள் ரசிக்க மாட்டாங்க. நம்மகிட்ட இருக்கிற பெரிய பிரச்னை இதுதான். எல்லோருக்கும் ஒரு நல்ல தலைவன் தேவை. ஆனா, எல்லோரும் நேர்மையா, தர்மமா நடந்துக்கத் தயாரா இல்லை. எல்லோருக்குள்ளும் ஏதோவொரு சுயநலம் இருக்கு. அதை விட்டுக்கொடுக்க முடியாததுனாலதானே, திரும்பத் திரும்ப பழைய கட்சிகளுக்கே ஓட்டு போட்டுக்கிட்டு இருக்கோம். தவிர, இலவசங்களுக்குப் பழகிட்ட மக்களுக்கு, சினிமாவும் இலவசமா தேவைப்படுது. அதனாலதான், தமிழ் ராக்கர்ஸ் சூப்பர் ஹிட்! ஏன் `மலையாள ராக்கர்ஸ்’, `கன்னட ராக்கர்ஸ்’, `தெலுங்கு ராக்கர்ஸ்’ எல்லாம் இல்லை... ஏன்னா, அந்த மக்களுக்கு அது தேவைப்படலை. அரசும் அந்த மக்களுக்கு இலவசங்களைப் பழக்கப்படுத்தலை. இங்கே அடிப்படை பிரச்னையே, எல்லோரும் ஒண்ணா நிற்காததுதான்.’’ 

`` `ஆட்டோகிராப்’, `அழகி’, `96... எல்லா தரப்பு ரசிகர்களும் கொண்டாடப்படும் சில படங்களுக்குப் பல வருட இடைவெளி இருக்கே?’’ 

``ரசிகனுக்கு ஒரு அயர்ச்சி வரும்போதுதான், புதுமையான படைப்புகள் கவனத்துக்கு வரும். அடிதடி, பாட்டு, ஃபைட்டு, ஐட்டம் சாங்... இப்படிப் பார்த்ததையே பார்த்துப் பார்த்து அயர்ச்சியாகி உட்காரும்போது, ரொம்ப அழகா ஆத்மார்த்தமா ஒரு படைப்பு வரும். அது ஒரு எனர்ஜியைக் கொடுக்கும். அந்த சலிப்பு வர, ரசிகனுக்கு சில காலம் தேவைப்படுது. ஊர்ல நாடகம் போடும்போது பஃபூன் வர்றப்போ இருக்கிற உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, நாடகத்தோட கடைசிக் கட்டத்துல நமக்கு ஒரு எனர்ஜி தேவைப்படும். திரும்ப பஃபூன் வரும்... எனர்ஜியைக் கொடுக்கும். அப்படித்தான் காலம் கடந்தும் நிற்கிற சினிமாக்கள். அதுக்கு ஒரு நேரம் அமையணும், அந்தப் படம் சரியா இருக்கணும்.’’ 

``சோஷியல் மீடியா வந்ததுக்குப் பிறகு, சிறிய பிரபலங்களில் இருந்து, எல்லோருமே அவங்கவங்க அரசியல் நிலைப்பாடு, கருத்துகளைப் பதிவு பண்றாங்க. நீங்க அப்படி இல்லை. ஆர்வமில்லையா, தவிர்க்கிறீங்களா?’’ 

``ஆர்வம் இல்லாம இல்லை, தவிர்க்கிறேன். எல்லோரும் அரசியலுக்கு வரணும், மாற்றத்தைக் கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. நாம உள்ளே போய் என்ன பண்ணிடப்போறோம்? அரசியல்ல ஒருவரை ஆதரிச்சா, இன்னொருத்தரைப் பகைச்சுக்க வேண்டிய சூழல் இருக்கு. நாம சொல்ற ஒரு கருத்து ஒருத்தரை சந்தோஷப்படுத்துனா, இன்னொருத்தரைப் புண்படுத்துது. எனக்கு இப்படிக் காழ்ப்பு உணர்வு இருக்கிற அரசியல் வேணாம். தவிர, எந்த அரசியல்வாதியாலும், தலைவர்களாலும் இந்த சமூகத்தை மாற்றிட முடியுமான்னா, நிச்சயம் முடியாதுனு தீர்க்கமா தெரியுது. தான் வாழ்ந்தா போதும்ங்கிற மனநிலை மக்களுக்கு இருக்கு. அப்படியான ஒரு சமூகத்தை மாற்றணும்னா, அதுக்கு ஒரு ஒரு மனிதனும் மாறணும். ஏன்னா, மக்கள் நினைச்சாதான் மாற்றம் வரும்; தலைவன் நினைச்சா, வராது. `ஆமா, இதெல்லாம் எங்க தப்பு. நாங்க மாறுவோம்’னு மக்கள் ஒப்புக்கிட்டா, நிச்சயம் ஒரு நல்ல தலைவன் வருவான். அதுக்கு எப்படியும் இன்னும் 20 ஆண்டுகள் தேவைப்படும். அதனால, நான் அரசியல் பேச விரும்பலை.’’

``நீங்க தயாரிச்ச `அப்பாவின் மீசை’ படம் என்னாச்சு?’’

``குழந்தைத் தொழிலாளர் பிரச்னையை வேற ஒரு கண்ணோட்டத்துல சொல்ற படம் அது. ரோகிணி மேடம் கதை சொன்ன விதமும், அதைப் படமாக்கியிருக்கிற விதமும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. என்னாலதான் அந்தப் படம் தாமதம். எனக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களால, அந்தப் படத்தை வெளியிட முடியலை. இப்போ, அந்த வேலைகளையும் ஆரம்பிக்கணும்.’’

`` `திருமணம்’ டைட்டிலுக்குக் கீழே... `சில திருத்தங்களுடன்’ என்ன அது?’’ 

``திருமணம் ஒரு பெரிய சேப்டர். அதுல இருக்கிற எல்லாப் பிரச்னைகளையும் ஒரு படத்துல சொல்லிட முடியாது. விவாகரத்து, கருத்து வேறுபாடு, வேற பல பிரச்னைகளைப் பற்றிதான் இதுவரை சினிமாக்கள் வந்திருக்கு. `திருமணம்’ அப்படியான பிரச்னைகளுக்கெல்லாம் என்ன காரணம்னு பேசும். பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார்... ரெண்டு குடும்பத்தைச் சுற்றிதான் படம். உமாபதி ராமையா, கவிதா, சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், நான் மற்றும் பலர் இருக்காங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கும் நடக்கிற பிரச்னைகள்தான் படத்தோட முழு வடிவம். சுகன்யா ரொம்ப நாளைக்குப் பிறகு, முழுநீள கேரக்டர் பண்ணியிருக்காங்க.’’

`` `பாரதி கண்ணம்மா’ படம் ரிலீஸ் சமயத்துல பல சர்ச்சைகளையும் பிரச்னைகளையும் சந்திச்சீங்க. சாதியை மையப்படுத்திய இப்போதைய படங்கள் குறித்து உங்க பார்வை என்ன?’’ 

`` `பாரதி கண்ணம்மா’ ரிலீஸாகும்போது என்னால பல இடங்களுக்குப் போக முடியலை. இப்போ, அதுமாதிரியான படங்களுக்குப் பெரிய போராட்டங்களோ, கிளர்ச்சியோ இல்லை. மக்கள்கிட்ட சாதி உணர்வு குறைஞ்சிருக்குனு நம்புறேன். பொருளாதார ரீதியான வெற்றி எல்லா மக்களுக்கும் கிடைக்கும்போது, அந்த மாற்றம் இன்னும் சீக்கிரம் நடக்கும். ஏன்னா, பொருளாதார ரீதியான வளர்ச்சிதான், ஒரு மனிதனோட சாதி உணர்வைத் தடுக்கும். நகரங்கள்ல பஸ்ல போறப்போ, படம் பார்க்கிறப்போ பக்கத்துல சீட்ல யார் உட்கார்ந்திருக்காங்கனு யோசிக்கிறதில்லை. பெரும்பாலான ஆணவக் கொலைகளுக்குக் காரணமா காதல் இருக்கு. காதலிக்கும்போதுதான், சாதி பெருசா முன்னாடி நிற்குது. கல்யாணம் பண்ணி வைக்கும்போதுதான், சாதியை முன்னிறுத்துறாங்க. இதெல்லாமே பொருளாதார ரீதியான மேம்பாட்டை அடையும்போது, மாறும்.’’ 

``பார்ட் டூ படங்களின் சீஸன் இது...?’’

`` `ஆட்டோகிராஃப் 2’ ஐடியா இருக்கு. அதில், இன்றைய கால இளைஞர்களின் காதலையும் என் அடையாளத்தையும் தனித்துவமா பார்க்கலாம்!’’ 


 

அடுத்த கட்டுரைக்கு