Published:Updated:

சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் என்ன ஸ்பெஷல்?! பங்கேற்க வாய்ப்பு! #IFFC

சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் என்ன ஸ்பெஷல்?! பங்கேற்க வாய்ப்பு! #IFFC
சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் என்ன ஸ்பெஷல்?! பங்கேற்க வாய்ப்பு! #IFFC

தமிழ் ஸ்டூடியோவின் `சென்னை சுயாதீன திரைப்பட விழா’ (IFFC) பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கவிருக்கிறது.

பொதுமக்கள் நிதியில் நடத்தப்படும் இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா, தமிழ் ஸ்டூடியோவின் 'சென்னை சுயாதீன திரைப்பட விழா (IFFC)'. இதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 8-ம் தேதி மாலை 5 மணிக்குப் பெரும் கலை விழாவாகத் தொடங்குகிறது. பிப்ரவரி 8, 9, 10 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறவிருக்கும் இத்திரைப்பட விழாவுக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகம் முழுக்கப் பல இன்டிபென்டென்ட் ஃபிலிம் மேக்கர்ஸ் பரவிக்கிடக்கிறார்கள். அவர்களில் பலரை இந்த விழா அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த ஆண்டும் உள்ளூரில் தொடங்கி, உலக அளவில் பல சுயாதீன இயக்குநர்களின்  படைப்புகள் திரையிடப்பட இருக்கின்றன. அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட இயக்குநர் லிஜின் ஜோசின் '81/2 இன்டர்கட்ஸ்', '10 அவுட் ஆஃப் டென்', 'ரஃபீக்கீ', 'ஏடன்' மற்றும் வங்கதேசத்தின் முதல் ஆன்தாலஜி படமான 'சின்ஸியர்லி யுவர்ஸ், தாக்கா' உட்பட 25-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.  

குறிப்பாக, அம்ஷன் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மிக முக்கியமான அவலத்தைப் பேசிய, `மனுசங்கடா' திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்படவிருக்கிறது. இயக்குநர் மிஷ்கின், எழுத்தாளர் சாரு நிவேதிதா, 'காலா', 'கபாலி' படங்களின் ஒளிப்பதிவாளர் முரளி, மலையாளத்தில் உருவாகி சர்ச்சைகளைச் சந்தித்த 'செக்ஸி துர்கா' திரைப்படத்தின் இயக்குநர் சணல் குமார் சசிதரன் உட்பட பல பிரபலங்கள் இவ்விழாவில் பங்கேற்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது தமிழ் ஸ்டூடியோ. இந்த விழா குறித்துப் பேசிய தமிழ் ஸ்டூடியோ அருண், ``இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத பல முக்கியமான திரைப்படங்களை இந்த சென்னை சுயாதீனத் திரைப்பட விழாவில் பார்க்கலாம். திரைப்படங்கள் மட்டுமன்றி, பயிற்சிப் பட்டறைகள், மாஸ்டர் க்ளாஸ், கலந்துரையாடல், முக்கியமான படைப்பாளிகளுடன் விவாதம்... என உலகின் அனைத்து திரைப்பட விழாக்களிலிருந்து, சென்னை சுயாதீனத் திரைப்பட விழா மாறுபட்டுத் தனித்து நிற்கிறது.

தவிர, இயக்குநராக முயன்றுகொண்டிருப்பவர்களிடம் இருக்கும் கதைகளுக்குத் தேவையான திரைக்கதை ஆலோசனை, நடிப்புப் பயிற்சி ஆலோசனை, அவர்கள் படத்துக்குத் தேவையான இணை தயாரிப்பாளர்... ஆகியோருடன் கலந்துரையாடும் வாய்ப்பாக `சினிமா சந்தை’ என்கிற பிரிவும் இந்த விழாவின் சிறப்பம்சமாக இருக்கிறது’’ என்கிறார். சாலிகிராமம் பிரசாத் லேப் மற்றும் கோடம்பாக்கம் MM திரையரங்கம் ஆகிய இரு இடங்களில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணமாக 250 ரூபாய் (மூன்று நாள்களுக்கும் சேர்த்து) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு சலுகைத் தொகையாக 150 ரூபாய் எனவும், பணம் இல்லை; ஆனால் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பவர்களுக்கு 100 ரூபாயும்தான் கட்டணம். தவிர, பண வசதியே இல்லை என்றால், இலவசமாகவே வந்து அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறது தமிழ் ஸ்டூடியோ. 

விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு திரையரங்கத்திலிருந்து இன்னொரு திரையரங்கத்துக்குச் செல்லத் தமிழ் ஸ்டூடியோ சார்பாக வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405. நேரடியாக முன்பதிவு செய்ய : பியூர் சினிமா புத்தக அங்காடி. எண். 7, மேற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி (வாசன் ஐ கேர் அருகில்). 

விகடன் வாசகர்களுக்கு 'சென்னை சுயாதீன திரைப்பட விழா'வுக்கான டிக்கெட்களை வெல்வதற்கு ஒரு வாய்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு