Published:Updated:

``விஜய் சேதுபதியை அரசியல்வாதியா பார்க்கலாம்!" - `துக்ளக் தர்பார்' டில்லி பிரசாத்

``விஜய் சேதுபதியை அரசியல்வாதியா பார்க்கலாம்!" - `துக்ளக் தர்பார்' டில்லி பிரசாத்
News
``விஜய் சேதுபதியை அரசியல்வாதியா பார்க்கலாம்!" - `துக்ளக் தர்பார்' டில்லி பிரசாத்

`விஜய் சேதுபதி' நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்துப் பேசுகிறார், இயக்குநர் டில்லி பிரசாத்.

"'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துல இருந்தே விஜய் சேதுபதியை எனக்குத் தெரியும். அந்தப் படத்தோட காஸ்ட்டிங் இயக்குநர் நான். அப்போ, விஜய் சேதுபதியும் ஆடிஷனுக்கு வந்தார். நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிற பொறுப்பு எங்க டீம்கிட்ட இருந்ததுனால, விஜய் சேதுபதியை அந்தக் கதைக்கு செலக்ட் பண்ணினோம். அப்போ ஆரம்பிச்ச நட்பு, இன்னைக்கு வரைக்கும் நல்லபடியா தொடருது!" - விஜய் சேதுபதிக்கும், தனக்குமான அறிமுகத்தை நினைவுகூர்ந்து உரையாடலைத் தொடர்கிறார், அறிமுக இயக்குநர் டில்லி பிரசாத். 

`96' படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இந்த விழாவில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயர், `துக்ளக்' எனவும், அறிமுக இயக்குநர் டில்லி பிரசாத் இயக்கவிருப்பதாகவும் சொன்னார்கள். இந்தப் படம் குறித்து, டில்லி பிரசாத்திடம் பேசினேன். 

``என் சொந்த ஊர், ஆந்திரா. இன்ஜினீயரிங் படிச்சுக்கிட்டு இருந்தப்போ, சினிமா மேல இருந்த ஆர்வத்தால படிப்பை விட்டுட்டு, சென்னைக்கு வந்துட்டேன். இங்கே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல எடிட்டிங் கோர்ஸ் படிச்சப்போ, இயக்குநர் பாலாஜி தரணிதரன் அண்ணா எனக்கு அறிமுகம் ஆனார். காலேஜ்ல என் சீனியர் அவர். `96' இயக்குநர் பிரேம்குமாரும் அப்படித்தான். நாங்க எல்லோரும் ஒண்ணாதான் படிச்சோம். கிட்டத்தட்ட 18 வருடமா நாங்க எல்லோரும் ஒண்ணாதான் இருக்கோம். படிப்பை முடிச்சதும், `ஜில்லுனு ஒரு காதல்' படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு பாலாஜி தரணிதரன், பிரேம் குமார் ரெண்டுபேர்கிட்டேயும் வொர்க் பண்ணினேன். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எங்க செட்ல பலருக்கும் இயக்குநர் ஆகணும்னு ஆசை. அதுல, பாலாஜி தரணிதரன், பிரேம்குமார் இயக்குநர் ஆகிட்டாங்க. நான் இப்போ அறிமுகம் ஆகுறேன். எங்க டீம்ல இருக்கிற உதவி இயக்குநர்கள் யார் கதை எழுதினாலும், எங்க கதையை முதல்ல விஜய் சேதுபதிகிட்டதான் சொல்வோம். அவரும் எங்க கதையை ஆர்வமா கேட்பார். அப்படி நான் சேதுகிட்ட சொன்ன கதைதான், `துக்ளக் தர்பார்'. படத்தோட முழுப் பெயர் இதுதான். பலரும் `துக்ளக்'னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இந்தக் கதையை மூணு வருடத்துக்கு முன்னாடியே சேதுகிட்ட சொன்னேன். அப்போ அவர் பிஸியா இருந்ததுனால, இந்தக் கதையில நடிக்க முடியலை. ஒருமுறை சேது கதையைக் கேட்டுட்டு நடிக்கிறேன்னு சொல்லிட்டா, வாக்கு தவறாம நடிச்சுக் கொடுத்திடுவார். ஆனா, அதுக்கு நாம கொஞ்சம் வெயிட் பண்ணணும். ஏன்னா, அவர் நிறைய படங்களில் பிஸி." என்றவர், `துக்ளக் தர்பார்' படத்தின் கதையைச் சொன்னார். 

``இது அரசன் கதையில்லை. ஆனா, துக்ளக் மன்னரோட கேரக்டரை படத்தோட ஹீரோவுக்கு வடிவமைச்சிருக்கோம். அதுக்குத்தான், இப்படி ஒரு டைட்டில். இந்தப் படம் அரசியல் ஃபேன்டஸி டிராமாவா உருவாகப்போகுது. ஆனா, படத்துல அரசியல் கன்டென்ட் கொஞ்சமா இருக்கும். விஜய் சேதுபதியை இந்தப் படத்துல ஒரு அரசியல்வாதியாகவும் பார்க்கலாம். இந்தப் படத்தோட கதையில நடிப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கு. சேதுவுக்காகக் காத்திருந்தது, அவருடைய நடிப்பு இந்தப் படத்துக்குத் தேவை என்பதாலதான். 

ஷூட்டிங் சென்னையில பிளான் பண்ணியிருக்கோம். ஹவுஸிங் போர்டு ஏரியாதான் கதைக்களம். இப்படி ஒரு ஏரியாவில் இருக்கிற ஒரு இளைஞனோட வாழ்க்கையில் நடக்கிற ஃபேன்டஸி தருணங்களை `துக்ளக் தர்பார்'ல பார்க்கலாம். படத்துல விஜய் சேதுபதியோட தங்கச்சி கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகம். அந்தக் கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம்னு தேடிக்கிட்டு இருக்கோம். காமெடி கேரக்டர்ல ரோபோ சங்கர் நடிக்கிறார். படத்துக்கு இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுறார். ஏற்கெனவே படத்துக்கான ஒரு வெர்ஷன் வசனத்தை நான் எழுதிட்டேன். ஆனா, காலேஜ்ல படிச்ச காலத்துல இருந்தே, பாலாஜி தரணிதரன் ஒரு விஷயத்தைக் கையாளும் விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால, அவரை எழுத வெச்சிருக்கேன். நிச்சயம் `துக்ளக் தர்பார்' ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ட்ரீட்டா இருக்கும்!" என்கிறார், டில்லி பிரசாத்.