Published:Updated:

``அருண் விஜய் செய்த வேலை, சென்சார் போர்டுல மாட்டிக்கிட்டோம்!" - மகிழ் திருமேனி

``அருண் விஜய் செய்த வேலை, சென்சார் போர்டுல மாட்டிக்கிட்டோம்!" - மகிழ் திருமேனி
``அருண் விஜய் செய்த வேலை, சென்சார் போர்டுல மாட்டிக்கிட்டோம்!" - மகிழ் திருமேனி

சென்னையில் நடைபெற்ற `தடம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, ``திறன்களை வெளிக்கொண்டு வரும் ஒரு சரியான இயக்குநர் இருந்தால், அருண் விஜய் என்ற நடிகனை அடையாளம் காட்ட முடியும்." என்றார்.

யக்குநர் மகிழ் திருமேனியுடன் நடிகர் அருண் விஜய் இணையும் இரண்டாவது படம், `தடம்'. ஏற்கெனவே இவர்கள் இருவரும் இணைந்த `தடையறத் தாக்க' படம் இருவருக்கும் முக்கியமான படம். `அந்த வரிசையில், இந்தப் படமும் அருண் விஜய்க்கு மேலும் பெயரைப் பெற்றுக்கொடுக்கும்.’ என மகிழ் திருமேனி உறுதியளிக்கிறார்.

`தடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மகிழ் திருமேனி, ``என் முதல் படம் `தடையறத் தாக்க'வுக்கு அனைத்துப் பத்திரிகைகளிலும் நல்ல முறையில் விமர்சனம் தரப்பட்டிருந்தது. ஆனந்த விகடன் விமர்சனத்தில்கூட அருண் விஜய்யின் நடிப்பைப் பாராட்டி, `இனிதான் உங்கள் இன்னிங்ஸ் தொடங்குகிறது’ என எழுதியிருந்தனர். இந்தப் படம் அருணை அதையும் தாண்டிய ஒரு இடத்துக்கு எடுத்துச் செல்லும். அவரின் திறனை வெளிக்கொண்டு வரும் சரியான இயக்குநர்கள் அடுத்தடுத்து அமைந்தால், அருணை அடையாளம் காட்ட முடியும். அவர் ஒரு டைரக்டர்ஸ் டிலைட்!" என்றார்.

மேலும், படத்தைப் பற்றிப் பேசிய மகிழ், ``இந்தப் படம் தனக்கான ஜானரைத் தாண்டி சிலவற்றைப் பேசியிருக்கும். இதன் திரைக்கதை பல படிநிலைகளைக் கொண்டது. ஆனால், எந்த இடத்திலும் பார்ப்பவர்களுக்கு எவ்வித மன அழுத்தத்தையும் தராமல் கடைசிவரை பொழுதுபோக்காக இருக்கும். `மீகாமன் பட ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில், செய்தித்தாள் ஒன்றில் நான் கடந்து வந்த ஒரு விஷயம்தான், இந்தப் படத்தின் கதைக்கான அடித்தளம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மற்றொரு உணர்வு வடிவத்தைப் பற்றி `தடம்' பேசும்" என்றார், மகிழ்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் அருண் விஜய், ``மகிழ் சொன்னதுபோல், `தடையறத் தாக்க' திரைப்படம் என் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அதற்குப் பிறகு படிப்படியாக ஒரு வளர்ச்சி இருந்தது. இந்தப் படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறேன். மகிழ் சார் கதை சொல்ல ஆரம்பிக்கும்போது, முதலில் இதில் இரட்டை வேடம் என்று எனக்கே தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாகக் கதைக்குள்ள போகும்போதுதான் தெரிந்தது.

அதேமாதிரி, இவர்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. முதல்ல கதை சொல்லும்போது க்ளைமாக்ஸை சொல்லலை. நாளைக்குப் பார்க்கலாம் அருண்னு கூலா சொல்லிட்டுப் போயிட்டார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்கலை. அப்படி ஒரு எக்சைட்மென்டை உருவாக்கிட்டார். இவருக்கு இதுவே வேலையாப் போச்சு!" எனக் கலகலத்தார்.

அருண் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட மகிழ் திருமேனி, ``இவர் செய்த ஒரு வேலையால் நாங்கள் சென்சார் போர்டு அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டோம். படத்தில் வரும் ஒரு முத்தக் காட்சியில் இவர் ஹீரோயின் உதட்டைக் கடித்துவிட்டதாகக் கூறி, தணிக்கைக் குழுவினர் அந்தக் காட்சியை நீக்கச் சொல்லிவிட்டனர். ஆனால், உண்மையில் அவர் உதட்டைக் கடித்தாரா இல்லை முத்தம் மட்டும்தான் கொடுத்தாரா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்" என நக்கலாகக் கூறினார். பத்திரிகையாளர் ஒருவர், மூன்று ஹீரோயின்களில் யார் உதட்டைக் கடித்தார் எனக் கேட்டபோத, ``அது சஸ்பென்ஸ். படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்." எனக் கூறி முடித்தார், மகிழ் திருமேனி.

முன்னதாகப் படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களும், டிரெய்லரும், ஒரு காதல் காட்சியும் திரையிடப்பட்டன. வித்யா பிரதீப், தான்யா ஹோப், ஸ்மிரித்தி என மூன்று கதாநாயகிகள் மட்டுமன்றி, யோகிபாபு, சோனியா அகர்வால் மற்றும் தணிகை நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் மூலம் அருண் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். `கில்லி', `தூள்', `தில்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத், `வேட்டைக்காரன்' படத்துக்குப் பின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு `தடம்' மூலம் மீண்டும் தமிழில் வேலை செய்கிறார். அருண் விஜய்யின் சென்டிமென்டுக்காக, அவரது முந்தைய வெற்றிப்படமான `குற்றம் 23' ரிலீஸானதுபோல், இதுவும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்திருக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு