Published:Updated:

“இளையராஜா இசையில் பாடணும்!”

“இளையராஜா இசையில் பாடணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“இளையராஜா இசையில் பாடணும்!”

“இளையராஜா இசையில் பாடணும்!”

“இளையராஜா இசையில் பாடணும்!”

“இளையராஜா இசையில் பாடணும்!”

Published:Updated:
“இளையராஜா இசையில் பாடணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“இளையராஜா இசையில் பாடணும்!”

காலை ஒரு படம், மாலை வேறொரு படம் என, படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. ஏவி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றுவரும் ‘தமிழரசன்’ படப்பிடிப்புக்கிடையே, படத்தில் வேலை பார்க்கும் பெண்களை கெளரவிக்கும் விதமாக மகளிர் தினம் கொண்டாடிக்கொண்டிருந்தவரிடம் பேசினேன்.

“நடிகரானதுக்குப் பிறகு மியூசிக் ஸ்டுடியோ பக்கம் போறது குறைஞ்சிடுச்சு போலிருக்கே?”

“உண்மையைச் சொல்லணும்னா, நேரமில்லை. இசையமைப்பை மொத்தமா விட்டாச்சு. நாலு படங்கள்ல இப்ப நடிச்சுட்டிருக்கேன். இதுல எங்க மியூசிக் பண்ணமுடியும்? ஆனாலும் பலர், ‘பாட்டு கம்போஸ் பண்றதை விட்டுடாதீங்க’ன்னு சொல்றாங்க. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இண்டிபெண்டன்ட் பாடல்களை உருவாக்கலாம்னு யோசனை. இப்ப நான் வேகமா ஓடிட்டிருக்கேன். இந்த ஓட்டம் கொஞ்சம் குறையட்டும். வருஷத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களுக்கு இசையமைக்க முயற்சி பண்ணுவேன்.”

“நாசர், பிரகாஷ் ராஜ், அர்ஜுன், சுரேஷ் கோபின்னு தொடர்ந்து அனுபவசாலிகள்கூட நடிக்கிறீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு?”

“அவங்களும் எனக்குச் சொல்லிக்கொடுக்க முயற்சி பண்றாங்க. நானும் அவங்ககிட்ட இருந்து கத்துக்க முயற்சி பண்ணுறேன். ஆனா எனக்கு என்னைப் போலதான் நடிக்க வருது. அதனால, எனக்கு ஏற்றமாதிரியான கதைகளைத்தான் தேர்வு செய்றேன். இயக்குநர்கள்கூட சில எமோஷன்களை ஒவ்வொரு விதமா என்னிடமிருந்து எதிர்பார்க்குறாங்க. ஆனா, எனக்கு என்ன வருமோ அதைத்தான் என்னால  செய்ய முடியுது. இன்னும் நிறைய கத்துக்கவேண்டியிருக்கு.”

“இளையராஜா இசையில் பாடணும்!”

“அப்படின்னா இசையமைக்கிறதைவிட நடிப்பு கஷ்டமா இருக்கா?”

“நான் சினிமாவுக்கு வரும்போது, இதைத்தான் செய்யணும், அதைச் செய்யக்கூடாதுன்னு எந்தத் திட்டமும் இல்லை. முதல்ல சவுண்ட் இன்ஜினீயரா இருந்தேன். ஒருநாள் மியூசிக் டைரக்டராகணும்னு ஆசை வந்துச்சு. அதுக்கு ட்ரை பண்ணினேன். அப்புறம் நடிகனா மாறிட்டேன். எனக்கு இதுல எதுவும் கஷ்டம் இல்லை. எல்லாமே முயற்சிகள்தான்.”

“இந்த எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு எளிதா கிடைக்குதா?”

“அது எப்படிக் கிடைக்கும்? இசையமைப்பாளர் ஆவதற்கு நான் எத்தனை கதவுகளைத் தட்டியிருப்பேன்னு எனக்கே தெரியல. ஆனா, தட்டிக்கிட்டே இருந்தா கண்டிப்பா கதவு ஒரு நாள் திறக்கும் அல்லது உடையும். அந்த நம்பிக்கை மட்டும் பலமா இருந்தது. அப்படித்தான் சசி சார் கிட்டயிருந்து ‘டிஷ்யூம்’ பட வாய்ப்பு கிடைச்சுது. அந்தப் படத்துல வர ‘நெஞ்சாங்கூட்டில்’, ‘டைலாமோ’ பாடல்களோட டியூனெல்லாம் நான் முன்பே கம்போஸ் செய்ததுதான். அதைக் கேட்டுதான் சசி சார் வாய்ப்பு கொடுத்தார்.  நடிகராவதுக்கான வாய்ப்பை நானே ஏற்படுத்திக்கிட்டேன். என் சொந்தத் தயாரிப்புலதான் முதல்ல நடிச்சேன். இவரை ஹீரோவாக்கிப் படம் எடுத்தா லாபம் வரும்னு மற்ற தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை வரும்வரை என் படங்களை நானே தயாரிக்கலாம்னு திட்டமிட்டேன். இப்ப மத்தவங்க பேனரிலும் நடிக்கத் தொடங்கியாச்சு.”

“இசையமைப்பாளரா இருந்து தயாரிப்பாளராகி இருக்கீங்க. பாடல்களுக்கான ராயல்டி பிரச்னையில், நீங்க யார் பக்கம்?”

“இரண்டு பக்கமும்தான். ஒரு கலைஞரோட க்ரியேட்டிவிட்டிக்குதான் முன்னுரிமை. ஆனா, நீங்க ஒரு வீடு கட்டுறீங்க. அதை ஒரு ஆர்க்கிடெக்ட்தான் வடிவமைக்கிறார். வீடு கட்டி முடிச்சதும், ‘இது அவரோட க்ரியேட்டிவிட்டி, அதனால வீடு அவரோடது’ன்னு சொல்ல முடியாதில்லையா, அப்படிதான் இதுவும். ராயல்டி கேட்க விருப்பம் இருந்தா அதற்கு ஏற்றமாதிரி ஒப்பந்தம் எழுதியிருக்கணும். அதுதான் சரி. ஏன்னா, தயாரிப்பாளர் என்பதும் சாதாரண வேலை கிடையாது. பணம், கணக்கு வழக்கு, வட்டி, செலவு, தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ்ன்னு ஒரு படம் தொடங்கி முடியிறதுக்குள்ள ஆயிரத்தெட்டுப் பிரச்னைகள் வரும். நடிகர், இசையமைப்பாளரா இருக்கிறதைவிட, தயாரிப்பாளரா இருக்கிறதுதான் கஷ்டம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இளையராஜா இசையில் பாடணும்!”

“இவ்வளவு பரபரப்பான ஒரு ஸ்டாரை உங்க வீட்டுல எப்படிப் பார்க்குறாங்க?”

“நான் சினிமாவுக்கு வந்த சமயத்தில் என் மனைவி பாத்திமா பெரிய ஸ்டார். சன் டி.வி தொகுப்பாளரா அவங்க பெரிய பிரபலம். இசையமைப்பாளரா என் முதல் படம் ‘டிஷ்யூம்.’ ஆனா, முதல்ல ரிலீஸானது ‘சுக்ரன்.’ அந்தப் படத்துல நான் எழுதின ‘உச்சி முதல்’ பாட்டை கேட்டுட்டுதான் எனக்கு போன் பண்ணிப் பாராட்டினாங்க. அவங்ககிட்ட அப்பதான் முதல்முறையா பேசினேன். ஒரு பெரிய ஸ்டார் பாராட்டின உணர்வு. அடுத்தநாளே என் காதலைச் சொன்னேன். அதுக்கு அடுத்தநாள் அவங்க ஓ.கே சொல்லிட்டாங்க. நாலாவது நாள் என் மனைவி அவங்கதான்னு எல்லாருக்கும் அறிமுகப்படுத்தினேன். அதனால என் சினிமாப் பயணம் தொடங்கிய நாள் முதல் இப்பவரை என்னுடன் இருக்கிற அவங்க என்னிடம் அன்பாதான் இருக்காங்க. என்னை ஸ்டாரா பார்ப்பதில்லை.”

“ ‘இளையராஜா -75’ விழாவில், ‘எனக்குத் தெரிந்த ஒரே மியூசிக் ஜானர் இளையராஜாதான்’னு சொல்லியிருந்தீங்க. ‘தமிழரசன்’ படத்தில் அவர் இசையில் நடிக்கிறீங்க. எப்படியிருக்கு?”

“நான் கர்னாடக சங்கீதமோ, வெஸ்டர்ன் மியூசிக்கோ கத்துக்கலை. எனக்குத் தெரிஞ்ச ஒரே இசை வடிவம் இளையராஜா சார் மட்டும்தான். என்னிடம் ஒரு இயக்குநர் பாடலுக்கான சூழல் சொல்லும்போது, இதேமாதிரியான சூழலுக்கு ராஜா சார் என்ன பாட்டு பண்ணியிருக்காரோ அதைத்தான் ரெபரென்ஸா எடுப்பேன். அப்படித்தான் இப்பவரை மியூசிக் பண்ணிட்டு இருக்கேன். ‘தமிழரசன்’ படத்துக்கு ராஜா சார்தான் இசையமைப்பாளர். ஆனா நான் இன்னும் அவரை நேர்ல சந்திக்கலை. இந்தப் படத்தில் பாட எனக்கு வாய்ப்பு தருவார்னு எதிர்பார்க்கிறேன். ஆனா, என் படத்துக்கு ராஜா சார் மியூசிக் பண்றார்னு சொல்றதே எனக்குத் தனிப் பெருமைதானே?”

“இளையராஜா இசையில் பாடணும்!”

“சிக்ஸ் பேக்லாம் ரெடி பண்ணியிருக்கீங்க போல?”

“‘காக்கி’ பட போஸ்டரைப்பற்றிக் கேக்குறீங்களா? அது வெறும் கிராபிக்ஸ். பாடிபில்டிங் செய்ய எங்க நேரம் இருக்கு? ஆனா, சொல்ல முடியாது, நீங்க இப்போ இதை எழுதுனீங்கனாலும், அதைப் பொய்யாக்குற மாதிரி, கூடிய சீக்கரம் சிக்ஸ் பேக்கோட வந்து நின்னாலும் நிப்பேன். எனக்கு ஒரு விஷயம் செய்ய மனநிலை வரணும். அது வர்றவரைக்கும் மந்தமாதான் இருப்பேன். ஆனா, தோணிடுச்சுன்னா களமிறங்கிடுவேன். அதனால, எப்போ அந்த மனநிலை வருதோ அப்போ ஜிம்முக்குப் போகலாம். இப்போதைக்கு ‘நோ’.”

- சந்தோஷ் மாதேவன், படம்: ப.பிரியங்கா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism