Published:Updated:

"எப்போவும் அப்பா அடிச்சா, அம்மா தடுப்பாங்க. அன்னைக்கு அப்பா தடுத்தாங்க!" - சமுத்திரக்கனி

விகடன் விமர்சனக்குழு
"எப்போவும் அப்பா அடிச்சா, அம்மா தடுப்பாங்க. அன்னைக்கு அப்பா தடுத்தாங்க!" - சமுத்திரக்கனி
"எப்போவும் அப்பா அடிச்சா, அம்மா தடுப்பாங்க. அன்னைக்கு அப்பா தடுத்தாங்க!" - சமுத்திரக்கனி

``எப்போதும் அப்பா அடிப்பார். அம்மா தடுப்பாங்க. அன்று அம்மா அடிக்க, அப்பா தடுத்தார். அப்பொழுது அப்பா சொன்னார், `உனக்கும் எனக்கும் புரியாத விஷயத்தை அவன் தேடுறான். நீ போடா!' என்றார்.'' - தனியார் கல்லூரி விழா ஒன்றில் பேசிய இயக்குநர் சமுத்திரக்கனி.

``என் அப்பா எப்படிப்பட்டவர், நான் அப்பாவாகக் கண்ட அனுபவத்தின் விளைவுதான், `அப்பா' திரைப்படம்!" என்கிறார், சமுத்திரக்கனி. மேலும், தன் திரை வாழ்விற்கு வழிவகுத்த வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் கும்பகோணம் அருகேயுள்ள தனியார் கல்லூரி விழாவொன்றில் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். 

``என் அப்பாவிற்கு சினிமாவே பிடிக்காது. அவரைப் பொறுத்தவரைக்கும் சினிமா என்றாலே தப்பு. அதனாலேயே நான் எட்டாவது படிக்கும் வரை சினிமாவே பார்த்ததில்லை. எட்டாம் வகுப்பில் பள்ளியில் இரவு வகுப்புகள் (Night Studies) ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போதுதான் என் நண்பன் முதல் முறையாக என்னை சினிமாவிற்கு அழைத்துச் செல்கிறான். அதுதான் நான் பார்த்த முதல் படம், `முதல் மரியாதை!'. அதற்குப் பிறகு ஒருநாள் படம் பார்க்கவில்லையென்றாலும் கிறுக்குப் பிடித்த மாதிரி ஆயிரும். அப்பா அடிக்காத அடியே இல்லை. விரட்டி விரட்டி அடிப்பார். ஸ்கூலுக்குச் சென்றால் முட்டிப்போட வைப்பார்கள். எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு சினிமாவிற்குப் போய்விடுவேன். காசே இல்லாத நேரமாக இருந்தாலும்கூட தியேட்டரின் வெளியே மொட்டப்பாறையில் படுத்துக்கொண்டு வசனம் கேட்பேன்.

`நான் சிகப்பு மனிதன்' படம் வெளியாகும்போது பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அப்போதெல்லாம் தியேட்டருக்கு வெளியே முறுக்கு விற்பார்கள். அதாவது, ஒரு படத்திற்கு 2, 3 இன்டர்வெல் விடுவார்கள். உள்ளே போய் முறுக்குகளை விற்று, அப்படியே படமும் பார்த்துவிடலாம். இதுபோல் செய்தும் மாட்டிக்கொண்டுள்ளேன். பத்தாவது முடிக்கும்போது, எனக்கு இதுதான் பிடிக்கும் என்று யாருக்கும் என்னால் புரியவைக்க முடியவில்லை. அப்போது ஏதோ ஒரு சக்தி என்னைச் சென்னைக்கு அழைத்துச் செல்கிறது. ஒரு வாரம் ஹோட்டல்களில் வேலை பார்த்துவிட்டு 35 ரூபாய் சம்பாதித்து ஊருக்குத் திரும்புகிறேன். 

எப்போதும் அப்பா அடிப்பார். அம்மா தடுப்பாங்க. அன்று அம்மா அடிக்க, அப்பா தடுத்தார். அப்பொழுது அப்பா சொன்னார், `உனக்கும் எனக்கும் புரியாத விஷயத்தை அவன் தேடுறான். நீ போடா!' என்றார். 12-வது முடிக்கும் முன் அப்பா இறந்துவிடுகிறார். என் மீதான மாற்றத்தை உணர்ந்தபின், ஒரு பேரிழப்பு. 12-ம் வகுப்பு முடித்தவுடன் அம்மா நகையை அடகு வைத்துக் கொடுத்த 2000 ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு சென்னைக்கு வந்தேன். சென்னையில் தனிமையிலும், வலியிலும், பசியிலும் `அப்பா இருந்திருந்தால்..' என்று ஒரு ஏக்கம் துரத்தும். அந்த ஏக்கம்தான், `அப்பா' படம் எடுப்பதற்கான காரணம்." - இப்படியாகத் தனது நினைவுகளை எமோஷனலாகப் பகிர்ந்துகொண்டார், இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி.

"நான் என் அப்பாவிடம் எதை எதிர்பார்த்தேனோ அதை நான் அப்பாவாக நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். திடீரென்று என் பையன் என்னிடம் வந்து, `ஒரு பொண்ணைப் பார்த்த உடனே ஹார்ட் ஒரு மாதிரி பண்ணுதுப்பா’ என்றான். `பேசுடா’ என்றேன். அவனுக்கு அந்தப் பொண்ணு பெயர் கூட தெரியாது. ஒரு நாள் வீட்டில் பிறந்த நாள் விழாவில் அந்தப் பெண்ணுக்கும் அழைப்பு கொடுத்து சந்திக்க வைத்தேன். இந்தச் சம்பவத்தைத்தான் `அப்பா’ படத்திலும் வைத்தேன்" என்றார். 

மேலும் தன் முதல் திரைவாய்ப்பைக் குறித்துப் பேசியவர், ``ஒவ்வொரு முறையும் நான் தடுமாறும்பொழுதெல்லாம் என்னைத் தாங்கிப்பிடித்தவர் என் குருநாதர் கே.பாலசந்தர். `என்னடா பேட்டரி போச்சா' என்பார். `ஆமாப்பா’ என்பேன். உட்கார வைத்துப் பேசுவார். தெளிவாகுவேன். திடீரென்று ஒரு நாள் அழைத்து, `நடிக்கத்தானே வந்த, வா... அதையும் நானே ஸ்டார்ட் பண்ணி வச்சிட்றேன்' என்று எனக்காக `பார்த்தாலே பரவசம்' படத்தில் ஒரு சீன் எழுதினார். `நல்ல நடிகனா வருவடா’ என்றார். அவர் விருப்பப்படி தேசிய விருது வென்றேன். அப்பொழுது அவர் இல்லை. இன்றும் வானத்தைப் பார்த்து என் அப்பாவிடமும் இன்னொரு அப்பா பாலாவிடமும் பேசிக்கொண்டுள்ளேன்’' என்றார் சமுத்திரக்கனி.

அடுத்த கட்டுரைக்கு