Published:Updated:

`நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக அல்ல; வயிற்று வங்கிகளுக்காக வேண்டும்!’  - வைரமுத்து

`நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக அல்ல; வயிற்று வங்கிகளுக்காக வேண்டும்!’  - வைரமுத்து
`நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக அல்ல; வயிற்று வங்கிகளுக்காக வேண்டும்!’  - வைரமுத்து

நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக அல்ல வயிற்று வங்கிகளுக்காகத் தயாரிக்கப்பட வேண்டும் என நிகழ்கால அரசியல் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.

`நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக அல்ல; வயிற்று வங்கிகளுக்காக வேண்டும்!’  - வைரமுத்து

தமிழ் மொழியின் மூத்த ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு ‘தமிழாற்றுப்படை’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 22ஆம் ஆளுமையாக அவ்வையார் குறித்த கட்டுரையை நேற்று சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று அரங்கேற்றினார். விழாவில் அவ்வையார் குறித்து வைரமுத்து பேசும்போது, "தமிழ் இலக்கிய நெடுங்கணக்கில் அவ்வையார் என்பவர் ஒருவர் இல்லையெனவும் ஒன்றுக்கு மேற்பட்ட சிலர் அல்லது பலர் அவ்வையார் என்ற பெயரில் இயங்கியிருக்கலாம்" என்றார். 

`நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக அல்ல; வயிற்று வங்கிகளுக்காக வேண்டும்!’  - வைரமுத்து

"ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களுக்கான ஒழுக்க விதிகளையும் ஆண்களே தீர்மானித்த காலத்தில், ஆண்களுக்கான ஒழுக்க விதிகளையும் எழுதிய பெண்ணியப் பெரும்புலவர் என்று சங்ககால அவ்வையைக் கொண்டாடலாம். நாடோ காடோ, பள்ளமோ மேடோ ஆடவர்கள் நல்வழியில் வாழ்ந்தால்தான் அந்த நிலம் நலம் பெறும் என்று சட்டம் வகுத்தவர் சங்ககால அவ்வை.

பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்தவராகக் கருதப்படும் பிற்கால அவ்வை அறம்பாடிச்சென்ற திறம்மிக்க பெருமாட்டி. சங்ககால அவ்வை பாடியது கற்றவரைச் சென்றடைந்த இலக்கியமானது. பிற்கால அவ்வையின் பாடல்களோ கல்லாதவர் வாயிலும் புழங்கிய பழமொழி போன்றது.

அவ்வையார் போன்ற அறிவு ஜீவிகளையும் கூழுக்கு அலையவிட்டதுதான் தமிழ் உலகம் செய்த தவறு. பாண்டிய மன்னனின் வீட்டுத் திருமணத்திற்கு சென்ற அவ்வையார் பந்தியில் இடம்பிடிக்க முடியாமல் பட்டினி கிடந்திருக்கிறார். அவ்வையார் காலத்திலிருந்து ஆண்ட்ராய்டு காலம் வரை நம்மால் பசியை ஒழிக்க முடியவில்லை. இன்னும் இந்தியாவில் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் படுக்கைக்குச் செல்கிறார்களாம். ஊட்டச்சத்து இல்லாமல் இந்தியாவில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு உயரத்திற்கேற்ற எடை இல்லையாம். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்குப் பிறகு ஆசியாவின் பட்டினிப் பட்டியலில் உள்ள மூன்றாம் நாடு இந்தியாதானாம். பசியை ஒழிக்க வேண்டும்; இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “ஐயமிட்டு உண்” என்று பாடினார் அவ்வையார். நமது நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக இல்லாமல் வயிற்று வங்கிகளுக்காகத் தயாரிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் பசி ஒழியும்" என்றார்.

இக்கூட்டத்துக்கு மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தகைசால் பேராசிரியர் இரா.மோகன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். கவிஞர் கபிலன் வைரமுத்து தொடக்கவுரை ஆற்றினார்