Published:Updated:

''வெப் சீரிஸ்ல நடிக்கிறேம்மா'' - 'கடைக்குட்டி சிங்கம்' தீபா

வெ.வித்யா காயத்ரி

"எல்லா நடிகைகளுக்கும் தனிப்பட்ட முறையில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். இதுவும் ஒரு வேலை. யாரையும் சட்டுன்னு தப்பா பேசிடக்கூடாது. உள்ளே போய் பார்த்தாதான் அவங்களுக்கு என்ன பிரச்னைன்னு தெரியும்."

''வெப் சீரிஸ்ல நடிக்கிறேம்மா'' - 'கடைக்குட்டி சிங்கம்' தீபா
''வெப் சீரிஸ்ல நடிக்கிறேம்மா'' - 'கடைக்குட்டி சிங்கம்' தீபா

ன்னுடைய வெள்ளந்தியான பேச்சினால் அனைவரையும் கட்டிப் போடுபவர், 'கடைக்குட்டி சிங்கம்' தீபா. இவருடைய வெகுளித்தனமான பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள்! சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கிக் கொண்டிருந்தவர் தற்போது வெப் சீரிஸிலும் மாஸ் காட்டியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

''ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன். என் நிறத்தையும். என் உடலையும் நிறைய பேர் கேலி பண்ணுவாங்க. ஆனா, அதை நான் பெருசா எடுத்துக்கிட்டது இல்லை. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் தான் என் சொந்த ஊர். மூணு வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல இருந்தப்போ நிறைய குழந்தைங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுப்பேன். எங்க ஊர் பக்கம் பீடி சுருட்டுற தொழில் நிறைய பண்ணுவாங்க. பொம்பளை புள்ளைங்களும் அந்த வேலைதான் பண்ணுங்க. அப்படி கஷ்டப்படுற புள்ளைங்களுக்கு இலவசமா டான்ஸ் சொல்லிக் கொடுப்பேன். அப்படி நான் டான்ஸ் சொல்லிக் கொடுத்த புள்ளைங்க இப்போ மியூசிக் காலேஜ்ல படிக்கிறாங்க. காலையில காலேஜூக்குப் போய்ட்டு சாயங்காலம் டான்ஸ் சொல்லிக் கொடுக்குறாங்க. அதுல கிடைக்குற பணத்தை வைச்சு தான்  அவங்க படிப்புக்கு ஃபீஸ் கட்டுறாங்க. ஏதோ என்னால முடிஞ்சது அந்தப் புள்ளைக்களுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துருக்கேன் என்கிற சந்தோஷம் போதும்மா எனக்கு!

இப்போ சென்னையிலும் கிளாஸ் எடுக்கிறேன். என்கிட்ட சிறப்புக் குழந்தை ஒரு புள்ளை பரதநாட்டியம் கத்துக்கிட்டு இருக்கா. சீக்கிரம் அவளை வெளிஉலகத்துக்கு அறிமுகப்படுத்துவேன்மா. கஷ்டப்படுற புள்ளைகளுக்கு கலையை இலவசமா சொல்லிக் கொடுக்கிறது புண்ணியம்ல!'' என்றவர் சாப்பாட்டு பிரியையாக மாறிய கதையைச் சொல்கிறார்!

''சின்ன வயசுல நான் காணாம போயிட்டேனாம். என்னை தூக்கிட்டுப் போனவக சேவு, மிக்சர்னு கொடுத்துருக்காவ. நானும் நல்லா சாப்பிட்டிருக்கேன். அந்தக் காலத்துல புள்ளைங்கள காணலைன்னா கொட்டு அடிச்சுத்தான் தேடுவாக.. அப்படி எங்க அப்பாவும் தேடிருக்கு. கடைசியா என்னை கண்டுபிடிச்சு எங்க அப்பா கூப்பிட்டிருக்கு. நான் இவுக தின்பண்டம் கொடுக்குறாகன்னு எங்க அப்பாகிட்ட போகவே இல்லையாம். உடனே எங்க அப்பா கடைக்குப் போய் பொறி உருண்டை வாங்கியரவும் ஓடியே போய் அப்பாவை அப்பிக்கிட்டேனாம். அப்படி சின்ன வயசுல இருந்தே சாப்பாடுன்னா உசுரா இருந்துருக்கேன்.

இன்னொன்னு சொன்னா சிரிப்பீக... என் அண்ணன் நீ மருந்துக்குடிச்சா இரண்டு பரோட்டா வாங்கித் தர்றேன்னு சொன்னதுக்காக மருந்து குடிச்சு ஆஸ்பத்திரியில கிடந்துருக்கேன். எங்க வூட்டுல, டாக்டருன்னு எல்லோரும் லவ் பிரச்னைன்னு நினைச்சாங்களாம்.. பரோட்டாவுக்காகன்னு சொன்னதும் அங்கேயே எல்லோரும் சிரிச்சிட்டாவ! என் பையனுக்கு ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணக் கூட்டிட்டுப் போனாங்க. என்னால தாங்கிக்கவே முடியலை. பெத்த தாய் என் மனசு எவ்வளவு துடிக்கும்னு நினைச்சுப் பாருங்க.. அப்போ அவனை ஆப்ரேஷன் தியேட்டருக்குக் கூட்டிட்டு போனதும் நான் என் வீட்டுக்காரர்கிட்ட சாப்பிடணும்னு சொன்னேன். அப்போ அங்கே நின்னுட்டு இருந்த வாட்ச்மேன் உன் புள்ளையைத் தானேம்மா கூட்டிட்டு போயிருக்காங்க.. நீ சாப்பிடணும்னு சொல்றன்னு சொன்னாரு. என் பிரச்னை எனக்குதான் தெரியும். சாப்பிட்டா தான் தைரியமா என் புள்ளையை என்னால பார்த்துக்க முடியும். அன்னைக்குச் சாப்பிட்டும் என் புள்ளையைப் பார்த்ததும் மயங்கி விழுந்துட்டேன். ஒருநாள் முழுக்க எனக்கு குளுக்கோஸ் ஏத்துனாவ! அப்போ டாக்டர் நீங்க தைரியமா இருந்தாதான் உங்க புள்ளையை பார்த்துக்க முடியும்னு சொன்னாங்க. அப்புறம்தான் என்னை நானே சமாதானம் செஞ்சுகிட்டேன். சந்தோஷோமோ. துக்கமோ எனக்கு சாப்பாடு முக்கியம்மா!''

''என் வீட்டுக்காரர் எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்றாரு. பசங்களை அவர் பார்த்துக்கிறார். அதனாலதான் என் வேலையை என்னால செய்ய முடியுது. இருபது வருசமா நான் இப்படித்தான் பேசுறேன்.. என் கூட ஆரம்பத்துல இருந்து இருக்குறவங்களுக்கு என்னைப் பற்றி தெரியும். நான் யாருக்காகவும் என்னை மாத்திக்கலை. நான் சொல்ற சம்பவங்கள் எல்லாமே என் வாழ்க்கையில நடந்த உண்மை. அதை வெளியில சொல்றப்போ எல்லோரும் சிரிக்கிறாங்க. அவ்வளவுதான்! அதனால எனக்கு இப்போலாம் வெளியில் பேசவே பயமா இருக்கு. நான் எதார்த்தமா என் மனசுக்கு தோணுறதைதான் பேசுறேன். பொய்யா திரிச்சு எதையும் பேசுறது இல்ல என்றவரிடம் வெப் சீரிஸில் நடித்த அனுபவம் குறித்துக் கேட்டோம். 

"'Awesome Machi' டீமிலிருந்து இனியன் தம்பி ஃபோன் பண்ணுச்சு. என்னுடைய இன்டர்வியூ பார்த்து அவுங்களுக்கு பிடிச்சு போயிருக்கு. அக்கா நீங்க நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. சரின்னு ஒத்துக்கிட்டேன். அங்கே எல்லோரும் வாலிப பசங்கதான் இருந்தாங்க. எல்லோரும் அக்கா, அக்கான்னு பாசமா இருந்தாவ! அங்கே நான் தான் பெரிய ஆளு. சின்னப் பசங்களோட நடிக்கும்போது அது ஒரு சந்தோசமா இருந்துச்சு. இரண்டு நாள் ஷூட்டிங் நடந்துச்சு. வெப் சீரிஸ்ல நடிக்குறது வேற மாதிரி ஃபீலிங்கா இருந்துச்சு. நிறைய பேர் இந்த வீடியோவை பார்த்துட்டு பாராட்டுனாங்க.

'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு. இப்போ நல்ல, நல்ல வாய்ப்புகள் வருது. இப்போ ஆர்யா தம்பி கூட ஒரு படம் நடிக்கிறேன். அந்தப் பட பூஜையில ஞானவேல் ராஜா தம்பி ரொம்ப அன்பா நடத்துனாங்க. என்மேல அவ்வளவு அன்பா பேசுனாங்க. பூஜையில என்னை முன்னாடி நிற்க வைச்சாங்க. கார்த்தி தம்பிக்கும், பாண்டியராஜ் சாருக்கும் ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன்! அவுகதான் என் வாழ்க்கையை மாத்துனவங்க! சமுத்திரக்கனி சார்கூட ஒரு ஷார்ட் பிலிம்ல சின்னதா ஒரு ரோல் பண்ணியிருக்கேன். அங்கே போயிருந்தப்போ என்னைப் பார்த்துட்டு சமுத்திரகனி சார் என்னைத் தேடி வந்து, 'அக்கா.. உங்க மனசுக்கு எல்லாமே நல்லாதாவே அமையும்'னு ரொம்ப அன்பா பேசிட்டு போனாங்க. எந்தத் தளமா இருந்தா என்னம்மா நல்ல வாய்ப்பு அமைஞ்சா நடிச்சிட வேண்டியது தானே!" என்றவர் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்.

நெட்ல எல்லா நடிகைகளையும் தப்பா சிலர் எழுதுறாங்கம்மா... எல்லா நடிகைகளுக்கும் தனிப்பட்ட முறையில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். இதுவும் ஒரு வேலை. யாரையும் சட்டுன்னு தப்பா பேசிடக்கூடாது. உள்ளே போய் பார்த்தாதான் அவங்களுக்கு என்ன பிரச்னைன்னு தெரியும். என்னைப் பிடிக்கும்னு சொல்ற என் தம்பிமார்களுக்கும், தங்கச்சிமார்களுக்கும் இதை ஒரு வேண்டுகோளா வைக்கிறேன். ஈஸியா யாரையும் தப்பா சொல்லிடக்கூடாதும்மா'' எனப் புன்னகைக்கிறார், தீபா.