Published:Updated:

``ரோஹித் வெமூலா, டொனால்டு ட்ரம்ப், இன்குலாப் படங்கள்; புதுச்சேரி குறும்படவிழா ஹைலைட்ஸ்!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``ரோஹித் வெமூலா, டொனால்டு ட்ரம்ப், இன்குலாப் படங்கள்; புதுச்சேரி குறும்படவிழா ஹைலைட்ஸ்!"
``ரோஹித் வெமூலா, டொனால்டு ட்ரம்ப், இன்குலாப் படங்கள்; புதுச்சேரி குறும்படவிழா ஹைலைட்ஸ்!"

புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த குறும்பட விழா சுவாரஸ்யங்கள்.

கலை காலத்திற்கேற்ப, ரசனைக்கேற்ப, சூழலுக்கேற்ப தன் வடிவத்தைத் தீர்மானித்துக்கொள்ளும். நூறாண்டுகள் கோலோச்சிய திரைப்படங்கள் பிக் ஸ்கிரீனில் போராடிக்கொண்டிருக்க, குறும்படங்கள் சில சினிமா எனும் ஹார்பரையே அசைத்துப் பார்க்கிறது. இன்னமும் சினிமா மீது காதல் கொண்டு அதன் பல்வேறு வாயில்களில் ஒன்றிலாவது நுழைந்துவிட வழி கிடைத்திடாதா என ஏங்குகிற இளைஞர் பட்டாளத்திற்கு முகவரியை ஏற்படுத்திக் கொடுப்பவை, குறும்படங்கள்தாம். பெரிய திரையில் பேச முடியாத கருத்தியல்களை, விவாதங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சியைக் குறும்படங்களும், ஆவணப்படங்களும் செய்து வருகின்றன. அதனால்தான், மாற்று சினிமாவை முன்னெடுக்கும் குறும்பட ஆவணப்பட திருவிழாக்களுக்கு எப்போதுமே இளைஞர்களிடையே வரவேற்பு அதிகம். பிப்ரவரி 1 முதல் 3 ம் தேதி வரை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆவணப்பட குறும்படவிழாவும் அத்தகைய முயற்சிகளில் ஒன்று. புதுச்சேரி பல்கலைக்கழகம், மத்திய அரசின் திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைத்த இவ்விழாவில் பல்கலைக்கழக மாணவர்களின் 9 குறும்படங்கள் சேர்த்து 41 படங்கள் திரையிடப்பட்டன.

``ரோஹித் வெமூலா, டொனால்டு ட்ரம்ப், இன்குலாப் படங்கள்; புதுச்சேரி குறும்படவிழா ஹைலைட்ஸ்!"

கவிஞர் இன்குலாப் வாழ்வைப் பேசும் `இன்குலாப் : சாகாத வானம்', சாகித்திய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் ம.இலெ.தங்கப்பாவின் வாழ்வைக் குறித்த `வானகத்தின் வாழ்வியக்கம்', எழுத்தாளர் தேனீ சீருடையான் குறித்து எடுக்கப்பட்ட `தனித்த பறவை' ஆகிய ஆவணப்படங்கள் அவர்களின் வாழ்வியலையும், அதன் வழி உருவான படைப்புகளின் வரலாற்றையும் பேசின.

`We have not come here to die' - ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா-வின் தற்கொலை பல்கலைக்கழகங்களையே மூழ்கடிக்கும் சாதிய பிரச்னையை வெளிக்கொண்டு வந்தது. அதன் தாக்கமாக போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் பல்கலைக்கழகப் பாகுபாட்டு அரசியலுக்கு எதிராகத் தங்கள் மெளனத்தைக் கலைத்துப் பேசத் தொடங்கினர். கல்வியின் குரல்வளையை நெரிக்கும் சாதியவாத, மதவாதப் பிரிவினரை கேள்வி கேட்கிறது, தீபா தன்ராஜ் இயக்கிய இந்த ஆவணப்படம். இது திரையிடப்பட்டபோது, மாணவர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.

மிருணாள் சென் வரலாற்றைப் பதிவு செய்யும் `Mrinal Sen An Era In Cinema' ஆவணப்படம், 90-களில் பிரபலமடைந்திருந்த வங்காளக் கால்பந்து வீராங்கனை Bandhana Baul பாலினச் சோதனையில் மாற்றுப் பாலினத்தவராக அடையாளம் காணப்பட்டதால் தொலைத்த கனவையும், சமூகம் தருகிற அழுத்தத்தையும் பதிவு செய்த `I am Bonnie' ஆவணப்படம், ஸ்வீடன் இயக்குநர் Ingmar Bergman-க்கும் அவருடைய நாயகி Liv Ullmann-க்கும் இடையேயான காதலை உணர்ச்சிபூர்வமாக விவரித்த `Liv & Bergman' ஆவணப்படம்... என விரிந்த படங்களின் பட்டியல், பொது சினிமாவுக்கு வெளியான மற்றொரு சினிமா உலகைப் பார்வையாளர்களுக்கு அடையாளப்படுத்தியது.

திரைப்படங்களை நேசிக்கிற மனிதர்கள் கூடுகிற திருவிழாவாக அமைந்துபோன புதுச்சேரி குறும்படத் திருவிழா குறித்து, அதில் கலந்துகொண்ட படைப்பாளிகளிடம் பேசியபோது, `இது மாதிரியான திரையிடல் விழாக்கள் உற்சாகம் அளிக்கின்றன. எந்தெந்தக் காட்சிகளுக்கு மக்கள் கைதட்டுகின்றனர், உணர்ச்சிவசப்படுகின்றனர் என்பதைக் கவனிக்க முடிந்தது. மக்களோட குறிப்பாக இளைஞர்களோட பல்ஸைத் தெரிஞ்சுக்க முடிந்தது.' என்றனர்.

``ரோஹித் வெமூலா, டொனால்டு ட்ரம்ப், இன்குலாப் படங்கள்; புதுச்சேரி குறும்படவிழா ஹைலைட்ஸ்!"

புதிய சிந்தனைகளை விரும்புகிற மீடியா துறை மாணவர்களின் படங்களைத் திரையிடும் பிளாட்பார்மாகவும் இதைப் பார்க்க முடிகிறது. `எங்களோட பிராக்டிகல் க்ளாஸ் இது' என உற்சாகமடைகின்றனர், மாணவர்கள். கந்தர்வனின் 'சவடால்', ஜெயகாந்தனின் `பழைய முகம்' ஆகிய சிறுகதைகளைக் கொண்டு இயக்கிய குறும்படங்களுக்கும் நல்ல வரவேற்பு. 

ஃபிலிம் பெஸ்டிவலின் ஹைலைட்டாக, அமெரிக்கப் படைப்பாளி மைக்கேல் மூரின், டொனால்டு ட்ரம்ப் குறித்த ஆவணப் படமான 'Fahrenheit 11/9' தன்னிலை மறந்து சிரிக்க வைத்தாலும், அமெரிக்காவின் கடினமான சூழலையும் படம் பிடித்துக் காட்டியது. 11/9 என்பது நவம்பர் மாதம் 9-ஆம் நாள் டொனல்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக அறிவிக்கப்பட்ட நாள். எல்லோரின் எதிர்பார்ப்பான ஹிலாரியை எப்படி வென்றார் ட்ரம்ப் என்பதில் தொடங்கி, பரவி வரும் துப்பாக்கிக் கலாசாரம், பிளின்ட் பகுதியில் உருவாகிய நீர் மாசுபாடு எனச் சமூக அரசியல் பொருளாதாரப் பிரச்னைகளை மையப்படுத்தி இயக்கியிருந்தார், மைக்கேல் மூர்.

சின்னச் சின்ன ஐடியா பெரிய மாற்றத்தையே உண்டாக்கிடும். சின்னச் சின்னப் படங்கள்தாம் நாளைய ஒட்டுமொத்த சினிமாவையே தீர்மானிப்பவை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு