Published:Updated:

`எனக்குக் கிடைக்கல; என் பையனுக்குக் கிடைச்சிருக்கு!'- பூரிக்கும் சென்றாயன்

`எனக்குக் கிடைக்கல; என் பையனுக்குக் கிடைச்சிருக்கு!'- பூரிக்கும் சென்றாயன்
`எனக்குக் கிடைக்கல; என் பையனுக்குக் கிடைச்சிருக்கு!'- பூரிக்கும் சென்றாயன்

`பிக்பாஸ்' மூலம் பிரபலமானவர் சென்றாயன். இவருடைய காதல் மனைவி கயல்விழி. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றாயனைச் சந்திக்கச் சென்ற கயல்விழி, தான் கர்ப்பமாக இருந்த செய்தியைக் கூறவும் சென்றாயன் துள்ளிக் குதித்து மகிழ்ந்ததை நம்மால் மறக்கமுடியாது. இந்தத் தம்பதிக்குக் கடந்த சனிக்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. பையன் பிறந்திருக்கும் மகிழ்ச்சியில் இருப்பவர்களுக்கு வாழ்த்துகள் கூற கயல்விழியைத் தொடர்பு கொண்டோம்.

``வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத அளவுக்கு ஹாப்பியா இருக்கோம். சிசேரியன் மூலமா தான் என் மகன் பிறந்திருக்கான். நான் மயக்கத்துல இருந்தேன் என் வீட்டுக்காரர் என்கிட்ட வந்து, நமக்குப் பையன் பிறந்திருக்கான்னு சொன்னதும் அப்படியே துள்ளிக் குதிச்சு கத்தணும் போல இருந்துச்சு. அவ்வளவு சந்தோஷம்!  நாலு வருஷம் இந்த சந்தோஷத்துக்காகதான் நாங்க காத்திருந்தோம்'' என்றதும் சென்றாயன் தொடர்ந்தார்.

``வார்டுக்குள்ளே அவங்களைக் கூட்டிட்டுப் போனதும் அவ்வளவு பதற்றமா இருந்துச்சு. டாக்டர் உங்களுக்குப் பையன் பிறந்திருக்கான்னு சொல்லவும் ஆனந்தக் கண்ணீர் வந்துடுச்சு. என் பையனைக் கையில் தூக்கும்போது இந்த உலகமே எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் அவன்னு தோணுச்சு. நான் பிறந்தப்போ எங்க ஊர்ல சிலருக்கு மட்டும்தான் தெரியும். என் பையன் பிறந்ததை எல்லோரும் கொண்டாடுறாங்க. அவன் ரொம்பவே அதிர்ஷ்டசாலி. தாயும், சேயும் நலமா இருக்காங்க. எல்லோருடைய பிரார்த்தனைக்கும் நன்றிகள்'' எனப் புன்னகைக்கிறார், சென்றாயன்.