சினிமா
Published:Updated:

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்

காதலில் அன்பும் ஈகோவும் ஆடும் `உள்ளே வெளியே’ ஆட்டமே, இஸ்பேட் ராஜாவும்  இதய ராணியும்!

`ராஜா’ கௌதமாக ஹரீஷ் கல்யாண். எதிலும் அவசரம் காட்டும் அடாவடிக் காதலன். தேன்மிட்டாய் பாட்டிலைத் தூக்கி அடியாளின் தலையில் எல்லாம் உடைத்து மாஸ் காட்ட முயன்றிருக்கிறார்.

`ராணி’ தாராவாக, ஷில்பா மஞ்சுநாத். எதிலும் பொறுமை காட்டும் பொறுப்பான காதலி. காதலன், காதலிக்கு இடையேயான கெமிக்கல் ரியாக்‌ஷனில் ஷில்பாவின் கண்கள், கேட்டலிஸ்ட். குரல், ஆன்டி கேட்டலிஸ்ட்!  இரண்டு ஜோக்கர்களாக, மாகாபா ஆனந்த் மற்றும் பாலசரவணன். பல இடங்களில் சிரிக்கவைக்கிறார்கள். மாகாபா குமாரு, சூப்பர் குமாரு! செட்டின் மற்ற கார்டுகளாக, பொன்வண்ணன், சுரேஷ் மற்றும் லிஸி ஆண்டனி!

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்

படத்தில் நாயகனுக்கும் நாயகிக்குமான காட்சிகளை உள்வாங்குவதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. முதல் பாதிக் காட்சிகள் ஏற்கெனவே பல படங்களில் பார்த்தது போலிருக்கின்றன. இரண்டாம் பாதிக் காட்சிகள், இந்தப் படத்திலேயே பார்த்தது போலிருக்கின்றன. ஆனால், இவ்வளவு `டார்க்’கான காதல் கதையைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. விஷுவலாக, புதுமையான அனுபவத்தைத் தருகிறது படம்.

‘ஸ்டாக்கிங்கை’ தமிழ் சினிமாக்கள் காலம் காலமாக ஹீரோயிச பிம்பமாகவே காட்டிவரும் சூழலில், அது  தவறு என்பதை ஹீரோவே சொல்லும் இடம் அழகு. 

அனிருத் குரலில் வரும் `கண்ணம்மா’ பாடல், காதலர்கள் மத்தியில் ஹிட் ஆகும்.  மற்ற பாடல்கள் ஏற்கெனவே ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் படத்திற்கு ஸ்பீடு பிரேக்கர் போடுகின்றன. படம் முழுக்க வரும் பின்னணி இசையும் ஒரு கட்டத்துக்கு மேல் இரைய ஆரம்பித்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் கவின்ராஜ் மற்றும் படத்தொகுப்பாளர் பவன் ஸ்ரீகுமார் கூட்டணியில் விஷுவலாக அள்ளுகிறது படம்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்

இயக்குநரோ, படத்தின் கதையில் பெண்களின் நியாயத்தை, அவர்களது தரப்பைப் பேசுகிறார். ஆனால், படத்திலுள்ள கதாபாத்திரங்களோ பெண் வெறுப்பு சமாசாரங்களாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இறுதியாக, இயக்குநர் சொல்ல வரும் நல்ல கருத்தும், முந்தைய காட்சிகளால் காணாமல் போகிறது. இருந்தாலும்,  இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி சொல்ல முயன்ற நல்ல மெசேஜுக்கு ரிப்ளையாக ஒரு ஹார்ட் ஸ்மைலி. படத்தின் நீளத்துக்காக ஒரு சோக ஸ்மைலி!


- விகடன் விமர்சனக் குழு