Published:Updated:

``எந்த சேனலும், இயக்குநரும் பண்ணாத முயற்சி!" - `மெட்ராஸ்' பிரம்மா

``எந்த சேனலும், இயக்குநரும் பண்ணாத முயற்சி!" - `மெட்ராஸ்' பிரம்மா
``எந்த சேனலும், இயக்குநரும் பண்ணாத முயற்சி!" - `மெட்ராஸ்' பிரம்மா

ஒரு ஆபீஸில் நடக்கக்கூடிய நிகழ்வுகளைத் தத்ரூபமாகக் காட்டியது, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான `ஆபீஸ்' சீரியல். 2013- ம் ஆண்டு முதல் 2015- ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதுகுறித்து, அந்த சீரியலின் இயக்குநர் பிரம்மா பேசியிருக்கிறார்.

ரு அலுவலகத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளைத் தத்ரூபமாகக் காட்டியது, `ஆபீஸ்' தொடர். 2013- ம் ஆண்டு முதல் 2015- ம் ஆண்டு வரை விஜய் டிவி-யில் ஒளிபரப்பான இத்தொடரின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இது குறித்தும், புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் `மெட்ராஸ்' தொடர் குறித்தும் பேசுகிறார், இயக்குநர் பிரம்மா. 

``ஆமாம். இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தை எடுக்க முன்னாடியே முடிவு செய்துவிட்டேன். ஆனால், அதற்கான நேரமும், சூழலும் அமையாமல் தள்ளிப்போனது. இதோ, ஓரிரு மாதங்களில் அதற்கான வேலைகளைத் தொடங்கவிருக்கிறேன்." என்றார்.

``இந்தத் தொடரில் பழைய முகங்கள்தானா, புதுமுகங்களா?"

``புதுமுகங்கள்தான் என் சாய்ஸ். கடந்த சீஸனில் கிராமப்புறத்திலிருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் ஒரு பெண் எதிர்கொள்ளக்கூடிய விஷயங்கள், வேலை, நட்பு, காதல், திருமணம் எனப் பல கதைகளை உள்ளடக்கி இருந்தது. தற்போது தயாராகிவரும் `ஆபீஸ் 2' மாறுபட்ட கோணங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.'' 

`` `கல்யாணமாம் கல்யாணம்' எப்படிப் போகுது?"

``வார நாள்களில் தினந்தோறும் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `கல்யாணமாம் கல்யாணம்' தொடர் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இருக்கிறது. அதை அப்படியே முடித்துவிடாமல், இரண்டாம் பாகமாகத் தொடரவிருக்கிறோம். இரட்டைக் குழந்தை பிறப்பது போல இது முடியும். அதிலிருந்துதான் சுவாரஸ்யமான கதை அடுத்த பாகத்தில் ஆரம்பிக்கிறது.'' 

``நீங்கள் ஏன் இத்தனை பெயர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள்?! உங்கள் உண்மையான பெயர்தான் என்ன?''

``என் ஒரிஜினல் பெயர், ரமண மூர்த்தி. ஏ.கே.நிதி, ராம், வெங்கட், பிரம்மா என ஒவ்வொரு தொடருக்கும், படத்திற்கும் பெயரை மாத்திக்கிட்டே இருப்பேன். மாற்றி வைத்தால் இன்னும் ரீச் கிடைக்கும் என்பது என் அபிப்ராயம். இருபது வருடமாக இந்தத் துறையில் இருக்கிறேன். பாலசந்தர் சாரிடம் பயிற்சி பெற்றவன் நான். `கண்ணெதிரே தோன்றினாள்' ரவிச்சந்தரனிடம் வேலை பார்த்திருக்கிறேன். அந்த அனுபவங்கள்தான் இப்போ வரைக்கும் எனக்குக் கை கொடுக்குது.'' 

`` `சுண்டாட்டம்' படத்திற்குப் பிறகு சினிமா எதுவும் இயக்கும் எண்ணம் வரவில்லையா?" 

``கேரம் போர்டு விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. அதில், `வட சென்னை'யில் நடித்த நரேன் கேரம் போர்ட் கிளப் ஓனராக நடித்திருப்பார். அந்தப் படம் வெளியான நேரம், இயக்குநர் வெற்றி மாறன், `எனக்கும் கேரம் போர்டை வைத்து ஒரு படம் பண்ண ஆசை. ஆனால், அதைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது' எனச் சொல்லி, கேரம் போர்டு விளையாட்டைப் பற்றி என்னிடம் நிறைய விசாரித்தார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான `வட சென்னை' படத்தைப் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கலாம் என யோசித்தால், தொடர்கள் இயக்கும், தயாரிக்கும் பொறுப்புகள் அதிகமாக இருக்கின்றன.'' 

`` `மெட்ராஸ்' புது தொடர் பற்றி?" 

``கல்லூரி, காதல், குடும்பம், நட்பு எனப் பல கோணங்களில் பல தொடர்கள் வந்துவிட்டது. ஆனால், ஒரு பகுதி மக்களின் வாழ்வியலைக் காட்டக்கூடிய தொடர்கள் இதுவரை தொலைக்காட்சி வரலாற்றில் வந்ததாகத் தெரியவில்லை. அப்படி ஒரு கதையை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை விரட்டிக்கொண்டே இருந்தது. வட சென்னை மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி காட்டும் தொடராக `மெட்ராஸ்' கூடிய விரைவில் விஜய் டிவி-யில் வெளியாகவுள்ளது. அதற்கும் நான்தான் இயக்குநர், தயாரிப்பாளர். இன்னும் இரண்டு மாதங்களில் தயாராகிவிடும். இதுவரை எந்த சேனலும், இயக்குநரும் சீரியல் மூலமாகக் கொண்டுவராத ஒரு கதையை இதன் மூலம் சொல்லப்போகிறேன்.''

`` `கனா காணும் காலங்கள்', `மெல்லத் திறந்தது கதவு' தொடர்கள் பற்றி?''

``பல படங்களின் பார்ட் 2 வருவதுபோல, சீரியல்கள் வருகின்றன. `கனா காணும் காலங்கள்' தொடராகட்டும் `ஆபீஸ்' ஆகட்டும், அதில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுமே அவர்களே எதிர்பாராத ஒரு வளர்ச்சியைப் பெற்றிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாது. ஒரு இயக்குநராக நான் பெருமைப்படும் விஷயம் இது." 

அடுத்த கட்டுரைக்கு