Published:Updated:

"செல்வராகவன் சார் கன்டிஷன், பேங்காக் திகில் சம்பவம், சாப்பாட்டுக்குப் பத்து லட்சம் பில்..." - ரகுல் ப்ரீத் சிங் ஷேரிங்ஸ்

"செல்வராகவன் சார் கன்டிஷன், பேங்காக் திகில் சம்பவம், சாப்பாட்டுக்குப் பத்து லட்சம் பில்..." - ரகுல் ப்ரீத் சிங் ஷேரிங்ஸ்
"செல்வராகவன் சார் கன்டிஷன், பேங்காக் திகில் சம்பவம், சாப்பாட்டுக்குப் பத்து லட்சம் பில்..." - ரகுல் ப்ரீத் சிங் ஷேரிங்ஸ்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பேட்டி. நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் குறித்தும், பெர்ஷனல் விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த வருடம் கிட்டத்தட்ட ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார், ரகுல் ப்ரீத் சிங். சினிமாவைத் தாண்டி ரியல் வாழ்க்கையில் டிராவல் ஃப்ரீக், ஃபிட்னெஸ் கைடு, பொது சேவகர் என்று பல்வேறு முகங்கள் இவருக்கு உண்டு. இவர் கார்த்தியுடன் சேர்ந்து நடித்து பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் திரைப்படம், `தேவ்'. தன்  சினிமா அனுபவங்களைத் தாண்டி பெர்சனல் பக்கங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

``வழக்கமா க்யூட் ஹீரோயினா நடிச்சிக்கிட்டு இருக்கிற உங்களுக்கு `தேவ்' படத்துல ஒரு சீரியஸ் ரோல்னு சொல்றாங்களே..."

``நாம வழக்கமா பார்க்குற காதல் கதையில இருந்து `தேவ்' ரொம்ப வித்தியாசமானது. ஒரு பையனுக்கும் பொண்ணுக்கும் இடையில ஏற்படுற காதலைத் தாண்டி, குடும்பம், நண்பர்கள், நாம நேசித்து செய்ய நினைக்கிற வேலைகள்... இப்படி நிறைய விஷயங்களைச் சொல்ற படம், `தேவ்'. டிராவல் இந்தப் படத்துல ரொம்ப முக்கியமான விஷயம். இதுல கார்த்தி ஒரு டிராவலர். நிறைய லொகேஷன்களுக்குப் போய் ஷூட் பண்ணதுனால, படம் பார்க்குறதுக்கு ரொம்பவே கலர்ஃபுல்லா இருக்கும். 

படத்துல எனக்கு அமெரிக்கத் தொழிலதிபர் கதாபாத்திரம். மேக்னா, யார் தயவும் இல்லாம சொந்தமா பிசினஸ் ஆரம்பிச்சு அதை இன்னும் மேம்படுத்தணும்ங்கிற குறிக்கோளோட இருக்குற பொண்ணு. மேக்னா தன்னோட அம்மாவோட பெயரைதான் தன் பெயருக்குப் பின்னாடி உபயோகிக்கிறார். ஆண் சமூகம் மேல கொஞ்சம் கோபமும் வருத்தமும் அவளுக்கு இருக்கு. மேக்னாவுக்கு 24 மணிநேரமும் வேலை, வேலை, வேலை மட்டும்தான்! ஆனா, கார்த்தியோட கதாபாத்திரம் அதுக்கு நேரெதிர். எந்தவொரு நோக்கமும் இல்லாம சும்மா டிராவல் பண்றது, மனசுக்குப் பிடிச்சதைச் செய்றதுனு ஜாலியா இருக்குற கதாபாத்திரம்!"

``ரம்யா கிருஷ்ணனோட சேர்ந்து நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?"

``இந்தப் படத்துல அவங்க என் அம்மாவா நடிக்கிறாங்க. என்மேல ரொம்ப அக்கறையா இருக்குற அம்மா, `எப்போ பார்த்தாலும் வேலை வேலைனே இருக்க, ஃப்ரெண்ட்ஸோட வெளிய போய் ஜாலியா இரு'னு சொல்வாங்க. எனக்கும் அவங்களுக்கும் செல்லச் சண்டைகள் அடிக்கடி நடக்கும். அவங்ககூட சேர்ந்து நடிக்கும்போது நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்." 

``இன்ஸ்டாகிராம்ல நிறைய இடங்களுக்கு டிராவல் பண்றது, அங்கே இருக்கிற உணவுகளைச் சாப்பிடுறதுனு நிறைய விஷயங்களை ஷேர் பண்றீங்க. நீங்க சாப்பிட்டதிலேயே காஸ்ட்லி சாப்பாடு எது?"

``ஒருநாள் லண்டன்ல இருக்கிற `மிஷேலின் ஸ்டார்' ரெஸ்டாரன்டுக்குப் போயிருந்தேன். `மிஷேலின்'ங்கிறது ஒரு ரேட்டிங் சிஸ்டம். அந்த ரேட்டிங் சிஸ்டம்ல இருக்கிற பெஸ்ட் ஹோட்டலை செலக்ட் பண்ணி என்னோட ஃப்ரெண்ட்ஸ் 7 பேர் அங்கே போயிருந்தோம். நாங்க சாப்பிட்டதுக்கு மொத்தம் பத்து லட்சம் பில். தலைக்கு 1.5 லட்சம் பணம் கட்டுனோம். இனி என் வாழ்க்கையிலேயே மிஷேலின் ஸ்டார் ரெஸ்டாரன்டுக்குப் போகக் கூடாதுனு அன்னைக்கு முடிவு பண்ணினேன். எனக்குத் தெரிஞ்சு லண்டன்ல இருக்கிற பெரிய ரெஸ்டாரன்ட்ஸ் எல்லாத்திலேயும் சாப்பிட்டிருக்கேன். லண்டன்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம். மத்த வெளிநாடுகளுக்குப் போனா `எப்போ நாம இந்தியாவுக்குப் போவோம்'னு யோசிச்சுக்கிட்டே இருப்பேன். லண்டன்ல எவ்வளவு நாள் இருக்கச் சொன்னாலும் சந்தோசமா இருப்பேன்." 

``டிராவல் பண்ணும்போது உங்களுக்கு ஏற்பட்ட திகிலான சம்பவம் எது?" 

``என்னுடைய முதல் தமிழ்ப் படமான `புத்தகம்' ஷூட்டிங்காக பேங்காக் போயிருந்தப்போ நடந்த சம்பவத்தை என்னால மறக்கவே முடியாது. நானும் என் அம்மாவும் ஷாப்பிங்காக வெளியே போயிருந்தோம். அதுதான் பேங்காக்கை நான் முதல் தடவை விசிட் பண்றேன். இங்கே ஆட்டோ மாதிரி, அங்கே `டுக் டுக்'னு ஒரு வண்டி இருக்கு. அந்த வண்டியில போகணும்னு எனக்கு ஆசை. அந்த வண்டிக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த சமயத்துல ஒருத்தர் என் பேக்கை திருடிட்டுப் போயிட்டார். அதுல பேங்காக்ல செலவழிக்க வெச்சிருந்த மொத்தக் காசும் இருந்துச்சு. தவிர, என் அடையாள அட்டை, அமெரிக்கன் க்ரீன் கார்ட் எல்லாமே போச்சு. முதல் 5 நிமிடத்துக்கு என்னோட பாஸ்போர்ட்டும் போச்சேனு வருத்தப்பட்டு அழுதுட்டு இருந்தேன். அப்புறம் ப்ரொடக்ஷன்ல இருந்து போன் பண்ணி பாஸ்போர்ட் அவங்ககிட்ட இருக்கிறதா சொன்னாங்க. பாஸ்போர்ட்டை டிக்கெட் எடுக்குறதுக்காக அவங்ககிட்ட கொடுத்தது அப்போதான் ஞாபகம் வந்துச்சு. எனக்கு மட்டுமல்ல பேங்காக்குக்கு வர்ற டூரிஸ்ட்களுக்கு இது சகஜமா நடக்குற ஒரு விஷயம்னு அதுக்கப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன்." 

``செல்வராகவனோட `என்.ஜி.கே' படத்துல நடிக்கிறீங்க. படம் எப்படி வந்திருக்கு?"

``செல்வராகவன் சார் படத்துல நடிக்கும்போது கண்ணைச் சிமிட்டக் கூடாது. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும், கண்ணைச் சிமிட்டாமதான் சொல்லணும். நான் அதிகபட்சமான ஒரு நிமிடம் வரை கண்ணைச் சிமிட்டாம நடிச்சிருக்கேன். நான் வேலை பார்த்த இயக்குநர்கள்ல செல்வராகவன் சார் ரொம்ப வித்தியாசமானவர். சினிமாவுல எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவங்ககூட பழகும்போது நம்மை ரொம்ப வசதிகரமா உணர வைக்கிறதுல சூர்யா சார் மற்றும் செல்வா சார் ரெண்டு பேருமே பெஸ்ட்!."

அடுத்த கட்டுரைக்கு