Published:Updated:

``ஆமா, எனக்குத் தமிழ் உணர்வு இருக்கு. அதை ஏன் பெருசுபடுத்துறீங்க?!" - இயக்குநர் மகிழ்திருமேனி

அருண் விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் `தடம்' படம் குறித்தும், தனது தமிழ் உணர்வு உட்பட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார், இயக்குநர் மகிழ்திருமேனி.

``ஆமா, எனக்குத் தமிழ் உணர்வு இருக்கு. அதை ஏன் பெருசுபடுத்துறீங்க?!" - இயக்குநர் மகிழ்திருமேனி
``ஆமா, எனக்குத் தமிழ் உணர்வு இருக்கு. அதை ஏன் பெருசுபடுத்துறீங்க?!" - இயக்குநர் மகிழ்திருமேனி

ஒரு படம் அதற்கான ஜானரைத் தாண்டி பல பரிணாமங்களில் இருக்கவேண்டும். அப்போதுதான் அது முழுமையான படமாக இருக்கும் என்பது இயக்குநர் மகிழ்திருமேனியின் தாரக மந்திரம் என்றே சொல்லலாம். `தடையறத் தாக்க', `மீகாமன்' என இரண்டு மாறுபட்ட படைப்புகளைத் தந்துவிட்டு, மூன்றாவதாக, அருண் விஜய் நடிப்பில் `தடம்' என்ற க்ரைம் த்ரில்லரை வெளியிடத் தயாராகிக் கொண்டிருந்தவரை சந்தித்துப் பேசினேன். 

`` `மீகாமன்' படம் முழுக்க சதுரங்க விளையாட்டு மாதிரியே திரைக்கதை இருக்கும். இந்தப் படத்தோட திரைக்கதையிலேயும் பல படிநிலைகள் இருக்கும்னு இசை வெளியீட்டு விழாவுல சொன்னீங்க...?!"

``ஆமா. `மீகாமன்' படத்தோட மொத்தக் கதையுமே ஒரு சதுரங்க ஆட்டம் மாதிரிதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதுதான் அந்தப் படத்தோட அடித்தளம். அதேபோல, `தடம்' படத்துல எல்லாமே ஒரு புதிராதான் இருக்கும், காதல் உட்பட! ஒரு புதிருக்குள்ள இன்னொரு புதிர் இருக்கும், அதுக்குள்ள இன்னொரு புதிர்னு பல லேயர்கள் இருக்கும். ஒரு குற்றம் நடக்கும் இடத்துல குற்றவாளியால விடப்படும் க்ளூ, அதைத் தொடர்ந்து போகும்போது இன்னொரு க்ளூ... இப்படித்தான் திரைக்கதை அமைச்சிருக்கேன்." 

``அப்படினா, இதை ஒரு க்ரைம் த்ரில்லர்னு சொல்லலாமா?"

``நான் எப்போவும் சொல்றதுதான்... இந்தப் படம் பல ஜானர்களை உள்ளடக்கியது. இதுல இந்தியச் சட்டத்தைப் பற்றிய சில அடிப்படைக் கூறுகளைப் பேசிருக்கோம். அதனால, இது ஒரு லீகல் த்ரில்லர். ஒரு குற்றம் நடக்குது, அதனால க்ரைம் த்ரில்லர். புதிர்கள் நிறைய இருக்கிறதால, இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். ஆனா, இதெல்லாம் தாண்டி `தடம்' படத்துல ஒரு மனிதனின் பட்டறிவு இருக்கும். அந்த இடத்துலதான், இந்தப் படம் தனக்கான எல்லைகளைத் தாண்டி பார்வையாளர்களுக்கு ஒரு நிறைவான உணர்வைக் கொடுக்கும்."

```தடையறத் தாக்க' படத்துல பட்டர்ஃபளையோட நிறம், `மீகாமன்' படத்தின் `என்னுள்ளே சென்றாய்' பாடல்... உங்க படங்களின் காதல் காட்சிகளில், காமத்துப்பால் தாக்கம் அதிகமா இருக்கே?!" 

``அது இல்லாம காதல் இருக்க முடியுமா என்ன?! ஆனா, அதை நான் வலிந்து திணிக்கிறதில்லை. அப்படியே இருந்தாலும், அது ஆபாசமா இருக்காது. `தடையறத் தாக்க' படத்தோட காதல் காட்சிகளை நிறைய ஆண்கள்தான் ரசிப்பாங்கனு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, படம் ரிலீஸானதுக்குப் பிறகு, பல பெண்கள் என்னைத் தொடர்புகொண்டு பாராட்டினாங்க. அதுதான், அந்தக் காட்சியோட வெற்றி. இந்தப் படத்திலும் அது கண்டிப்பா இருக்கும். ஏன்னா, காதலர்களையும் கடந்து ஒவ்வொரு காதலுக்கும் ஒரு கேரக்டர் இருக்கு. அந்தக் கேரக்டரைப் படமாக்கும் முயற்சிதான் இது."

``அப்படினா, நான்கு நாயகிகள் இருக்கும் இந்தப் படத்துல ரொமான்ஸுக்குப் பஞ்சம் இருக்காதுதானே?!" 

``கண்டிப்பா!. ஆனா, காதலுக்காக மட்டும் அவர்கள் வரப்போவதில்லை. நாலு பேருக்கும் படத்தோட கதையில முக்கியப் பங்கு இருக்கும். முக்கியமா, வித்யா பிரதீப் கதாபாத்திரம்தான் படத்தின் இரண்டாம் பாதியை நகர்த்தும். சோனியா அகர்வால் பாத்திரம் படத்துல கொஞ்ச நேரமே வந்தாலும், கதையோட முக்கியமான திருப்புமுனைக்கான கேரக்டரா இருக்கும். மற்ற இரண்டு நாயகிகளுக்கும் அள்ள அள்ளக் குறையாத அளவுக்குக் காதல் காட்சிகள் இருக்கு."

``உங்க உடல் மொழி, குரல், ஆடைத் தேர்வு, எல்லாமே ஒரு ஸ்டைலிஷா இருக்கே! இதுதான் உங்க படங்களையும் அழகியலோட படைக்க உதவுதா?"

``இதுக்கு நான் பதில் சொல்ல முடியாது. என்னைச் சுற்றியுள்ள நீங்க எல்லோரும்தான் சொல்லணும். நான் என் படத்துல என்னோட தனிப்பட்ட பழக்க வழக்கங்களோட தாக்கம் இருக்கணும்னு நினைக்கிறதில்லை. அந்தக் கதைக்கு என்ன தேவைனு பார்த்து அதைத்தான் சேர்ப்பேன். ஆனா, நீங்க சொல்ற அழகியல் ஒருவேளை என்னை அறியாமல் கதைக்குள்ளே வந்திடுதுனு நினைக்கிறேன்."

``பொதுவாக நிறைய சினிமா ரசிகர்கள் உங்க பெயர், உங்க படங்களோட பெயர், படத்துல இருக்கிற கேரக்டர்களோட பெயர்... அதுல இருக்கும் தமிழோட அழகை அடிக்கடி ஹைலைட் பண்ணுவாங்க. உங்க தமிழ் உணர்வைப் பற்றிச் சொல்லுங்க?!"

``எல்லோரும் என்னைத் தமிழ் உணர்வாளர்னு சொல்லும்போது எனக்கு அது பெருமைதான், இல்லைனு சொல்லலை. ஆனா, என் கேள்வி என்னனா, அத ஏன் பெருசு படுத்தணும்? இது தமிழ்நாட்டுக்கே இருக்கிற ஒரு பிரச்னை. ஒரு குஜராத்காரரைப் பார்த்து நீங்க குஜராத்தி உணர்வாளரான்னோ, பஞ்சாப்காரரைப் பார்த்து நீங்க பஞ்சாபி உணர்வாளரானோ இங்கே யாரும் கேட்கிறதில்லை. ஆனா, தமிழ்நாட்டுல மட்டும் இந்தக் கேள்வி வரும். ஒருவேளை நம்ம வேர் என்ன, நம்ம யார் அப்படீங்கிறதை மறந்து, அதை விட்டு ரொம்பத் தள்ளி வந்துட்டோமோ, அதனாலதான் இந்தக் கேள்வி வருதோனுகூட தோணும்."

``மீண்டும் மீண்டும் அருண் விஜய்கூட கூட்டணி. ஏதும் ஸ்பெஷல் காரணம் இருக்கா?"

``அருண் அடிப்படையில ஒரு இயக்குநரின் நடிகர். அவரோட திறனை வெளிக்கொண்டுவரத் தெரிந்த இயக்குநர்கள் அமைந்தால், அவர் எவ்வளோ சிறந்த நடிகர்னு தெரியும். அதுமட்டுமல்லாம, என் கதைகளுக்கு ஏற்ற உடல்மொழியும், அமைப்பும் அவரிடம் இருக்கும். அதேபோல, என்னால மிக எளிதாக ஒரு விஷயத்தைக் கேட்டு வாங்கிக்கக்கூடிய அளவுக்கு ஒரு இயல்பான நடிகர் அவர். `தடம்' படத்துக்குப் பிறகும் அவரை வைத்துப் படமாக்க ஒரு கதை எழுதிக்கிட்டு இருக்கேன்."

``இரட்டைவேடக் கதையில நிறைய படம் வந்திருக்கே! நீங்க என்ன வித்தியாசம் காட்டப்போறீங்க?"

``தமிழ் சினிமாவுல இரட்டை வேடத்தை வைத்து பல டெம்ப்ளேட் கதைகளை உருவாக்கிட்டாங்க. `பில்லா', `அபூர்வ சகோதரர்கள்' இப்படி ஒவ்வொரு படத்துக்கும் ஒரு வேறுபாடு இருக்கும். அப்படி இருக்கும்போது, நமக்கு ஒரு இரட்டைவேடக் கதை எழுதணும்னா இதுவரை சொல்லாத ஒரு புதிய கோணத்துல சொல்லணும். இல்லைனா, அதைத் தொடக்கூடாதுனு நினைச்சேன். இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. அதுல இருக்கும் ஒரு விஷயம், நாம நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். இதுவரை பார்க்காத ஒரு திரைக்கதை இதுல இருக்கும்."