Published:Updated:

``இளையராஜா குழுவில் வாசிக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகர்...." - 'எப்போதும் ராஜா' நிகழ்ச்சி ஹைலைட்ஸ்

அதியமான் ப

ஈரோட்டில் நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சுவாரஸ்யங்கள்.

``இளையராஜா குழுவில் வாசிக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகர்...." - 'எப்போதும் ராஜா' நிகழ்ச்சி ஹைலைட்ஸ்
``இளையராஜா குழுவில் வாசிக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகர்...." - 'எப்போதும் ராஜா' நிகழ்ச்சி ஹைலைட்ஸ்

``என் வயதினருக்குத் தெரியும், தமிழில் உள்ள இசைப்பிரியர்கள் வடக்கே நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பண்ணைபுரத்திலிருந்து  ஆர்மோனியத்துடன் ஒரு புயல் வந்து, `அன்னக்கிளி'யில் அடித்தது. இளையராஜாவின் இசையில் நடனம் ஆடியவர்கள், பாடலைப் பாடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவரது இசைக் கச்சேரியில் வாத்தியம் வாசிக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகன் நான்தான்!" - இவை ஈரோட்டில் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் `எப்போதும் ராஜா' நிகழ்ச்சியில் நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரன் பேசியவை.

பல கோடி மக்களின் நெஞ்சத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு குரல், பல இசையமைப்பாளர்களுக்கு எழுச்சியாக இருக்கும் ஒரு குரல், அதுதான் இளையராஜாவின் குரல். வெகு நாள்களாக ரேடியோவில், தொலைக்காட்சியில் மட்டுமே இளையராஜாவை ரசித்து வந்த ஈரோடு மாநகர மக்கள், சமீபத்தில் நடைபெற்ற `எப்போதும் ராஜா' இன்னிசை நிகழ்ச்சியில் அவரை நேரில் கண்டு இசை மயக்கத்தில் ஆழ்ந்தனர். ஈரோடு மாவட்டம் கங்காபுரத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்த இந்த இசைநிகழ்ச்சி இரவு 7 மணியளவில் ராஜாவின் `ஜனனி ஜனனி’ பாடலுடன் தொடங்கியது. தொடக்கத்திலேயே ஜனனத்தைக் கொள்ளை கொண்ட பின்பு, பாடல் முடிந்தவுடன் பேசிய இளையராஜா, ``ஒருமுறை ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்தபோது என் காலடித்தடம் படாத பட்டி தொட்டி இருக்காது. அப்படியாக உங்கள் ஊரிலும் இசை நிகழ்ச்சியை நடத்துவேன் என்று கூறினேன். அன்று உங்களிடம் கொடுத்த வாக்கை இன்று காப்பாற்றியுள்ளேன்" என்றார். விழாவின் ஹைலைட்ஸ் இதோ...

* ஈரோட்டில் முதல்முறையாக நடைபெறும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, அதுவே ஈரோட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

* மாலை தொடங்கவிருக்கும் நிகழ்விற்கு மதியம் முதலே மக்களின் கூட்டம் அரங்கை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியது. அரங்கம் நிறைந்த பின்பும் அரங்கத்தின் வெளியே இசைஞானியைக் காண்பதற்காகக் கூட்டம் அலைமோதியது.

* இரவு 7 மணியளவில் ராஜா மேடையேறியபோது கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

* ராஜாவின் `ஜனனி ஜனனி' பாடலைத் தொடர்ந்து, `நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற `ஓம் சிவோஹம்' பாடலைப் பாடினாா், ஹரிசரண். பிறகு மேடையேறினார், பாடகி சித்ரா. `சித்ரா உலகமெல்லாம் சுத்தறா' என ராஜா கிண்டலடித்தார். சித்ரா, `மாலையில் யாரோ' பாடலைப் பாடினார்.

* இவர்களைத் தொடர்ந்து மனோ, மதுபாலகிருஷ்ணன், விபாவரி, இளையராஜாவின் மகள் பவதாரணி, முகேஷ், உஷா உதூப், அனிதா ஆகியோர் இளையராஜாவின் பாடல்களைப் பாடினர்.

* மனோவும், மதுபாலகிருஷ்ணனும் இணைந்து பாடிய `காட்டுக்குயிலு மனசுக்குள்ளே' பாடல்தான், நிகழ்ச்சியின் டாப் ஸ்கோரிங்.

* நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் பாடகி சித்ராவிடம், `நீ எப்போ என்கிட்ட வந்த சித்ரா?' என்று ராஜா கேட்க, `1984-ல் வந்தேன் சார்' என்றார். தொடர்ந்து, `முதலில் எந்தப் பாட்டுமா என்கிட்ட பாடின?' என்று கேட்டார். முதலில் பாடிய `எந்த செளக்ய மனிமே' என்ற மலையாளப் பாடலைப் பாடியவர், அதற்குப் பிறகு `பூஜைக்கேற்ற பூ' பாடலையும் பாடினார். 

* `மாயா பஜார்' படத்தில் வாத்தியங்கள் ஏதுமின்றி உருவாக்கப்பட்ட ட்ராக்கை இசைக்குழு பாடியது.

* நிகழ்வு முழுவதும் ராஜாவின் டியூன்களை இசைச்சுவை குறையாமல் வாசித்த ஹங்கேரியைச் சேர்ந்த லாஸ்லோ கோவாஜின் இசைக்குழுவினர், ஒன்றரை மாதங்களுக்கு மேல் இளையராஜாவின் 150-க்கும் மேற்பட்ட பாடல்களை வாசித்துப் பயிற்சி பெற்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.

* நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரனின் மகள் மதுவந்தி பேசுகையில், ``எனது அப்பா இளையராஜா அங்கிளோட 45 வருட கால நண்பர். நான், எனது மகன் என மூன்று தலைமுறை ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரே ஒரு இசையமைப்பாளர், ராஜா அங்கிள் மட்டும்தான்" என்று கூறி, அவருக்கு மூகாம்பிகை புகைப்படத்தையும், ஏலக்காயால் செய்யப்பட்ட செங்கோலையும் பரிசாகக் கொடுத்தார். 

தனது இசையின் மூலம் ஒவ்வொருவரின் நெஞ்சங்களையும் ஆண்டுகொண்டிருக்கும் ராஜா, அப்போதும் இப்போதும் எப்போதும் ராஜாதான்!