Published:Updated:

``இப்படி நடக்கும்னு சத்தியமா தெரியாது..!’’ - `பொண்ணு வேணும்' போஸ்டர் குறித்து விஜய் சேதுபதி

பெண்களை இழிவுபடுத்திய சர்ச்சைக்குரிய போஸ்டர் குறித்து விஜய் சேதுபதி விளக்கம்

``இப்படி நடக்கும்னு சத்தியமா தெரியாது..!’’ - `பொண்ணு வேணும்' போஸ்டர் குறித்து விஜய் சேதுபதி
``இப்படி நடக்கும்னு சத்தியமா தெரியாது..!’’ - `பொண்ணு வேணும்' போஸ்டர் குறித்து விஜய் சேதுபதி

சாதாரண வார்த்தைகளாகவே இருந்தாலும், சில வாக்கியங்களைக் காலப்போக்கில் அர்த்தம் மாற்றி அபத்தமாக்கிவிடுகிறோம். யார் இந்த வேலையைச் செய்வது என ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பது விரயம். அப்படியான வாக்கியங்களைக் குறைந்தபட்சம் யாரும் உச்சரிக்காமல் இருத்தலே போதுமானது. ஆனால், `நெகட்டிவ் பப்ளிசிட்டி' என்கிற ஒரு வாதத்தை வைத்துக்கொண்டு சிலர் செய்கிற செயல், பலரையும் முகம் சுளிக்கவைக்கிறது. காதலர் தினமான இன்று, காலை கண்விழிக்கிறபோதே சென்னை இப்படியொரு முகச் சுளிப்புடனேயே கண் விழித்தது.

தயாரிப்பில் இருக்கிற ஒரு படத்தின் `ஃபர்ஸ்ட் லுக்'கிற்கான கவன ஈர்ப்பு போஸ்டர் அது. அச்சிட்ட அச்சகம்குறித்த விவரம் எதுவும் அதில் இல்லை. `போஸ்டரை போலீஸாரே கிழிக்கத் தொடங்குகிறார்கள்' எனத் தெரியவந்ததும், `11 மணிக்கு படத்தின் `ஃபர்ஸ்ட் லுக்'கை விஜய் சேதுபதி வெளியிடுவார்' என அவசரமாக படத்தின் பெயரை வெளியிட்டது படக்குழு. படத்தின் பெயர், `கடல போட ஒரு பொண்ணு வேணும்'.

எந்த வார்த்தையைத் தூக்கிவிட்டு அப்படியொரு போஸ்டரை வெளியிட்டிருப்பார்கள் என யாருக்கும் விளக்கத் தேவையில்லை. படத்தின் இயக்குநர் புதுமுகமாக இருக்கட்டும்; தயாரிப்பாளர் புதுமுகமாக இருக்கட்டும்; நடிகர் நடிகைகள் அனைவருமேகூட புதியவர்களாக இருக்கட்டும். ஆனால், மொத்த மக்களையும் ஒரு நிமிடம் நிறுத்தி முகம் சுளிக்க வைப்பதன்மூலம் இவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள்?

`போஸ்டர் ஒட்டும்போது, அதில் அச்சகத்தின் விவரம் இருக்க வேண்டும்' என்பது சட்டம். `கம்ப்யூட்டரில் ஒரு பிரின்ட் அவுட்டை எடுத்து பெரிய போஸ்டராக்கி ஒட்டி, பெண்கள் மனதைப் புண்ணாக்கி இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பெண்கள் பலரும் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். குறிப்பாக, `விஜய் சேதுபதி பெயர் இதில் அடிபடலாமா' எனக் கேட்கிறார்கள்.

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஆனந்தராஜைத் தொடர்புகொண்டோம்.

``படம் ரிலீஸாகிறதுக்கு முன்னாடி, அதப்பத்தி மக்களைப் பேசவைக்க, தயாரிப்பு தரப்புல செஞ்ச ஒரு சிறு முயற்சி எதிர்வினையை உண்டாக்கி, பலரையும் வருத்தப்பட வச்சிடுச்சு. உண்மையிலேயே வருத்தமா இருக்கு. மக்கள்கிட்ட இதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்' என்றார்.

விஜய் சேதுபதியிடம் பேசினோம்.

``அந்த டைரக்டர் எங்கூட `பெண்' சீரியல்ல வொர்க் பண்ணின பையன். ரெண்டு படங்கள் பூஜை போட்டான்; ரிலீஸாகலை. மூணாவது இந்தப் படத்தைத் தொடங்கியிருக்கிறதா சொல்லி, `அண்ணே, ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ண முடியுமா'ன்னு கேட்டான். `நல்லா வரட்டுமே'ன்னு நினைச்சுப் பண்ணினேன். ஆனா, அப்படியொரு போஸ்டர் ஒட்டப்படும்னு எனக்குத் தெரியாது. அவனைக் கூப்பிட்டுத் திட்டினேன். இனி, ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுறதையே நிறுத்திடலாமான்னும் தோணுது. சிலர் வியாபாரத்துக்காகச் செய்கிற வேலை, எத்தனையோ பேரை புண்படுத்தறது உண்மையிலேயே வருத்தப்படவேண்டிய விஷயம். இப்படிப்பட்ட வேலைகளைச் செய்கிறவர்கள் இருந்துட்டேதான் இருக்காங்க. நாளைக்கும் இருப்பாங்க’' என்கிறார் வருத்தத்துடன்.