Published:Updated:

கெளதம் மேனன் முதல் ஹரி வரை... லவ் ஸ்பெஷல் வசனங்கள்!

கெளதம் மேனன் முதல் ஹரி வரை... லவ் ஸ்பெஷல் வசனங்கள்!
கெளதம் மேனன் முதல் ஹரி வரை... லவ் ஸ்பெஷல் வசனங்கள்!

கெளதம் மேனன் முதல் ஹரி வரை... லவ் ஸ்பெஷல் வசனங்கள்!

``மதம்ங்கிறது மனுஷங்ககிட்ட மட்டும்தான் இருக்கு... ஆனா காதல்ங்கிறது காக்கா குருவிகிட்ட கூட இருக்கு" - `பூவே உனக்காக' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் இந்த வசனத்தைப் போன்றதுதான் காதல். அது அனைத்து உயிர்களுக்குமான பொது உணர்வு.

இப்படிப்பட்ட ஆழமான காதல் வசனங்கள் பேசாத நடிகர் என்று தமிழ் சினிமாவில் ஒருவர் கூட இல்லை என்றே சொல்லலாம். ``எழுதுங்கள் என் கல்லறையில், அவள் இரக்கம் இல்லாதவள் என்று", என `வசந்த மாளிகை'யில் சிவாஜி கணேசன் பேசிய காதல் தோல்வி வசனம் முதல், ``உன் கூடவே இருக்கணும் போல இருக்கு", என கண்களை மூடிக்கொண்டு `பரியேறும் பெருமாள்' ஜோவின் நட்பா, காதலா என விளக்கப்படாத உணர்வு வரை, கோலிவுட்டில் இங்கே பல வகை எமோஷனல் வசனங்களுக்குப் பஞ்சமில்லை.

லவ் ப்ரப்போசல் என்றால், பெரும்பான்மையான சினிமா ரசிகர்களுக்கு முதல் நினைவுக்கு வரும் வசனம், ``நான் உன்ன விரும்பல... உன் மேல ஆசப்படல... நீ அழகா இருக்கேனு நினைக்கல... ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு". `அலைபாயுதே’ படத்தில் மெதுவாகக் கிளம்பத் தொடங்கும் மின் தொடர் வண்டியுடன் நடந்துகொண்டே மாதவன் ஷாலினியிடம் சொல்லும் இந்தப் ப்ரபோசலைக் கேட்டவுடன் அந்த எலக்ட்ரிக் ட்ரைனில் பாய்வதைப்போல உடலெங்கும் மின்சாரம் பாய்வதை உணரும் 90ஸ் கிட்ஸ்கள் இன்றுவரை ஏராளம்.

அந்த வகையில் இயக்குநர் கெளதம் மேனனை காதல் ப்ரப்போசல் எக்ஸ்பர்ட் என்றே சொல்லலாம். காரணம், `விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற காதல் படம் எடுக்கும்போது, ``இந்த உலகத்துல இருக்குற எல்லாப் பொண்ணுங்களையும் தங்கச்சியா ஏத்துக்குறேன், உன்னத் தவர" என்று கார்த்திக்கை, ஜெஸ்ஸியிடம் காதல் சொல்ல வைக்கும் அதே கெளதம்தான், `வேட்டையாடு விளையாடு’ போன்ற ஆக்‌ஷன் படத்தில் கூட, ``டூ மினிட்ஸ்லயே சொல்லிருப்பேன்" என, முரட்டு ஐ.பி.எஸ் ராகவனையும் ப்ரப்போஸ் பண்ண வைத்தார். காதலைப் பொறுத்தவரை கெளதமுக்குப் பாரபட்சமே இல்லை.

ஆண்களின் ப்ரப்போசல்கள் மட்டுமே பிரபலமாகிக் கொண்டிருந்த காலத்தில், ``ரொம்ப நாளாவே. உனக்கு 17, எனக்கு 15. அப்போதில இருந்து. எனக்கு 8 வயசு இருக்கும்போது நான் உன்ன முதல்ல பாத்தேன். அன்னைல இருந்துகூட இருக்கலாம். ஐ ஹாவ் ஆல்வேஸ் பீன் இன் லவ் வித் யூ," எனத் தன் கதாநாயகியையும் `வாரணம் ஆயிரம்' படத்தில் காதல் சொல்ல வைத்தார். `வாரணம் ஆயிரம்' படம்தான் அநேகமாக அதிகமான ப்ரபோசல் காட்சிகள் இடம்பெற்ற படமாக இருக்கக்கூடும். ``ஹாய் மாலினி... ஐ யம் கிருஷ்ணன்" என ஆண்களின் ப்ரப்போசலுக்கு ஒரு புது டெம்ப்ளேட்டையே உருவாக்கிக் கொடுத்த படம் அது.

ஒரு புறம் சூர்யா இப்படி நகரத்துக் காதலை, மென்மையான முறையில் சொல்லிக் கொண்டிருக்கையில், அதற்குச் சற்றும் குறையாத உணர்வுகளுடன், ``இப்போலாம் ரேடியோல வெறும் லவ் பாட்டாதான் கேக்கத் தோணுது" என ஒரு கிராமத்துப் பொட்டல் காட்டுக்கு நடுவில் நின்றுகொண்டு, கார்த்தி `பருத்திவீரன்’ படத்தில் தன் காதலை வெளிப்படுத்துவார். அந்தப் படத்தில், அவர் கதாபாத்திரம் அடவாடித்தனங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றதுபோல், ``ஃபுல்லடிச்சும் போதையில்லை, புல்லட் பீரடிச்சும் கிக்கு இல்லை. கள்ளுக் குடிச்சும் தூக்கமில்லை. கண்ணமூடுனா கனவுல நீதானே" என்ற காதல் கவிதையும் அந்த ப்ரபோசல் காட்சியில் சேர்க்கப்பட்டிருக்கும்.

கிராமத்துப் பின்னணியில் காதலைச் சொன்ன பெண்களும் தமிழ் சினிமாவில் உண்டு. ``டேய் அழுக்கா.. நீ என் உசுருல கலந்துட்ட டா," என `காதல்' படத்தில் ஐஸ்வர்யா பேசிய வசனம்தான் இறுதிக்காட்சியில் முருகனை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உலகை மறக்கடித்து அலையவிட்டது. `பூவே உனக்காக' விஜய் சொன்னது போல் காக்கா, குருவி, மற்றும் முருகனிடம் இருந்த காதலை, இந்த முறை சாதி சவப்பெட்டிக்குள் ஏற்றியது.

கதாபாத்திரங்களின் வடிவமைப்புக்கு ஏற்றவாறு காதலை வெளிப்படுத்தும் முறைகளையும் தமிழ் இயக்குநர்கள் வசனங்களாக்கி இருக்கின்றனர். உதாரணத்துக்கு, `கயல்' படத்தில், கயலைப் பார்த்து, ``அவ கண்ணப்பாத்து பேசப் பேச உள்ளாற இடியும் மின்னலுமா அடிச்சுப் பிரிச்சு மேஞ்சுட்டுப் போயிடுச்சு", எனக் கதாநாயகன் பேசும் வசனத்தைச் சொல்லலாம். ஆண்டின் பெரும் பகுதியை, ஊர் சுற்றி இயற்கையை ரசித்து வாழும் ஒருவனுக்குத் தன் காதலியும் இயற்கையாகவே தெரிகிறாள்.

இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த காதல் படங்களில் ஒன்று எனப் போற்றப்படும் `96’ல் விஜய் சேதுபதியின், ``உன்ன எங்க விட்டேனோ... அங்கயேதான் நிக்குறேன்" என்ற வசனமும் ராம் கதாபாத்திரத்தை விவரிக்கும் வசனமாகத்தான் இருக்கும். படத்தின் தொடக்கத்தில் காலத்தை உரையவைக்கும் வல்லமை கொண்டது புகைப்படக்கலை எனச் சொல்லும் போட்டோகிராபர் ராமின் காதலும், ஜானு அவனைவிட்டுச் சென்றதுடன் உறைந்துவிட்டது என்பதை உணர்த்தும் வசனம் அது.

மறுபுறம், சிவகார்த்திகேயன், ``உன்ன கண்டுபுடிக்கிறதுக்கே 27 வருஷமாயிடுச்சு. இதுக்குமேல என்னால வெயிட் பண்ணமுடியாது. சோ டக்குனு சொல்றேன் நான் உன்ன லவ் பண்றேன்," என `ரெமோ’வில் சொல்லும் காதல் மற்றொரு வகை. திரைத்துறையில் பெரும் நடிகனாக வேண்டும் என ஆசைப்படும் ஒருவன் சினிமாட்டிகாக லவ் ப்ரப்போஸ் செய்யும் காட்சியில் இடம்பெறும் சினிமாத்தனமான வசனம் அவை.

காதலைப் பற்றி எத்தனை பேர் எத்தனை வசனம் பேசினாலும், தனக்கான ஒரு தனி பாணியை வைத்திருக்கும் நடிகர் சிம்பு. ``இந்த உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணுனேன்" என மென்மையாகச் சொல்வதாக இருந்தாலும் சரி, ``அடுப்புனு பொறந்துட்டா நெருப்போட வாழ்ந்துதான் ஆகணும். காதல்னு வந்துட்டா எதிர்ப்ப சந்திச்சுதான் ஆகணும்," என உக்கிரமாகச் சொல்வதாக இருந்தாலும் சரி, சிம்புவுக்கு நிகர் சிம்புதான்.

நடிகர்களில் சிம்பு எப்படியோ, இயக்குநர்களில் கதிர். காதல் படங்கள் ஸ்பெஷலிஸ்ட்டான இவர், சொன்ன காதல், சொல்லாத காதல் என எல்லா வகைக் காதலையும் பேசியிருக்கிறார். ``சில பேரு பிறக்கும்போது சாதாரணமாப் பிறந்தாலும், தன் லட்சியத்துக்காக உயிரைவிட்டு, தன் வாழ்க்கைய அர்த்தமுள்ளதா ஆக்கிக்கிறாங்க. காதல்... அவனோட லட்சியம். அதுக்காக அவன் உயிர விட்டிருக்கான்", எனக் காதல் தோல்வியினால் மேற்கொள்ளப்படும் தற்கொலை முயற்சிகளுக்கு ஒரு விபரீத விளக்கம் கொடுத்தவர் கதிர். `காதலர் தினம்' படத்தின் தொடக்கத்தில் ரோஜா கேரக்டர் பேசும் இந்த வசனம்தான் க்ளைமாக்ஸில் அவள் தற்கொலை செய்யப்போகிறாள் என்பதற்கான ஒரு க்ளூவாக இருக்கும்.

இயக்குநர்கள், நடிகர்கள் வரிசையில், ஆட் மேன் அவுட்டாக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. `ஜோடி’ திரைப்படத்தின் ஒரு காட்சியில், ``காதல் உடல் சம்பந்தப்பட்டதா? உள்ளம் சம்பந்தப்பட்டதா?" என அவரிடம் கேட்கப்படும் கேள்விக்கு, ``உள்ளம் மட்டுமே காதலென்றால் நீ காதலிக்க ஒரு நாய்க்குட்டி போதும். உடல் மட்டுமே காதலென்றால், நீ காதலிக்க ஒரு விலைமகள் போதும். உடலும் உள்ளமும் எந்தப் புள்ளியில் சந்தித்துப் பூப்பூக்கிறதோ, அந்தப் புள்ளிதான் காதல்," எனக் காதலுக்கு விளக்கமளித்திருப்பார்.

காதலுக்குத் தரப்படும் விளக்கங்கள் கூட இங்கே பல உள்ளன. ``நெஞ்சுல வச்சுக்கிட்டு நெனப்புல வாழணும்", அதுதான் காதல் என பரபரப்பான படங்களை இயக்கும் ஹரிகூட காதலுக்கு அழகான ஒரு விளக்கத்தைச் `சிங்கம்-2’வில் கொடுத்திருப்பார்.

இப்படிக் காதலை வர்ணிக்கும் வசனங்களைப்போல் காதலியை வர்ணிக்கும் வசனங்களும் சில படங்களில் கவிதைகளாக இருந்திருக்கின்றன. `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில், தபுவின் அழகை, ``உங்க மெளனத்துல கவிதை இருக்கு, புன்னகைல ஓவியம் இருக்கு, அமைதியில பாட்டிருக்கு, அதுதான் உங்களுக்கு அழகே," எனக் கூறும் காட்சியில் சிலிர்க்காத காதலர்கள் குறைவுதான். இன்னும் கொஞ்சம் பொயட்டிக்காக, ``அம்மா இந்த உலக்கத்துலையே நீதான் அழகுனு நெனச்சுக்கிட்டு இருந்தேன். உன்ன மிஞ்ச ஒருத்தி வந்துட்டாம்மா," என `வாரணம் ஆயிரம்’ சூர்யா சொல்லும் வசனமும் ஓர் உதாரணம்.

சாதி, மதம் கடந்து மனிதனை இணைக்கும் காதலுக்கு, சினிமா ஒரு தனி இடத்தை எப்போதுமே வைத்திருக்கிறது. ``காதல்ங்கிறது செடிமாதிரி. ஒரு பூ உதிர்ந்தா இன்னொரு பூ பூக்கிறதில்ல?" என `பூவே உனக்காக’ படத்தில் கேட்கப்படும் கேள்விக்குக் கூட, ``வாஸ்தவம் தாங்க. ஆனா உதிர்ந்த பூவ மறுபடியும் எடுத்து ஒட்டவைங்க பாக்கலாம்... முடியாது. அது மாதிரிதாங்க காதலும். சில பேருக்கு அது செடி மாதிரி.. ஒண்ணு போச்சுனா இன்னொண்ணு. சில பேருக்கு அது பூ மாதிரி. ஒரு தடவ பூத்து உதிர்ந்ததுனா அவ்வளோதாங்க. மறுபடியும் எடுத்து ஒட்டவைக்க முடியாது."

ஒருவரை நினைத்தே வாழ்க்கையைக் கடத்தி காதலைப் பூவாகப் பார்க்கும் ராம்களுக்கும் சரி, இல்லை ஒரு முறை உதிர்ந்தால் மற்றொரு பூ பூக்கும் என நம்பும் ஐ.பி.எஸ் ராகவன்களுக்கும் சரி, காதலும், தமிழ் சினிமாவும் அள்ள அள்ளக் குறையாத வசனங்களைப் பதிவுபண்ணியே வைத்துள்ளன.

உங்களுக்குப் பிடித்த தமிழ் சினிமாவின் காதல் வசனங்களை இங்கே பதிவு செய்யலாமே!

அடுத்த கட்டுரைக்கு