Published:Updated:

"இளையராஜா 75 பிரச்னைகள், நயன்தாரா - விக்னேஷ் லவ், வடிவேலுவுடன் புதுப்படம்..." - பார்த்திபன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"இளையராஜா 75 பிரச்னைகள், நயன்தாரா - விக்னேஷ் லவ், வடிவேலுவுடன் புதுப்படம்..." - பார்த்திபன்
"இளையராஜா 75 பிரச்னைகள், நயன்தாரா - விக்னேஷ் லவ், வடிவேலுவுடன் புதுப்படம்..." - பார்த்திபன்

நடிக்கும் படங்கள், சினிமா அனுபவங்கள், இளையராஜா இசை நிகழ்ச்சி, தயாரிப்பாளர் சங்கம்... எனப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.

``ராஜா சார் பொதுவெளியில் நடிக்கிறதுக்கு அவர் ஒண்ணும் பார்த்திபன் கிடையாது. பார்த்திபன் படு கிரிமினல். ரெண்டு கேமரா இருந்தாக்கூட அதுக்கு ஏத்த மாதிரி அவன் மாத்தி மாத்திப் பேசிக்குவான். ஆனா, ராஜா சார் அப்படி நடிக்கமாட்டார். முதல்ல அவர் யாரையும் மதிக்கணும்ங்கிற அவசியம் கிடையாது. ஏன்னா, அவருடைய சாதனைகள் அப்படிப்பட்டது. மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத்துல ஏகப்பட்ட குளறுபடிகள், பிரச்னைகள். எனக்கு மானபங்கம் ஏற்படுற இடத்துல நான் இருக்கமாட்டேன். எனக்கு ஒரு விஷயம் சரினு படலைனா, அதை யார் சொன்னாலும் செய்யமாட்டேன். அப்படி ஒருதடவை பாரதிராஜா சார் கேட்டே அவர் படத்துக்கு வசனம் எழுதாத நான், தயாரிப்பாளர் சங்கம் சார்பா நடத்துற ஈவென்ட்ல ரமணாங்கிற ஒருத்தர் சொல்றதையெல்லாம் ஏன் கேட்கணும்?" - பல பிரச்னைகள் குறித்துப் பேச ஆரம்பிக்கிறார், பார்த்திபன். 

`` `96' வெற்றிவிழா மேடையில நீங்க விஜய் சேதுபதி - த்ரிஷா ரெண்டுபேரையும் மேடையேத்தி கட்டிப்பிடிக்க வெச்சது வைரல். கிடைக்கிற ஒவ்வொரு மேடையிலும் தனித்துவமா ஏதாவது பண்றீங்களே... எப்படி?"

``வயசாக வயசாக நம்ம கற்பனைத் திறன் குறையும்னு சொல்வாங்க. பண்ண சாதனைகள் போதும்னு நினைப்போம். உண்மையைச் சொல்லணும்னா, நான் இன்னும் அவ்வளவு சாதிக்கலை. எனக்கு சாதிக்கிறதுக்கு நிறைய நேரமும், எனர்ஜியும் வேணும். அதனால, கிடைக்கிற மேடைகளை என்னை நான் அடையாளப்படுத்திக்கிற இடமாப் பார்க்கிறேன். `96' மேடையிலகூட நான் கடைசியாதான் பேசினேன். எனக்கு முன்னாடி பேசிய சேரன் இந்த விஷயத்தைப் பண்ணியிருந்தா, எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்காது. எப்போவுமே மேடையில கடைசியா பேசுறதுல ஒரு சிக்கல் இருக்கு. நமக்குத் தோணுறதை நமக்கு முன்னாடியே சிலர் பேசிடுவாங்க. நான் பேசுறப்போ, அதைமீறி சுவாரஸ்யம் இருக்கணும்னு நினைப்பேன்.  

`கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தை `A movie without a story'னு சொல்லியிருந்தேன். இது ஒரு `கதையில்லாத படம்'னு சொல்றதுக்கு தைரியம் வேணும். அப்போ, அப்படியொரு படத்தை எடுக்க நாம மெனக்கெடணும். எனக்கு ஒரு தோல்வி ஏற்பட்டாலும் அடுத்த முறை எழுந்திருக்கும்போது, இன்னும் இரண்டு மடங்கு பலத்தோட எழுணும்னு நினைப்பேன். கிடைக்கிற தோல்விகளை என் திறமைக்குக் கிடைத்ததுனு எடுத்துக்கக்கூடாது. அந்த நேரத்துல மக்கள் அதை ரசிக்கலை; அவ்வளவுதான். நான் எனக்கான வேலைகளை சரியாச் செய்றேன். அது என் படமாக இருந்தாலும் சரி, ராஜா 75 நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி!" 

`` `ஆயிரத்தில் ஒருவன்' மூலமா ஒரு ராஜா இப்படி இருக்கணும்னு உங்களைப் பார்த்து பிரமிச்சுப் போனவங்க ஏராளம். இந்தப் படத்தோட பார்ட் 2 வருமா?" 

``செல்வராகவனோட அசாத்திய தைரியத்துக்குத்தான் நன்றி சொல்லணும். ஒரு கற்பனைக் கதையில அவர் செய்த மேஜிக் பெரிய விஷயம். `பாகுபலி' படம் வந்ததுக்குப் பிறகு, `ஆயிரத்தில் ஒருவன்' பற்றி நான் இன்னும் அதிகமாப் பேசுறேன். ட்விட்டரில் இந்தப் படம் பற்றிப் பேசுனா, பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் அதிகமா இருக்கு. என்னை அடையாளப்படுத்திக்கிற முக்கியமான படங்கள்ல இது ஒண்ணு. பார்ட் 2 வரணும்னு எல்லோருக்கும்போல, எனக்கும் ஆசைதான்." 

`` `நானும் ரெளடிதான்' படத்திலும் உங்க நடிப்பு ரசனையா இருக்கும். மற்ற இயக்குநர்களிடம் நடிகரா வேலை பார்க்கும்போது, அந்தச் சூழல் எப்படி இருக்கும்?"  

``சினிமாவுல நானும் ஒரு இயக்குநர். அதனால, நடிக்கிறப்போ என் கருத்துகளையும் கேட்டுப்பாங்க. நான் சொல்றதை ஏத்துக்கிறதும், ஏத்துக்காமப் போறதும் அவங்கவங்க விருப்பம். `நானும் ரெளடிதான்'ல என் கருத்துகள் எவ்வளவு இருந்தது, மத்த  நடிகர்களோட கருத்துகள் எவ்வளவு இருந்ததுனு படம் பார்க்கும்போது தெரியாது. ஒட்டுமொத்தமா தியேட்டர்ல படத்தைப் பார்க்கும்போது எல்லோரும் என்ஜாய் பண்ணோம். அதுதான் இந்தப் படத்தோட வெற்றி. நல்ல விஷயங்களை ஏத்துக்கிற இயக்குநர் விக்னேஷ் சிவன். நல்ல குணம் இருக்கிறதுனாலதான், நயன்தாரா அவரைக் காதலிக்கிறாங்க. ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிப்பதற்குப் பெண்ணோட அழகு, கலர் இப்படிச் சின்னச் சின்ன விஷயங்கள் இருந்தா போதும். ஆனா, அதுவே ஒரு பெண் ஒரு ஆணைக் காதலிக்க அவங்ககிட்ட இருக்கிற ஆயிரம் நல்ல குணங்கள் காரணமா அமையும். அதெல்லாம் விக்னேஷ் சிவன்கிட்ட இருக்கு." 

``ராஜா - ரஹ்மான் ரெண்டு பேரையும் `இளையராஜா 75' நிகழ்ச்சியில் மேடையேத்துனீங்க. ஆனா, சில பிரச்னைகளால நீங்க நிகழ்ச்சியில கலந்துக்கலைனு கேள்விப்பட்டோம். என்ன நடந்தது?"

``ராஜா சார் மற்றும் ரஹ்மான் சார் ஒண்ணா மேடையேறும்போது, நான் அங்கே இல்லாததுக்குப் பல காரணங்கள் இருக்கு. ஒரு விஷயத்தைச் செஞ்சுட்டு நாம அங்கே இல்லாதப்போ அது வேறவிதமான பரவசத்தைக் கொடுக்கும். உதாரணமாச் சொல்றேன். நான் அடிக்கடி சொல்வேன் காதல் என்பது உடல் ரீதியாக ஒருத்தருக்கொருத்தர் கிடைக்கிற சந்தோஷம் மட்டுமல்ல. ஒரு முத்தம் கொடுத்தா அதுல கிடைக்கிற ஸ்பரிசத்தை மட்டும் காதல்னு சொல்ல முடியாது. தான் காதலித்த நபர் சந்தோஷமா இருந்தா போதும்னு நினைக்கிற எண்ணம்தான், காதல். நான் காதலித்த பெண்ணை நினைக்காத நாளே கிடையாது. அந்தப் பொண்ணு என்னைக்குமே எனக்குப் போன் பண்ணிடக்கூடாதுனு தினமும் நினைப்பேன். ஏன்னா, அந்தப் பொண்ணுமேல அதீதக் காதல் வெச்சிருந்தேன். சந்தர்ப்பச் சூழ்நிலையால அவங்க வேறொரு வாழ்க்கைக்குள்ளே போயிட்டாங்க. அதனால, இனிமே அவங்க வாழ்க்கையில நாம தலையிடக்கூடாதுனு நினைச்சேன். இன்னமும் அப்படித்தான் இருக்கேன். 

தவிர, நினைவுகள் ரொம்ப அழகானது. நினைவுகளால ஒருபோதும் நமக்குப் பிரச்னை இல்லை. காதலால் பல கொலைகள் நடக்கிறதுக்கு உடல்ரீதியான உறவு மட்டுமே முக்கியம்னு நினைக்கும் எண்ணம்தான் காரணம். `அழகி' படத்துல ரெண்டுபெரும் ஒருத்தருக்கொருத்தர் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. `96' படத்துல கடைசிவரை ராம், ஜானுவைத் தொடணும்னு நினைக்கவேமாட்டான். அவங்க நினைவுகள்ல மட்டும் காதல் வாழும்; அவ்வளவுதான். நான் சொல்ல வந்தது என்னனா, ராஜா சாரும் ரஹ்மான் சாரும் ஒரே மேடையில இருக்கணும்னு நிகழ்த்திக் காட்டுறதுதான் காதலே தவிர, அதைப் பக்கத்துல இருந்து பார்த்து கைதட்டணும்னு அவசியம் கிடையாது."

``நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா... இந்த இருவர்தான் பிரச்னைகளுக்குக் காரணம்னு சொல்றாங்களே?!"

`` `இளையராஜா 75' நிகழ்ச்சி குறித்த தேதிகளில் நடக்குமா இல்லையானே எங்களுக்குத் தெரியாது. நிகழ்ச்சியில் ஏகப்பட்ட பிரச்னைகள், குளறுபடிகள். 500 ஆர்மோனியப் பெட்டியை வாசிக்கும்போது, இளையராஜா என்ட்ரி கொடுக்கணும்னு ஒரு ஐடியா சொன்னேன். அந்த 500 ஆர்மோனியப் பெட்டிகளுக்கு கவுன்சில்ல இருந்து காசு கொடுக்கணும்னு அவசியம் கிடையாது. சிலர், `பார்த்திபன் சொன்ன ஐடியாக்கள் எல்லாமே காஸ்ட்லியா இருந்துச்சு'னு புரளியைக் கிளப்பிக்கிட்டு இருந்தாங்க. `ஆர்மோனியப் பெட்டியை வாசிக்க ஆள்கள் தேவை'னு என் முகநூல், ட்விட்டர் பக்கத்துல ஷேர் பண்ணி, கிட்டத்தட்ட 143 ஆர்மோனியப் பெட்டிகளை ரெடி பண்ணிட்டோம். நிகழ்ச்சியில வந்து வாசிக்கிறதுக்கு நாங்க காசு கொடுக்கமாட்டோம்னும் முடிவு பண்ணியிருந்தோம். சில காரணங்களால அது வேண்டாம்னு முடிவெடுத்தோம். அதுக்கு ரமணாவும், நந்தாவும் காரணமில்லை. அது வேறொரு அரசியல். ஆனா, இவங்க ரெண்டுபேருக்கும் நான் நிகழ்ச்சியில தலையிடுறது ஏன் பிடிக்கலைனு எனக்குத் தெரியலை. 

என் உதவியாளர் குமார், ராஜாவின் தீவிர ரசிகர். என்னைவிட சாரை அதிகமா நேசிக்கக்கூடிய பக்தர். ராஜா சார் திருவண்ணாமலையில ரெண்டு நாள் தங்குறமாதிரி, ராஜா சாரோட திருவடிகள்ல ரெண்டு நாள் இவர் போய்த் தங்குவார். இந்த மாதிரி ஒருத்தருக்காக நான் ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணேன். `இந்த ஸ்கிரிப்ட்ல உள்ளதை அவரே ரெடி பண்ணட்டும்'னு அவர்கிட்ட கொடுத்தேன். அதுக்கு 4 லட்சம் ரூபாய் செலவாகும்னு கவுன்சில்ல சொன்னாங்க. அப்புறம், `அந்த ஸ்க்ரிப்டை என்கிட்ட கொடுங்க. நான் ஷூட் பண்ணித் தர்றேன்'னு ரமணா சொன்னார். அவர் அப்படிக் கேட்டது எனக்குப் பிடிக்கல. 

`எல்லாத்தையும் நீங்களே பண்ணா, நான் எதுக்கு இருக்கேன்'னு கேட்டேன். அப்புறம், `ராஜா சார் உள்ளே வரும்போது வேறவொரு மியூசிக் போட்டு அவரை வரவேற்கணும். `ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா' பாடலைப் போட்டு வரவேற்கிறதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு'னு கேட்டேன். இதுக்காக இசையமைப்பாளர் சத்யாகிட்ட இரண்டு நாள் உட்கார்ந்து மியூசிக் கம்போஸ் பண்ணி எடுத்துட்டு வந்தா, ரமணா அதை வாங்கிக்கவே இல்லை. `இந்த மியூசிக் வேணாம் சார். நாம ராஜா சார் பாடலைப் போட்டே அவரை வரவேற்கலாம்'னு  சொன்னார். ஒண்ணு அவங்க சொல்றதை நான் கேட்கணும்; இல்லை நான் சொல்றதை அவங்க கேட்கணும். ரெண்டுமே இல்லாம இருந்தா எதுவும் சரி வராதுனு நினைச்சேன். ஈவென்ட் அவங்க கையில இருக்கு. `நான் சொல்றதெல்லாம் கேட்கிற ஆளா நீங்க இருக்கணும்'னு ரமணா நினைச்சிருக்கலாம். 

பாரதிராஜா சார், `கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தைப் பார்த்து, அவரோட அடுத்த படத்துக்கு என்னை வசனம் எழுதித்தரச் சொன்னார். `எனக்கு இதெல்லாம் வராது சார். நான் வசனம் எழுதமாட்டேன்'னு சொன்னேன். `நீங்க எழுதித் தாங்க. அதுல எது வேணுமோ, அதை மட்டும் நான் எடுத்துக்கிறேன்'னு சொன்னார். ஒரு படத்துக்கு நான் வசனம் எழுதினா, அது மொத்தமும் படத்துல வரணும்னு நான் எதிர்பார்ப்பேன். `நீங்க கிழிச்சுப் போடுற அளவுக்கு எனக்கு டயலாக் எழுதித்தர தெரியாது சார்'னு பக்குவமா பாரதிராஜா சார்கிட்ட சொன்னேன்.

இப்படி, என்னை ரொம்ப மரியாதையா நடத்துற நபர்கிட்ட முடியாதுங்கிறதை எடுத்துச் சொல்வேன். ரமணா சொல்றதை நான் ஏன் முழுக்க ஏத்துக்கணும்?! கவுன்சில்ல இவ்வளவு நடந்தும் எதுவும் பேசாம ஒதுங்கியே இருந்தேன். காரணம், விஷால் மீது எனக்கு இருக்கிற மதிப்புதான். அவர் எந்த வகையிலேயும் மனசு கஷ்டப்படக் கூடாது நினைச்சேன். விஷால் பக்கத்துல உட்கார்ந்திருக்கும்போதே, ரமணா ராஜா சார்கிட்ட, `பார்த்திபன் சார் இந்த நிகழ்ச்சிக்கு வேண்டாம்'னு சொன்னார். அதைக் கேட்டும் விஷால் ஏன் அமைதியா இருந்தார்?! இந்த ஒரு விஷயம்தான் எனக்குக் கோபத்தை உண்டு பண்ணிச்சு. அதனாலதான் தயாரிப்பாளர்கள் சங்கப் பதவியை ராஜினாமா பண்ணிட்டு வந்தேன்."

``இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்... இருவருடனான உங்க நட்பு பற்றி?" 

``ராஜா சார் மேல இருக்கிறது நட்பு இல்லை, பக்தி. அவரைப் பற்றி தவறான விமர்சனங்கள் வரும்போது, அவருக்காக நான் சண்டை போடுவேன். நான் பாரதிராஜா சாரை எப்படிப் பார்க்கிறேன். எஸ்.பி.பி சாரை எப்படிப் பார்க்கிறேன், ராஜா சாரை எப்படிப் பார்க்கிறேன்னு வித்தியாசம் இருக்கு. வைரமுத்து சாரை வியந்து பார்க்கிறேன். ஆனா, ராஜா சார் வைரமுத்துவை எப்படிப் பார்ப்பார்?! வேறுபாடு இருக்குல்ல! எனக்கு ராஜா சார் மேடையில இருக்கும்போது, ரஹ்மான் சாரும் அங்கே இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. ராஜா சார் ரஹ்மான் சாரை எப்படிப் பார்ப்பார்? ரஹ்மான் சார் இத்தனை படங்களுக்கு இசையமைச்சிருந்தாலும், ஆஸ்கர் விருது வாங்கியிருந்தாலும், ராஜா சார் பார்வையில ரஹ்மான் சார் எப்படி இருப்பார்?!

உதாரணத்துக்கு, என்கிட்டே உதவியாளரா இருந்த கரு.பழனியப்பன் மாதிரி என்னால பேசமுடியாதுனு நான் சொல்றது வேற விஷயம். ஆனா, ராஜா சாரும் அப்படிச் சொல்வார்னு நினைக்க முடியாது. அவர் தொட்ட உயரம் வேற! அதனால, இவங்க ரெண்டுபேரையும் ஒண்ணா இணைக்கிறது கஷ்டமான விஷயம். ராஜா சாரை என்னைக்குமே நான் கஷ்டப்படுத்திடக் கூடாதுனு நினைப்பேன். அதனால, ரஹ்மான் சாரை இந்த நிகழ்ச்சிக்குக் கூட்டிக்கிட்டு வர்றதுக்காக, ராஜா சார்கிட்ட நான் வேற ஒரு பிட்டைப் போட்டேன். அதாவது, ``அமிதாப் பச்சன் `தென்பாண்டிச் சீமையிலே' பாடலை நாலு லைன் பாடினா எப்படியிருக்கும்?"னு ராஜா சார்கிட்ட கேட்டேன். அமிதாப் சாரை நேர்ல சந்திச்சு, இதைப் பற்றி எடுத்துச் சொல்லி, வர வைப்போம்னு சொன்னேன். அவர் வர்றதுக்கு நிறைய செலவாகும்னு விஷால் சொன்னதுனால, அதை கேன்சல் பண்ணிட்டோம்.

உடனே ராஜா சார்கிட்ட, `ரஹ்மான் சார் வந்தா எப்படி இருக்கும்?'னு கேட்டேன். `ம்ம்ம்ம்'னு சொன்னார். அடுத்தது, `அவர் ஒரு பாட்டுப் பாடுனா நல்லாயிருக்கும்'னு சொன்னேன். `சரி'னு கண்ணசைச்சார். `என்ன பாட்டு பாட வைக்கலாம்னு கேட்டேன். `அதை அவரையே சொல்லச் சொல்லு'னு சொன்னார். அவர் இந்த வார்த்தையைச் சொன்னதும் உடனே குதிச்சு எழுந்து அந்த இடத்தை விட்டுப் போயிட்டேன். அப்புறம் ரஹ்மான் சார்கிட்ட போனா, அவர் அந்தத் தேதிகள்ல ஊர்லேயே இல்லைனு சொல்லிட்டாங்க. பிப்ரவரி 9-ம் தேதி வரை ரஹ்மான் சாருக்கு வேறு வேலைகள் இருந்துச்சு. அப்புறம், அவரை சம்மதிக்க வெச்சோம். ரஹ்மான் சாருக்கு ராஜா சார்மேல இருக்கிற மரியாதை அதிகம். நீங்க மேடையிலேயே பார்த்திருப்பீங்க. அதனால, ரெண்டுபேரையும் மேடையில ஏத்தலாம்னு முடிவு பண்ணிப் பண்ணோம். அதுக்கப்புறம் மேடையில அவங்க பகிர்ந்துக்கிட்டதெல்லாம் மேஜிக்!" 

``பார்த்திபன் - வடிவேலு கம்போவை மறுபடியும் திரையில எப்போ பார்க்கலாம்?"

``ஆறு மாதத்துக்கு முன்னாடி அமெரிக்கத் தயாரிப்பாளர் ஒருவர் எனக்கும், வடிவேலுக்கும் ஒரு படத்துல நடிக்கிறதுக்காக அட்வான்ஸ் கொடுத்துட்டார். ஆனா, தயாரிப்பாளர் சங்கத்துல இயக்குநர் ஷங்கர் படத்துக்கான ஒரு பிரச்னை போய்க்கிட்டு இருக்கிறதால, எங்க படம் கொஞ்சம் லேட் ஆகும். அந்தப் பிரச்னை முடிஞ்சதும் உடனே இந்தப் படத்தை ஆரம்பிச்சிடுவோம். வடிவேலுகூட நடிக்கிற வரைக்கும் அவரோட படங்களை நான் பார்த்தது கிடையாது. அதனால, நான் எழுதிய காமெடியெல்லாம் வேற ஸ்டைல்ல இருந்துச்சு. வடிவேலு அபார திறமையுள்ள மனிதர். நாகேஷுக்குப் பிறகு நான் அதிகமா ரசிக்கிறது, வடிவேலுவைத்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரோட காமெடிகளைப் பார்த்து ரசிப்பேன். சீக்கிரமே எங்க காம்போவைப் பார்க்கலாம்!" 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு