Published:Updated:

`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி?’ - தேவ் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி?’ - தேவ் விமர்சனம்
`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி?’ - தேவ் விமர்சனம்

`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி?’ - தேவ் விமர்சனம்

மாஸ் ஹீரோ, பெரிய பட்ஜெட், எனர்ஜியான இசையமைப்பாளர், இளமை கொப்பளிக்கும் டீம் என எல்லாம் இருந்தும் சில படங்களில் ஏதோ மிஸ்ஸாகும்! சில படங்களில் எல்லாமே மிஸ்ஸாகும். `தேவ்’ இதில் இரண்டாவது ரகம்.

பெரும்பணக்காரரான கார்த்தி ஒரு அட்வென்ச்சர் பிரியர். நண்பர்கள் அம்ருதா, ஆர்.ஜே விக்னேஷ்காந்த் சகிதம் சாகசங்களைத் தேடித் தேடி பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் காதல்தான் பெரிய சாகசம் என நண்பர்கள் ஏற்றிவிட, முன்பின் தெரியாத ரகுல் ப்ரீத் சிங்குக்கு ஃபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுக்கிறார். அந்த ரெக்வெஸ்ட்டை ரகுல் கண்டுகொள்ளாமல்விட அவரைப் பின்தொடர்ந்து போராடி காதலில் விழ வைக்கிறார். அதன் பின் இருவருக்குமிடையே நிகழும் ஊடலும் ஈகோ மோதல்களும்தான் மிச்சக் கதை. 

எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதைத் தாங்கிப் பிடித்து இறுதிவரை சுமந்து செல்வது கார்த்தியின் ஸ்டைல். இந்தப் படத்திலும் துறுதுறு இளைஞனாக, காதலைக் கொண்டாடும் குறும்புக்காரனாகக் கவனம் ஈர்க்கிறார். ஆனால், அவருக்கான கதாபாத்திர வடிவமைப்பு சரியாக எழுதப்படாததால் ஒரு கட்டத்துக்கு மேல் அவராலும் இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. 

படம் நெடுக ஹீரோவோடு பயணிக்கும் காதலி என்பதால் ரகுலுக்கான வெளி கதையில் நிறையவே இருக்கிறது. ஆங்காங்கே மிஸ்ஸாகும் சில லிப் சிங்க் காட்சிகளைத் தவிர்த்து பெரும்பாலான இடங்களில் நன்றாகவே நடித்திருக்கிறார். தோழியாக வரும் அம்ருதாவும் நடிப்பில் தேறிவிடுகிறார். 

ஸ்டாண்ட் அப் காமெடியனாக வரும் விக்னேஷ்காந்த் படம் முழுக்க சிரிக்க வைக்க முயன்றாலும் நமக்குச் சிரிப்பு வருவது ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே. பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரேணுகா என தேர்ந்த நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். கதை இருக்க வேண்டுமே? பல வருட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தேமேவென வந்து செல்வதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

இசை ஹாரிஸ் ஜெயராஜ்! என்னாச்சு ஹாரிஸ் உங்களுக்கு? ஒரு பாடல்கூட முணுமுணுக்க வைக்கவில்லை. பின்னணி இசை... ம்ஹூம்! `நண்பன்’, `என்றென்றும் புன்னகை’, `தாம்தூம்’ என அவரின் படங்களிலேயே கேட்டுச் சலித்த ட்யூன்களைத் திரும்பப் படம் நெடுகிலும் சேர்த்திருக்கிறார். முன்பெல்லாம் ஹாரிஸின் பாடல்கள் எங்கேயோ கேட்டவைபோல இருக்கும். இந்தப் படத்தில் எங்கே கேட்டது என்பதுவரை தெரிந்துவிடுகிறது. போதாக்குறைக்கு இரண்டு காட்சிகளுக்கு ஒருமுறை பொருந்தாத கிட்டார் இசை வேறு!

வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்தின் ஒரே ஆறுதல்! உக்ரைன் தொடங்கி மும்பை, சென்னை, இமயமலை என மலைகளிலும் சாலைகளிலும் ஏறி இறங்கும் அவரின் கேமரா நமக்கு சில பேரழகான காட்சிகளைப் பரிசளிக்கிறது. இலக்கின்றி பாயும் திரைக்கதையை முடிந்த மட்டும் இழுத்துப் பிடிக்க முயன்றிருக்கிறார் எடிட்டர் ரூபன். ஆனாலும் பலனில்லை.

அறிமுக இயக்குநரான ரஜத் ரவிஷங்கர் திரைக்கதைக்கு மெனக்கெடவே இல்லை. 'இது சாகச விரும்பியின் படமா? இருவருக்குள்ளான ரொமான்ஸைப் பேசும் படமா? ஜனரஞ்சகமான குடும்பப் படமா?' என எந்தப் பக்கமும் நிலையாக நிற்காமல் பார்ப்பவர்களைக் குழப்பிக்கொண்டே இருக்கிறது. லாஜிக் ஓட்டைகள் எக்கச்சக்கம். கண்டவுடன் காதல், யாரெனத் தெரியாமலேயே மகளை ட்ரிப்புக்கு அனுப்பி வைக்கும் மாமியார், நம்பவே முடியாத ப்ளாஷ்பேக்குகள் என அயர்ச்சியை உண்டாக்குகிறது படம்.

தேவ்வில் இருக்கும் முரண்களையும் பெரிதாக பட்டியலிடலாம். பதினைந்து சூப்பர் பைக்குகள், பிரமாண்ட பங்களா, ஹை எண்ட் கார்கள் என அப்பா காசில் எல்லாம் வைத்திருக்கும் ஹீரோ, 'வாழ்க்கைன்னா சாகசம் செய்யணும். பணத்துக்காக ஓடக்கூடாது' என வேலை தேடுபவர்களுக்கு பாடம் எடுக்கிறார். 'பொண்ணை பார்த்தா அவ உடல் சார்ந்து யோசிக்கக் கூடாதுடா' எனச் சொல்லிவிட்டு முன்பின் தெரியாத ஹீரோயினின் ஒரே ஒரு போட்டோவைப் பார்த்தவுடன் காதல் என சொல்லிக் குதிக்கிறார். இது தவிர படத்தில் வரும் ஐந்து வயது குழந்தை முதல் ஐம்பதைத் தாண்டும் முதியவர் வரை எல்லாரும் ஏதோ தத்துவம் போதித்துக்கொண்டே இருக்கிறார்கள். கருத்து சொல்றதுல தப்பில்ல ப்ரோ! ஆனா, என்ன சொல்ல வர்றோம்னு புரிஞ்சுகிட்டு சொல்லலாமே!

கார்த்தியை நல்லவராகக் காட்ட, படத்தில் வரும் பெரும்பாலான ஆண்களையும் ஓடிப்போனவர்களாக, பெண்களைத் துரத்துபவர்களாக சித்திரிக்க என்ன தேவை? படத்தில் எல்லா உணர்ச்சிகளும் இருக்க வேண்டுமென சில சண்டைக்காட்சிகள், ஒரு விபத்து, மருத்துவமனையில் ஒரு குட்டிப்பெண் என கதைக்குத் தேவையில்லாத என்னென்னமோ வந்துபோகின்றன. காதலர்களுக்குள் நிகழும் மோதலைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இறுதியாக வரும் எவரெஸ்ட் காட்சிகள் பரபரப்பாகத்தான் இல்லை. ஆனால், சி.ஜியையாவது நன்றாகச் செதுக்கியிருக்கலாம்.

பயணம் பற்றிப் பேசலாம், காதல் பற்றிப் பேசலாம், உறவுச் சிக்கல்கள் பற்றிப் பேசலாம், கனவைத் துரத்துதல் பற்றிப் பேசலாம். இங்கே படைப்பாளிகள் எல்லாமே பேசலாம். ஆனால், தாங்கள் சொல்ல விரும்பும் வாழ்வியலை வாழ்ந்து பார்த்தோ, இல்லை அப்படி வாழ்பவர்களை மிக நெருக்கமாகக் கவனித்தோ சொல்வதுதான் நியாயம். 'தேவ்' இது எதையும் செய்யாமல் மேலோட்டமாக சொல்லிச் செல்வதுதான் பிரச்னை.

அடுத்த கட்டுரைக்கு