
50% பொறுப்பு... 50% குறும்பு - வருகிறார் Mr.லோக்கல்
“ `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்துக்குப் பிறகு, ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் பண்றதா சிவகார்த்திகேயன் சொல்லியிருந்தாராம். ஆனால், அது அமையாமலே இருந்தது. ‘சீமராஜா’ ஷுட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் சிவாகிட்ட இந்தக் கதையை சொன்னேன். அப்போ அவர்தான், ‘ஞானவேல் ராஜா சார்க்கு இந்தப் படம் பண்ணலாம்’னு சொன்னார். நானும் ஏற்கெனவே ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ இந்த பேனர்ல பண்ணியிருந்ததுனால ஓகே சொல்லிட்டேன்” - ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆரம்பமான கதையைப் பேசத் தொடங்கினார் இயக்குநர் எம்.ராஜேஷ்.
“இந்தப் படம் பண்றதுக்கு முன்னாடியே சந்தானம் சாருக்கு ஏத்த மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட் வெச்சிருந்தேன். அதை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்குறதா இருந்தது. சில காரணங்களால பண்ண முடியலை. ஆனா, சந்தானம் சாருக்கு எழுதின ஸ்கிரிப்ட் சிவாவுக்கு செட் ஆகாதுனு நல்லாத் தெரியும். ஏன்னா, ரெண்டு பேருடைய பாடி லாங்குவேஜ் மொத்தமா வேற. ‘மிஸ்டர் லோக்கல்’ ஒன்லைனை சிவாகிட்ட ரொம்ப நாள் முன்னாடியே சொல்லியிருந்தேன். அவருக்கும் இது பிடிச்சிருந்தது. அப்புறம், ஸ்க்ரிப்டை முழுசா வொர்க் பண்ணிட்டு அவர்கிட்ட சொன்னேன். அவர் ரொம்ப திருப்தியா இருக்குனு சொன்னார். சிவா ரசிகர்களுக்கும் திருப்தியா இருக்கும்.”

“கதையை கேட்டவுடனே சிவா ஓகே சொல்ல என்ன காரணம்னு நினைக்கிறீங்க?”
`‘நயன்தாராதான் பெரிய காரணம். ஏன்னா, படத்தோட கதையை சிவா கேட்டவுடனே சொன்ன விஷயம், ‘படத்துல வர்ற ஹீரோயின் ரோல் யார் பண்றாங்க அப்படிங்கிறதைப் பொறுத்துதான், இந்தப் படமே இருக்கு’னு சொன்னார். ஏன்னா, ரொம்ப போல்டான ஹீரோயின் பண்ணணும். அதுக்கு நயன்தாராதான் நல்லயிருக்கும்’னு சிவா ஃபீல் பண்ணார். என்னுடைய விருப்பமும் இதுவாகத்தான் இருந்தது. நயன்தாராகிட்ட போன்லதான் இந்தக் கதையை சொன்னேன். ‘நல்லாயிருக்கு ராஜேஷ். நீங்க நல்லா பண்ணுவீங்க, உங்க மேல நம்பிக்கை இருக்கு’னு சொன்னாங்க. ‘வேலைக்காரன்’ படத்துல ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருந்தாலும் அவங்களுடைய காம்பினேஷன் சீன்ஸ் ரொம்ப குறைவு. அதனால, இந்தப் படத்துல இவங்களுக்கான காம்பினேஷன் சீன்ஸ் நிறைய இருந்தா நல்லாயிருக்கும்’னு எங்க மூணு பேருக்குமே தோணுச்சு.
‘சிவா மனசுல சக்தி’ படத்தை மாஸா பண்ணா எப்படியிருக்கும்னு தோணுச்சு. அதுதான் ‘மிஸ்டர்.லோக்கல்’. ‘எஸ்.எம்.எஸ் 2.0’ ன்னுகூட இதை சொல்லலாம். ஆனா, ரெண்டு படத்துடைய கதையும் வேற.”
“சந்தானத்தை இப்போ மிஸ் பண்ணுறீங்களா?”
“கண்டிப்பா நானும் மிஸ் பண்றேன். ஆடியன்ஸூம் மிஸ் பண்றாங்க. சிவகார்த்திகேயன், சந்தானத்துடைய பெரிய ஃபேன். ‘தில்லுக்கு துட்டு-2’ எனக்கு முன்னாடி சிவா பார்த்துட்டு போன் பண்ணி, சூப்பரா இருக்குனு சொன்னார். படத்துல வர்ற காமெடி சீன்களைச் சொல்லி பயங்கரமா சிரிச்சிட்டு இருந்தார். இப்போ வரைக்கும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சிவாவுடைய ஃபேவரைட் படம். ‘நடிச்சா இனி ஹீரோதான்’னு முடிவெடுத்துட்டார், சந்தானம். அதை ஒரு நண்பனா இருந்து நான் ரொம்ப சப்போர்ட் பண்றேன். ஒரு ஸ்டார் காமெடியான சந்தானத்தின் இடம் இன்னும் காலியாதான் இருக்கு.”
“ ‘யோகி பாபு’, ‘சதீஷ்’, ‘ரோபோ சங்கர்’னு இந்தப் படத்துல நிறைய காமெடியன்கள் இருக்காங்களே?”
“வழக்கமா ஒரு காமெடியன் இல்லாம இதுல நிறையப் பேர் இருக்கட்டுமேனு தோணுச்சு. இவர்களைத் தவிர படத்துல தம்பி ராமையாவும் இருக்கார். நயன்தாராகூட தம்பி ராமையா சேர்ந்து படம் முழுக்க வருவார். ஆனா, இவங்க எல்லாருமே தனித்தனியாதான் சிவாகூட வருவாங்க. எல்லாரையும் ஒரே காட்சியில பார்க்க முடியாது. காலையிலே கேரவன்ல இருக்கிற சிவாவைப் பார்த்து சீன்ஸ் கொடுத்துட்டா போதும், அவருடைய ஐடியாலாம் சேர்த்து மற்ற நடிகர்கள்கிட்டயும் டிஸ்கஷன் பண்ணிட்டு பக்காவா ஷூட்டிங் ஸ்பாட்டுல வந்து நிப்பார்.”

“ ‘மிஸ்டர் லோக்கல்’ பெயர் காரணம்?”
“லோக்கல் பையன் அப்படிங்கிறதையே மரியாதையா சொன்னா எப்படியிருக்கணும்னு தோணுச்சு. லோக்கல் பையன்னு சொன்னாலே பொறுப்பு இல்லாதவன்னு நிறையப் பேர் நினைச்சிக்குறாங்க. ஆனா, இவன் பொறுப்பான, தைரியமான பையனா இருப்பான். அதனாலதான் ‘மிஸ்டர் லோக்கல்’னு மரியாதையா பெயர் வெச்சேன். சிவாவுக்கும் இந்தப் பேர் ரொம்ப பிடிச்சிருந்தது.”
“ ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துல நயன்தாராகூட வொர்க் பண்ணியிருப்பீங்க. இப்போ அவங்க லேடி சூப்பர் ஸ்டாரா வளர்ந்து இருக்காங்க. இந்த வளர்ச்சியை எப்படி பார்க்குறீங்க?”
“அவங்களுடைய வளர்ச்சி அபாரமானது. அதுக்கு காரணம், அவங்களுடைய கடின உழைப்பு மட்டும்தான். ‘விஸ்வாசம்’ படத்துல அவங்க நடிப்பை பார்த்து மிரண்டுட்டேன். இந்தப் படத்திலும் ‘கீர்த்தனா’ங்கிற கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்காங்க.”
“சீனியர் ராதிகாவும் இருக்காங்களே?”
“எனக்கு ராதிகா மேடத்தின் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். ‘ஊர்க்காவலன்’ படத்துல நைட்ல நல்லா மேக்கப் பண்ணிட்டு ரஜினி சாரை எழுப்பி இட்லி கொடுக்கிற காமெடி சீன்ஸ் பார்த்து ரசிச்சிருக்கேன். இந்தப் படத்துல சிவா அம்மாவா வர்றாங்க. எல்லா சீனையும் சிங்கிள் டேக்ல ஓகே பண்ணிடுவாங்க. ரஜினி சார், விஜயகாந்த் சார்கூட வேலை பார்த்த கதையெல்லாம் எங்ககிட்ட அவங்க சொல்லும்போது சுவாரஸ்யமா இருக்கும்.”
“இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதிகூட முதன்முதல்ல வொர்க் பண்ண அனுபவம்?”
“ ‘மீசையை முறுக்கு’ படம் தியேட்டர்ல பார்த்தேன். அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்காங்கனு அப்போதான் தெரிஞ்சது. அந்தப் படத்தோட ஆல்பமும் செம ஹிட். அவர்கூட வொர்க் பண்ணணும்னு ரொம்ப நாளா எண்ணம் இருந்தது. தயாரிப்பாளருக்கும் ஆதி நெருங்கிய நண்பர். சிவாவுக்கும் பிடிச்சிருந்தனால இந்தக் கூட்டணி அமைஞ்சிருச்சு. படத்துல மொத்தம் ஐந்து பாடல்கள். அதுல ‘கலக்கலு ரொம்ப லோக்கலு’னு சிவாவுக்கு மாஸா ஒரு ஓபனிங் சாங் கொடுத்திருக்கார்.”
“நா.முத்துக்குமார் இல்லாமல் நீங்க வொர்க் பண்ற முதல் படம் இது. அவரை மிஸ் பண்றீங்களா?”
“ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். ‘சிவா மனசுல சக்தி’படத்துல இருந்து ‘கடவுள் இருக்கான் குமாரு’ வரை என்னுடைய எல்லாப் படங்களுக்கும் எல்லாப் பாடல்களும் முத்துக்குமார்தான் எழுதுவார். அவர் இழப்பை ஏத்துக்கவே முடியலை. அதிலிருந்து மீண்டு வர ஆறு மாசம் ஆகிடுச்சு. ‘சிவா மனசுல சக்தி’ படத்துக்காக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ட்யூனுக்கு அரை மணி நேரத்துல பாடல் எழுதிக்கொடுத்துட்டார். வெறித்தனமா வேலை செய்வார். ஒரு நாளைக்கு ஐந்து பாட்டெல்லாம் எழுதிருக்கார். அவர் வீட்ல இருந்து கார்ல ஈசிஆர் கிளம்புவோம். போகும்போது ஒரு பாட்டு, வரும்போது ஒரு பாட்டு முடிச்சுடுவார். பாடல் எழுத அவர் அதிகபட்சமா எடுத்துக்கிற நேரம், 40 நிமிடம்தான். நான் பார்த்து வியந்த ஒரு மனிதர். இந்தப் படத்துல மதன் கார்க்கி, ரோகேஷ், தரன் மூணு பேர் சேர்ந்து எழுதியிருக்காங்க”

“யுவன் ஷங்கர் ராஜா - ராஜேஷ் காம்போவை மீண்டும் எப்போ பார்க்கலாம்?”
“சீக்கிரமே பார்க்கலாம். எனக்கு ரொம்ப பிடிச்ச இசையமைப்பாளர், யுவன். என்னுடைய அடுத்த படம் நிச்சயம் யுவன் ஷங்கர் ராஜாகூடதான் இருக்கும். நான் - சந்தானம் - யுவன் இந்த கூட்டணி சேர்றதுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கு. பார்ப்போம்.”
“இதுவரை உங்க கரியர்ல இந்த இடத்துல கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமேனு நினைச்ச இடம் எது?”
“ ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படம் பண்ணும்போது எனக்கு அந்த ஃபீல் வந்தது. ஏன்னா, ‘பையா’, ‘சிறுத்தை’னு கார்த்தி சார் மாஸ் ஹீரோவான சமயம். ஆனா, பெரிய மாஸ் ஹீரோவுக்கான ஸ்கிரிப்டைப் பண்ணலையோனு வருத்தம் இருந்தது. அவருக்கு ஏத்த மாதிரி மாஸா ஒரு ஸ்கிரிப்ட் பண்ணியிருந்திருக்கணும். ஆனா, எதோ ஒரு நம்பிக்கையில அவரை என் ஸ்டைலுக்குள்ள இழுத்துட்டு வர முயற்சி பண்ணேன். அது சரியா வொர்க் அவுட்டகலை. அந்தப் படத்துக்கு இன்னும் அதிகமா வொர்க் பண்ணியிருக்கலாமோனு தோணுது!”
“ஹியூமர்ல யார் உங்களுக்கு இன்ஸ்பிரேஷன்?”
“முதல்ல கவுண்டமணி சார்தான். அவருடைய பெரிய ரசிகன் நான். அப்புறம் வடிவேலு சார், சந்தானம்னு நிறைய பேர் இருக்காங்க.”
“கவுண்டமணியை வெச்சு படம் பண்ணணும்னு யோசிச்சிருக்கீங்களா?”
“அவரை என் படத்துல நடிக்க வெக்கணும்னு அடிக்கடி யோசிச்சிருக்கேன். அப்படி அவரை அப்ரோச் பண்ணப் போகும்போது அவருக்கான விஷயங்களைக் கதையில வெச்சு எடுத்துட்டு போகணும். கதை கேட்டுட்டு அவர் நோ சொல்லிடக்கூடாது. அவரை இம்பரஸ் பண்ற மாதிரி ஸ்கிரிப்ட் அமைஞ்சவுடனே நேரா அவரைப் பார்க்க போயிடுவேன்.”
- சனா, உ.சுதர்சன் காந்தி