Published:Updated:

"நாஞ்சில் சம்பத் குத்தாட்டம், ஹிப் ஹாப் ஆதியின் புரளி, நாடகத்துக்குத் தடை..." - 'ப்ளாக்‌ ஷீப்' விக்னேஷ்காந்த்

"நாஞ்சில் சம்பத் குத்தாட்டம், ஹிப் ஹாப் ஆதியின் புரளி, நாடகத்துக்குத் தடை..." - 'ப்ளாக்‌ ஷீப்' விக்னேஷ்காந்த்

நடித்துக்கொண்டிருக்கும் படம், நவயுக ரத்தக்கண்ணீர் நாடகம், நாஞ்சில் சம்பத்துடனான அனுபவம்... உட்பட பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஆர்.ஜே விக்னேஷ்காந்த்.

"நாஞ்சில் சம்பத் குத்தாட்டம், ஹிப் ஹாப் ஆதியின் புரளி, நாடகத்துக்குத் தடை..." - 'ப்ளாக்‌ ஷீப்' விக்னேஷ்காந்த்

நடித்துக்கொண்டிருக்கும் படம், நவயுக ரத்தக்கண்ணீர் நாடகம், நாஞ்சில் சம்பத்துடனான அனுபவம்... உட்பட பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஆர்.ஜே விக்னேஷ்காந்த்.

Published:Updated:
"நாஞ்சில் சம்பத் குத்தாட்டம், ஹிப் ஹாப் ஆதியின் புரளி, நாடகத்துக்குத் தடை..." - 'ப்ளாக்‌ ஷீப்' விக்னேஷ்காந்த்

ங்கரிங், ஆக்டிங் என 'ப்ளாக்‌ஷீப்' விக்னேஷ்காந்த் பிசியோ பிசி. வெறித்தனமாக ஓடிக்கொண்டிருந்தவர், ரெஸ்ட் எடுக்க அமர்ந்தபோது, அவரைப் பிடித்துப் பேட்டி எடுத்தோம்.

``விக்னேஷ் பெயருக்குப் பின்னாடி `காந்த்’ எப்படி வந்தது?’’

``என் உண்மையான பெயர் விக்னேஷ் காந்தி. காந்தி ஜயந்தி அன்னைக்குப் பிறந்ததுனால இந்தப் பெயரை வெச்சுட்டாங்க. அப்புறம் மூணுநாள் கழிச்சு மாத்தலாம்னு முடிவு பண்ணி, விக்னேஷ்காந்த் ஆக்கிட்டாங்க. எங்க அக்கா தீவிர ரஜினி ரசிகை. ஸோ, அதுவும் சிங்க் ஆனதுனால, விக்னேஷ் காந்தி விக்னேஷ்காந்த் ஆகிட்டேன்.’’  

``2018 - 19 'ப்ளாக்‌ ஷீப்'புக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு... என்ன காரணம்?"

``2016-17 இந்த வருடமும் 'ப்ளாக் ஷீப்'புக்கு நல்ல வருடம்தான். காரணம், ஜியோ அப்போதான் தெய்வமா லான்ச் ஆச்சு. அந்த சமயத்துல எல்லோரும் இன்டர்நெட்டை அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. 'ஜிபி'யை எப்படித் தீர்க்கணும்னு இருந்தப்போ, அதைப் பயன்படுத்திக்கிட்டு, ப்ளாக்‌ஷீப் டீமை நல்லபடியா கொண்டு வந்துட்டோம். யூடியூப்ல அந்த ரெண்டு வருடமும் ரொம்ப பெரிய வருடம்தான். 2018-19 பெரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த சமயம்தான், ஜீ டிவில இருந்து சன் டிவிக்குப் போனேன். அங்கே போனதுக்குக் காரணம், ஆங்கரிங்ல அங்கே ஸ்கோப் அதிகமா இருந்தது. நான் போன சமயம், `சர்கார்’ ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஸ்க்ரிப்ட் பண்ற வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் `பேட்ட’ ஆடியோ லான்ச்சுக்கு ஆங்கரிங் வாய்ப்பும் கிடைச்சது. இப்படி ஒவ்வொண்ணா கனெக்ட்டாகி, ரியோவை வெச்சுப் படம் பண்ற வாய்ப்பு வந்தது. அதுவும் சிவகார்த்திகேயன் பிரதர் பேனர்ல வாய்ப்பு வந்தது உண்மையிலேயே பெரிய விஷயம். இனி வர்ற வருடங்கள்ல இதைத் தக்க வெச்சுக்கணும்ங்கிறதுதான், ப்ளாக்‌ ஷீப் பிளான்.’’ 

`` `சர்கார்’ ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கு ஸ்க்ரிப்ட் பண்ண அனுபவம் எப்படி இருந்தது? நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் ஏதாவது சொன்னாரா?’’

``பொதுவா நிகழ்ச்சி நல்லபடியா முடிஞ்சா யாரும் பெருசா பேசமாட்டாங்க. ஏதாச்சும் சொதப்புனாதான், அதைப் பத்தி பெருசா பேசுவாங்க. கடைசியில விஜய் பேசியதை யாரும் எதிர்பார்க்கல. அதுவாவே நடந்தது. ரசிகர்களிடையே அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அவர் மேடை ஏறுனப்போ செமயா இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா அவர் ஸ்டேஜை நோக்கி நடந்து, மேலே ஏறும்போது ஸ்க்ரீன்ல அவரை பிரமிச்சுப் பார்த்துக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துல 'இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துடணும்'னு தோணுச்சு. விஜய் சார் கொஞ்சம் பேசினாலும் `நறுக்'னு பேசுவார். ஆனா, இந்தளவுக்கு ஓப்பனா பேசுவார்னு நாங்க யாருமே எதிர்பார்க்கல. அதுவரைக்கும் அவர் அப்படிப் பேசிப் பார்த்ததில்லை.’’ 

``விக்னேஷ்காந்த் கால்ஷீட் கிடைக்கமாட்டேங்குதுனு சொல்றாங்களே! முக்கியமா, 'ஹிப் ஹாப்' ஆதி ரொம்பப் புலம்புறாராமே?’’ 

``அப்படியெல்லாம் இல்ல பிரதர்... அது அவரே கிளப்பிவிட்ட புரளி. ஆனா, அப்படி நான் பிசியா இருந்தா, அவர்தான் உண்மையிலேயே சந்தோஷப்படுவார். 'நம்ம படத்துக்கே கால்ஷீட் கொடுக்க முடியாத இடத்துலதான் பிரதர் நீங்க இருக்கணும்'னு சொல்வார். 'நட்பே துணை' படத்துக்கு ரெண்டு முறை என்னால தேதி தள்ளிப் போயிடுச்சு. அதுல இருந்து இந்த வார்த்தையைப் பிடிச்சுக்கிட்டார்.’’

``ஆங்கரிங், ஆக்டிங், சேனல்... எல்லாத்தையும் எப்படி மேனேஜ் பண்ண முடியுது?’’

``எந்த ஒரு படத்துக்கும் நான் தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க மாட்டேன். அதுல எனக்கு கம்ஃபோர்ட் தேவைப்படுது. நாலு நாள் படத்துக்கு ஷூட்டிங் போனா, ரெண்டு நாள் கண்டிப்பா ப்ளாக் ஷீப்புக்கு நேரம் வேணும். அப்புறம், சன் டிவி-க்கு ஒரு நாள் கொடுக்கிறேன். இப்படித்தான் போய்க்கிட்டிருக்கு.’’  

``முன்னாடியெல்லாம் ஸ்பூஃப் வீடியோக்கள் போட்டா மக்களே கடுப்பாவாங்க. ஆனா, இப்போ வர்ற ஸ்பூஃப் வீடியோக்களை அரசியல்வாதிங்களே ரசிக்கிறாங்க. இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்குறீங்க?" 

``வேற வழியில்லைனு ரசிக்கிறாங்க. முன்னாடியெல்லாம் ஒருவர், ரெண்டுபேர் பண்ணுவாங்க, அதனால எதிர்த்தாங்க. இப்போ பத்தாயிரம் பேர் இதுமாதிரி வீடியோக்களைப் பண்றதும், அவங்களுக்குப் பழகிடுச்சு. இது ரொம்ப நல்ல சூழல்தான். தமிழ் இன்டஸ்ட்ரியில மட்டும்தான் ஆங்கரை ஒரு மாதிரியும், நடிகர்களை ஒரு மாதிரியும் பார்க்கிறாங்க. நார்த்ல எல்லோரும் ஒண்ணுதான். அது இங்கேயும் சாத்தியமாகும். முக்கியமா, சோஷியல் மீடியாவைப் பார்த்து ரொம்பப் பயப்படுறாங்க. ஏதாவது பண்ணா மாட்டிக்குவோமேனு நினைக்கிறாங்க. தப்பை வெளிப்படையா பண்றதுக்கு இப்போ பயம் வந்திருக்கு. நல்லதுதானே?’’ 

"பிரபலங்கள் பார்வையில் யூ-டியூபர்ஸ் எப்படி?" 

"வியந்துதான் பார்க்கிறாங்க. பெரிய பெரிய ஹீரோக்கள் நடிக்கிற பட டீஸர் ஒரு மில்லியன் வியூஸ் தொடுமானு யோசிக்கும்போது, மைக் செட், நக்கலைட்ஸ் மாதிரியான யூ-டியூப் சேனல்களின் வீடியோக்கள் அசால்ட்டா ஒரு மில்லியன் வியூஸ் அடிக்குது. இது மாதிரியெல்லாம் நடக்கிறதை வியந்து பார்க்கிறதைவிட, அவங்களும் இதைப் பயன்படுத்திக்கணும்னு நினைக்கிறாங்க." 

``சினிமா என்ட்ரி எப்போ முடிவெடுத்தது?’’

``டிஜிட்டலிலிருந்து சினிமாவுக்கு வர்ற முதல் டீம் நாமளாதான் இருக்கணும்னு நினைச்சோம். ஆனா, `எரும சாணி’ டீம் முந்திக்கிட்டாங்க. ஒரு வருடமா கார்த்தி முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தான். பல தயாரிப்பாளர்கள்கூட கதை கேட்க வந்தாங்க. நான்தான் வெயிட் பண்ணச் சொன்னேன். ஏன்னா, படம் எடுக்குறது ஈஸி; அதை ரிலீஸ் பண்றதுதான் கஷ்டம். நல்ல பேனர் கிடைக்கட்டும். அதுவரை வெயிட் பண்ணுவோம்னு இருந்தோம். அப்போ, சிவகார்த்திகேயன் பேனர்ல படம் பண்ற வாய்ப்பு கிடைச்சது சந்தோஷம். இவ்வளவு நாள் வெயிட் பண்ணது வீணாகல!’’ 

``படம் எந்த மாதிரி இருக்கும்? நாஞ்சில் சம்பத் இதுல நடிக்கிறார்னு கேள்விப்பட்டோம்?’’

``கார்த்தியோட ஸ்க்ரிப்ட் முதல்ல மிஷ்கின் சார் இயக்கிய 'துப்பறிவாளன்' மாதிரி இருந்தது. அவனைக் கொஞ்சம் கொஞ்சமா மோல்டு பண்ணி, கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி மாதிரி மாத்தியிருக்கோம். கமர்ஷியல் ஜானர்ல ஒரு பக்காவான படமா இருக்கும். நாலு எபிசோடா பிரியிற திரைக்கதை. ஒவ்வொன்னும் ஒவ்வொரு விஷயத்தைப் பேசும். க்ளைமாக்ஸ்ல பக்கா சோஷியல் மெசேஜ் வெச்சிருக்கோம். ரியோ லீடிங் ரோல். நாஞ்சில் சம்பத் சார் படத்துல நடிக்கிறார். தவிர, விவேக் பிரசன்னா, ராதா ரவி நடிக்கிறாங்க. ஹீரோயின், புதுமுகம். சிவகார்த்திகேயன்கிட்ட கெஸ்ட்ரோல் கேட்டோம். 'தயாரிக்கிற எல்லாப் படத்திலும் நடிக்கிற மாதிரி ஆகிடும் பிரதர். வேண்டாம்'னு சொல்லிட்டார். பை தி பை... ஆர்ஜே விக்னேஷ் ஒரு முக்கியமான ரோல்ல நடிக்கிறார்.’’

``நாஞ்சில் சம்பத்துக்கு என்ன கேரக்டர்?’’ 

``அவர் சின்னதா பேட்டி கொடுத்தாலும், பெரிய சுவாரஸ்யம். நடிக்க வைக்கிறப்போ இன்னும் பல சுவாரஸ்யம் நடந்தது. அவருடைய ப்ளூப்பர்ஸை மட்டுமே தனி வீடியோவா ரிலீஸ் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். படத்துல அவர் ஒரு குத்தாட்டம் போட்டிருக்கார். அவரைச் சுற்றி பெண்கள் இருப்பாங்க. கேரக்டருக்குத் தேவைங்கிறதால, அவரும் ஒப்புக்கிட்டு ஆடினார். இந்த மாதிரியெல்லாம் பண்ணச் சொல்லும்போது, `நான் சம்பாதிச்சு வெச்ச பெருமையெல்லாம் பெருமூச்சு வாங்குது’னு சொன்னார். செட்டே வயிறு வலிக்க சிரிச்சோம். அவருடைய அடையாளமெல்லாம் படத்துல ஒரு பாட்டாவே இருக்கு. வெயிட் அண்ட் வாட்ச்!’’ 

`` `நவயுக ரத்தக்கண்ணீர்' பற்றி சொல்லுங்க?''

"இந்த நாடகத்தின் 16-வது எபிசோடு சென்னையில நடக்கப்போகுது. இவ்வளவு தூரம் வரும்னு நாங்களே எதிர்பார்க்கல. சொல்லப்போனா, முதல் எபிசோடுலேயே முடிஞ்சிடும்னு நினைச்சோம். வந்து பார்த்த பிரபலங்களும் அதைத்தான் சொன்னாங்க. சர்ச்சையான விஷயங்களைத் தெரிஞ்சேதான் வெச்சோம். அரசியல் மட்டுமல்லாம எல்லா விஷயமும் நாடகத்துல இருக்கு. அதனாலதான், இதை இன்னும் விட்டு வெச்சிருக்காங்கனு நினைக்கிறோம். தடை செய்யப்படும்னு நாங்களே ரொம்ப எதிர்பார்த்தோம். ஏன்னா, தடை பண்ணாதான் நாடகத்துக்குப் பெருமை. ஓப்பனா சொன்னா, இப்போவும் நாங்க தடை செய்யப்படணும்னுதான் எதிர்பார்க்கிறோம். அடுத்த நாடகத்துல நடிகர் சிவகுமார் சார் மொபலைத் தட்டிவிட்ட சம்பவமும் வரும். மக்களும் இப்படித்தான் எதிர்பார்க்கிறாங்க.’’