Published:Updated:

" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு!" - நடிகை நளினி

" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு!" - நடிகை நளினி
" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு!" - நடிகை நளினி

" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு!" - நடிகை நளினி

சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கிக்கொண்டிருப்பவர் `ஜாங்கிரி' மதுமிதா. தற்போது வெளியான 'விஸ்வாசம்' திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு தங்கையாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். காமெடி, வில்லி என இரண்டு கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்குபவர். கலகலப்பான மதுமிதா தனக்கு விரைவில் டும்டும்டும் என அறிவித்திருந்தார்.

மதுமிதாவுக்கும் அவருடைய தாய்மாமன் மகனும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயலுக்கும்15.02.2019 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பிரபலங்கள் பலர் நேரில் சென்று வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுடைய திருமண நிகழ்ச்சியில் முதல் ஆளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார் நடிகை நளினி. மதுமிதா திருமணம் குறித்து புன்னகையுடன் நம்மிடையே சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

`சின்ன பாப்பா பெரிய பாப்பா’ நிகழ்ச்சியில் நானும் மதுமிதாவும் சேர்ந்து நடிச்சோம். ரொம்பவே அன்பான பொண்ணு. எல்லோர்கிட்டேயும் அவ்வளவு அன்பா நடந்துப்பா. என்கிட்ட உரிமையா நிறைய விஷயங்கள் பேசுவா. ரொம்ப நாளா நான் அவளைத் திருமணம் செஞ்சுக்கோன்னு சொல்லிட்டே இருந்தேன். இப்போ என்னம்மா அவசரம்னு தள்ளிப் போட்டுட்டே இருந்தாள். அதெல்லாம் சரிபட்டு வராது... உனக்குன்னு ஒரு துணை வேணும். எத்தனை நாளுக்குத்தான் தனியாவே வாழ முடியும்? எனக்காக நீ திருமணம் செஞ்சுக்கணும்னு சொல்லிட்டே இருந்தேன். இன்னைக்கு அவளுடைய வாழ்க்கையில் புது அத்தியாயம் என்னால ஆரம்பமாகியிருக்குன்னு நினைக்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு.

மதுமிதா அவளோட சொந்த தாய்மாமா பையனைத்தான் திருமணம் செஞ்சிருக்கா. அவரைப் பார்த்துதான் சினிமா துறைக்குள் வரணும்னே இவ ஆசைப்பட்டுருக்கா. அவரே இவளுக்குத் துணையா கிடைச்சது அளவற்ற மகிழ்ச்சிம்மா... ஜோயல் குடும்பமும் மதுமிதா குடும்பமும் கிட்டத்தட்ட 18 வருஷத்துக்கும் மேலாகப் பேசிக்க மாட்டாங்களாம். இவங்களுடைய கல்யாணம் குடும்பங்களை ஒன்றிணைச்சிருக்கு. ஒட்டுமொத்த குடும்பமே இவங்களுடைய திருமணத்தைக் கொண்டாடிட்டு இருக்காங்க. நடிப்பு அவளோட மூச்சு. கேரியர் வேறு ஃலைப் வேறு என்கிற புரிதல் அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்கு. ஜோயலும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்ங்குறதுனால அவரால் மதுமிதாவைப் புரிஞ்சிக்க முடியுது. அவர் இயக்கும் படங்களில் மதுமிதா நடிக்கிறா. அவருக்கு எந்த வகையில் நாம சப்போர்ட்டா இருக்க முடியும்னு யோசிச்சு ஒவ்வொரு விஷயமும் பண்றா. அவர் இவளைப் பற்றி யோசிக்கிறார். இந்தப் புரிதல் போதும் இவங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியா கொண்டு போகிறதுக்குன்னு நினைக்கிறேன். கல்யாண பேச்சுவார்த்தை நடக்கும்போதெல்லாம் என்கிட்ட எதுவுமே சொல்லலை. அம்மா... இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தேன்ல இப்போ கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டேன். எப்பவும் நீங்க என் பக்கத்துலேயே இருக்கணும்னு சொல்லிக் கட்டி அணைச்சிக்கிட்டா!  அவ ஹாப்பியா இருக்கிறதைப் பார்க்க சந்தோஷமா இருக்கு.

எனக்கு மதுமிதா சொந்தப் பொண்ணு மாதிரி. அவளும் என்னை அம்மான்னுதான் கூப்பிடுவா. அம்மா என் திருமணத்துல நீங்கதான் முன்னாடி நிற்கணும்னு சொன்னா. என் பொண்ணு கல்யாணத்தை நான் முன்னாடி நின்னு நடத்தி வைக்காமல் இருப்பேனா..! காலையில் இருந்து இப்போ வரைக்கும் அவ கூடவேதான் இருக்கேன்! மாப்பிள்ளையும் என் பொண்ணும் சந்தோஷமா வாழணும்னு பிரார்த்தனை பண்ணிக்கிறேன் எனப் புன்னகைக்கிறார் நளினி.

அடுத்த கட்டுரைக்கு