Published:Updated:

``மோடி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்... அரசியல் பயோபிக் படங்கள்!’’

``மோடி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்... அரசியல் பயோபிக் படங்கள்!’’
News
``மோடி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்... அரசியல் பயோபிக் படங்கள்!’’

`நடிகையர் திலகம் (மகாநடி)’, `செல்லுலாய்ட்’, `பேட்மேன்’, `ராமானுஜன்’ என ஏதோவொரு துறையின் சாதனையாளர்களைப் பற்றி ஒருபுறம் பயோபிக் படங்கள் வந்துகொண்டிருந்தாலும், `சஞ்சு’, `ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’, `என்.டி.ஆர்’ என உள்நோக்கத்துடன் எடுக்கப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படங்களும் திரைக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன.

துவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுக்க வந்துகொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் `கப்பலோட்டிய தமிழன்’, `வீரபாண்டிய கட்டபொம்மன்’, `ராஜராஜசோழன்’ என நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே குத்தகைக்கு எடுத்திருந்த கோலிவுட்டின் பயோபிக் வகைத் திரைப்படங்கள், இன்று இளம் தலைமுறைக் கலைஞர்களாலும் நடிக்கப்படுகிறது. தமிழ் மட்டுமன்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் இதுதான் இன்றைய டிரெண்ட்டாகவும் இருக்கிறது. நீண்ட நாள்களுக்கு ஏதோவொரு பெரும் ஆளுமையின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருந்த பயோபிக் படங்கள், தற்காலத்தில் வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கைப் பரப்புரை எனப் பல வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன.

`நடிகையர் திலகம் (மகாநடி)’, `செல்லுலாய்ட்’, `பேட்மேன்’, `ராமானுஜன்’ என ஏதோவொரு துறையின் சாதனையாளர்களைப் பற்றி ஒருபுறம் வந்துகொண்டிருந்தாலும், `சஞ்சு’, `ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’, `என்.டி.ஆர்’ என உள்நோக்கத்துடன் எடுக்கப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படங்களும் திரைக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட பயோபிக் படங்கள் அரசியல் நோக்கத்துடன் வந்துள்ளன. அதில் சில ஆளுமைகள் இதோ...

எம்.ஜி.ஆர் :

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்து தமிழக அரசு கொண்டாடிவரும் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, இந்தப் படம் அரசு சார்பில் உருவாகி வெளியாகப்போகிறது. அரசே எடுத்து நடத்துவதால், இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் பற்றிய நெகட்டிவ் காட்சிகள் இடம்பெறாது எனவும், அதனால் இது ஒரு முழுமையான பயோபிக்காக இருக்காது என்றும் சினிமா விமர்சகர்களால் கூறப்படுகிறது.

என்.டி.ஆர் :

கடந்த மாதம் தெலுங்கில் `என்.டி.ஆர்: கதாநாயகுடு’ படம் வெளியானது. டோலிவுட் சூப்பர் ஸ்டாரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கையை மையப்படுத்தியது இது. மற்ற பயோபிக்குகளைப்போல் இல்லாமல் இது இரண்டு பாகங்களாக வெளியாகிறது. ராமராவின் திரைத்துறை வாழ்க்கையை முதல் பாகமான `கதாநாயகுடு (கதாநாயகன்)' படத்திலும், அரசியல் வாழ்க்கையை `மஹாநாயகுடு (மகாநாயகன்)' என இரண்டாம் பாகத்திலும் படமாக்கியுள்ளனர். ஏற்கெனவே முதல் பாகம் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் 'மஹாநாயகுடு' திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.ஆராக பாலகிருஷ்ணா நடிக்க, 'வானம்' திரைப்படத்தை இயக்கிய கிருஷ் இந்த இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.

இதில் என்ன வேடிக்கை என்றால், என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை ராம்கோபால் வர்மாவும் வேறு ஒரு கோணத்தில் இயக்கியிருக்கிறார். ராமராவின் இரண்டாவது மனைவி லக்ஷ்மியின் கண்ணோட்டத்தில் சொல்லப்படும் திரைக்கதையில் அமைந்திருக்கும் இந்தப் படத்துக்கு, 'லக்ஷ்மிஸ் என்.டி.ஆர்' எனப் பெயரிட்டுள்ளனர். அண்மையில் வெளியான முன்னோட்டத்தின் மூலம், ராமராவின் வாழ்க்கையைப் பற்றி வெளியுலகத்துக்குத் தெரியாத பல செய்திகள் இந்தப் படத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா :

என்.டி.ஆருக்காவது இரண்டு வெர்ஷன்தான். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படங்கள் கணக்கிலடங்காது. இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி, கெளதம் மேனன், லிங்குசாமி, பாரதிராஜா எனப் பலரால் ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படம், வெப் சிரீஸ் என இரண்டு வடிவங்களிலும் உருவாக்கப்படுகின்றன. இதில், பிரியதர்ஷினியின் படம் 'அயர்ன் லேடி' என்றும், கெளதம் மேனன் எடுக்கும் பயோபிக் 'குயின்' எனவும் பெயரிடப்பட்டு, படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வருகிறது. பிற இயக்குநர்களின் படங்கள் அறிவித்த நிலையிலும், ஸ்கிரிப்ட் எழுதும் நிலையிலும் இருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த இறுதி 75 நாள்கள் குறித்த காட்சிகளைத் திரைப்படத்தில் சேர்ப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகப் பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பால் தாக்கரே :

`மாஹாராஷ்ட்ரா மராத்தியருக்கே!' என்ற உணர்வையும் முழக்கத்தையும் வலுவாக அரசியல் களத்தில் உச்சரித்த தலைவர்களில், பால் தாக்கரே முதன்மையானவர். இனவாதம், பிரிவினைவாதம், அடிப்படைவாதம் எனப் பல வாதங்களுக்குள் அடக்கப்பட்டாலும், இன்று வரை பெரும்பான்மையான மராத்தியருக்குத் தாக்கரே சூப்பர் ஹீரோதான். அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி மராத்தி, இந்தி என இரண்டு மொழிகளிலும் கடந்த மாதம் வெளியான படம், 'தாக்கரே'. பாராளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சில போல்டான காட்சிகள் வரவேற்பைப் பெற்றன. மேலும், படத்தில் இருந்த ஒரு சில குறைகளைக்கூட தாக்ரேயாக நடித்திருந்த நவாசுதீன் சித்திக்கியின் நடிப்பு மறைத்துவிட்டதாக அவருக்குப் புகழாரங்கள் வந்து சேர்ந்தன.

மன்மோகன் சிங் :

மற்ற படங்களைப்போல் வாழ்க்கையை மொத்தமாகச் சொல்லாமல், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தை மட்டும் விவரிக்கும் படமாக இருந்தது, 'தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்'. மன்மோகன் பிரதமராக இருந்தபோது, 2004 முதல் 2008 வரை பிரதமர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு ஆலோசகராகச் செயல்பட்ட சஞ்சய் பாரு 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் எழுதி வெளியிட்ட 'தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' புத்தகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. மன்மோகனை ஹீரோவாகவும், சோனியா காந்தியை வில்லியாகவும் வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், 2004 முதல் 2014 வரை பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சி வலுவாக விமர்சிக்கப்பட்டிருக்கும். திரைக்கதையில் தொய்வு இருந்தாலும், இந்தப் படம் தனக்கான கடமையைச் செவ்வனே செய்து முடித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடி :

வரவிருக்கும் பராளுமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க பிரசாரத்தின் ஓர் அங்கமாகவே பார்க்கப்படுகிறது, இந்தப் படம். விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தில், விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக நடிக்கிறார். நரேந்திர மோடியின் தேநீர்க் கடை நாள்கள் முதல் பிரதமராகி அவர் மேற்கொண்ட திட்டங்கள் வரை அனைத்தையும் அலசும் ஒரு படமாக இருக்கும் எனக் கூறப்பட்டு வந்தாலும், போஸ்டர்களைத் தவிர படக் குழுவினர் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவல்களும் இந்தப் படம் குறித்து வெளியாகவில்லை.