Published:Updated:

`` `தல’க்கே தலைப்புள்ள பொம்பளப்புள்ளதான்னு சொல்வேன்!’’ - `கலக்கப்போவது யாரு’ டி.எஸ்.கே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`` `தல’க்கே தலைப்புள்ள பொம்பளப்புள்ளதான்னு சொல்வேன்!’’ - `கலக்கப்போவது யாரு’ டி.எஸ்.கே
`` `தல’க்கே தலைப்புள்ள பொம்பளப்புள்ளதான்னு சொல்வேன்!’’ - `கலக்கப்போவது யாரு’ டி.எஸ்.கே

``கறுப்பா இருக்கோமா என்பது முக்கியமில்ல; பொறுப்பா இருக்கோமாங்றதுதான் முக்கியம்!’’ எனக் கலகலவெனப் பேச ஆரம்பிக்கிறார் டி.எஸ்.கே என அழைக்கப்படும் திருச்சி சரவணக்குமார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`கலக்கப்போவது யாரு’ சீஸன் 7-ல் அசாரும் சரவணனும் இணைந்து அசத்தி தங்களுக்கென தனி ரசிகர் வட்டாரத்தை வைத்திருந்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு முன்பே ஆதித்யா சேனலில் `தல தளபதி’ ஷோவில் கலக்கியவர்கள். தற்போது இருவரும் தனித்தனியாக இருக்கிறார்களாம். என்னவென்று சரவணக்குமாரிடம் விசாரித்தால் பதறுகிறார். 

``நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லைங்க. நாங்க எப்போவும் ஃப்ரெண்ட்ஸ்தான். இதுநாள் வரைக்கும் ஒண்ணாதான் வேலை பார்த்தோம். சில மாதங்களுக்கு முன்னாடி வரைக்கும்கூட வெளிநாடுகளுக்குப் போய் ஷோ பண்ணோம். நானும் அசாரும் பல வருட நண்பர்கள். இப்படி ஒரு புரளியைக் கிளப்பிவிடாதீர்கள்’’ எனச் சிரித்தவரிடம், அவரின் சொந்தக் கதையைக் கேட்க உட்கார்ந்துவிட்டேன். 

`முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’னு ஒரு வாக்கியம் சொல்வாங்க. அதற்கு எடுத்துக்காட்டா என்னைச் சொல்லலாம். எத்தனையோ தோல்விகள், காயங்கள், அவமானங்களைத் தாண்டி வந்திருக்கேன். என் கலர்கூட எனக்கு மிகப்பெரும் தடையா இருந்திருக்கு. ஆனால், அதுதான் என்னுடைய பெரிய ப்ளஸ்ஸா இன்னைக்கு மாறி, `கலக்கப்போவது யாரு 7’ டைட்டில் வின்னர் பட்டத்தைக் கொடுத்திருக்கு. `கேபிஒய்’ முடிச்சதும், பல வெளிநாட்டுப் பயணங்கள் பண்ணியிருக்கோம்’’ என்றவர், தொடர்ந்தார்.

2007-ம் வருடம் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டா முயற்சி செய்து இந்த ஃபீல்டுக்கு வந்தேன். இசையருவி, மக்கள் டிவி, கலைஞர் டிவி என ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அப்படி ஒரு ஷோவில் அசாரும் நானும் சந்தித்து ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். ஒவ்வொரு டிவியா ஏறி இறங்கிட்டு இருந்தப்போதான், விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சிக்கு ஆடிஷன் வருதுனு ஈரோடு மகேஷ் அண்ணா சொன்னார். அதுல செலக்ட் ஆனோம். கடைசி வரை எங்களால வர முடியல. பிறகு, ஆதித்யாவில் 'டபுள் கலாட்டா', 'சின்னவனே பெரியவனே' நிகழ்ச்சிகளை நானும் அசாரும் இணைந்து பண்ணோம். 'ஜாலி' வசந்த் சார்தான், 'ரெண்டுபேர் காம்போவும் நல்லா இருக்கு, தொடர்ந்து இப்படியே பண்ணுங்க'னு சொன்னார். அவர் கொடுத்த எனர்ஜிதான், இப்போது எங்களை உயிர் நண்பர்களாகவும் மாற்றியிருக்கிறது’’ என்று முடித்தவரிடம், தற்போதைய புராஜெக்ட்ஸ் குறித்துக் கேட்டேன்.  

`` `மன்மதன்’ பட புகழ் மந்த்ரா பேடி, ஜி.வி.பிரகாஷ் நடிச்சிருக்கும் `அடங்காதே’ படத்துல நடிச்சிருக்கேன். ஹரிஷ் கல்யாண் கூட ஒரு படம் பண்றேன். விஜய் சேதுபதி கூட தனியா ஒரு படம். தமன்னா கூட நடிக்கிறேன். லாரன்ஸ் தம்பி நடிக்கிற ஒரு படத்தில் நடிக்கிறேன். கூடவே, சிவகார்த்திகேயன் படத்திலும் நடிக்க வாய்ப்பு அமைஞ்சிருக்கு!’’ எனப் பட்டியலை அடுக்குகிறார்.

`` `கலக்கப்போவது யாரு சீஸன் 7’ டைட்டில் வின்னர் ஆனதும், அமெரிக்காவில் `டபுள் ட்ரபிள்’ என்ற ஷோவை ரெண்டுபேரும் சேர்ந்து 40 நாள்கள் பண்ணோம். எங்களால அந்த நாள்களை மறக்கவே முடியாது. பொதுவாக நானும் அசாரும் இப்போல்லாம் ஈவெண்ட்ஸ்லதான் அடிக்கடி மீட் பண்றோம்.

ஆரம்பத்தில் அவன் வீட்லதான் எப்போவும் இருப்பேன். ஆதித்யா டிவியில ஷோ பண்ணப்போ, கதிரும் நானும் ஸ்கிரிப்ட்டுக்காக அங்கேதான் கிடப்போம். காபி, டீ, ஸ்நாக்ஸ், சுடுதண்ணி எல்லாம் வெச்சுக் கொடுப்பாங்க அவங்க அம்மா. எங்க நட்புக்கு வயசு 13 வருடம். நான் இந்த ஃபீல்டுக்கு வந்தும் அவ்வளவு வருடம் ஆகிடுச்சு. எனக்குக் காமெடி மட்டுமல்ல, நல்லா பாடவும் தெரியும். இதுவரை 12 ஆல்பம்ல பாடியிருக்கேன். கூடிய சீக்கிரம் ரிலீஸ் பண்ணப்போறேன். அதேபோல நல்ல கிரிக்கெட்டர். ஸ்கூல்ல இருக்கும்போது கிரிக்கெட் டீம்ல இருந்திருக்கேன்’’ என்றவரிடம் சில கேள்விகள்.   

``காதல் நினைவுகள்?’’ 

``எதிர்பாராதவிதமாதான் என் மனைவி வைஷ்ணவியைப் பார்த்தேன். ஒரு கல்லூரிக்கு விருந்தினரா போயிருந்தேன். அங்கிருந்த எல்லாப் பொண்ணுங்களும் என்கிட்டஆட்டோகிராப் வாங்கினாங்க. ஒரு பொண்ணு மட்டும் தனியா நின்னுக்கிட்டிருந்தாங்க. கடைசியா நான் கிளம்புறப்போ, `நல்லா பண்ணீங்க’னு கை கொடுத்து வாழ்த்தினாங்க. அதைக் கவனிச்சுக்கிட்டு இருந்த வார்டன் கூப்பிட்டு, அவங்களைத் திட்டியிருக்காங்க. அதையெல்லாம் பின்னாடி என்கிட்ட சொன்னாங்க. பிறகு, நாங்க அடிக்கடி மீட் பண்ணிக்கிட்டோம். அப்புறம், காதல். வீட்டுல சொல்லி, கொஞ்சம் பிரச்னை ஆச்சு. இப்போ, கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கோம். இரண்டு குடும்பமும் சமாதானம் ஆகிட்டாங்க.’’ 

``சினிமா, சீரியலில் மறக்க முடியாத விஷயங்கள்?’’ 

``நானும் என் மனைவியும் தீவிர விஜய் ரசிகர்கள். அவரைப் பார்க்கணும்கிறது எங்க கனவு. `வேட்டைக்காரன்’ ஷூட்டிங்ல அவரை சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த நேரத்தில் `மகான் கணக்கு’ படத்தில் முதல் முதலா நடிச்சுக்கிட்டு இருந்தேன். டப்பிங் முடிச்சுட்டு வரும்போது, ஏவி.எம் ஸ்டூடியோவுல `வேட்டைக்காரன்’ ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. உடனே ரோபோ ஷங்கருக்குக் கால் பண்றேன். `வேட்டைக்காரன் ஷூட்டிங் நடக்குது, தளபதியைப் பார்க்கணும்'னு சொன்னேன். 'இதோ வரேன்'னு கிளம்பி வந்துட்டாரு. விஜய்யை நேர்ல பார்த்ததும், மிரண்டுட்டேன். கனல் கண்ணன் மாஸ்டர்தான் என்னை அறிமுகப்படுத்தினார். 'டிவி-யில புரோகிராம் பண்றீங்கல்ல. பார்த்தேன் நல்லா பண்றீங்க'னு பாராட்டி கை குலுக்கினார் விஜய். அந்தக் கையை ரெண்டு நாள் கழுவலயே. ரொம்ப முக்கியமான நாள் அது. அன்னைக்கு முழுக்க அங்கேதான் இருந்தேன். 

சீரியலைப் பொறுத்தவரை, 'ராஜா ராணி'யில கபடி போட்டியை ஹோஸ்ட் பண்ற மாதிரி கெஸ்ட் ரோல் பண்ணேன். பெரிய வரவேற்பு கிடைச்சது. இதுவரை 12 ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணியிருக்கிறேன். பிறகு, நேரம் கிடைக்காததால டிவி சீரியல் பண்ணல. இனி என்னை அடிக்கடி யூடியூப்ல பார்க்கலாம்.

ஆரம்பத்தில் என் கலரை நினைத்து ரொம்பவே ஃபீல் பண்ணியிருக்கிறேன். அசாருக்காக அதிகமாக மேக்கப் போட்டிருக்கேன். கறுப்பும் ஒரு நிறம்தான்னு நானே என்னை சமாதானப்படுத்திக்கிட்டேன். ஏன்னா, கறுப்பா இருக்கோமேங்கிறது முக்கியமில்ல; பொறுப்ப இருக்கோமாங்கிறதுதான் முக்கியம்.’’

``குடும்பம், குழந்தை பற்றி?’’

``அம்மா, அப்பா, எனக்கு ஒரு தங்கை, தம்பி இருக்காங்க. எனக்குப் பொண்ணு பிறந்து நான்கைந்து மாதங்கள்தான் கூட இருந்தேன். இப்போவரைக்கும் கேரளாவுக்குக் கூட்டிட்டுப் போகலைனு என் மனைவி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. `காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்பதுதான், மிமிக்ரியைப் பொருத்தவரை பழமொழி. அதற்குத்தான் ஓடிக்கிட்டு இருக்கேன். என் தம்பி விக்கி சிம்பு (சிம்புவோட தீவிர ரசிகன். அதனால, பெயரையும் இப்படி மாத்திக்கிட்டான்) இன்ஸ்டாகிராம்ல பெரிய செலிபிரிட்டி. அவனும் நானும் சேர்ந்துதான் மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சோம். அவனுக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. 'பியர்ட் ஐகான்' விருது வாங்கியிருக்கான். அந்தக் கேடர்ல இந்திய அளவுல டாப்ல இருக்கான். சிவகார்த்திகேயனோட படம் பண்றார். சித்தார்த் கூட ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கார்.   

தங்கச்சி சங்கீதா, ஸ்பெஷல் சைல்டு. வெளியில இருக்கிறவங்க என்னவேணா சொல்லலாம். குடும்பத்துக்குள்ளே அப்படி ஒரு குழந்தை இருக்கும்போதுதான், அது எவ்வளவு வலினு புரியும். அவங்களும் நம்ம குழந்தைதான் என்பதைப் புரிஞ்சுக்கணும்னு பல மேடைகளில் சொல்லியிருக்கேன். பேராசிரியையா வேலை பார்க்கிறாங்க. அவங்களை மாதிரி இன்டலிஜன்டை பார்க்க முடியாது. அம்மா கலா, நல்லா பாடுவாங்க. என் மகள் பெயர், ரியா. 'தலைப் புள்ளையே பொம்பளைப் புள்ளையா?'னு கேட்கிறவங்ககிட்ட, `` `தல’க்கே தலைப்புள்ள பொம்பளைப் பிள்ளைதான்'னு சொல்லிடுவேன்’’ எனச் சிரிக்கிறார் சரவணக்குமார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு