Published:Updated:

'எல்.கே.ஜி' படத்துக்கு 5 மணி ஷோ..! ட்விட்டரில் விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி காரசாரம்

'எல்.கே.ஜி' படத்துக்கு  5 மணி ஷோ..! ட்விட்டரில் விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி காரசாரம்
'எல்.கே.ஜி' படத்துக்கு 5 மணி ஷோ..! ட்விட்டரில் விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி காரசாரம்

பல படங்களில் நகைச்சுவை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஆர்.ஜே.பாலாஜி, முதன்முறையாக லீட் ரோலில் நடிக்கும் படம் 'எல்.கே.ஜி'. இந்தப் படத்தை பிரபு என்பவர் இயக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் போஸ்டர்கள், டிரெய்லர் ஆகியவை இணையத்தில் கலக்கிவருகின்றன. இந்தப் படத்தில், அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.பாலாஜியின் அப்பாவாக நடித்திருக்கிறார். இந்தப் படம், வரும் 22-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதிலும், இந்தப் படத்துக்கு காலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், ஆர்ஜே.பாலாஜி.

அதற்கு ட்விட்டரில் கருத்து தெரிவித்த விஷ்ணு விஷால், " 5 மணி ஷோ தன் மதிப்பை இழந்துவருகிறது" என்று பதிவிட்டிருந்தார். அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. அடுத்தடுத்தும் பாலாஜி சாடியே ட்வீட் செய்துள்ளார். இறுதியில், சின்ன பட்ஜெட் படங்களுக்கும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கும்  5 மணி ஷோ கிடைப்பது ஆரோக்கியமான விஷயம்தான். நானும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், ஆரோக்கியமான விமர்சனங்கள் என்ற பெயரில் பொது மக்களைத் தவறாகப் பயன்படுத்தும் நபர்களைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது" என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த ஆர்ஜே.பாலாஜி, " 'எல்.கே.ஜி' படத்துக்கான புரொமோஷன் வேலைகள்ல இருக்கோம். எங்க படத்துக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைச்சிருக்கிறதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்காக எல்லோருக்கும் நன்றி தெரிவிச்சிக்கிறேன். நான் மிடில் கிளாஸ் பையன். என்கூட வேலை செஞ்ச முக்கால்வாசி பேருக்கு இது முதல் படம்.

இந்தப் படத்துக்கு, நாங்க உழைச்சு மெரிட்ல சீட் வாங்கினாதான் உண்டு. ஏன்னா, எங்க யூனிட்ல யாருடைய அப்பாவும் தீயணைப்புத் துறையில தலைமை பொறுப்புல இல்லை. அதை வெச்சு ஷோ எல்லாம் வாங்கமுடியாது. நல்லா படிச்சு பாஸ் ஆகி ஒரு படம் எடுத்திருக்கோம். திருப்பித் திருப்பி ட்விட்டர்ல பதில் சொல்ல கை வலிக்குது. அதனாலதான் இந்த வீடியோ. நாங்களே எங்களைப் பார்த்திருக்கிறோம். எங்களுக்கு யாரும் புரொமோஷன் பண்ணத் தேவையில்லை" என்று அந்த வீடியோ பதிவில் கூறியிருந்தார். அவருடன் காரில் நாஞ்சில் சம்பத்தும் இருந்தார். அதற்குப் பதிலளித்த விஷ்ணு விஷால், "என் அப்பா தீயணைப்புத் துறையில் கடந்த இரண்டு வருடமாகப் பணியாற்றிவருகிறார். வர்தா புயலின்போது பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் என்ன செய்தீர்கள் என்றும் தெரியும். மெரினா போராட்டத்தின்போதும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியும்' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்கள் இருவரின் மோதல், தமிழ் சினிமாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.