Published:Updated:

`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி!’- விஷ்ணு விஷால் 

`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி!’- விஷ்ணு விஷால் 
`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி!’- விஷ்ணு விஷால் 

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்ஜே. பாலாஜி கதை எழுதி நடித்திருக்கும் படம்தான் `எல்.கே.ஜி'. வரும் 22ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் காட்சியை காலை 5  மணிக்கே திரையிட ஒப்புதல் கிடைத்துள்ளதை ஆர்ஜே. பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதே சமயம், நடிகர் விஷ்ணு விஷால் ``5 மணி காட்சி தன் மதிப்பை இழந்து வருகிறது" என்றும் ``சின்ன பட்ஜெட் படங்களுக்கும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கும் 5 மணி ஷோ கிடைப்பது ஆரோக்கியமான விஷயம்தான். நானும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், ஆரோக்கியமான விமர்சனங்கள் என்ற பெயரில் பொது மக்களை தவறாகப் பயன்படுத்தும் நபர்களைக் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது" என ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு வீடியோ மூலமாக பதிலளித்த ஆர்ஜே.பாலாஜி, ``நான் மிடில் கிளாஸ் பையன். என்கூட வேலை செஞ்ச முக்கால்வாசி பேருக்கு இது முதல் படம். இந்தப் படத்துக்கு நாங்க உழைச்சு மெரிட்ல சீட் வாங்கினாதான் உண்டு. ஏனா, எங்க யூனிட்ல யாருடைய அப்பாவும் தீயணைப்புத் துறையில தலைமைப் பொறுப்புல இல்லை. அதை வெச்சு ஷோ எல்லாம் வாங்கமுடியாது. நல்லா படிச்சு பாஸ் ஆகி ஒரு படம் எடுத்திருக்கோம். திருப்பித் திருப்பி ட்விட்டர்ல பதில் சொல்ல கை வலிக்குது. அதனாலதான் இந்த வீடியோ. நாங்களே எங்களைப் பார்த்துக்கிறோம். எங்களுக்கு யாரும் புரோமோஷன் பண்ணத் தேவையில்லை" என்று கூறியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த விஷ்ணு விஷால், ``என் அப்பா தீயணைப்புத் துறையில் கடந்த இரண்டு வருடமாகப் பணியாற்றிவருகிறார். வர்தா புயலின்போது பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் என்ன செய்தீர்கள் என்றும் தெரியும். மெரினா போராட்டத்தின்போதும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியும்' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்கள் இருவரின் மோதல், தமிழ் சினிமாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து கேட்க, நடிகர் விஷ்ணு விஷாலை தொடர்பு கொண்டேன். அப்போது பேசியவர், ``முதலில் நான் அவரை மனதில் வைத்து ட்வீட் செய்யவில்லை. இந்த விவாதத்திற்குப் பிறகு, ஆர்ஜே.பாலாஜி எனக்கு கால் செய்து என்னிடமும் என் அப்பாவிடமும் `நான் அப்படி பேசியிருக்கக் கூடாது' என மன்னிப்பு கேட்டார். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, தேவையில்லாமல் என்  அப்பாவைப் பற்றி அவர் பேசியது எனக்குப் கோபம் வந்துவிட்டது. அது மட்டுமல்லாமல், நான் `காடன்' பட ஷூட்டிங்கின்போது அடிபட்டு ஓய்வு எடுத்து வருகிறேன். அப்படி இருக்கும் சூழலில் இப்படி ஒரு சம்பவம் என்னை மேலும் டென்ஷனாக்கியது. நானும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். இருவரும் எங்களின் ட்வீட்டுகளை டெலிட் செய்து சமாதானம் ஆகிவிட்டோம்" என்றார்.