Election bannerElection banner
Published:Updated:

``ரெளடி பேபி, கொலவெறி, ஆளப்போறான் தமிழன்... தமிழ்சினிமாவின் டாப் யூடியூப் ஹிட்ஸ்!’’

தார்மிக் லீ
``ரெளடி பேபி, கொலவெறி, ஆளப்போறான் தமிழன்... தமிழ்சினிமாவின் டாப் யூடியூப் ஹிட்ஸ்!’’
``ரெளடி பேபி, கொலவெறி, ஆளப்போறான் தமிழன்... தமிழ்சினிமாவின் டாப் யூடியூப் ஹிட்ஸ்!’’

``யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்ற சில தமிழ்ப் பாடல்கள் என்னென்ன, அதில் என்னென்ன ஸ்பெஷல்?’’

மிழ் சினிமா நாளுக்கு நாள் உலகளவில் பேசப்பட்டு வருகிறது. பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெளியான `2.0’ படமே அதற்கு சாட்சி. பல்வேறு முயற்சிகளையும் புதுப்புது டிரெண்டுகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது தமிழ் சினிமா. அந்தவகையில், யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்ற சில தமிழ்ப் பாடல்கள் என்னென்ன, அதில் என்னென்ன ஸ்பெஷல் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

ரௌடி பேபி :

இசை : யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள் : தனுஷ், தீ

கடந்த ஆண்டு வெளியான `மாரி 2’ படத்தில் இடம்பெற்ற `ரௌடி பேபி’ பாடல்தான் இன்றுவரை வைரல்! அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணம் பிரபுதேவாவின் நடன அமைப்பு. அதை விஷுவலாக வெளிக்காட்டிய தனுஷ் - சாய் பல்லவி அண்ட் கோ. மூன் வாக்கை ஷூ கையில் போடுவது, இருவரும் போட்ட குத்தாட்டம்... என இவர்கள் நடனமே தமிழ் சினிமாவுக்குப் புதிது. தற்போது வரை 225 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதிக பார்வைகள் பெற்ற தமிழ்ப் பாடல்கள் வரிசையில் இதுதான் டாப்!

ஒய் திஸ் கொலவெறி :

இசை : அனிருத்

பாடியவர் : தனுஷ்

இந்தப் பாடலுக்கு அறிமுகம் தேவையில்லை. படம் வெளிவரும் முன்னே இந்தப் பாடல் இணையத்தில் சக்கைபோடுபோட்டது. தமிழ் ரசிகர்களைக் கேட்க வைத்ததில் ஆரம்பித்து, வெளிநாடு வரை இந்தப் பாடல் ஃபேமஸ். `சூப் சாங்’, `சூப் பாய்ஸ்’ போன்ற வார்த்தைகள் எல்லாம் அந்தச் சமயத்தில்தான் டிரெண்டானது. உலகம் முழுதும் பார்க்கப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 175 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. `மாரி 2’ படம் வெளிவரும் வரை இதுதான் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல்கள் வரிசையில் முதல் இடத்தில் இருந்தது. சமீபத்தில்தான், தனுஷின் `ரௌடி பேபி’ இதை ஓவர்டேக் செய்தது. 

ஆளப்போறான் தமிழன் :

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

பாடியவர்கள் : கைலாஷ் கேர், சத்ய பிரகாஷ், தீபக் பூஜா

`மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை தமிழர்கள் அவர்களது அங்கீகாரமாகவே கொண்டாடினார்கள். விஜய் ஹை எமோஷனில் ஆடியது, தவ்விக் குதித்து வேட்டியை மடித்துக் கட்டியது என இந்தப் பாடல் செம செலிபிரேஷன் மோடில் எடுக்கப்பட்டிருக்கும். அதற்கு முக்கியக் காரணம் ரஹ்மானின் இசையும் விவேக்கின் வரிகளும்தான். இந்தப் பாடல் பலருடைய வாட்ஸப் ஸ்டேட்டஸ்களாகவும், காலர் டியூன்களாகவும் பட்டையைக் கிளப்பியது. இதுவரை 95 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது இந்தப் பாடல். 

வாயாடி பெத்த புள்ள :

இசை : திபு நினன்

பாடியவர்கள் : ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைக்கோம் விஜயலஷ்மி

அறிமுக இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கிய `கனா’ படத்தில் இடம்பெற்ற `வாயாடி பெத்த புள்ள’ பாடல், சிவகார்த்திகேயனின் செல்ல மகள் ஆரதானாவின் அழகிய குரலால்தான் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. தவிர, பல தகப்பன்களின் காலர் டியூனாகவும் இந்தப் பாடல் வலம் வந்தது. அவ்வளவு ஏன் சிவகார்த்திகேயன் வைத்திருக்கும் காலர் டியூன்கூட இதுதான்! பாடலாசிரியர் ஜி.கே.பி இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதினார். இப்பாடல் 96 மில்லியன் வியூகளைக் கடந்துள்ளது. 

குலேபா : 

இசை : விவேக் மெர்வின் 

பாடியவர்கள் : அனிருத்

அனிருத் வாய்ஸில் வெளிவந்த இப்பாடல்தான், பலருக்கும் எனர்ஜி பூஸ்டர். `பபுள்கம்’ பாடி பிரபுதேவாவின் அதகள டான்ஸ் இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பம்சம். இந்தப் பாடலுக்கு ஜானி என்பவர் கோரியோகிராஃபி செய்திருக்கிறார். பாடல் வரியாக வெளிவந்த சமயத்திலேயே ஊர் முழுக்க ஹிட்டடித்து பட்டையைக் கிளப்பியது. பின்னர் வீடியோவாக வெளியானதைத் தொடர்ந்து, தற்போது வரை
94 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்பாடலின் நடனத்துக்காக ஆனந்த விகடன் விருதைப் பெற்றார் ஜானி.   

டானு டானு டானு :

இசை : அனிருத்

பாடியவர் : அனிருத், அலிஷா தாமஸ்

அனிருத்தின் வைரல் பாடல்கள் வரிசையில் கட்டாயம் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். இப்போதும் அவர் குரலில் வெளிவரும் எல்லா பாடல்களுமே டாப் டக்கர்தான். இருப்பினும், இந்தப் பாடல் வெளிவந்த சமயத்தில் இவர் பாடிய பாடல்களுக்குள்ளேயே போட்டி நிலவியது. அந்த வரிசையில், `மாரி’ படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல்தான் அந்தச் சமயத்தின் காதலர்களின் ரொமான்ஸ் பாடல். இதுவரை வாட்ஸப் ஸ்டேட்டஸ்களாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறது. தனுஷ் வரிகள் எழுதியிருக்கும் இப்பாடல், தற்போது வரை 75 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

மறுவார்த்தை பேசாதே :

இசை : தர்புகா சிவா

பாடியவர் : சித் ஶ்ரீராம்

சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் உள்ள கேள்வி, 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் எப்போது வெளிவரும் என்பதுதான். காரணம், `மறுவார்த்தை பேசாதே’ எனும் ஒற்றைப் பாடல். பாடல் வெளிவந்து ஒரு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. படம் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும், இப்பாடலை ரிப்பீட் மோடில் கேட்கும் ரோமியோ - ஜூலியட்கள் ஏராளம். கவிஞர் தாமரையின் வரிகள், பாடல் இந்தளவுக்கு ஹிட்டடிக்க ஒரு காரணம். இன்னொரு காரணம், இப்பாடலைப் பாடிய சித் ஸ்ரீராம். தர்புகா சிவா இசையில் வெளியான இப்பாடல், இதுவரை 73 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

சொடக்கு மேல சொடக்கு போடுது :

இசை : அனிருத்

பாடியவர் : அந்தோணி தாசன்

சூர்யா நடிப்பில் வெளியான படம், `தானா சேர்ந்த கூட்டம்.’ விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கினார். இந்தப் படம் வெளிவரும் முன்பே இதில் இடம்பெற்ற `சொடக்கு மேல’ பாடல் செம ஹிட். அந்தோணிதாசனின் குத்தாட்டக் குரலில் வெளியான இப்பாடல், யூடியூபின் டிரெண்ட் லிஸ்டில் அப்போது இடம்பெற்றது. இதுவரை 69 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அரசியல் சூழலுக்கேற்ப விக்‌னேஷ் சிவன் மற்றும் மணிஅமுதனின் வரிகள் அமைத்திருந்தனர். இப்பாடலுக்காக ஆனந்த விகடன் 2018-க்கான சிறந்த பின்னணிப் பாடகர் விருதை அந்தோணிதாசன் பெற்றார். 

உன் மேல ஒரு கண்ணு :

இசை : இமான்

பாடியவர்கள் : ஜித்தின் ராஜ், மகாலட்சுமி

பொன்ராம் இயக்கத்தில் வெளியான படம், `ரஜினி முருகன்.’ ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சிவகாத்திகேயன், கீர்த்தி சுரேஷ் இருவரது சினிமா கரியரிலும் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக அமைந்தது. காமெடி, சென்டிமென்ட், காதல் எனக் கலந்துகட்டிய கமர்ஷியல் படமாக பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலைப் பெற்றது. இதில் இடம்பெற்ற `உன் மேல ஒரு கண்ணு’ பாடல் அந்த சமயத்திலேயே யூடியூப் பார்வைகளை அள்ளிக் குவித்தது. இதுவரை 61 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

வாடி புள்ள வாடி :

இசை, பாடியவர் : 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி

தமிழில் ஆல்பம் பாடல்களை ஒரு தனித்துவத்தோடு அறிமுகப்படுத்தியவர் `ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. இவர் இயக்கி நடித்த படம், `மீசைய முறுக்கு.’ சுந்தர்.சி தயாரிப்பில் வெளியான இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் இடம்பெற்ற பாடல்தான், 'வாடி புள்ள வாடி'. படத்தில் பாடலாக வெளிவரும் முன்பே ஆல்பம் பாடலாகவும் வெளிவந்து, 21 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. நான்கு வருடங்களுக்கு முன்பு 21 மில்லியன் என்பது பெரிய சாதனை. தொடர்ந்து, படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலும் 54 மில்லியன் வியூகளைக் கடந்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு