Published:Updated:

``ரஹ்மானின் `கொத்தவரங்கா கொத்தவரங்கா’ டியூன்தான் `முஸ்தபா முஸ்தபா!’ ’’ - கதிர்

``ரஹ்மானின் `கொத்தவரங்கா கொத்தவரங்கா’ டியூன்தான் `முஸ்தபா முஸ்தபா!’ ’’ - கதிர்
``ரஹ்மானின் `கொத்தவரங்கா கொத்தவரங்கா’ டியூன்தான் `முஸ்தபா முஸ்தபா!’ ’’ - கதிர்

இயக்குநர் கதிர் தன்னுடைய காதல் படங்கள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

``திருநெல்வேலி பையன் நான். சென்னையில் ஃபைன் ஆர்ட்ஸ் படிச்சேன். செலவுக்குக் காசு வேணுமேனு, சினிமா போஸ்டர்ஸ் டிசைன் பண்ற வேலை பார்த்தேன். என்னை சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டு வந்தது பாக்யராஜ் சார்தான். அவருடைய `அந்த ஏழு நாட்கள்’, `டார்லிங் டார்லிங் டார்லிங்’ படங்களுக்கு நான்தான் போஸ்டர் டிசைனர். மணிரத்னம் சாரின் முதல் படமான `பகல்நிலவு’வுக்கும் நான்தான் டிசைன் பண்ணேன்’’ - மகிழ்ச்சியாக உரையாடலைத் தொடங்கினார், `இதயம்’, `காதல் தேசம்’, `காதலர் தினம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களின் இயக்குநர் கதிர். பல வருடங்களாக தமிழ் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்த கதிரை சந்தித்துப் பேசினேன். 

``இயக்குநர் கதிர் காதல் படங்களை மட்டுமே இயக்கக் காரணம் என்ன?’’

``காதல் ரொம்ப அழகானது. அதைத் திரையில் இன்னும் அழகா காட்ட நினைச்சேன். அதனாலதான், காதலை மையப்படுத்தியே என் படங்கள் இருந்தது. முக்கியமா, என் படங்களின் ஹீரோயின்கள் எல்லோரையும் கவித்துவமாவே காட்டியிருப்பேன். என்னைக்குமே காதல் முதல் சந்திப்புலதான் வரும். அவளுடைய கேரக்டரைப் பார்த்தெல்லாம் வராது. ஏன்னா, பையன் ஒருவன் பொண்ணை ரொம்பநாளா பஸ் ஸ்டாப்ல காத்திருந்தே பார்ப்பான். அவளுடைய பெயர், ஊர் எதுவும் தெரியாது. ஆனா, அவளுடைய ஒற்றைக் கண் பார்வையில் விழுந்திருப்பான். `இதயம்’ படத்துல இதை அழகா சொல்லியிருப்பேன். ஹீரோ முரளி ஒரு சின்னக் கல்லைத் தட்டிவிட்டுக்கிட்டே ரோட்டுல நடந்து போயிட்டு இருப்பான். அப்போ, ஒரு சின்னக் குட்டை மாதிரி தண்ணி தேங்கி நிற்கும். கல்லைத் தட்டப் போவான். அதுல ஒரு அழகான பெண்ணின் முகம் தெரியும். உடனே காலைப் பின் வாங்கிடுவான். இப்படித்தான் ஒவ்வொரு காட்சியையும் கவிதையா எடுப்பேன்.’’

``ஹீரோ, ஹீரோயினைத் தொட்டுக்கூட பேசாத காதல் படங்களை நீங்கதான் அறிமுகப்படுத்துனீங்கனு நினைக்கிறேன்...’’ 

``ஆமா, `இதயம்’ படத்துல நடிகை ஹீராவை அறிமுகப்படுத்துறப்போ, அவங்க அம்மா, `என் பொண்ணு நடிக்கமாட்டா... அவ யு.எஸ்ஸுக்குப் படிக்கப் போறா’னு தவிர்த்தாங்க. `இந்தக் காதல் கதை நீங்க நினைக்கிற மாதிரி இருக்காது. ஹீரோ, ஹீரோயினைத் தொட்டுக்கூட பேசமாட்டார்'னு சத்தியம் பண்ணி ஹீராவை நடிக்க வெச்சேன். வழக்கமான காதல் கதையில ஹீரோ, ஹீரோயினைக் கட்டித் தழுவுற காட்சியெல்லாம் இருக்கும். என் படத்துல அதெல்லாம் இல்லாம, இயல்பா இருக்கட்டும்னு நினைச்சேன்.’’

`` `பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ பாடலுக்குப் பின்னாடி ரியல் லைஃப் ஸ்டோரி இருக்குனு கேள்விப்பட்டிருக்கோம்?’’ 

``நான் உதவி இயக்குநரா இருந்தப்போ, ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு நடுவரா போனேன். பல கல்லூரியைச் சேர்ந்தவங்க அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டாங்க. அப்போ, கிராமத்துல இருந்து வந்த ஒரு பையன் பாட மேடைக்கு வந்தான். அவனைப் பார்த்ததும், மற்ற காலேஜ் பசங்க கலாய்க்க ஆரம்பிச்சாங்க. அப்போ, ஒரு ஹம் பண்ணான். மொத்த அரங்கமும் அமைதியா அவன் பாட்டை ரசிக்க ஆரம்பிச்சாங்க. இந்தக் காட்சியை அப்படியே `இதயம்’ படத்துல வெச்சுட்டேன். இந்தப் படம் சில்வர் ஜுப்ளி ஹிட்!’’

``படத்துக்கு `காதல் தேசம்’னு டைட்டில் வெச்சு, க்ளைமாக்ஸ்ல நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தீங்களே... ஏன்?’’

```காதல் தேசம்’ படம் எடுத்தப்போ, பாலிவுட்ல இருந்து தபுவை தமிழுக்கு அறிமுகப்படுத்தினேன். படத்துக்கு முதல்ல `கல்லூரி சாலை’னு டைட்டில் வெச்சேன். ஆனா, தயாரிப்பாளர் குஞ்சுமோன் இன்னும் இம்ப்ரஸ் பண்றமாதிரி டைட்டில் வைங்கனு சொன்னதால, `காதல் தேசம்’னு பெயர் வெச்சோம். இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இயக்குநர் ஜனநாதன் `இந்த க்ளைமாக்ஸ் காட்சியைப் பற்றியே 50 புத்தகம் எழுதலாம்’னு வாழ்த்தியது மறக்க முடியாத அனுபவம்.’’

`` `காதலர் தினம்’ல டெக்னாலாஜி வழியா காதலைச் சொல்லலாம்னு எப்படித் தோணுச்சு?’’

``கம்ப்யூட்டரைப் பற்றி மக்களுக்குப் பெருசா அறிமுகம் இல்லாத காலத்துல காதலர் தினம்’ படத்துல அப்படி வெச்சேன். படத்தோட கதையை பெங்களூர்ல ஒரு பிரவுஸிங் சென்டர்லதான் எழுதினேன். பொதுவாவே நான் இளைஞர்கள் அதிகமா இருக்கிற இடங்களை சுத்திக்கிட்டு இருப்பேன். அப்படித்தான் பெங்களூர்ல கம்ப்யூட்டர் எனக்கு அறிமுகம் ஆச்சு. அதைப் பற்றி என் உதவி இயக்குநர்கள்கிட்ட விவாதிச்சேன். அவங்க கம்ப்யூட்டர், இ-மெயில் பற்றியெல்லாம் சொன்னாங்க. உதவி இயக்குநர்கள்ல ஒருத்தனோட கேர்ள் ஃபிரெண்ட் அமெரிக்காவுல இருந்தா. `நாங்க இ-மெயில் மூலமாதான் பேசிக்குவோம்’னு சொன்னான். தவிர, அவளுடைய போட்டோவை கம்ப்யூட்டர்ல டவுன்லோடு பண்ணிக் காட்டினான். இதையெல்லாம் என் படத்துல சேர்த்துக்கிட்டேன். 

ஹீரோ குணாலுக்கு இது முதல் படம். அவரைக் கண்டுபிடிச்சதே சுவாரஸ்யமான விஷயம். ஒரு காபி ஷாப்ல உட்கார்ந்திருந்தப்போ, என்னைக் கடந்து போனான். அவனுடைய ஹேர் ஸ்டைல் வித்தியாசமா இருந்தது. உடனே, என் உதவி இயக்குநரை அழைத்து, `அந்தப் பையனைக் கூப்பிடு’னு சொன்னேன். குணால் என் முன்னாடி வந்து நின்னான். `நான் ஒரு இயக்குநர். என் படத்துல நடிக்கிறியா’னு கேட்டேன். `நான் ஆர்மியில சேர வந்திருக்கேன்’னு சொன்னான். `ஓகே... உன் விருப்பம். உனக்கு நடிக்க சம்மதம்னா, நாளைக்கு இதே காபி ஷாப்புக்கு 11 மணிக்கு வா'னு சொல்லிட்டு வந்துட்டேன். அடுத்த நாள் குணால் வந்தான். என் படத்துல நடிச்சுட்டான்.’’

``கவிஞர் வாலிக்கும் உங்களுக்குமான உறவு?’’ 

``என் எல்லாப் படங்களிலும் வாலி சார் பாடல் எழுதுவார். 

`குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால், வாடகை என்ன தரவேண்டும்.’  

- இந்த மாதிரியான வரிகளில் பல்லவி வேணும்னு கேட்டேன். உடனே, `என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன்'னு வரிகளைக் கொடுத்தார். அவர் எனக்குக் கிடைத்த பெரிய கிஃப்ட். அவர்கிட்ட பாடல் எழுதச் சொல்லப்போனாலே, `என்னய்யா... படத்துல அஞ்சு பாட்டு. எல்லாமே காதல் பாட்டு அப்படித்தானே... காதல் தவிர உனக்கு வேற எதுவுமே தெரியாதாய்யா’னு கிண்டல் அடிப்பார். என் படங்களுக்குப் பாடல் வரிகள் எழுதி, அவருடைய வருமான வரி அதிகமாகிடுருச்சுனு அடிக்கடி சொல்வார்.’’  

`` `இதயம்’ தவிர உங்க எல்லாப் படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை. அவரிடம் பணிபுரிந்த அனுபவம்?’’

``ஒரு புதிய இசையமைப்பாளர் நம்ம படத்துக்கு வொர்க் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. `ரோஜா’ ரிலீஸுக்கு ரெடியா இருந்த சமயம் அவரை சந்திச்சேன். அவருடைய `ஒரு வெள்ளை மழை...’ பாடல் டியூனை போட்டுக்காட்டினார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே பத்தாயிரம் ரூபாயை நண்பர்கிட்ட கடன் வாங்கி, ரஹ்மானுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்தேன். பிறகு, `ரோஜா’ ரிலீஸாகி, ரஹ்மான் தேசிய விருதும் வாங்கினார்.  

பல கல்லூரிகளில் இன்னைக்குவரை ஃபேர்வெல் பார்ட்டின்னா, `முஸ்தபா முஸ்தபா’ பாட்டைத்தான் கேட்க முடியுது. இந்தப் பாட்டுக்காக முதல்ல ரஹ்மான் ஒரு டியூன் போட்டார். அது எனக்குப் பிடிச்சிருந்தது, ரஹ்மானுக்குப் பிடிக்கலை. அவர் எப்போவுமே பாட்டை விற்கமாட்டார். அவருக்குப் பிடிச்சிருந்தா மட்டுமே கொடுப்பார். `நான் பெங்களூர் போறேன், என்கூட வாங்க டியூன் ரெடி பண்ணிக் கொடுக்கிறேன்’னு கூட்டிக்கிட்டுப் போனார். ரெண்டுநாள் அவர்கூட இருந்தேன். டியூன் செட் ஆகலை. பிறகு, `மும்பை போறேன், அங்கே வாங்க’னு சொன்னார். போனேன். அங்கே போனபிறகும் செட் ஆகலை. திரும்ப சென்னைக்கே திரும்பினோம். ஃபிளைட்ல ரஹ்மான் கையில இருந்த சோனி ஐபேட், ஹெட் போனை என்கிட்ட கொடுத்து ஒரு டியூன் கேட்கச் சொன்னார். `கொத்தவரங்கா, கொத்தவரங்கா’னு டம்மியா பாடி, `முஸ்தபா முஸ்தபா’ டியூன் போட்டிருந்தார். `என்ன... இப்படி இருக்கே’னு நான் எதுவும் சொல்லலை. சென்னைக்கு வந்ததுக்குப் பிறகு, இந்த டியூனைக் கேட்டுக்கிட்டே இருந்தேன். கேட்கக் கேட்க எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. இப்படி உருவானதுதான், `முஸ்தபா முஸ்தபா’ பாட்டு!’’

`` `காதல் வைரஸ்’ படத்துக்கு ஹீரோயினா முதலில் த்ரிஷாகிட்ட பேசியதா கேள்விப்பட்டிருக்கோம். உண்மையா அது?’’ 

``த்ரிஷாவை `மிஸ் சென்னை’ அழகியா தேர்ந்தெடுத்த குழுவில் நானும் இருந்தேன். அப்போவே த்ரிஷா அம்மாகிட்ட, `உங்க பொண்ணு என் படத்துல நடிக்கணும்’னு கேட்டேன். த்ரிஷா அப்போ ஸ்கூல் பொண்ணு. அதனால, `காதல் வைரஸ்’ல அவங்களால நடிக்க முடியலை. இப்போ, காலங்கள் ஓடிடுச்சு. சில வருடங்கள் சினிமாவுக்கு இடைவெளி விட்டுட்டேன். சீக்கிரமே என் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும். எனக்கு மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படமா எடுக்கணும்னு ஆசை. அதுக்குத்தான் இப்போ நிறைய படிச்சுக்கிட்டு இருக்கேன். பல தயாரிப்பாளர்கள் `இதயம்’, `காதலர் தினம்’, `காதல் தேசம்’ படங்களின் பார்ட் 2 எடுக்கச் சொல்லிக் கேட்டிருக்காங்க. கண்டிப்பா, நல்ல கதை அமையும்போது காதல் படம் எடுப்பேன். ஏன்னா, காதலும், காதல் சார்ந்த இடங்களும்தானே வாழ்க்கை!’’ என்று முடிக்கிறார் கதிர்.

அடுத்த கட்டுரைக்கு