Published:Updated:

“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா?”
“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா?”

“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா?”

பிரீமியம் ஸ்டோரி

“ ‘சொல்லாமலே’, ‘ரோஜாக் கூட்டம்’, ‘டிஷ்யூம்,’ ‘பூ’ விதவிதமான பின்னணியில காதலைச் சொன்னேன். காதலைத் தவிர வேறெதுவும் தெரியலையோன்னு நினைச்சப்போ, ‘555’, ‘பிச்சைக்காரன்’ படங்களைப் பண்ணினேன். இப்போ, புது முயற்சியா ‘சிவப்பு மஞ்சள் பச்சை.’ இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, ‘இவன் மூணு வருஷம் சும்மா இல்லை’னு எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க. இதுதான் எனக்குத் தெரியும்னு என்னை நான் பிராண்ட் பண்ணிக்க விரும்பல.” - “20 வருடத்துல 8 படங்களை மட்டுமே இயக்கியிருக்கீங்க, உங்களுக்குனு ஒரு ஜானரை ஃபிக்ஸ் பண்ணிக்காததுதான் காரணமா?” என்ற கேள்விக்கு இப்படி பதில் சொல்கிறார், இயக்குநர் சசி. 

“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா?”

‘` ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ன மாதிரியான படமா இருக்கும்?”

“நான் உதவி இயக்குநரா வொர்க் பண்ணின காலத்திலேயே டிராஃபிக் சிக்னலை மையமா வெச்சு ஒரு படம் பண்ணணும்னு யோசிச்சிருந்தேன். அந்த விதை இலை, கிளையெல்லாம் விட்டு மரமாகி நிற்க இவ்ளோ காலமாகிடுச்சு. ரெண்டு டிராக்ல பயணிக்கிற கதை. சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோ மோல் மூணுபேரைச் சுத்திதான் கதை நகரும். சிவப்பு, மஞ்சள், பச்சை ஒவ்வொரு நிறமும் ஒரு கேரக்டரைக் குறிக்கும். இவங்க உறவுமுறை, வர்ற சிக்கல்கள், அதுக்கான தீர்வு... இதைத்தான் படம் பேசப்போகுது. டிராஃபிக் போலீஸா சித்தார்த், ஸ்ட்ரீட் பைக் ரேஸரா ஜி.வி.பிரகாஷ் நடிச்சிருக்காங்க. இது என்னை ரொம்ப வேலை வாங்கிய படம். இனி இந்த ஜானர்ல படம் பண்ணப்போற இயக்குநர்களுக்கெல்லாம் இந்தப் படம் முன்னுதாரணமா இருக்கும்னு தாராளமா சொல்வேன். ‘பிச்சைக்காரன்’ படம் பார்த்துட்டு, ஏ.ஆர்.முருகதாஸின் மனைவி எனக்கு போன் பண்ணாங்க. ‘முதல் முறையா என் பையன் ஒரு படத்தைப் பார்த்துட்டு அழறான். ஏன்னு தெரியல, அழுகை வருதுன்னு சொல்றான்’னு சொன்னாங்க. ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு. இந்தப் படம் அதையும் தாண்டும்.”

“மற்ற நடிகர்கள், டெக்னிக்கல் டீம் பற்றி?”


“கேமராமேன் பிரசன்னா, எடிட்டர் ஷான் லோகேஷ், ஆர்ட் டைரக்டர் மூர்த்தி. சித்து குமார், நான் அறிமுகப்படுத்துற ஐந்தாவது இசையமைப்பாளர். மலையாள நடிகை லிஜோ மோல், புனே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் காஷ்மீரா ரெண்டுபேரும் ஹீரோயினா நடிச்சிருக்காங்க. ‘மாநகரம்’ மதுசூதனன், பிரேம், ‘பிச்சைக்காரன்’ல அம்மாவா நடிச்ச தீபா நடிச்சிருக்காங்க. ‘நக்கலைட்ஸ்’ தனம் அம்மா இந்தப் படம் மூலமா அறிமுகம் ஆகுறாங்க. அவங்களைப் பத்தி ஒரு விஷயம் சொல்லணும். ‘நக்கலைட்ஸ்’ல அலப்பறை பண்ற அம்மாவாதான் அவங்களை எல்லோருக்கும் தெரியும். ஆனா, அவங்க ஒரு சிறந்த செயற்பாட்டாளர். அவரும், அவங்க கணவர் சந்திரனும் சேர்ந்து பல போராட்டங்களை முன்னெடுக்கிறாங்க, பல பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கிறாங்க. அந்தக் கதையையெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்ல கேட்கிறப்போ அவங்கமேல மரியாதை அதிகமாகிருக்கு. இந்தப் படத்துல ஜி.வி-க்கு அத்தையா நடிச்சு, கலக்கியிருக்காங்க. நிச்சயம், இந்தப் படம் வந்ததுக்குப் பிறகு இவங்க நடிப்பைக் குறிப்பிட்டு விமர்சனம் எழுதுவீங்க; நிறைய வாய்ப்புகளும் அவங்களுக்கு வரும்.”

“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா?”

“சித்தார்த், ஜி.வி ரெண்டுபேருமே முக்கியமான நடிகர்கள்.... ஸ்பாட்ல எப்படி பேலன்ஸ் பண்ணீங்க?”

“நான் பார்த்த மோஸ்ட் சின்சியர் நடிகர், சித்தார்த். அடுத்தநாள் எடுக்கப்போற சீன் முதல்நாளே அவருக்குக் கிடைக்கணும். இல்லைனா, ஷூட்டிங்கே கிளம்பமாட்டார். சாதாரணக் காட்சியா இருந்தாலும், அதிகம் மெனக்கெடுற சித்தார்த் ஒரு வொன்டர்ஃபுல் ஆக்டர். அடுத்து, ஜி.வி.பிரகாஷ் குமார். இந்தக் கதைக்கு 20 வயசுப் பையன் லுக்ல ஒரு ஹீரோ தேவைப்பட்டார். தமிழ் இன்டஸ்ட்ரியில ஜி.வியைத் தவிர, அப்படி யாருமில்லை.  ஸ்பாட்ல அவர் நடிக்கிறதைப் பார்க்கிறப்போ, ‘இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாம்’னு தோணும். ஆனா, எடிட்டிங் டேபிள்ல பார்க்கிறப்போ, ஆச்சர்யப்படுத்தி யிருக்காரேன்னு நினைக்க வைப்பார், ஜி.வி.”

“500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கணும்னு ‘பிச்சைக்காரன்’ படத்துல பேசுன வசனம் நிஜத்துல நடந்தப்போ எப்படி ஃபீல் பண்ணீங்க?”

“என் உதவி இயக்குநர் பால் ஆண்டனி கொடுத்த ஐடியா அது. எனக்கும் 500, 1000 ரூபாய் நோட்டை ஒழிச்சுட்டா, பணத்தைப் பதுக்குறது குறையும்னு தோணுச்சு. டிமானிடைசேஷனுக்குப் பிறகு ஒரு வாரம் என் காது வலிக்கிற அளவுக்கு போன் கால்ஸ். மிஜோராம்ல இருந்தெல்லாம் ஒரு ராணுவ வீரர் பேசினார். நல்லவிதமா நினைச்சு வெச்ச காட்சி அது. ஆனா, அதுக்கு நேரெதிரா அதை ஒழிச்சுட்டு 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திட்டாங்க. எங்க நோக்கம் அர்த்தமில்லாமப்போச்சு. அடப்பாவிங்களா... 2000 நோட்டைப் பதுக்குறது இன்னும் ஈஸி ஆகிடுமேன்னு நினைச்சேன்.” 

“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா?”

“சிறுகதையைப் ‘பூ’ படமா எடுத்தீங்க. அதுக்குப் பிறகு எந்தக் கதையும் உங்களை இம்ப்ரஸ் பண்ணலையா?”

“எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலைப் படிச்சு, அவரை அழைத்துப் பேசினேன். அந்தக் கதைக்கு ரைட்ஸ் வாங்கிக்கிற பேச்சுவார்த்தை போச்சு. ஆனா, வேற படத்துல நான் பிஸியாகிட்டதுனால, ‘அடுத்து உங்ககிட்ட வர்றவரைக்கும் இந்த ரைட்ஸ் இருந்ததுன்னா, நான் எடுத்துக்கிறேன்’னு சொன்னேன். இயக்குநர் வெற்றி மாறன் முந்திக்கிட்டார். தனுஷ் நடிக்க, ‘அசுரன்’ ஆகியிருக்கு அந்த நாவல். நிச்சயம் அந்த நாவல் எனக்கான ஜானர் கிடையாது. அது வெற்றி மாறனுக்கான களம்தான். என்னைவிட அவர்தான் சூப்பரா அந்தக் கதையைப் பண்ணுவார். மத்தபடி, இரண்டு சிறுகதைகளைப் படமாக்கலாம்னு இருக்கேன். ஒரு சிறுகதைக்கு ரைட்ஸும் வாங்கிட்டேன்.”

“அரசியல் சினிமாக்கள் பற்றி உங்கள் கருத்து...?”

“அரசியல் இல்லாம மனிதன் இல்லை. என் மனைவியை நான் குறிப்பிட்டுப் பேசுறப்போ, ‘அவ இருக்காளே’ன்னு சொல்வேன். ஆனா, அவங்க என்னை ‘அவர் இருக்காரே’ன்னுதான் ஆரம்பிப்பாங்க. இதுவே பெரிய அரசியல்தான். இப்படித்தான் நான் அரசியலைப் பார்க்கிறேனே தவிர, அதை ஒரு அமைப்பா, அரசாங்கமா பார்க்கல. ‘எனக்கு அரசியல் பிடிக்காது’ன்னு ஒருத்தன் சொன்னா, அதுவே பெரிய அரசியல்தான். அரசியல் நிலைப்பாடு எல்லா மனிதனுக்கும் தேவை. அது இல்லாததனாலதான் நம்ம தமிழ்நாடு இன்னும் பல உயரத்தைத் தொடாம இருக்கு. தவிர, நான் அரசியல் படம் எடுக்காததுக்கும் ஒரு காரணம் இருக்கு. இங்கே எந்த அரசியலைப் பேசினாலும், எதிர்க்க ஒரு கூட்டம் ரெடியா இருக்கு. எதிர்ப்பு இல்லாமலும், சொல்ல வந்த விஷயத்தைக் கச்சிதமா சொல்றமாதிரியுமான ஒரு அரசியல் படம் நிச்சயம் பண்ணுவேன். ஏன்னா, எனக்குள்ளேயும் அரசியல் இருக்கு.”

கே.ஜி.மணிகண்டன்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு