Published:Updated:

“யோகிபாபுவால் ஒரு பாட்டைத் தூக்கிட்டேன்!”

தார்மிக் லீ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“யோகிபாபுவால் ஒரு பாட்டைத் தூக்கிட்டேன்!”
“யோகிபாபுவால் ஒரு பாட்டைத் தூக்கிட்டேன்!”

“யோகிபாபுவால் ஒரு பாட்டைத் தூக்கிட்டேன்!”

பிரீமியம் ஸ்டோரி

‘டார்லிங்’, ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கியவர், சாம் ஆன்டன். தற்போது அதர்வாவை வைத்து ‘100’, யோகி பாபுவை வைத்து ‘கூர்கா’ என இவர் இயக்கத்தில் இரண்டு படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. டப்பிங் வேலைகளில் பிஸியாக இருந்தவரைச் சந்தித்தேன்.

“உங்க சினிமா ஆர்வம், முதல் வாய்ப்பு  பத்தி...”

“இன்ஜினீயரிங் படிச்சேன். எனக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும். ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சித் தொகுப்பாளர் கீர்த்தி என் ஃப்ரெண்ட். அவங்க மூலமா  ‘மானாட மயிலாட’  ஷோ தயாரிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் கேப்டன் டிவியில வேலை பார்த்தேன். பொதுவா எனக்கு எந்த வேலை பார்த்தாலும், ஒரு வருடத்துல போர் அடிச்சுடும். புதுசா வேற ஒண்ணு டிரை பண்ணணும்னு தோணிடும். அப்பறமா  ‘ரா’ன்னு ஒரு பேய்ப்படம் இயக்கினேன். சில பிரச்னைகளால அது என் பெயர்ல வரல. ஆனா, அந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பிரின்ஸ் புரொடக்‌ஷன்ஸ் லக்‌ஷ்மண், என்னை ஞானவேல் சார்கிட்ட ‘இந்தப் பையன்கிட்ட ஏதோ இருக்கு’ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வெச்சார். அப்படி அவர் என்னை நம்பிக் கொடுத்த வாய்ப்புதான்,  ‘டார்லிங்’.”

“யோகிபாபுவால் ஒரு பாட்டைத் தூக்கிட்டேன்!”

“ ‘100’ - டைட்டிலே வித்தியாசமே இருக்கே?”

“நான் பண்ண ரெண்டு படமுமே காமெடிதான். சமூகப் பிரச்னையை போலீஸ் ஸ்டோரியா பண்ணணும்னு நினைச்சேன். தவிர, இதுவரை போலீஸா நடிக்காத ஒருத்தர் இந்தப் படத்துல நடிச்சா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணேன். எனக்குத் தெரிஞ்சு எல்லா ஹீரோக்களும் போலீஸ் ட்ரெஸ் போட்டுட்டாங்க. அதர்வா ‘ஈட்டி’ க்ளைமாக்ஸ்ல ஒரு சீன்ல மட்டும் தான் காக்கிச் சட்டை போட்டிருக்கார். ஸோ, அவர் கரெக்டா இருப்பார்னு தோணுச்சு. அடுத்து, ஹீரோயின் ஹன்சிகா. வேலையில ரொம்ப நியாயமா இருப்பாங்க. 9 மணி ஷாட்டுக்கு 7.30க்கே வந்து ஜாலியா சுத்திக்கிட்டிருப்பாங்க. இவங்க ரெண்டுபேரும் கரெக்டா இருந்ததால்தான் படத்தை 48 நாள்ல எடுக்க முடிஞ்சது. படத்தின் கதை கண்டிப்பா சோஷியல் மெசேஜ்தான். அவசரம்னா, எல்லோரும் 100-க்கு போன் பண்ணுவோம்ல... அதுதான் படத்தின் கரு.”

“உங்க ‘டார்லிங்’ ஜி.வி.பிரகாஷுக்கு இந்தப் படத்துல காக்கிச் சட்டை போட்டு அழகு பார்த்திருக் கலாமே?”

“ஏற்கெனவே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடுத்தடுத்து ரெண்டு படம் பண்ணிட்டோம். ‘இன்னுமா இவன்கூட சுத்தணும்’னு அவரும் டயர்டு ஆகிடுவார்.அதுமில்லாம, இந்தப் படம் பண்ணும்போது அவர் ரொம்ப  பிஸியா இருந்தார்.  அதர்வாவும் நான் நினைச்ச மாதிரியே கதைக்கு சூப்பரா ஃபிட் ஆனார். அதான்...”

“படத்தின் டீஸரைப் பார்க்கும் போது, பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைப் பேசியிருக்கிறதா தெரியுது. ஒரு இயக்குநரா பொள்ளாச்சி வன்கொடுமையை எப்படிப் பார்க்கிறீங்க?”

“பொள்ளாச்சி சம்பவம் நடந்தது இப்போதான். நாங்க படத்தை 2018-லேயே எடுத்துட்டோம். தவிர, எந்த வருஷம், எந்த மாசம், எந்தத் தேதி  நியூஸ் பேப்பரப் பார்த்தாலும் உலகத்தோட ஏதோ ஒரு மூலைல இதுமாதிரி ஒரு செய்தி இருக்கும். நிர்பயா வழக்கு தொடங்கி பொள்ளாச்சி வழக்கு வரை... நீதி சரியா கிடைக்குதா, சரியான நேரத்துல கிடைக்குதா என்ற விஷயங்களையும் ‘100’ பேசும்.” 

“யோகி பாபு கால்ஷீட்டுக்குப் பெரிய ஹீரோக்களே வெயிட் பண்றாங்க. நீங்க எப்படி அவர்கிட்ட வாங்கினீங்க?”

“ ‘எனக்கு இன்னோரு பேரு இருக்கு’ டைம்ல எனக்கு யோகி பாபு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டார். அப்போ அவர் ஃப்ரீயாதான் இருந்தார். ‘100’ கதையை அவர் ரோலை அவரை மட்டும்தான் மைண்டுல வெச்சு எழுதினேன். இந்தப் படத்துக்காக கன்ட்ரோல் ரூம் செட் போடவேண்டியிருந்தது. இதையெல்லாம் அவர்கிட்ட சொல்லித்தான் கால்ஷீட் வாங்கினேன். நாம நினைக்கிறதைவிட, மூணு மடங்கு உழைக்கிறவர் யோகி பாபு. அதேசமயம், கூட நடிக்கிறவங்களையும் பங்கம் பண்ணிடுவார். உதாரணத்துக்கு, இன்னொரு படமான ‘கூர்கா’வுல நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்றேன். ஒருநாள் பாட்டு ஷூட் பண்ணப் போயிருந்தோம். ஆனா, யோகி பாபுவும், ரவி மரியாவும் செம ஜாலி பண்ணி அந்தப் பாட்டையே மாத்தி, வேற லெவல் ஆக்கிட்டாங்க. மொத்தப் பாட்டையும் தூக்கிட்டு 20 நிமிடம் அவங்க பண்ணுன அட்ராசிட்டியைக் காட்சியா வெச்சுட்டோம். கண்டிப்பா அந்தக் காட்சிகள் எல்லோருக்கும் பிடிக்கும்.”

“யோகிபாபுவால் ஒரு பாட்டைத் தூக்கிட்டேன்!”

“ ‘கூர்கா’ படத்துக்கான ஐடியாவை எங்கிருந்து பிடிச்சீங்க?”

“ ‘100’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் போயிட்டிருந்தது. நானும், எடிட்டர் ரூபனும் படத்தை எடிட் பண்ணிக்கிட்டிருந்தோம். அப்போ நல்ல மழை. ஒரு காபி குடிக்கிறதுக்கு மாடிக்குப் போனப்போ, எனக்கு ஒரு இங்கிலீஷ் பட டீஸரைக் காட்டினார். விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி இருந்தது, அந்தப்படம். ‘இதுமாதிரி நாம ஒரு படம் பண்ணலாமே’ன்னு ரூபன்கிட்ட சொல்லி, நேரா யோகி பாபுவுக்கு போன் பண்ணினோம். ‘ப்ரதர் இப்போ செப்டம்பர், எனக்கு டிசம்பர்ல உங்க கால்ஷீட் வேணும். வித்தியாசமான ஒரு படம் பண்ணலாம்’னு சொல்லியிருந்தேன். இப்படி ஆரம்பிச்சதுதான், ‘கூர்கா.’ ஜாலியா ஒரு படம் பண்றதுதான் ஐடியா. இந்தப் படத்துல லீடு ரோல்னு யாரும் கிடையாது. படத்துல ஒரு நாய்க்கு முக்கியமான ரோல். கனடா மாடல் அழகி, சார்லி சார், மயில்சாமி அண்ணா, ஆனந்த் ராஜ் சார், மனோபாலா சார், தேவதர்ஷினி மேடம், ரவி மரியா, ராஜ் பரத்... இப்படிப் பெரிய பட்டாளமே இருக்கு. ஒரு மால்ல பலபேர் பணயக் கைதிகளா மாட்டிக்கிற சூழல்ல, இத்தனை காமெடி நடிகர்கள் இருந்தா எப்படி இருக்கும்... அதுதான் படத்தின் களம்.”

“படத்துல வேறென்ன ஸ்பெஷல்?”

“கண்டிப்பா இது ஒரு சராசரி தமிழ்ப் படமா இருக்காது. இந்த இடத்துல பாட்டு, அந்த இடத்துல சண்டை, வில்லன் ஒரு இடத்தைப் பிடிச்சுட்டான், அதை ஹீரோ எப்படி மாத்துவான்... இப்படி எல்லாமே இருக்கும். ஆனா, அதெல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கும். சுருக்கமா சொன்னா, இந்த ஜானரே தமிழ் சினிமாவுக்குக் கொஞ்சம் புதுசுதான். படத்துல எதுக்கும் அர்த்தம் இருக்காது, அடுத்த சீன் எப்படி இருக்கும்னு தெரியாது... ஜாலியா போகும்.”

- தார்மிக் லீ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு