Published:Updated:

GANGS OF மெட்ராஸ் - சினிமா விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
GANGS OF மெட்ராஸ் - சினிமா விமர்சனம்
GANGS OF மெட்ராஸ் - சினிமா விமர்சனம்

GANGS OF மெட்ராஸ் - சினிமா விமர்சனம்

பிரீமியம் ஸ்டோரி

ன் காதல் கணவனைக் கொன்ற கயவர்களை, அடிக்கு அடி, பழிக்குப்பழி, ரத்தத்திற்கு ரத்தம், வஞ்சம் தீர்க்கப் புறப்படும் மனைவியின் கதை, `கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்.’

GANGS OF மெட்ராஸ் - சினிமா விமர்சனம்

அசோக்கும் பிரியங்காவும் புதிதாய் நிக்காஹ் செய்துகொண்ட காதல் ஜோடிகள். சென்னையின் மிகப்பெரும் போதை மாஃபியா வேலுபிரபாகரனிடம், அசோக் கணக்காளராக வேலைக்குச் சேர்கிறார். திடீரென, ஒருநாள் பிரியங்காவின் கண் முன்னாலேயே அசோக், போலீஸால் என்கவுன்டர் செய்யப்படுகிறார். அசோக் கொல்லப்பட்டதன் உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் பிரியங்கா, கொலைக்குக் காரணமான அத்தனை பேரையும் பழிவாங்க, கொலைவெறியோடு கிளம்புகிறார். பழிக்குப்பழி வாங்கினாரா, இல்லையா என்பதை ரத்தம் தெறிக்கத்தெறிக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சி.வி.குமார்.

GANGS OF மெட்ராஸ் - சினிமா விமர்சனம்

1950-ம் ஆண்டுவாக்கில் கட்டப்பட்ட ஐந்து வீடுகள், குறுகலான ஆறு தெருக்கள், பளீர் மஞ்சள் கலரில் இரண்டு சோடியம் விளக்குகள், நான்கு கேஸ் பீர் பாட்டில்கள், இரண்டு வின்டேஜ் கார்கள், ஒரு டஜன் துப்பாக்கிகள், தாடியுடன் முப்பது அடியாட்கள், முக்கியமான காட்சிகளின்போது மட்டும் பெய்யும் மழை, பத்து நாள் மும்பை ஷெட்யூல். இவற்றையெல்லாம் ஒரு குக்கரில்போட்டு, நான்கு விசில் விட்டால்போதும் கேங்ஸ்டர் சினிமா ரெடி என நம்பிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. ஆனால், அதையும் சரியாய்ச் செய்யாமல் அரை வேக்காட்டிலேயே குக்கரை இறக்கினால், அதுதான் `கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்.’

படத்தின் பெரிய ஆறுதல், பிரியங்கா ரூத்தின் நடிப்பு. காதலில் உருகுவதாகட்டும், கண்ணீர் வடிப்பதாகட்டும், கத்தியைச் சுழற்றுவதாகட்டும், அத்தனை பாவனைகளையும் அசால்ட்டாய்க் காட்டிவிட்டுப் போகிறார். அசோக், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன்  போன்றோரின் நடிப்பில் குறையொன்றுமில்லை.

GANGS OF மெட்ராஸ் - சினிமா விமர்சனம்வேலு பிரபாகரன் மற்றும் ராமதாஸின் அத்தியாயம் `க்ளாஸிக்’. அந்தக் காட்சியில் இருந்த அழுத்தமும் மேக்கிங்கும் படம் முழுக்க இருந்திருக்குமேயானால், பட்டாசாய் இருந்திருக்கும். ஒளிப்பதிவாளர் கார்த்திக் குமார் பயன்படுத்தியிருக்கும் கோணங்களும் வண்ணங்களும் நன்று. ஆனால், எல்லாம் ஏற்கெனவே திகட்டத் திகட்டப் பார்த்துவிட்ட உணர்வு. சியாமளங்கனின் பின்னணி இசையும் அதே வகைதான். ராதாகிருஷ்ணன் தனபாலின் படத்தொகுப்பு, முதற்பாதியைவிட இரண்டாம் பாதியில் சிறப்பு. ஹரி தினேஷின் சண்டை வடிவமைப்பும் பரபரப்பைக் கூட்டுகிறது.

நல்ல கதை, நல்ல களம், நல்ல நடிகர்கள். மேக்கிங்கில் புதுமையும் எழுத்தில் அழுத்தமும் கூட்டியிருந்தால் சி.வி.குமாரின் கேங் நிச்சயம் ஜெயித்திருக்கும்!

- விகடன் விமர்சனக் குழு 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு