Published:Updated:

சிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை!
சிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை!

சிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை!

பிரீமியம் ஸ்டோரி

``எனக்கான அடையாளம் ‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற படங்கள் இல்லை. அப்படிப்பட்ட படங்களை எடுக்கவேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்பட்டேன். இனி, நான் எடுக்க நினைக்கும் சினிமாவைத்தான் திரையில் காட்டப்போகிறேன்.” - சர்ச்சையான கதைகளையே படமாக்கிக்கொண்டிருந்த இயக்குநர் சாமியின் வார்த்தைகள் இவை.

1997-ஆம் ஆண்டு மஜித் மஜீதி இயக்கத்தில் இரானிய மொழியில் உருவான க்ளாசிக் படம், ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven).  பலரையும் உலக சினிமாப் பக்கம் இழுத்து வந்த படம். இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள்  ஆனநிலையில் தமிழில் ‘அக்கா குருவி’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார், சாமி.

சிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை!

“நான் ஒரு பெரும் உலக சினிமா ரசிகன். என் குழந்தைகளுக்கும் அடிக்கடி பல உலக சினிமாக்களைப் போட்டுக் காட்டுவேன். அவங்க வயசுக்கு நான் காட்டுறது, அனிமேஷன் படங்களைத்தான். அப்படி ஒருநாள் ஊர்ல இருந்து என் அக்கா வந்திருந்தாங்க. வழக்கமா அனிமேஷன் படங்களைப் போட்டுக் காட்டுறதுக்குப் பதிலா, ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தைப் போட்டேன். என் கண் முன்னாடியே அந்தப் படம் எப்படி எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவருதுன்னு, என் அக்கா, குழந்தைங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். என் அக்காதான், ‘ஏன் நம்மூர்ல இந்தமாதிரி படமெல்லாம் எடுக்கிறதில்ல?’ன்னு சலிப்பா கேட்டாங்க. அடுத்த நொடி, இந்தப் படத்தைத் தமிழ்ல ரீமேக் பண்ணணும்னு முடிவெடுத்துட்டேன்.”

“ரீமேக் பண்ணப்போறீங்கன்னு தெரிஞ்சதும் மஜித் மஜீதி என்ன சொன்னார்?”

“நான் இன்னும் அவரை நேர்ல பார்க்கல. எல்லாமே மின்னஞ்சல் வழியா முடிவானதுதான். ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு மெயில் பண்ணி, படத்தைத் தமிழில் ரீமேக் பண்ற எண்ணத்தைச் சொன்னேன். ஆல்ரெடி பாலிவுட்ல இந்தப் படம் ‘பம் பம் போலே’ங்கிற பெயர்ல ப்ரியதர்ஷன் எடுத்திருக்கார். இப்போ நான் சவுத் இந்தியன் ரீமேக் ரைட்ஸ் வாங்கி இந்தப் படத்தை ரீமேக் பண்றேன். ‘அக்கா குருவி’ இசை வெளியீட்டு விழாவுக்கு மஜித் மஜீதைக் கூப்பிடலாம் அல்லது அவருக்கு ஒரு சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன்.”

சிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை!

“ ‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ மாதிரி படங்களைக் கொடுத்த உங்ககிட்ட இருந்து, ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் ரொம்ப சர்ப்ரைஸா இருக்கு. ஏன் இந்த திடீர் மாற்றம்?”

“ஏன்னா, இப்படிப்பட்ட படங்களைத்தான் நான் எடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, சினிமாவுல சர்வைவல் ஒரு பெரிய சிக்கல். உள்ளே வந்துட்டோம். நிலைச்சு நிற்கணும்னா ஒரு அடித்தளம் வேண்டும். அதுக்காக எடுத்ததுதான், ‘உயிர்.’ அந்தப் படத்துக்குப் பிறகு ஒரு ஸ்போர்ட்ஸ் மூவி பண்ணலாம்னு ‘சதம்’ படத்தைத் தொடங்கினேன். சில காரணங்களால அந்தப் படத்தை எடுக்க முடியல. ‘மிருகம்’ படத்தை எடுத்தேன். அதுக்குப் பிறகு, மண் சார்ந்து ஒரு படைப்பைக் கொடுக்கலாம்னு ‘சரித்திரம்’ படத்தைத் தொடங்கினேன். அதுவும் சில காரணங்களால டிராப் ஆகிடுச்சு. பிறகு, ‘சிந்து சமவெளி’ எடுத்தேன். அதுக்குப் பிறகு, ‘சித்திரம்’னு ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சேன், முடியலை; ‘கங்காரு’ எடுத்தேன். ‘கங்காரு’ நல்ல கதைதான், படத்துக்கு வெளியே பல பிரச்னைகள் இருந்ததனால, அந்தப் படத்துக்கு சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கலை. ‘சாமியின் படைப்புகள்’னு உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் மூணு படங்கள்தான். அதுவே என் அடையாளமாவும் மாறிப்போனதுதான் துரதிர்ஷ்டம். தவிர, இந்தமாதிரிப் படங்களுக்கு ஈஸியா ரீச் கிடைக்கும்ங்கிறதுனால, நான் சர்வைவலுக்காகத் தொடர்ந்து படம் பண்ணவேண்டியதா போயிடுச்சு. இனி, அதை மாத்தணும்.”

“சர்வைவலுக்காக ‘அடல்ட்’ படம்தான் எடுக்கணும்னு சொல்றீங்களா?”

“சினிமா அப்படித்தானே இருக்கு! அதுதான் வியாபாரத்துக்காக மறுபடியும் மறுபடியும் என்னை அதே மாதிரி படங்களைப் பண்ண வெச்சது. தவிர, ‘உதிரிப்பூக்கள்’, ‘ஆசை’, ‘வாலி’ பேட்டர்ன்ல வந்த படம்தான், ‘உயிர்.’ ஆண்கள் வில்லனாக இருந்த படங்களை ஏற்றுக்கொண்ட சமூகம், அதையே பெண் கேரக்டர் பண்றப்போ குறை சொல்லிடுச்சு. சர்வைவலுக்காக நான் எடுத்த படங்களாக இருந்தாலும், ‘உயிர்’, ‘சிந்து சமவெளி’ ரெண்டும் ஏற்கெனவே வெவ்வேறு மொழிகளில், பெரிய இயக்குநர்களால் எடுக்கப்பட்டு ஹிட்டான கதைகள்தான். அதேபோல, ‘மிருகம்’ தமிழில் ஹெச்.ஐ.வி நோய் குறித்த விழிப்புணர்வைச் சொன்ன படம்.”

“சரி... இங்கே மண் சார்ந்த கதைகள் நிறைய இருக்கும்போது, இரானிய படத்தை இங்கே ரீமேக் செய்யவேண்டிய தேவை என்ன?”

“ ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ என்ற இரானியப் படம் சொல்ற கரு உலகத்துக்கே பொதுவானது. கால்களுக்கு ஒரு ஜோடி ஷூ வாங்குவதற்காக ஒரு அண்ணனும் தங்கையும் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் அந்தப் படத்தின் களம். ராமன் வனவாசம் இருந்தப்போ தன் செருப்பை பரதனிடம் கொடுத்து அனுப்பிய கதையில் தொடங்கி, இங்கே பல ‘காலணி’ கதைகள் இருக்கு. அந்த வகையில, இந்தப் படமும் நம்ம மண்ணுக்குப் பொருந்தும்.”

சிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை!

“தமிழுக்காகப் படத்துல என்னென்ன மாற்றங்கள் செஞ்சிருக்கீங்க?”

“ரீமேக் பண்ணணும்னு முடிவெடுத்ததுமே அந்தப் படத்தின் ஒரிஜினல் எமோஷன் எதுவும் கெட்டுடாம, அதே ஃபீலிங்ல இருக்கணும்னு முடிவெடுத்தேன். அந்தப் படத்துல வர்ற மாதிரி ஒரு ஊரை தமிழ்நாடு முழுக்கத் தேடி, கொடைக்கானல் பக்கத்துல இருக்கிற பூம்பாறை என்ற மலைக் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தோம். தவிர, இந்த ஊரைத் தேர்ந்தெடுத்ததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. படத்துல வர்ற பிரதான பிரச்னை இந்தக் காலகட்டத்துக்குப் பொருந்தாது. அதனால, கதைக்களம் 1990-களில் நடக்கிற மாதிரி மாத்தினோம். அதனால, பழைமை மாறாத ஊர்தான் படத்துக்குத் தேவைப்பட்டது. பூம்பாறையின் பெரும்பாலான வீடுகள் 500 ஆண்டுகள் பழைமையானவை. தவிர, படத்தின் கதைப்படி இந்தக் கிராமத்துக்குப் பக்கத்துல ஒரு டவுன் இருக்கணும். கொடைக்கானல் அதுக்குப் பொருத்தமா இருந்தது. எல்லாத்துக்கும்மேல படத்தின் ‘தீம்’ குழந்தைகள். பூம்பாறையின் முதன்மைத் திருத்தலம் குழந்தைவேலர் கோயில். அந்த முருகன் கோயில் தேரோட்டத் திருவிழாவையும், நடக்கிறப்பவே படமாக்கி படத்துல சேர்த்திருக்கோம்.”

“உலக சினிமாவைப் பார்க்க, தமிழ் மக்கள் தயாரா இருப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கா?”

“இங்கே சினிமா எனும் கலையை, கலையாகப் பார்க்கும் பக்குவம் பல தயாரிப்பாளர்களுக்கு வரல. சினிமா அவங்களுக்கு ஒரு வியாபாரம் மட்டும்தான். ஒரே நேரத்துல சினிமாவைக் கலையாகவும், வியாபார நோக்கத்தோடும் பார்க்கிற படைப்பாளிகள் இங்கே நிலைச்சு நிற்கிறாங்க. அதுக்கு, இயக்குநர் சேரன் ஒரு பெரிய உதாரணம். இந்திய மொழிகளில் மலையாளத்திலும் வங்காளத்திலும்தான் கலைப் படைப்புகள் அதிகமா வருது. காரணம், ஆரம்ப காலத்துல இருந்தே அந்த மொழிப் படைப்பாளிகள் அவங்க ரசிகர்களை அதுக்குத் தயார்படுத்தி வெச்சிருக்காங்க. சரியான தயாரிப்பாளர் கிடைக்காததாலதான் என்னால இதுவரை சரியான ஒரு கலைப் படைப்பைக் கொடுக்க முடியல. ஆனா, இந்தப் படம் அப்படி இருக்காது. நண்பர்கள்கூட சேர்ந்து நானே தயாரிச்சு, இயக்கியிருக்கேன். இந்தப் படத்தின் வெற்றிதான் இதுபோன்ற பல படங்களை உருவாக்க நம்பிக்கை தரும். இந்தப் படம் ஹிட் ஆச்சுன்னா, எங்க நிறுவனம் மூலமா இன்னும் பல கலை நோக்கப் படைப்பாளிகளை உருவாக்கலாம்னு இருக்கோம். ஏன்னா, நாமளும் நம்ம மக்களை உலக சினிமாக்களைப் பார்க்க வைக்க தயார்படுத்தணும்.”

-  எம்.குணா, சந்தோஷ் மாதேவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு