
ஓவியங்கள்: வென்னி மலை
ஊருக்குள் ஏதாவது டிரெண்ட் ஆகிவிட்டால், உடனே அதை ஊறப்போட்டு அரைத்து ஆயிரம் அடைதோசை சுட்டுவிடுவதுதான் தமிழ் சினிமாவின் வழக்கம், பழக்கம் எல்லாமே. சமீபத்தில் பிளாக்ஹோல் எனும் அதிசய சமாசாரம் வேறு டிரெண்டானது. அதைக் கதைக்குள் நம் இயக்குநர்கள் எப்படியெல்லாம் புகுத்துவார்கள் என ஜாலியான, கற்பனையான சில சாம்பிள்களைப் பார்ப்போம்...

இதற்கு முன்பு பட்சி ராஜன், பறவை முனியப்பா என அறிவியல் புத்தகங்களுக்கு அனிமேஷன் பெயின்ட் அடித்திருப்பதால், ஷங்கரின் பார்வை பிளாக்ஹோல்மீது விழும். அதற்காக, முழுப்படத்தையும் பிளாக்ஹோலிலேயே எடுப்பார் என எதிர்பார்க்கக் கூடாது. முழுப்படம் லட்சியம், ஒரு பாடல் நிச்சயம்! “உன் காலடித்தடம் பட்டால் அந்தக் கருந்துளையும் வெண்மையாகுமே” என எப்படியேனும் வைரமுத்து வைர வரிகளைத் தீட்டிவிடுவார். மொத்தம் இரண்டு நொடி மட்டுமே வரப்போகும் அதற்கான விஷுவலுக்கு, ஆறு வார காலத்தில் ஆறுகோடி ரூபாய் செலவு செய்து பிளாக்ஹோலுக்கு வெள்ளை பெயின்ட் அடிக்கும் முயற்சியை மேற்கொள்வார் ஷங்கர். அந்த ஆறுவாரமும் ஆறுகோடியும் கடைசியில் கருந்துளையில் நுழைந்த கல்லாய்க் காணாமல் போன பிறகு, ‘அடச்சே,கிராஃபிக்ஸில் பார்த்துக்கொள்ளலாம்’ என்ற முடிவுக்கு வந்துவிடுவார். மேஏஏஏ....

மிஷ்கின் படங்கள் எல்லாம் பூமியில் எடுத்திருந்தாலுமே, கருந்துளையில் எடுத்ததுபோல் கும் இருட்டாகத்தான் இருக்கும். கதாபாத்திரங்களும் பூமியை முறைத்தபடி எக்குத்தக்கு ஏலியன்கள்போலத்தான் இருப்பார்கள். `முகமூடி’ படத்தின் இரண்டாம் பாகம்தான் அடுத்த புராஜெக்ட். இந்தப் பாகத்தின் வில்லன் பால்வெளி அண்டத்திலிருந்து பல பர்லாங்கு தூரத் திலிருந்து வருகிறான். அவன் விண்வெளி ஓடம், தெரியாத் தனமாய் கருந் துளைக்குள் நுழைந்து, மதுராந் தகம் அருகே உள்ள கருங்குழி கிராமத் தின் வழியாக வெளியே வருகிறது. குங்க்ஃபூவில் பிளாக் பெல்ட் வாங்கிய ஹீரோ, பிளாக் ஹோல் வில்லனை எப்படி சமாளிக்கிறான் என்பதே கதை. சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன், முகமூடி..!

`சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஸ்பின் ஆஃபாக, காஜியின் கதையை மட்டும் ஏலியன் லெவலில் எடுப்பார் தி.கு. படத்தின் முதல் காட்சியில், காஜியின் ஸ்பேஸ்ஷிப்பில் ‘கறுத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்’ எனும் இளையராஜா பாடல் ஓடிக் கொண்டிருந்ததே கருந்துளைக்கான குறியீடுதான் என்கிறார் ‘கருந்தேள்’ ராஜேஷ். லூக் ஸ்கைவாக்கர், டார்க் வேடார், மாஸ்டர் யோடா ஆகியோரின் புகைப்படங்கள் அந்த ஸ்பேஸ்ஷிப்பில் ஒட்டியிருக்கிறது. அப்படியே `ஸ்டார் வார்ஸ்’ தீம் மியூசிக்கை கர்னாடிக்கில் வாசித்து, எம்.எஸ்.சுப்புலெட்சுமி எனும் கதாபாத்திரத்தை இன்ட்ரோ செய்கிறோம். கடைசியில், காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா எனக் கறுப்புக்கலர் ப்ளாஸ்டிக் கவரைக் காண்பித்துக் கதையை முடிக்கிறோம். எல்லாம் குறியீடு! நானே சாட்சி... நீங்களும் சாட்சி!

கண்டிப்பாக, காதல் கதையாகத்தான் இருக்கும். அம்மாம் பெரிய கருந்துளையின் நுழைவு வாயில், காதலி வீட்டின் காபி கப்புக்குள் இருக்கிறதென ஃபேன்டஸியைக் கொஞ்சம் தூவிவிடுகிறோம். ஒருநாள், காதலி காலங்காத்தால எழுந்து காபி குடிக்கிறேன் என கப்புக்குள் விழுந்து கருந்துளையில் மாட்டிக்கொள்கிறாள். “அவனவன் காதலிக்காக அமெரிக்காவே போறான். இங்கே இருக்கு பிளாக்ஹோல். ஐ வானா கோ டாடி!” எனக் காதலனும் அவளைக் காப்பாற்றக் குதிக்கிறான். இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள் அடுத்த கருந்துளையின் படத்தை நாசா ரிலீஸ் செய்துவிடும். ஆக, கவலை வேண்டாம்!

“கறுப்பு உழைப்போட வண்ணம்” என வசனம் வைத்த ப.ரஞ்சித், கருந்துளையைக் கையில் எடுக்காமல் இருந்தால் எப்படி?! ஆனால், இங்கேதான் ஒரு ட்விஸ்ட்! இந்தப் படத்தின் வில்லனே அந்தக் கருந்துளைப் பயபுள்ளதான். பலநூறு கிரகங்களை விழுங்கி ஏப்பம் விட்ட அது, எப்படியோ மோப்பம் பிடித்து பூமிக்கு அருகிலும் வந்துவிடுகிறது. “இன்னும் இந்த பிளாக்ஹோல் எத்தனை கிரகத்தைக் காவு வாங்கப்போகுதோ” என மக்கள் அலறுகிறார்கள். கருந்துளை யிடமிருந்து பூமியைக் காப்பதற்காக, படை ஒன்றை உருவாக்க நினைக்கிறார் ஹீரோ. ஆனால், சாதி, மத, வர்க்க, நிற, பாலின வேறு பாடுகளைக் காட்டி ஒன்றிணைய மறுக்கிறார்கள் மக்கள். அவர்கள் எல்லோர் மீதும் ஹீரோ, சிவப்பு, நீலம், கறுப்பு நிறப் பொடிகளைத் தூவிவிட, சமத்துவம் மலர்ந்து சமருக்குப் புறப்படுகிறார்கள் மக்கள். “பூமியே எங்கள் உரிமை” என, பாவிப்பயல் பிளாக்ஹோலை, நெப்ட்யூன், புளூட்டோ பக்கம் திசைமாற்றி விடுவதாக படம் முடிகிறது.
- ப.சூரியராஜ்,