Published:Updated:

பெரு நகரம்... சிறு கனவு... எளிய சினிமா! - ‘டு லெட்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெரு நகரம்... சிறு கனவு... எளிய சினிமா! - ‘டு லெட்’ விமர்சனம்
பெரு நகரம்... சிறு கனவு... எளிய சினிமா! - ‘டு லெட்’ விமர்சனம்

"காட்சி ஊடகத்தில், இவ்வளவு யதார்த்தமாக, அழுத்தமாக முத்திரை பதித்திருக்கிறார், இயக்குநர் செழியன். நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை அசலாகப் பதிவு செய்த விதத்தில், 'டு லெட்' எளியோர்களைக் கொண்டாடும் ரியல் சினிமா!"

மிழ் சினிமாவில் பலமுறை பதிவுசெய்யப்பட்ட வாடகைதாரர் அவலங்களைச் சொல்லும் கதைதான் என்றாலும் 'டு லெட்'டில் அதைக் கவித்துவமாகப் புதிய திரைமொழியில் சொல்லியிருக்கிறார், 'இயக்குநர்' செழியன். ஏராளமான விருதுகளைப் பெற்ற, பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படம் என்பது, 'டு லெட்’டுக்கான முன் அங்கீகாரம்!  

ஐ.டி துறை வலுவாகக் கால் பதித்த 2007-ல் நடக்கும் கதை. காதல் திருமணம் செய்த இளங்கோ - அமுதாவுக்கு, சித்தார்த் என்றொரு மகன். சினிமா உதவி இயக்குநரான இளங்கோவுக்கு நிரந்தர வருமானம் இல்லை. எனினும், குருவிக்கூடு போன்ற வீட்டில் அழகாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் இவர்களுக்கு, வீட்டைக் காலிபண்ண வேண்டிய கட்டாயம். சென்னை பெருநகரின் வீட்டு உரிமையாளர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள், வீடு தேடும் இவர்கள் நிலைதான் என்ன என்பதே, 'டு லெட்' கதை. 

சென்னை பெருநகரில் பிழைக்க வரும் சிறு குடும்பம். வாடகை வீட்டில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள். இந்தக் குட்டியூண்டு கதைக்குள் உணர்வு, வாழ்வியல், அரசியல், அவலம் எனப் பல மென் உணர்வுகளை அழுத்தமாகப் படைத்திருக்கிறார், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன். வீடு ஒன்றை இடிப்பதை நாயகன் பார்க்கிற காட்சி, வீட்டில் வாழும் குருவி ஒன்று ஃபேனில் அடிபட்டு சாகிற காட்சி, ஜன்னல் வழியே முதியவர்களைப் பார்த்துவிட்டு 'வீடு வேண்டாம்' என விலகுகிற காட்சி... எளிய காட்சிகள்... ஆனால், வலிமையான உணர்வுகள்!

'இளங்கோ'வாக, சந்தோஷ் நம்பிராஜன். கச்சிதமான நடிப்பு. வெறித்தனமாகக் கதை எழுதுவது, பணத் தேவைக்காக டப்பிங் பேசுவது, மனைவி - குழந்தையைக் கொஞ்சுவது... என அத்தனை காட்சிகளிலும் பாஸ் மார்க்! செல்லமாய்க் கொஞ்சும் கணவனைப் பார்த்து, 'லூசுப் பய' என ரியாக்‌ஷன் கொடுத்து ரசிக்க வைக்கிறார், 'அமுதா'வான ஷீலா ராஜ்குமார். 'நான் ஒன்னு சொல்வேன் திட்டமாட்டியே' என்பதை ஒவ்வொரு முறை சொல்லும்போதும் வெவ்வேறு விதம். இருவரின் யதார்த்தமான நடிப்பும், படத்திற்குப் பெரிய பலம். 

குழந்தை நட்சத்திரம் தருணுக்கு முத்தங்கள்! வீடு தேடும் அவலத்தை விளையாட்டாக மாற்றி, அம்மா அப்பாவை சிரிக்க வைப்பதும், எதிர்வீட்டுத் தோழியை விழிவழியே தேடுவதும்... ரசனை! ஓவியத்தில் ஆர்வமுள்ள சித்தார்த், வீட்டில் கிறுக்கி விளையாடுகிறான். ஓனருக்கு எரிச்சல், அமுதாவுக்கு வருத்தம். 'ஸாரிம்மா... புது வீட்டுக்குப்போனா, நான் கிறுக்கமாட்டேன்' என அந்தக் குழந்தை பேசும் வசனம், வாடகை வீடு குழந்தைகளையும் பாதிப்பதை அழகாகச் சொல்கிறது.  

வீட்டு ஓனராக வரும் ஆதிராவைப் பார்த்தால், அத்தனை எரிச்சல். அதுதான், ஆதிராவுக்கான வெகுமதியும்!. அவரது கணவராக வரும் ரவி சுப்பிரமணியத்தின் சித்தரிப்பு கச்சிதம். வீட்டு புரோக்கர்களின் அட்ராசிட்டி, அதளகம். தவிர, வீடு வாடகைக்குக் கொடுக்க ஆயிரம் நடைமுறைகளைப் பின்பற்றும் 'சேட்டு' கேரக்டர், 'ஐடி-காரன் கொடுக்குற அதே வாடகையைத்தானே நாமளும் தர்றோம்' எனப் பன்ச் பேசி, போலி விசிட்டிங் கார்டு அடிக்கச் சொல்லும் இயக்குநர்... அத்தனை கேரக்டரும் ஏதோ ஒருவகையில் கவனத்தில் வருகிறார்கள்.

சிறிய வீட்டை இன்ச் பை இன்ச்சாக விழுங்கிச் செரித்திருக்கிறார், செழியன். அடிக்கடி இருட்டிப்போகிற அந்த வீடு, இருளுக்குள் உரையாடுகிற தம்பதிகள், நினைவுகளைச் சுமக்கிற சுவர்கள், எந்நேரமும் பதட்டமாக்குகிற வாசல் கதவுகள்... என செழியனின் ஒளிப்பதிவும் அபாரம். படத்தைப் பற்றிய பாசிட்டிவ் விஷயங்கள் அத்தனை இருக்க, பலவீனங்களும் வரிசையாக நிற்கின்றன. 

வாடகை வீட்டின் பிரச்னைகள்தான் பிரதானம் எனில், ஹீரோவின் பொருளாதாரப் பிரச்னையைப் பெரிதாக முன்னிறுத்தியிருப்பது ஏன்? ஐடி துறையில் இருக்கும் எல்லோருமே லட்சாதிபதிகள் என்ற பொதுப்புத்தி இதிலும் தொடர்கிறது. இயல்பான ஒலிகளே பின்னணி இசையாகவும் அமைந்திருப்பது... பரீட்சார்த்த உணர்வையே அளிக்கிறது. பிரதான கதாபாத்திரங்களின் முகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட சோகமும் உறுத்தல். 2007 கதைக்களத்தில் தற்போதைய பேருந்து, பைக்குகள் வந்துபோவதைத் தவிர்த்திருக்கலாம். தவிர, படத்தின் மையக்கரு சினிமா துறையில் இருப்பவர்களுக்கு வீடு கிடைக்காது என்பதைச் சொல்வதா, நடுத்தர வர்க்கம் சந்திக்கும் வாடகை வீட்டுப் பிரச்னைகளைச் சொல்வதா, ஹவுஸ் ஓனர்களின் அட்ராசிட்டியைப் பதிவு செய்வதா... என வட்டமடிக்கிறது.  

படத்தில் அழுத்தமாகச் சுட்டிக் காட்டப்படும் வாடகை வீடுகள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள் இன்றைய காலகட்டத்தில் பெருமளவு காலாவதியாகிவிட்டன. ஏனெனில், நகரங்கள் நிறையவே மாறிவிட்டன. வீடு பார்ப்பதும், ஹவுஸ் ஓனர் தொந்தரவுகளும் மாறிவிட்டன. அதனாலேயே கதை மாந்தர்களின் துயரங்கள் ‘பீரியட் ஃபிலிம்’ நிகழ்வுபோல சற்றே அந்நியத்தன்மை கொடுக்கிறது. 

எனினும், சினிமா எனும் காட்சி ஊடகத்தில், இவ்வளவு யதார்த்தமாக, அழுத்தமாக முத்திரை பதித்திருக்கிறார், இயக்குநர் செழியன். நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை அசலாகப் பதிவு செய்த விதத்தில், 'டு லெட்' எளியோர்களைக் கொண்டாடும் ரியல் சினிமா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு