Published:Updated:

ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., டி.டி.வி... ஆல் மிக்ஸிங் மீம் இந்த லால்குடியார்! - 'எல்கேஜி' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., டி.டி.வி... ஆல் மிக்ஸிங் மீம் இந்த லால்குடியார்! - 'எல்கேஜி' விமர்சனம்
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., டி.டி.வி... ஆல் மிக்ஸிங் மீம் இந்த லால்குடியார்! - 'எல்கேஜி' விமர்சனம்

ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., டி.டி.வி... ஆல் மிக்ஸிங் மீம் இந்த லால்குடியார்! - 'எல்கேஜி' விமர்சனம்

தமிழ் சினிமாவில் அரிதிலும் அரிதாக வருகிற `அரசியல் பகடி' ஜானரின் புதுவரவு இந்த `எல்கேஜி'. லால்குடியின் ஆறாவது வார்டு கவுன்சிலர், எப்படி தமிழகத்தின் முதல்வரானார் என்பதன் முன்கதைதான் படத்தின் மொத்த கதையும். 

படத்தில், தமிழகத்தின் முதல்வர் இறந்துவிடுகிறார். அதைத் தொடர்ந்து கட்சிக்குள் கோடு விழுகிறது. அந்தக் கோட்டையே சட்டசபைக்கு ரோடாக்கி, வண்டியைக் கிளப்பும் முயற்சியில் இறங்குகிறார் எல்.கே.ஜி. அந்த ரோட்டில் உள்ள மேடு பள்ளங்களும் ஸ்பீடு பிரேக்கர்களும் யூ-டர்ன்களுமாக நகர்கிறது திரைக்கதை.  

எல்கேஜி-யாக ஆர்.ஜே.பாலாஜி, செம எனர்ஜி! டன்பன்டடன் டட்டடன்  உற்சாகத்தோடு விளாசுகிறார். ஆனால், மகிழ்ச்சி, சோகம், கோபம், பயம் என எந்த உணர்வாக இருந்தாலும், படம் முழுக்க தொண்டைத்தண்ணி வத்த வத்த கத்துவதைக் குறைத்திருக்கலாம். அவ்வப்போது அவர் அடிக்கும் கவுன்டர்கள்தான் ரசிக்கவைக்கின்றன. முழுநீள ஹீரோ பாலாஜிக்குக் காத்திருப்போம்.

கார்ப்பரேட் மான்ஸ்டராக ப்ரியா ஆனந்த். முகத்தையும் அயர்ன் பண்ண சொக்காவைப் போல் விறைப்பாகவே வைத்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜியின் மாமாவாக மயில்சாமி. தனக்கான கதாபாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறார். நாஞ்சில் சம்பத், அவ்வப்போது      நான்-சிங்க் சம்பத்தாக மாறி சம்பந்தம் இல்லாத இடத்தில் மகன் ஆர்.ஜே.பாலாஜியிடம் திருக்குறள் சொல்லித் திட்டுவாங்குகிறார். இவரது கதாபாத்திரம் அவ்வளவே. ராம்குமார் மற்றும் ஜே.கே. ரித்தீஷை படத்தில் பயன்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு. 

சமகால விஷயங்கள் பலவற்றை கலாய்த்திருக்கும் விதத்திற்கும், அவற்றைத் துருத்தல் இல்லாது திரைக்கதைக்குள் பொருத்தியதற்கும் பாராட்டுகள். அப்போலோ மரணத்தில் தொடங்கி சின்னம்மா சபதம், டி.டி.வி வருகை, இடைத்தேர்தல் ரகளைகள், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் வம்புதும்புகள் என சகலத்தையும் சமைத்து சாம்பார் வைத்திருக்கிறார்கள். ஆனால், இதில் மத்திய அரசின் ஆடுபுலி ஆட்டத்தை மட்டும் லேசாக ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது காமெடி படமா அல்லது சீரியஸ் படமா... அல்லது பொலிட்டிக்கல் ஸ்பூஃபா அல்லது அரசியல் கருத்து சொல்லும் படமா என ஏகப்பட்ட குழப்பங்கள். படம் லால்குடியில் ஆரம்பித்து, சென்னை, டெல்லி வழியாக விண்வெளிக்குப் போய்வருகிறது! 

படத்தில் இடம்பெற்ற பல விஷயங்களை ஏற்கெனவே மீம்களாகப் பார்த்து, சிரித்து, சலித்துப்போனதால், பெரும்பாலான காமெடிகளுக்கு சிரிப்பே வரவில்லை. இரண்டாம் பாதியில், வில்லன் ஜே.கே ரித்தீஷின் இமேஜை காலி பண்ணச் செய்கிற சில சேட்டைகள், நாஞ்சில் சம்பத்தின் திருக்குறள் போன்று ஸ்பூஃப் அல்லாத விஷயங்கள்தான் சிரிப்பை வரவழைக்கின்றன. இவை தவிர்த்து மற்ற எல்லாமே சிரிக்கவைக்கும் முயற்சிகளாகவே நிற்கின்றன. படத்தில் எப்போதாவது பன்ச் வந்தால்தான் பன்ச்சுக்கு மரியாதை. ஆனால், படமே பன்ச் ஃபேக்டரி போலிருக்கிறது. யார் வாயைத்திறந்தாலும் இரண்டு நிமிடங்களுக்குக் குறையாமல் பஞ்சு பஞ்சாக பறக்கவிடுகிறார்கள். அதுவும் லிப் சிங்க்கே இல்லாமல். சமூக வலைதளங்களை ஃபாலோ செய்யாத கூட்டத்திற்கு படம் எந்தளவுக்குப் புரியும் என்பதும் கேள்விதான். அவ்வளவு சோஷியல் மீடியா ஃபீவர், 100 டிகிரியைத் தாண்டி அடிக்கிறது. 

லியோன் ஜேம்ஸின் இசையில், 'எத்தனை காலம்தான் ரீமிக்ஸ்' எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். மற்ற பாடல்களும் பின்னணி இசையும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. காமெடி படங்களுக்குத் தேவையான அமெச்சூர் தனத்தையும் அரசியல் படங்களுக்குத் தேவையான பிரமாண்டத்தையும் சரிவிகிதத்தில் கலந்து, நல்ல விஷுவல்களைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது அய்யண்ணா. 

ஊழல் ஒழிப்பு, படித்தவர்கள் நாட்டை ஆள வேண்டும், ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்கிற கருத்துகளைச் சொல்ல முயற்சி செய்திருப்பது ஓகே. ஆனால், படம் முழுக்க மக்களெல்லாம் முட்டாள்கள், ஓட்டை விற்பவர்கள், எளிதில் ஏமாந்துபோகிறவர்கள் என்பது போலவே காட்டியிருப்பது எரிச்சல்! 

சமகால அரசியலை கலாய்க்கும் வீடியோ மீம்களின் வெள்ளித்திரை வெர்ஷனாக வந்திருக்கிறது, `எல்கேஜி'. சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும் மெனக்கெட்டிருக்கிறார்கள். 

கொஞ்சம் சிரிக்க மட்டும் வைக்கிறான் இந்த லால்குடி காந்தி!

'டு லெட்' விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்! 

அடுத்த கட்டுரைக்கு