Published:Updated:

"திருமண முறை தப்புனு சொல்றவங்களைக் கேள்வி கேட்போம்!" - 'திரெளபதி' மோகன்.ஜி

சனா

`பழைய வண்ணாரப்பேட்டை' இயக்குநர் மோகன், `திரெளபதி' என்கிற படத்தை இயக்குகிறார். படம் குறித்துப் பேசிய விஷயங்கள் இங்கே...

"திருமண முறை தப்புனு சொல்றவங்களைக் கேள்வி கேட்போம்!" - 'திரெளபதி' மோகன்.ஜி
"திருமண முறை தப்புனு சொல்றவங்களைக் கேள்வி கேட்போம்!" - 'திரெளபதி' மோகன்.ஜி

`பழைய வண்ணராப்பேட்டை' படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தன்னுடைய அடுத்த படமாக, `திரெளபதி'யை அறிவித்திருக்கிறார். `டுலெட்' ஹீரோயின் ஷீலா ராஜ்குமார் நடிக்க, படப்பிடிப்பில் இருக்கிறது படக்குழு. படம் குறித்த செய்திகளுக்காக இயக்குநர் மோகனிடம் பேசினேன். 

`` `திரெளபதி' கதையின் ஒன்லைன் எப்போ உங்களுக்குள்ளே தோன்றியது?"

`` `பழைய வண்ணாராப்பேட்டை' படத்தோட கதையை எழுதிக்கிட்டு இருந்தப்போவே, இந்தக் கதையும் யோசிச்சுட்டேன். செங்குன்றம் ஏரியாவுல நடந்த உண்மைச் சம்பவம்தான், `திரெளபதி'. கதைக்காக நிறைய கிரவுண்ட் வொர்க்ஸ் பண்ணினேன். முழுமையான கதையா உருவானதும், நடிகர், நடிகைகளைத் தேர்ந்தெடுத்து, ஷூட்டிங் போயிட்டோம். சென்னை ராயபுரத்துல ஷூட்டிங் நடந்து முடிஞ்சிருக்கு. விழுப்புரத்துல கடைசி ஷெட்யூல் பிளான் பண்ணியிருக்கோம்." 

``திரெளபதி... மகாபாரதத்தில் வர்ற கேரக்டராச்சே?" 

``படத்தின் சம்பவங்களில் சிலதுக்கு, மகாபாரதத்துடன் தொடர்பு இருக்கும். அதனாலதான், `திரெளபதி' பட போஸ்டர்ல தாயம், பாம்பு, ஏணி எல்லாம் இருக்கும். `திரெளபதி'னு சொன்னாலே, அவங்களோட சபதம்தான் ஞாபகத்துக்கு வரும். அந்தச் சபதம்தான், மகாபாரதக் கதையும். அதுமாதிரி, இங்கயும் திரெளபதி என்ற கேரக்டரோட சபதம்தான், படம்."  

``ஷீலா ராஜ்குமார்?" 

``திரெளபதி கேரக்டர்ல ஷீலா ராஜ்குமார் நடிக்கிறாங்க. இவங்களை நடிக்க வைக்க முக்கியக் காரணங்களில் ஒண்ணு, ஷீலா ராஜ்குமாரின் நீளமான முடி. ஏன்னா, மகாபாரதத்தில் திரெளபதிக்கு நீளமான தலைமுடி இருக்கும். தமிழ்நாட்டின் வட மாவட்ட மக்கள் திரெளபதியைக் குலதெய்வமா வணங்குறாங்க. கதையும் வட மாவட்டத்தில் நடக்கிற களம்தான். அதனால, கிராமத்து முகச் சாயலில் ஹீரோயின் தேவைப்பட்டாங்க. அதுக்கு ஷீலா சரியா பொருந்தியிருக்காங்க. கதையும் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வட மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் பேச்சு வழக்கு, கலைகள் எல்லாம் இந்தப் படத்துல பார்க்கலாம். அவர்களின் வாழ்வியலைப் படமாக்கியிருக்கோம். முக்கியமா, இந்தப் படத்துக்காக ஷீலா சிலம்பம், களரி கத்துக்கிட்டாங்க. ஷீலா தவிர, முக்கியமான இன்னொரு கேரக்டர்ல ரிச்சர்ட் சார் நடிக்கிறார்."  

``என்ன கதை?" 

``இந்தப் படம் 1955-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்திய இந்து திருமண முறை சட்டத்தோடு மேட்ச் ஆகுற கதைதான். அதாவது, இந்தியத் திருமண முறைகள் பற்றிய சட்டத்தோட பின்னப்பட்டிருக்கிற கதை. அதில் இருக்கிற பிரச்னைகளைப் படம் பேசும். இந்து திருமணச் சட்டம் பற்றிய விவாதப் பொருளாகத்தான் இந்தப் படம் இருக்கும். அதனாலதான், `திரெளபதி'னு டைட்டில் வெச்சேன். ஆனா, இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கிற மாதிரி இருக்காது." 

"படத்தின் தலைப்புக்கு ஏதாச்சும் விமர்சனம் வந்ததா?" 

"திரெளபதிங்கிற பெயருக்குப் பின்னாடி பெரிய சமூகக் கட்டமைப்பு இருக்கு. ஆனா, விமர்சனமோ சர்ச்சைகளோ வர வாய்ப்பு இல்லை. மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறவங்க மூலமா ஏதாச்சும் பிரச்னை வர வாய்ப்பு இருக்கு. ஏன்னா, திருமண முறையை தப்புனு சொல்றவங்க எல்லோரையும் கேள்வி கேட்கிற படமா இது இருக்கும்." 

"கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவாகும் படம்னு கேள்விப்பட்டோமே..?" 

"ஆமா, எனக்கு சமூக வலைதளங்களில் நண்பர்கள் அதிகம். அதனால, கிரவுட் ஃபண்டிங்ல தயாரிக்கலாம்னு முடிவெடுத்தேன். இது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படம். அவங்களுக்கான விழிப்புணர்வுப் படம்னுகூட சொல்லலாம். அதனால, கதையைப் பற்றி ஃபேஸ்புக்கில் சொன்னேன். என் மனநிலைக்கு செட் ஆகிற நண்பர்கள் ஒன்னு சேர்ந்தாங்க. 215 பேர் வந்தாங்க. எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமா பணத்தைப் போட்டு படத்தைத் தயாரிக்கிறோம். என்னோட ஜி.எம். தயாரிப்பு நிறுவனம்தான் இதை ஒருங்கிணைக்குது. 

பார்த்திபன் சார் ஏற்கெனவே கிரவுட் ஃபண்டிங்ல 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தைத் தயாரிக்க முயற்சி பண்ணார். அது முடியாம, சொந்த தயாரிப்பில் வெளியிட்டார். ரோகினி மேடமும் இப்படி ஒரு முயற்சியைப் பண்ணாங்க, அதுவும் முடியலை. இப்போ, நான் களமிறங்கியிருக்கேன். நல்லபடியா நடக்கும்னு நம்பிக்கை இருக்கு." என்கிறார், மோகன்.ஜி. 

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..